நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான்.
அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், “டேய் என்னடா ஆச்சு…. இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?”
ரத்னகுரு சொன்னான், “அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே இவனை ரூமில காணோம். போய்ப் பாத்தா பாத்ரூமுக்குள்ள இவன் படுத்திட்டிருக்கான்டா இதே மாதிரியே எதையோ வெறிச்சு மொறைச்சுகிட்டே, தலைக்குக் கையை அண்டக் குடுத்து ஸ்ரீரங்கநாதர் மாதிரி போஸ் குடுத்திட்டிருக்கான். புடிச்சு எழுப்பி விசாரிச்சா, எதுவுமே ஞாபகம் இல்லைங்கிறான். நாலு வருஷத்தில இவன் இந்த மாதிரியெல்லாம் தூக்கத்தில நடந்ததேயில்லைடா”
“நடந்தது இவன் இல்லை குரு.. இங்கே என்னென்னமோ நடக்குது. எனக்கு இப்போ கொஞ்ச கொஞ்சமாப் புரியுது. ராகேஷ்.. ராகேஷ் எங்கே? அவனை உடனே காப்பாத்தணும்? நீங்க எப்போடா கீழே வந்தீங்க?”
சித்தார்த் சொன்னான், “குருதான் மச்சி செல்லில கூப்பிட்டான். உடனே ஓடி வந்தோம். என்னடா புரியுது உனக்கு?”
“நான் உன்னை எழுப்புனேனே ஞாபகமிருக்கா? எனக்குக் கேட்டுச்சுடா…. அந்தக் குரல் கேட்டுச்சு எனக்கு. இவனையும் ராகேஷையும் தேடிட்டிருக்கு அது இப்போ” . எல்லாரும் உறைந்து போய் ராகேஷைப் பார்க்கிறார்கள். அவன் பயந்து போய் நரேனைப் பார்க்கிறான்.
தண்ணீர் தெளித்து, சகஜமாக்கி, மூச்சு விட நிறைய காற்று விட்டு நரேனிடம் துருவித்துருவி விசாரித்தோம். அவனுக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. நொடிக்கு நொடி திகில் கூடிக் கொண்டே போனது. விளக்கை எல்லாம் எரியவிட்டு ராகேஷையும் நரேனையும் சுற்றி எல்லாரும் அமர்ந்து கொண்டோம்.
அர்ஜுனுக்கு மட்டும் குரல் கேட்டிருக்கிறது. அதுவும் துல்லியமாக கணீரென்று கேட்டிருக்கிறது. அதுதான் அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. மற்றவர்களை விட அவன் ரொம்பப் பயந்து போயிருந்தான். பேயை எவனும் பார்க்கவில்லை. அது பிறாண்டிவிட்டுச் சென்றவனுக்கும் ஞாபகமில்லை. அர்ஜுன் மட்டும்தான் கேட்டிருக்கிறான். அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தான். ஏன் தனக்கு மட்டும் கேட்க வேண்டும் என்று பயந்து குழம்பினான். நேரம் மெல்ல மெல்ல இருளை விழுங்கி வீங்கிக் கொண்டே போனது.
4 : 30 . எல்லாரும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று அவன் மௌனம் குலைத்துப் பயந்தவாறே முனகினான் , “டேய் , ஒரே வழிதான் இருக்கு. எல்லாம் வாங்க, கைலாசம் வாசல்லதான் இருப்பாரு. அவரைப் பாப்போம். அந்தக் குரலும் இப்ப அமைதியாயிடுச்சு.” சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து முன்னே நடக்கவும் தொடங்கிவிட்டான்.
அறைக்குள்ளே அரை நிமிஷம் எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். பின்பு ஒரு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டது. வெளியே நடந்த அர்ஜுன் குழம்பி ஓடி வருகிறான். ராகேஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து பைத்தியம் பிடித்தது போல சிரிக்கிறான், “டேய்… சொல்லிருங்கடா.. யப்பா முடியலைடா .. நாலு மணி நேரம் ஆச்சு”
அர்ஜுனுக்குக் குழப்பத்தில் கண்ணீர் வந்துவிட்டது. நானும் சிரித்துக் கலங்கின கண்களுடன் அவனுக்கு முன்கதை விளக்கம் சொன்னேன். ஒரு குரலை நாங்களே செல்லில் பதிவு செய்து வைத்து, அலாரம் டோனாக வைத்து, செல்லை தூரமாக வைத்துவிட்டு, வேண்டுமென்றே மொட்டை மாடியில் ஒன்றரை மணி நேரம் பேய்க் கதையாகப் பேசிப் பேசி, கீழே நரேனின் அறையையும் ஒருங்கிணைத்து ஒரு உச்சகட்ட திகில் நாடகத்தை ஒரே ஒருவனுக்காக அரங்கேற்றியிருக்கிறோம். மருதமலைத் தீயும் அந்தப் போர்வைக்குள் பிணமாய்த் தூங்கினவனும் முருகனாய்ப் பார்த்துக் கூட்டிச் சேர்த்த திருவிளையாடல்கள்.
சிரிப்பினூடே சிரமப்பட்டு அர்ஜுனுக்குப் புரியவைத்தேன். ஏமாற்றமும் பயமும் கோபமும் கொப்பளிக்க அவன் எங்களைக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடிவிட்டான். பரவாயில்லை. அவமானத்தில் அழுதமாதிரி கூட இருந்தது. பின்னால் உதவும். நரேன் நடித்து முடித்த பரவசத்தில் ஆச்சரியமாகக் கேட்டான், “செம கெத்து மச்சி… இந்த நாளை அவன் மறக்கவே மாட்டான்…..” அந்த அலாரம் வைத்த செல்லை எடுத்துத் தடவியவாறே “செம சத்தம்டா இது.. அவனுக்கு மொட்டை மாடியில கேட்ட அலாரம் டோன் எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் பாத்ரூம் வரைக்கும் கேட்டிருக்கே”
“என்னது மொட்டை மாடில வெச்ச அலாரம் உனக்கு மூணு மாடி தாண்டி கீழே கேட்டுதா… காமெடி பண்ணாதேடா டேய்” நாங்கள் அனைவரும் சிரித்த திருப்தியில் அப்படி அப்படியே பிய்த்துக்கொண்டோம்.
நரேன் மட்டும் குழப்பமாக குருவிடம் சொல்வது கேட்டது, “டேய் குரு. உனக்குக் கேட்டிச்சா டா? நான் நெஜமாவே கேட்டேனே.. குழப்பமா இருக்கே.. ஒருவேளை……………..”
தொடரும்….