நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. “நரேன், நரேன் ….. ராகேஷ்.. ராகேஷ்…. இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்.. ராகேஷ்..” தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி உலுக்கி எழுப்புகிறான், “மச்சி, உனக்குக் கேக்குதா?”
உறக்கம் கலைந்த உளைச்சலில் சித்தார்த்துக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜுன் மீண்டும் படபடத்தான், “டேய் நல்லாக் கேளுடா, உனக்கு எதுவுமே கேக்கலையா?”
சித்தார்த் முயற்சி செய்து கூர்ந்து கவனித்தான்.
“… ராகேஷ்… இது உங்களுடைய இடம் இல்லை… எங்களுடைய இடம்…. நரேன்..”
“எதுவும் கேக்கலையேடா , என்னடா உளர்றே , லுச்சா லூசு, போய்த் தூங்குடா”
“கேக்கலையா .. ” அர்ஜுன் லேசாக நடுங்கத் தொடங்கினான். அவன் காதில் இன்னும் ஒலிக்கிறது அந்தக் குரல். “உன்னைப் போய் கேட்டேன் பாரு.. செவிட்டு மூதேவி. தூங்குடா.. நான் பாத்துக்கிறேன்”
சித்தார்த் போர்வைக்குள் மறைந்து கொண்டான். அர்ஜுன் முழுத்தூக்கமும் கலைந்து பயந்து உறைந்தான். ராகேஷை எழுப்பலாமா? ஒரு வேளை அவனைப் பார்த்ததும் பேய் ஏதாவது பண்ணிவிட்டால்? நரேன்….. நரேன் கீழே அவன் அறையில் உறங்குகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதா?
அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு எழுந்து அந்தக் குரல் வரும் திசையில் நடக்கத் தொடங்கினான். எதையோ முணுமுணுத்துக் கொண்டே போனான். நடக்க நடக்க குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. அத்தனையும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது, வழியில் ஏதோ ஒரு போர்வையில் அவன் கால் படவும், போர்வைக்குள் இருந்தவன் வன்மையாகப் புரண்டு உருண்டு படுத்தான். அந்தக் குரல் சட்டென நின்றுவிட்டது.
அர்ஜுன் உறைந்து நின்றுவிட்டான். உருண்டு போனவனோ மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். முகம் தெரியவில்லை. குரல் கேட்கவில்லை. குனிந்து பார்க்க பயம். திரும்பி நடக்க பயம். நேராக நடக்கவும் பயம். இருளில் ஒரு பேயை எதிர்த்து நிர்க்கதியாய் நிற்கிறான். அப்படியே ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.
“நரேன், நரேன்… ராகேஷ்… ராகேஷ்… இது உங்களுடைய இடம் இல்லை….”
மீண்டும் அதே குரல். அப்போது உருண்டவன் இன்னும் அப்படியே உயிரற்றுக் கிடக்கிறான். ஒரு நொடியில் அத்தனை அட்ரினலினும் பீய்ச்சிப் பாய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடுகிறான் அர்ஜுன். நேராக அவன் அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டு, விளக்கையெல்லாம் போட்டு, சிரமப்பட்டு மூச்சு விடுகிறான். அலமாரியைத் திறந்து வியாயகர் அருகிலிருந்து விபூதியை வாரிப் பூசுகிறான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. கைலாசத்தின் குரல் இப்போது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமானுஷ்யக் குரலை நினைத்தாலே பயத்தில் மூத்திரம் வருகிறது. ஆனால் தனியாகப் போகவும் முடியாத பயம். மர்ம அவஸ்தை !
அந்த அமானுஷ்யம் நரேனையும் ராகேஷையும் தேடிக் கொண்டிருக்கிறதா ? என்ன ஆனான் அந்தப் போர்வைக்குள் இருந்தவன்? ஒன்றுமே தெரியாமல் மேலே ராகேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறானே?
இரண்டு மூன்று பூச்சுகள் விபூதி அப்பிக் கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தான் அர்ஜுன். இடது பக்கம். அந்தப் போர்வைக்குள்ளிருந்தவன் அப்படியே கிடக்கிறான், அசைவே இல்லை. வலது பக்கம் திரும்பினால், பெரிய அதிர்ச்சி… வெறும் போர்வைகள்தான் இருக்கின்றன. எங்கள் நால்வரையும் காணவில்லை. நாய் ஒன்று ஏப்பம் விடுவது போல தூரத்தில் ஊளை இடுகிறது.
கையெல்லாம் நடுங்க நடுங்க, தன் செல்லை எடுத்து என்னை அழுத்துகிறான் அர்ஜுன். முதல் முறை மணியிலேயே பட்டென்று நான், “டேய் எங்கடா போனே? உடனே நரேன் ரூமுக்கு வா” என்று பதட்டமாகப் பேசி அணைத்துவிட்டேன். அர்ஜுன் தன் பயம் ஊர்ஜிதமான அதிர்ச்சியில் அரக்க பரக்க ஓடி வந்தான்.
நரேன் அறை வாசலில் அவன் கண்ட காட்சி……..
தொடரும்….