வங்காளத்தின் பிரபல அரசியல் தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான திரு பி.சி.ராய், பன்னாலால் பாசுவைத் தன்னுடைய அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், நில வருவாய் துறை அமைச்சராகவும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். பன்னாலால் பாசு, ஜமீன்தார் முறை ஒழிய வேண்டும் என்ற கருத்து கொண்டவர். அவருடைய ஜமீன் எதிர்ப்பின் ஆர்வத்தில் உருவானதுதான் வங்காள நில சீர்திருத்தச் சட்டம். 1955ம் ஆண்டு பன்னாலால் பாசு அவர்களால் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
பன்னாலால் பாசுவின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், அவரால் பி.சி.ராயின் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. 1956ம் ஆண்டு தன்னுடைய கல்வி அமைச்சர் பதவியை பன்னாலால் பாசு ராஜினாமா செய்தார். அதே வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, தன்னுடைய 65-வது வயதில் பன்னாலால் பாசு இயற்கை எய்தினார். பன்னாலால் பாசுவின் குடும்பம் மிகவும் பெரியது. அவருக்கு 11 மகன்கள், ஒரு மகள்.
நீதிபதி பன்னாலால் பாசு எதிர்பார்த்தது போல், பிபாவதி மற்றும் பாவல் ஜமீனை நிர்வகித்து வந்த நீதிமன்றக் காப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து, டாக்கா மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீடு 1936ம் வருடமே தாக்கல் செய்யப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வருடம் என்னவோ 1939ம் வருடம் தான்.
கல்கத்தா உயர் நீதிமன்றம், பிபாவதியும் மற்றவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு பென்ச் ஒன்றை ஏற்பாடு செய்தது. சிறப்பு பென்ச்சில் மூன்று நீதிபதிகள் இருந்தனர். அவர்கள் கல்கத்தா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர் லியோனார்ட் காஸ்டெல்லோ, நீதிபதி சாரு சந்திர பிஸ்வாஸ் மற்றும் நீதிபதி ரொனால்ட் பிரான்சிஸ் லாட்ஜ்.
நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, 1938ம் வருடம் மேல்முறையீட்டு விசாரணை தொடங்கியது. இரு தரப்பிலிருந்தும் சிறந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். மேல்முறையீட்டாளர்கள் தரப்பில், ‘மேஜோ குமார் இறக்கவில்லை என்று சந்நியாசியால் நிரூபிக்க முடியவில்லை’ என்று வாதிட்டனர். சந்நியாசி தரப்பில், ‘மேஜோ குமார் இறக்கவில்லை என்றும், மேஜோ குமார்தான் சன்னியாசி என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை’ என்றும் வாதிடப்பட்டது. மேல்முறையீட்டின் விசாரணை ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 1939ம் வருடம் முடிவடைந்தது.
விசாரணை முடிந்ததும் தலைமை நீதிபதி காஸ்டெல்லோ, தன்னுடைய சொந்த ஊரான இங்கிலாந்துக்கு விடுப்பில் சென்றுவிட்டார். அவர் கல்கத்தா திரும்பியவுடன் அந்த ஆண்டு நவம்பர் மாதமே மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தலைமை நீதிபதியால் குறிப்பிட்ட தேதியில் கல்கத்தாவுக்கு திரும்பமுடியவில்லை. காரணம், ஹிட்லர். அடால்ஃப் ஹிட்லர் செப்டம்பர் 19 ஆம் தேதி, 1939ம் வருடம் ஐரோப்பாவில் இரண்டாவது உலக யுத்தத்தை தொடங்கியிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்தால் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
விசாரணை முடிந்த ஒரு வழக்கில் வெகு நாட்களுக்கு தீர்ப்பை தள்ளிப் போட முடியாது. எனவே நீதிபதி பிஸ்வாசும், நீதிபதி லாட்ஜும் தத்தம் தீர்ப்புகளை வெளியிட்டனர். பெருந்திரளான கூட்டம் கூடி இருந்த கல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில், முதலில் நீதிபதி பிஸ்வாஸ் தன்னுடைய தீர்ப்பை படித்தார். அவருடைய தீர்ப்பு சுமார் 433 பக்கங்களைக் கொண்டது. வழக்கின் ஒவ்வொரு விஷயத்தையும் தன்னுடைய தீர்ப்பில் நன்கு அலசியிருந்தார் நீதிபதி பிஸ்வாஸ்.
“நான் டாக்கா நீதிபதி பன்னாலால் பாசுவின் தீர்ப்பில் உடன்படுகிறேன். மிகவும் சிக்கலான இம்மாதிரி வழக்கில் மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் முடிவெடுத்திருக்கும் நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு என் முதன்மைப் பாராட்டுக்கள். நான் நீதிபதி பன்னாலால் பாசுவின் தீர்ப்பை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். அதிலிருந்து என்னால் ஒரு தவறைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. சிறு சிறு விஷயங்களில்கூட நீதிபதி பன்னாலால் பாசு மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். நான் என்னுடைய இந்தத் தீர்ப்பை தயாரிக்கும் போதுதான் ஒரு விஷயத்தை நினைத்து மிகவும் நெகிழ்ந்து போனேன். நான் என்னுடைய தீர்ப்பை எழுத எடுத்துக்கொண்ட நேரத்தில் பாதி நேரத்தை தான் நீதிபதி பன்னாலால் பாசு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், எனக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வசதிகள் போல நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் வசதிகள் கிடையாது. நீதிபதி பன்னாலால் பாசு வெளியிட்ட தீர்ப்பில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரது தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. இதன் காரணம் பொருட்டு, பிபாவதியும் ஏனையவர்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன்”.
அடுத்து நீதிபதி ரொனால்ட் லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அவர் 300 பக்கங்களுக்குத் தன்னுடைய தீர்ப்பை எழுதியிருந்தார். நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வாசித்து, அதை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஒரு குண்டைப் போட்டார்.
“நான் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மதிப்புமிக்க நீதிபதி பன்னாலால் பாசு பாரபட்சமாக முடிவெடுத்ததாக தெரிகிறது. வழக்கு விசாரணை முழுவதிலும் சந்நியாசி தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு, நீதிபதி பன்னாலால் பாசு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிகிறது. அப்படி சந்நியாசியின் சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அந்த சாட்சிகளின் நம்பகத்தன்மையை சோதித்ததாகத் தெரியவில்லை. மேஜோ குமாரின் சகோதரி ஜோதிர்மாயி நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஜோதிர்மாயியின் சாட்சியம் உண்மையானதாக இருக்குமா என்பது என் சந்தேகம். மேலும் மேஜோ குமாருக்கு அஷுதோஷ் பாபுவால் ஆர்ஸனிக் விஷம் கொடுக்கப்பட்டது என்றும், அதன் பாதிப்பால் தான் அவர் மூர்ச்சை அடைந்தார் என்றும், அதற்குப் பிறகு அவருக்கு ஈம காரியங்கள் செய்ய சுடுகாட்டுக்குகு எடுத்துச்செல்லப்பட்டார் என்பதற்கெல்லாம் ஒரே சாட்சி சந்நியாசி மட்டுமே. அந்த சாட்சியை உறுதி செய்ய வேறு சாட்சிகள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்நியாசியின் சாட்சியத்தை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவு எடுப்பது சரியானதாகத் தோன்றவில்லை.
மேஜோ குமார் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் செய்தியில் மூன்று விதமான கருத்து நிலவுகிறது. இப்படி பல்வேறு கருத்துகள் நிலவும் பட்சத்தில் சந்நியாசியின் கூற்றுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்திருப்பது சரியில்லை.
டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு நடந்த சமயத்தில் பார்வையாளர்கள், மக்கள் என்று அனைவருமே சன்னியாசியின் பக்கம் தான் இருந்திருக்கின்றனர். பத்திரிக்கைகளிலும், நாளேடுகளிலும், துண்டுப் பிரசுரங்களிலும் சன்னியாசி பக்கம் நியாயம் இருப்பதாகவும், எதிர் தரப்பு அநியாயம் செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது தேவையில்லாத அவதூறுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிபாவதி தரப்புக்கு விரோதமான சூழ்நிலையே இருந்திருக்கிறது. இந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது பிபாவதி தரப்பினருக்கு பாதகமாக அமைந்துவிட்டது.
அஷுதோஷ் பாபு மேஜோ குமாருக்கு ஆர்ஸனிக் கலந்த மருந்தைக் கொடுத்தது, மேஜோ குமாரைக் கொலை செய்வதற்குத்தான் என்று சொல்வது ஏற்புடையதல்ல. மலேரியா போன்ற நோயை குணப்படுத்துவதற்கு ஆர்சனிக் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டுவருகிறது. உண்மையாக மேஜோ குமாரை குணப்படுத்துவதற்காகக் கூட, அவருக்கு ஆர்சனிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
அதேபோல், டாக்டர் கால்வெர்ட் மேஜோ குமாருக்கு Biliary Colic இருந்திருக்கலாம் என்று சொன்னதை சந்தேகிக்கவில்லை. மே மாதம் 8 ஆம் தேதி, மேஜோ குமாருக்கு உடல் ரீதியில் ஏற்பட்ட அறிகுறிகள் எல்லாம் அவர் மேற்படி நோயால் பாதிக்கப்பட்டதாலும், அவருக்கு பேதி மருந்து வழங்கப்பட்டதாலும் தான் ஏற்பட்டிருக்கிறது”.
டார்ஜிலிங்கில் சம்பவத்தன்று மழை பெய்தது, டார்ஜிலிங் பங்களாவின் மேற்பார்வையாளர் ராம் சிங் சுபாவின் சாட்சி, சாதுக்கள் மேஜோ குமாரைக் காப்பாற்றியதாக சொல்வது என அனைத்தையும் மறு ஆய்வு செய்து, அவற்றின் நம்பகத்தன்மையைக் குறித்து பல கேள்விகளை எழுப்பி, இறுதியில் இவையெல்லாம் கட்டுக்கதை என்ற தன்னுடைய முடிவை வெளியிட்டார்.
உடன்பிறந்ததாகச் சொல்லப்படும் சகோதரிக்கு, 12 வருடங்களாகத் தேடிவரும் தன்னுடைய தமையனாரை பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார் நீதிபதி லாட்ஜ்.
சந்நியாசியின் சகோதரி மகள் தேபூ, குடும்பப் புகைப்படத்தை சந்நியாசியிடம் காட்டியவுடன் அவர் அதைப் பார்த்து அழுதார் என்று சொல்வது ஹாலிவுட் படத்தையே மிஞ்சிவிட்டது என்று தெரிவித்தார் நீதிபதி லாட்ஜ்.
சந்நியாசி ஜெய்தேபூரில் முதன் முதலில் தன்னுடைய தங்கை ஜோதிர்மாயி வீட்டுக்குச் சென்றதும், அங்கு அவருடைய பாட்டி மற்றும் ஏனைய குடும்பத்தாரைப் பார்த்தது, பின்னர் உணவருந்தியது, அதன் பின்னர் ‘நான் அவன் இல்லை’ என்று சொன்னது போன்ற நிகழ்ச்கிகளை சந்நியாசி விவரித்திருப்பது ஒரு நல்ல குடும்ப நாவலைப் படித்த உணர்வை ஏற்படுத்தியதாக நீதிபதி லாட்ஜ் தெரிவித்தார்.
மேலும் நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்ட பின்வரும் விவரங்கள் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டன. அவர் தன்னுடைய தீர்ப்பில், சந்நியாசியும் மேஜோ குமாரும் ஒரே உருவம் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது தவறு என்று கூறினார். இருவரின் உடலிலும் உள்ள அங்க, அடையாளங்களைப் பார்க்கும்போது இருவரும் ஒருவரே என்ற முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை என்றார் நீதிபதி லாட்ஜ். சந்நியாசி வங்காள மொழியை விட ஹிந்தி நன்றாகப் பேசியிருக்கிறார். அதனால் அவர் ஒரு வங்காளியாக இருக்கமுடியாது. அவர் நிச்சயமாக ஒரு ஹிந்துஸ்தானியாகத்தான் இருக்க முடியும். அந்த ஹிந்துஸ்தானியான சந்நியாசிக்கு மேஜோ குமார் பற்றிய அனைத்து விவரங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேஜோ குமார் இறந்து விட்டார் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இப்பொழுது நான் தான் மேஜோ குமார் என்று சொல்லிக் கொள்பவர் ஒரு போலி; உண்மையான மேஜோ குமார் இல்லை என்று உயர்திரு நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வெளியிட்டு கூடி இருந்த அனைவரையும் வாய்பிளக்கும் படி அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். மேலும் பிபாவதியும் மற்றவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை செலவுத் தொகையுடன் அனுமதித்து, நீதிபதி பன்னாலால் பாசு வெளியிட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி ரொனால்ட் பிரான்சில் லாட்ஜ்.
கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை படித்து முடித்தவுடன் அங்கிருந்தவர்கள் முகங்களில் (பிபாவதி தரப்பினர்களைத் தவிர) ஈ ஆடவில்லை. பிபாவதி தரப்பினர்களுக்கு லாட்ஜின் தீர்ப்பு இன்ப அதிர்ச்சி. அவர்கள் முகத்தில் ஒரே மலர்ச்சி. தீர்ப்பைக் கேட்ட சில நிமிடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்னடா இது, ஒரு நீதிபதி சன்னியாசிதான் மேஜோ குமார் என்று தீர்பளித்திருக்கிறார். ஆனால் இன்னொருவர் சன்னியாசி மேஜோ குமார் இல்லை என்கிறாரே என்று அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வி. அடுத்தது என்னவாகும் என்று குழப்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு அணிகளுக்கும் இடையே டை ஆனது போல் ஆகிவிட்டதே? இந்த இருவேறுபட்ட கருத்தை வைத்து பழைய சர்ச்சைகள் அனைத்தும் புதிய வடிவம் பெற்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கு எங்கு ஆரம்பித்ததோ அதே இடத்துக்கு போய்விட்டது.
கல்கத்தா முழுவதும் இந்த வழக்கையும் அதன் தீர்ப்பையும் பற்றித்தான் பேச்சு. அடுத்த நாள் வெளியான அனைத்து செய்தித்தாள்களிலும் நாளேடுகளிலும் இந்த வழக்கைப் பற்றித்தான் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. வழக்கின் செய்தியும் அதன் சுவாரஸ்யமும் கல்கத்தாவையும் கடந்து சென்னை, டில்லி, மும்பை போன்ற இடங்களுக்கும் பரவியது. ராய்ச்சர் மற்றும் ஏனைய சர்வதேச பத்திரிக்கை நிறுவனங்களும் லண்டன், நியூயார்க் என்று அனைத்து உலக நகரங்களிலும் உள்ள தங்களது பத்திரிக்கைகளில் இந்த வழக்கைப் பற்றியும் அதன் தீர்ப்பைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டன.
ஆக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இருவேறு முரண்பாடான தீர்ப்புகளை வெளியிட்டுவிட்டனர். சந்நியாசிதான் மேஜோ குமாரா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலளித்து, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர ஒரே நபரால்தான் முடியும். அவர்தான் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர் லியோனார்ட் காஸ்டெல்லோ. பாவம் அவர்தான் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதால் இங்கிலாந்தில் மாட்டிக்கொண்டாரே, என்ன செய்வது. இங்கிலாந்து சென்று கிட்டத்தட்ட ஓர் ஆண்டு ஆகும் தருவாயிலும், தலைமை நீதிபதி காஸ்டெல்லோவால் கல்கத்தாவுக்குத் திரும்ப முடியவில்லை. ஆனால் தலைமை நீதிபதி, தீர்ப்பு வழங்குவதில் இன்னமும் காலம் தாழ்த்த விரும்பவில்லை. தான் எழுதி தயார் செய்து வைத்திருந்த தீர்ப்பை கல்கத்தா நீதிமன்றத்துக்குத் தபாலில் அனுப்பி வைத்தார்.
சந்நியாசி வழக்கில் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கல்கத்தா நீதிமன்றத்தில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தலைமை நீதிபதியின் தீர்ப்பு வெளியிடப்படும் நாள் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியிடப்படும் நாளன்று ஜே ஜே என்று கூட்டம். நீதிமன்றத்தின் உள்ளே, வெளியே, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீர்ப்பைக் கேட்பதற்கு கூட்டம் நிறைந்தது. கல்கத்தா நகரத்தின் முக்கிய சாலைகளெல்லாம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வாசும், லாட்ஜும் வந்து அமர்ந்தார்கள். கூடியிருந்த கூட்டம் நீதிபதிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
நீதிபதி பிஸ்வாஸ் ஆரம்பித்தார். “முதலில் இந்த வழக்கை விசாரித்த எங்களில் மூத்த நீதிபதியான சர் லியோனார்ட் காஸ்டெல்லோவால், அவருடைய தீர்ப்பை வெளியிட அவரால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் அவர் எழுதிய தீர்ப்பை எங்களுக்கு அனுப்பி, அதை வெளியிடுமாறு பணித்திருக்கிறார். நானும் என்னுடைய சகோதர நீதிபதியுமான நீதிபதி லாட்ஜும், தலைமை நீதிபதியின் தீர்ப்பை இன்று வரை படிக்கவில்லை. உங்கள் முன்னர்தான் நாங்கள் முதன் முதலாக தீர்ப்பை படித்து, அதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்” என்று கூறிவிட்டு, சீல் செய்யப்பட்ட கவரைத் திறந்து அதிலிருந்த தீர்ப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி பிஸ்வாஸ்.
இம்மாதிரி ஒரு வழக்கு இந்திய நீதிமன்றத்தில் இதுவரை வந்ததில்லை. எந்த நாட்டு நீதிமன்றத்திலும் வந்ததில்லை. நீதித் துறையின் சரித்திரத்திலேயே இவ்வழக்கு தனித்துவம் பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மற்ற இரண்டு நீதிபதிகளையும் போல் இந்த வழக்கை ஆரம்பம் முதல் கடைசி வரை ஆராய்ந்து, முடிவில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிடுவது சரியாக இருக்காது. எனவே இந்த மேல்முறையீடு நிலைக்கத்தக்கதல்ல என்ற தன்னுடைய முடிவை தெரிவித்திருந்தார். இந்தத் தீர்ப்பை வாசிக்கக் கேட்ட பெருவாரியானவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மூன்று நீதிபதிகளில் இருவர் மேல்முறையீட்டு மனு நிலைக்கத்தக்கதல்ல என்று முடிவெடுத்ததால், சந்நியாசி மேல்முறையீட்டு வழக்கிலும் ஜெயித்துவிட்டார்.
சர் லியோனார்ட் காஸ்டெல்லோவின் தீர்ப்பு வெளியான மறுநாள், கல்கத்தாவில் அதிகப் பிரதிகளை விற்கும் ‘தி ஸ்டேஸ்மன்’ நாளேட்டில், The Romance of a Sanyasi என்ற தலைப்பில் இந்த வழக்கைப் பற்றி மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.
ஆனால் வழக்கு இன்னும் முடிந்த பாடு இல்லை. பிபாவதியின் சார்பில் மேலும் ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா சுதந்தரம் அடையவில்லை. உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலில் தான் மேல் முறையீடு செய்யவேண்டும். பிபாவதியும் அதைத் தான் செய்தாள்.
ப்ரிவி கவுன்சிலில் பிபாவதிக்கு ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் திரு W.W.W.K. பேஜ். அவருக்குத் துணையாக செயல்பட்டவர் இந்திய வழக்கறிஞர் திரு பி.பி.கோஷ். ப்ரிவி கவுன்சிலில் சந்நியாசிக்கு ஆஜரானவர் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் திரு டி.என்.பிரிட். இவர் இந்தியர்களின் சுதந்தரக் கோரிக்கைக்கு மிகவும் ஆதரவு தெரிவித்தவர். இந்த வழக்கில் இவருக்குத் துணையாக செயல்பட்ட இந்திய வழக்கறிஞர்கள் திரு. ஆர்.கே.ஹாண்டூ, திரு. யு. சென் குப்தா மற்றும் திரு. அரோபிந்தா குகா.
ப்ரிவி கவுன்சிலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லார்ட் தாங்கர்டன், லார்ட் டுயு பார்க் மற்றும் சர் மாதவன் நாயர். இந்த மாதவன் நாயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆஷ் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சர் சங்கரன் நாயர் அவர்களின் மருமகனாவார். இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்தவரும், சிறந்த சட்ட வல்லுனருமாக இருந்ததால்தான் சர் மாதவன் நாயர் ப்ரிவி கவுன்சிலில் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.
ப்ரிவி கவுன்சிலில், சுமார் 28 நாட்கள் விசாரணை நடைபெற்றது. மூன்று நீதிபதிகளின் சார்பில் லார்ட் தங்கர்டன், ஜூலை மாதம் 30 ஆம் தேதி 1946ம் வருடம் தீர்ப்பை வெளியிட்டார். வெறும் பத்து பக்கங்களிலேயே அந்தத் தீர்ப்பு முடிந்துவிட்டது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான் என்று சொல்லி, செலவுத் தொகை எதுவும் இல்லாமல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது ப்ரிவி கவுன்சில்.
ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பைப் பற்றி லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கல்கத்தாவின் பிரபல வங்காள மொழிப் பத்திரிகை ‘அம்ரித பசார் பத்திரிக்கா’ தன்னுடைய தலைப்புச் செய்தியில் ‘ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பு, குமார் ராமேந்திர நாராயண் ராய்க்கு சாதகம்’ என்று வெளியிட்டது.
அப்பாடா இதற்கு மேல், மேல் முறையீடு என்று ஒன்றும் இல்லை. ஒருவாறாக சந்நியாசி வழக்கு முடிவுக்கு வந்தது. இனியும் சந்நியாசி என்று அவரைச் சொல்லக்கூடாது. அது நியாயமாக இருக்காது. அதுதான் மூன்று நீதிமன்றங்களும் சந்நியாசிதான் மேஜோ குமார் என்று அறிவித்து விட்டனவே. எனவே நாம் இனிமேல் அவரை மேஜோ குமார் என்றே அழைப்போம்.
வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, மேஜோ குமார் 1942ம் ஆண்டு சிரிஜுக்தோ தாரா தேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் என்ன, மேஜோ குமார் திரும்பி வந்து 21 ஆண்டுகள் ஆகியும், பிபாவதி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் என் கணவர் இல்லை என்றே சொல்லிவந்தார். அந்த ஆள் ஒரு போலிச் சாமியார் என்றே வாதாடி வந்தார்.
மேஜோ குமார், தான் சந்நியாசியாக இருந்த சமயத்தில் யோக அபியாசங்கள் செய்து வந்த காரணத்தாலும், அதை வெகுநாட்கள் தொடர்ந்து வந்ததாலும் தனக்கு சில சித்திகள் கிடைத்ததாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் சொல்லி வந்தார்.
“நான் தொடர்ந்த வழக்கில் இறுதிவரை எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்த சில நாள்களுக்குள்ளாகவே நான் இறந்து விடுவேன்” என்று மேஜோ குமார் சிலரிடம் தெரிவித்திருக்கிறார்.
ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பு தந்தி மூலம் கிடைக்கப்பெற்று சரியாக நான்காவது நாள், கல்கத்தாவில் உள்ள தாந்தோனியா கோயிலுக்குச் சென்று நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்றார் மேஜோ குமார். தனது வேண்டுதலின் படி அந்தக் கோயிலில் உள்ள காளிக்கு அபிஷேகம், ஆராதனை செய்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய மேஜோ குமார் ரத்த வாந்தி எடுத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் மேஜோ குமார் இறந்துவிட்டார். அப்போது அவர் வயது 63.
மேஜோ குமார் இறுதி வழக்கில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அங்கு வந்த அவருடைய சொந்தக்காரர்களும் வேண்டப்பட்டவர்களும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கமுடியவில்லை. மாறாக இரங்கல் தான் தெரிவிக்க முடிந்தது.
மேஜோ குமார், அவருடைய குரு தரம் தாஸ் சொன்னது போல் தன்னுடைய கர்மத்தை கடந்துவிட்டார். ராஜ்குமாராகத் தோன்றி சந்தர்ப்பவசத்தால் சந்நியாசியாகி மறுபடியும் ராஜ்குமாராக அங்கீகரிக்கப்பட்டு, ஆனால் அது நிலைப்பதற்குள் அனைவரையும் கடந்து சென்றுவிட்டார் மேஜோ குமார். எதுவுமே இந்த உலகத்தில் நிலையானதில்லை என்று தன்னுடைய வாழ்க்கை மூலம் அனைவருக்கும் உணர்த்திவிட்டுச் சென்றுவிட்டார் மேஜோ குமார்.
ஆனால் பிபாவதி அப்படி நினைக்கவில்லை. நீதிமன்றத்தில் வேண்டுமானால் தன்னுடைய மேல்முறையீடு தோற்றுப்போயிருக்கலாம். ஆனால் கடவுளிடம் தன்னுடைய முறையீடு தோற்கவில்லை என்றே கருதினாள்.
மேஜோ குமார் இறந்த பிறகு பிபாவதிக்கும் மேஜோ குமாரின் இரண்டாவது மனைவியான தாரா தேவிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. மேஜோ குமாரின் இரண்டாவது மனைவி தாரா தேவி, பிபாவதி மேஜோ குமாரின் சொத்தை அனுபவிக்கத் தகுதியற்றவர்; அதனால் Court of Wards பிபாவதிக்கு சொத்தில் பங்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று பரிகாரம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவ்வாறு பரிகாரம் கேட்பதற்காக அவர் சொல்லிய காரணம், ப்ரிவி கவுன்சில் சந்நியாசி தான் மேஜோ குமார் என்று தீர்ப்பு அளித்த பிறகும், பிபாவதி சந்நியாசியை மேஜோ குமாரக அங்கீகரிக்கவில்லை, கணவராக ஏற்றுக்கொள்ளவில்லை. மேஜோ குமார் சமீபத்தில் இறந்த போது கூட அவரை வந்து பார்க்கவில்லை. மேஜோ குமாரின் ஈமக் காரியங்களில் கலந்துகொள்ளவில்லை. முறைப்படி, தான் செய்யவேண்டிய சடங்குகள் எதையும் பிபாவதி செய்யவில்லை. எனவே அவள் இந்து சாஸ்திரத்தின் படி உண்மையான தர்மபத்தினி கிடையாது. பிபாவதி ஒரு தர்ம பத்தினியின் கடமையை செய்யத் தவறியதால், இறந்த கணவனின் சொத்தை அனுபவிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.
கீழ் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு தாரா தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து பிபாவதி சார்பில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ப்ரிவி கவுன்சிலின் உத்தரவை ஏற்காததால் ஒருவர் தர்ம பத்தினி அந்தஸ்தை இழந்துவிடுவார் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்று கூறி மேல் முறையீட்டை அனுமதித்து பிபாவதிக்கும் தாரா தேவிக்கும் மேஜோ குமாரின் சொத்தில் சரி சம பங்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கினர். பிபாவதி சந்நியாசிதான் மேஜோ குமார் என்பதை தன் வாழ்நாள் இறுதி வரை ஏற்க மறுத்தார். பிபாவதி தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து, சுமார் 20 வருடங்கள் கழித்து இறந்து போனார்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்தரம் வழங்கியதோடல்லாமல், இந்தியாவைத் துண்டாடிவிட்டும் சென்றுவிட்டனர். இந்தியாவை ஆட்சி செய்யும் போது ஆங்கிலேயர்கள் கடைபிடித்து வந்த பிரித்தாளும் சூழ்ச்சி, கடைசியில் எல்லை கடந்து போய்விட்டது. இந்தியாவை இரண்டாகப் பிரித்தால்தான் சுதந்திரம் என்ற நிலை. பிரிவினையை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்தியா முதலில் இரண்டு துண்டானது. பின்னர் 24 வருடங்கள் கழித்து, இந்தியா மூன்று துண்டாகிப் போனது.
சுதந்தரத்திற்குப் பிறகு பாவல் ராஜ்ஜியம் பாகிஸ்தானின் பகுதியாகிப் போனது. அப்பகுதியை கிழக்கு பாகிஸ்தான் என்று அழைத்தார்கள். இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது. அதே போல் கிழக்கு பாகிஸ்தானிலும் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது. பாவல் ஜமீனின் சொத்துகளெல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. அதை எதிர்த்து மூன்றாவது ராணியின் தத்துப் பிள்ளையும், மேலும் பல ஜமீன்தார்களும் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். ஜமீன்தார்களுக்காக இந்த வழக்கை வாதிட்டவர் டி.என். பிரிட் (ப்ரிவி கவுன்சிலில் பிபாவதிக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்ற அதே வழக்கறிஞர்தான்). வழக்கு தொடுத்தவர்களுக்கு சொத்துகள் கிடைக்கவில்லை. ஆனால் அரசாங்கத்திடமிருந்து நஷ்ட ஈடு கிடைத்தது.
1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான், தனி நாடாக பங்களாதேஷ் என்ற பெயரில் உதயமானது. பாவல் ஜமீன் இப்பொழுது பங்களாதேஷ் காசிபூர் மாவட்டத்தில் உள்ளது. ராஜ்பாரி அரண்மனையில் மேஜோ குமார் வசித்து வந்த அறைகளெல்லாம் இப்பொழுது அரசு அலுவலகங்களாக மாறிவிட்டன. மேஜோ குமார் போலோ விளையாடி வந்த அரண்மனை மைதானம், இப்பொழுது அரசாங்கத்தின் கால்பந்து மைதானம்.
ஆனால் இப்பொழுதும் விடுமுறை நாட்களில், ராஜ்பாரி அரண்மனையை சுற்றிப் பார்க்க பலர் வந்து போகிறார்கள். ராஜ்பாரியை சுற்றிப்பார்க்க வருபவர்கள், அங்கு வாழ்ந்த மேஜோ குமாருடைய கதையைப் பகிர்ந்து கொள்ளாமல் செல்வதில்லை.
ராஜ்பாரிக்கு வருபவர்கள் பொதுவாக பகிர்ந்துகொள்ளும் கதை என்னவென்றால், “மேஜோ குமாருடைய இளம் மனைவியான (பிபாவதி) ராணிக்கும் அரண்மனையில் இருந்த டாக்டருக்கும் (அஷுதோஷ் பாபு) கசா முசாவாம். ராணியும் டாக்டரும் சதித் திட்டம் தீட்டி ராஜாவை கொன்றுவிட்டு, சொத்தை அபகரிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக ராஜா பிழைத்துக் கொள்கிறார். ராஜா தன் நினைவை இழந்து சந்நியாசியாக சுற்றி வந்திருக்கிறார். பின்னர் ராணி ராஜாவை ஏற்க மறுத்திருக்கிறார். அப்புறம் நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் தொடரப்படுகிறது” என்ற வாக்கில் கதை சொல்லப்படுகிறது. “இதோ இந்த பால்கனியிலிருந்துதான் ராணி செய்கையால் அதோ அங்கேயிருக்கும் வீட்டின் மாடியில் டாக்டருடன் காதல் பரிபாஷை பேசிக்கொள்வார்கள்” என்று அங்கு வரும் மக்கள் அங்கலாய்க்காமல் செல்வதில்லை.
டாக்காவில் உள்ள பாவல் ராஜ்ஜியத்துக்கு சொந்தமான பங்களா, பங்களாதேஷ் அரசால் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அருங்காட்சியகமும் சரியாகப் பராமரிக்கப்படாமல் சிதிலம் அடைந்துவிட்டது.
பங்களாதேஷின் தலைநகரான டாக்கா, பாவல் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியில்தான் இருக்கிறது. இப்பொழுது அங்கு ஒரு ராஜ்ஜியம் இருந்ததற்கோ, அரண்மனைகள் இருந்ததற்கோ அடையாளங்கள் எதுவும் இல்லை. புதிது புதிதாக அடுக்குமாடி கட்டடங்களும், அபார்ட்மென்டுகளும் கட்டப்பட்டு வருகின்றன. பழைய சம்பவங்கள் சரித்திரமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் கண்களை விட்டு மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
எல்லா இடங்களையும் பற்றி சொல்லியாகிவிட்டது, ஒன்றைத் தவிர. அனைத்து சம்பவங்களுக்கும் காரணமாக இருந்த, டார்ஜிலிங்கில் அந்த நிகழ்வு நடந்த இடமான ‘ஸ்டெப் அசைட்’ பங்களா இப்பொழுதும் டார்ஜிலிங்கில் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான சுற்றுலா இடமாக மாறிவிட்டது. அதற்கான முழுப் பெருமையும் மேஜோ குமாருடையது அல்ல. தேசபந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல சுதந்தரப் போராட்ட தியாகியும், பிரபல வழக்கறிஞருமான சித்தரஞ்சன் தாஸ் அந்த பங்களாவில்தான் தன் கடைசி மூச்சை விட்டார். சித்தரஞ்சன் தாஸ் அங்கு தங்கியிருக்கும் போது அவரைக் காண மகாத்மா காந்தியும், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஸ்டெப் அசைட் பங்களாவுக்கு வருகை தந்தனர். இப்பொழுது அந்த பங்களாவில் தேசபந்து மெமோரியல் சங்கம் என்ற பெயரில் எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல பொது சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேசபந்து பயன்படுத்திய பொருள்களும் ஸ்டெப் அசைட் பங்களாவில் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கிறன.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு நாம் வேறு ஒரு காரணத்துக்காக நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்தான் பிபாவதியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான சாரு சந்திர பிஸ்வாஸ். இவர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் 1946ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால மந்திரி சபையில் சிறுபான்மை துறைக்கான மத்திய மந்திரியாக செயல்பட்டார். பின்னர் 1952லிருந்து 1957 வரை இவர் மத்திய சட்ட அமைச்சராகவும் செயல்பட்டிருக்கிறார். அவர் சட்ட அமைச்சராக இருந்த சமயத்தில் இந்துக்களுக்குத் தேவையான இந்து திருமணச் சட்டம், இந்து இறங்குரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம் மற்றும் இந்து சுவிகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் ஆகியவற்றின் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவை சட்டங்களாக உருவெடுக்க காரணமாக இருந்தார்.
மேற்குறிப்பிட்ட இந்தச் சட்டங்கள் தான் இன்று இந்துக்களின் திருமணம், இறங்குரிமை போன்ற விவகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சட்டங்களால்தான் விவாகரத்து சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பெண்களுக்கும் சொத்தில் பங்கு கிடைக்க வகை செய்யப்பட்டது. பலதார மணம் குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டங்களெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கொண்டுவரப்பட்டிருந்தால், பிபாவதி தன்னுடைய முரட்டுக் கணவனான மேஜோ குமாரை சகித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியதில்லை. மேற்கூறிய சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய பரிகாரங்களைப் பெற்றிருக்கலாம். பாவம் அவள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!
(முற்றும்)