குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.
நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம்.
பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ஒன்றடிக்கவும் கொட்டாவி துரத்திவிட்டுத் தன் நாற்காலியில் அமர்கிறார். இரண்டு கம்பளிகள் கொண்டு இருக்கை சூடாக்கிய உலோக நாற்காலி. தன் 74 வருஷங்களையும் கோவையிலேயே கழித்தவர் கைலாசம். இதே நிலம் சுடுகாடாய் இருந்தபோது இரண்டு மூன்று இழவுகளுக்காக வந்திருக்கிறார், கொலை வழக்குகள் உட்பட. வாலிபத்தில் கத்தி பிடித்த கை, இப்போது ஒரு கம்பைத் தரையில் தட்டிக் கொண்டு கடனே என்று காவலுக்கு உலாத்திக்கொண்டிருக்கிறது.
சுற்றுப்பட்டுப் பேய்க்கதைகள் அத்தனையும் , சிலபல பேய்களும் கூட அவருக்கு அத்துப்படி. அவரின் பேரன் ஒருவன் எப்போதாவது வரும்போது எங்களிடம் மட்டையும் பந்தும் கடன் வாங்கி தப்புத்தப்பாக விளையாடுவார். அப்படித்தான் பழக்கம். விடுதிக்குப் பக்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுக் கட்டடத்தின் பேய் வரலாற்றை எங்களுக்கு அவர்தான் சொன்னார். இதுவரை ஏழெட்டு மண்டை ஓடுகள் தட்டுப்பட்டிருக்கிறதாம். இதில் ஏதோ தப்பு நடக்குதென்று கிட்டத்தட்ட தினமும் எங்களிடம் சொல்கிறார்.
“கடலைக் காட்டையும், களத்துமேட்டையும் கட்டடமாக்கலாம். புல்லு பூண்டால பெரச்சினை வராது. இப்பிடி சுடுகாட்டில தூர் வாரினா புதைச்சு வெச்சதுக்கெல்லாம் ரோஷம் வந்துருமே. என் கெரகம்….. நானே பாக்கப் பொதைச்சதுக்கெல்லாம் நானே காவல் காக்க வேண்டியிருக்கு. ராவைப் போல அடிக்கடி வெளியே வராதீங்க தம்பீ இந்தப் பக்கம்…”
அவரின் கம்புச் சத்தம் காற்றில் மேலேறி வரும்போது அவரின் புலம்பல் சத்தம்தான் கேட்கிறது. நிலவற்ற நிர்மல இருளின் கீழ் மொட்டை மாடியில் வரிசையாகப் பாய் போட்டுப் படுத்திருக்கிறோம் நாங்கள். நான், ராகேஷ், அர்ஜுன், சித்தார்த், அருள். இன்னும் கொஞ்ச தூரங்களில் ஆங்காங்கே இன்னும் சில பல போர்வைகள்.
நான் மல்லாந்து பார்த்து இருளை வெறித்தவாறே கேட்டேன், ” ஏன் மச்சி, இந்தப் பேய் கதை எல்லாம் பாதி சுடுகாட்டிலயும் மீதி சூசைடிலயும் தான் வருதில்லே ? ”
இருளே இறங்கி வந்து அசரீரியாய்ப் பேசுவது போல ராகேஷின் குரல் வந்தது, “ஆமாண்டா..நீதான் மச்சி புதுசா ஏதாவது எழுதணும். இங்கேயே பாரு.. முதல் வருஷம் அந்தத் தற்கொலைக் கேசு.. ரெண்டாம் வருஷம் அந்த பாத்ரூம் பேய். அதுவும் சூசைடு. இப்போ கடைசியா சுடுகாட்டுக் கதையும் கேட்டாச்சு இங்கே.”
“இது போருடா ராகேஷ். அந்த ரெண்டு கதைலயாவது பேய்க்கு ஒரு முகம் இருந்துச்சு. சுடுகாடுன்னு சும்மா சொன்னா ஒரு பயமே வரல. கிழடுகட்டைங்களதான் மூடியிருப்பாங்க. பாப்போம். நீ எழுதி வெச்சதுக்கு ஏதாவது யூத்தா ஒரு பேய் பதில் சொல்லுதான்னு”, சித்தார்த்தும் கலந்து கொண்டான்.
எழுத்துப் பிழையோடு அந்தக் கட்டடத்திலிருந்த கரி வாக்கியம் ராகேஷ் எழுதினதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அவனும் நரேனும் நாலைந்து பேரிடம் பந்தயம் கட்டி, சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு, கைலாசம் தாத்தா வைகை ஹாஸ்டல் பக்கம் போன நேரத்தில் மறைந்து சென்று அந்த மண்டை ஓட்டுப்பேய்களுக்கு எழுதி வைத்து வந்த தகவல். பேயெல்லாம் புளுகு என்றும் தனக்குப் பயம் இல்லை என்றும் நிரூபிக்க நடந்த பந்தயம்.
தொடர்ந்து பேச்சும் அரட்டையும் பேய்களையே புரட்டி வந்தது. பேச்சு கொஞ்சம் சூடு பிடிக்கும் நேரத்தில் சடாரென்று அருள் கூவினான, “டேய்.. அங்க பாரு.. எரியுது”
தொடரும்…