சுடுகாட்டை என்றைக்கு அழித்தார்களோ அன்று முதல் அகரம் கிராமத்துக்கு ஏழரை ஆரம்பமானது. அடுத்தடுத்து மரணங்கள். ஒரு பிணத்தை அடக்கம் செய்து காரியம் முடிப்பதற்குள் அடுத்த சாவு. கடந்த 3 மாதத்தில் மட்டும் 10 பேர் அற்ப ஆயுளில் இறந்துள்ளனர். சுடுகாட்டை வாங்கிய நபருக்கும் நிறைய கஷ்டம், நஷ்டம். அதிர்ச்சியில் உறைந்த அவர், உயிராவது மிஞ்சினால் போதும் என நிலத்தை விவரம் அறியாத பெங்களூர்காரருக்கு விற்றுவிட்டார். கிராமத்தில் அடிக்கடி அழுகுரல்… அலறல் சத்தம் கேட்டபடி இருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பலர் வெறிபிடித்தபடி ஆடுகின்றனர். அமைதிப் பூங்காவாக இருந்த கிராமம், இப்படி அலங்கோலமாக மாறியதற்கு சுடுகாட்டை இடித்துத் தள்ளியதுதான் காரணம் என்கின்றனர்.
சுடுகாட்டை கிளறியதால் அங்கிருந்த ஆவிகள் பேயாக கிராமத்தில் சுற்றித்திரிவதாக பீதி கிளம்பியது. கோயில் பூசாரி நடராஜன் பேய் பிடித்து ஆடியவர்களை மந்திரம், பரிகாரம் செய்து வருகிறார். பீதியில் நடுங்கும் கிராம மக்கள், தங்கள் வீடுகளில் வேப்பிலை கொத்துக்களை சொருகி வைத்துள்ளனர். அவ்வப்போது சாமியாடி நல்லது, கெட்டதுகளை கூறி வந்த ராஜா என்பவர் திடீரென ஒருநாள் இறந்து விட்டார். இவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு மாதேஷ் என்பவர் இறந்தார். இதனால் மக்களிடையே பீதி அதிகமானது. ஒருநாள்… ஊரில் இருந்த பெரிய புளியமரத்தின்கிளை திடீரென முறிந்து விழுந்தது. காற்றோ, மழையோ இல்லை. மரக்கிளை முறிந்ததில் அந்த வழியாக சென்ற சிறுமி படுகாயமடைந்தாள்.
சுடுகாட்டு பேய்கள் புளியமரத்தில் தஞ்சம் புகுந்ததாகவும், அதனால்தான் மரக்கிளை முறிந்து விழுந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். பேய் கிராமம் பற்றி சுற்று வட்டார கிராமங்களுக்கும் தகவல் பரவியது. அகரம் கிராமத்தினர் சிலரது உடலுக்குள் பேய் புகுந்திருப் பதாகவும் பக்கத்து கிராமங்களில் விபரீத வதந்தி உலவுகிறது. நடராஜன் என்பவர் அத்திமுட்லு கிராமத்தில் சுக்கு காபி விற்று வந்தார். நடராஜன் மூலமாக பேய் வந்து விடும் என பயந்த அத்திமுட்லு கிராம மக்கள், அவரை ஊருக்குள் வர வேண்டாம் என விரட்டியடித்துள்ளனர்.
பேய் பீதியை போக்க தர்மகர்த்தா கோபால் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பரிகார பூஜை செய்ய நடவடிக்கை எடுத்தனர். மாரண்டஅள்ளி அங்காளம்மன் கோயிலில் பரிகாரம் கேட்டனர். அதன்படி, ஆயிரம் எலுமிச்சம் பழங்களை வாங்கி அவற்றை துண்டு, துண்டாக நறுக்கி போட்டனர். அப்போதும் பேய்களின் ஆட்டம் அடங்கவில்லையாம். இதனால் ஊருக்கு நடுவில் மாரியம்மன் கொலு வைத்து சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்துள்ளனர். அட்டகாசம் செய்யும் பேய்களை சக்தி வாய்ந்த மாரியம்மன் அடித்து விரட்டி விடும் என அகரம் கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.