Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 4

பேய்கள் ஓய்வதில்லை – 4

அமாவாசை இருட்டு எனில் அந்த பகுதி மிகவும் பயங்கரமாக காட்சி தந்திருக்கும். ஆனால் அமாவாசைக்கும் பவுர்ணமிக்கும் இடைப்பட்ட அஷ்டமி இரவு ஆனதால் அரைநிலா வெளிச்சத்தில் சுருண்டு விழுந்த ரவியை தட்டி எழுப்ப முயன்ற முகேஷ் திடீரென அலறினான். ஏனேனில் அப்போது நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும். தனியாக அத்துவானக் காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இரவில் இப்படி ஒரு விசித்திர அனுபவ நேரத்தில் பின்னால் இருந்து யாரோ தொட்டால் கத்தாமல் என்ன செய்வான்.

ஆனால் அவன் பயந்தது கொஞ்சம் அதிகம் தான். என்ன தம்பி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்தறீங்க? என்றான் முகேஷை பின்னால் இருந்து தொட்டவன். அப்படி இன் சொல்லி அழைக்க கூடிய வயது இல்லைதான். தலை நரைத்து முகம் தெரியாமல் தாடி மூடியிருந்தது அப்பெரியவரை கையில் ஒரு தடியும் ஒரு டார்ச் லைட்டும் வைத்திருந்தார். முகேஷ் உடலெல்லாம் வியர்த்து போயிருந்தது. நீ.. நீங்க என்று அவரை நோக்கி கேட்டான்.

நான் இந்த ஊருதான் தம்பி! மனுசன் தான் பேயி இல்ல! பயப்படாம என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?

நீங்க எப்படி இங்க வந்தீங்க? நம்பாமல் கேட்டான் முகேஷ்.

அப்ப நீங்க என்னை நம்பலை? நம்பாதவங்க கிட்ட எனக்கு என்ன வேலை? என்று சொல்லியபடி வேகமாக எழுந்து நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்.

தா.. தாத்தா கொஞ்சம் நில்லுங்க! ப்ளீஸ்! நான் உங்களை நம்பறேன்! என்றதும் நின்றார்.

தாத்தா! இவன் என் ப்ரெண்ட்! வீட்டுல நல்லா பேசிகிட்டு இருந்தவன் திடீர்னு பேய் புடிச்சிகிட்டா மாதிரி நடந்துக்கிறான். யாரோஇவன் உடம்புல புகுந்திட்டாங்க போல! இவன் பேரை சொன்னா நான் இல்லேங்கிறான்! யாரு நீன்னு கேட்டாலும் பதிலே இல்லை! திடீர்னு ஓட ஆரம்பிச்சிட்டான்! அவன்பின்னாலேயே துரத்தி  வந்தேன். இவ்வளவு தூரம் வந்ததும் இங்க வந்து விழுந்துட்டான்.  அவனை எழுப்ப பார்க்கும் போது நீங்க வந்து தொடவும் பயந்துட்டேன்! ஆமா தாத்தா! நீங்க இந்த ஊருதானா? பாத்ததே இல்லையே என்று ஒரே மூச்சாக கேட்டான் முகேஷ்.

பாத்தியா! பாத்தியா! இன்னும் நீ என்னை முழுசா நம்பலை! சரி நீ ரொம்ப பயந்து போய் இருக்கே! நான் இந்த ஊருதான். இப்படி ராத்திரில வெளியே கடன் கழிக்க வர்ரது உண்டு! நீங்க ஓடியாரதையும் இவன் இங்க வந்து உழுந்ததையும் பார்த்தேன்! என்னமோ ஏதோன்னு விசாரிக்க வந்தேன். உங்க கதை சிக்கலாத்தான் இருக்கு.

தாத்தா இவன் அசையக்கூட இல்லே எனக்கு பயமா இருக்கு?

பயப்படாதே தம்பி! ஓடி வந்த வேகத்துல தடுக்கி விழுந்திருப்பான் போல! மயக்கத்தில இருக்கான். மூச்சு சீரா வருது! நாடி துடிப்பும் வேகமா அடிக்குது. என்று ரவியின் முகத்தில் கை வைத்து பரிசோதித்தவர் கொஞ்சம் இரு என்று எழுந்து எங்கோ சென்றார்.

திரும்பி வரும் சமயம் அவரது கையில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் இருந்தது. அதை ரவியின் முகத்தில் தெளித்தார்.ஒரு அட்டையை எடுத்து விசிறி விட சற்று நேரத்தில் கண்விழித்தான் ரவி.

மலங்கமலங்க விழித்தபடி முகேஷ்! நான் ஏண்டா இங்க வந்தேன்! யாரு இந்த பெரியவரு என்று கேட்டான் ரவி.

ஏண்டா கேக்க மாட்டே? இன்னிக்கு யாரு முகத்தில முழிச்சேனோ தெரியலை? உன் கூட அவஸ்தை பட வேண்டியிருக்கு? நீயா ஓடி வந்த உன் பின்னால நான் வந்தேன். நம்மளை பார்த்து இவர் வந்தாரு என்றான் சோர்வுடன் முகேஷ்.

புரியலை என்றான் ரவி.

முகேஷ் முதலில் இருந்து மொத்தமும் சொன்னான். அந்த பெரியவரும் கேட்டுக் கொண்டார். சரி இப்பவே மணி பன்னிரண்டை தாண்டி இருக்கும் வீட்டுக்கு கிளம்புங்க என்றார் பெரியவர்.

தாத்தா எங்களுக்கு பயமா இருக்கு? நீங்களும் எங்க கூட வர்ரீங்களா?

உங்க கூடவா?

ஆமாம் தாத்தா! இவன் பண்ண அட்டகாசம் கண்டிப்பா எனக்கு தூக்கம் வராது. இதுக்கு மேல இவனை தனியா இவன் வீட்டுக்கும் அனுப்ப முடியாது. பஞ்செட்டியிலதான் என் வீடு எங்களுக்கு துணையா வந்து இந்த ராத்திரி தங்குங்க நாளைக்குகாலையில நானே உங்களை வண்டியில கொண்டு வந்து விட்டுடறேன் என்று கேட்டான் முகேஷ்.

சரிப்பா! எனக்கும் வீட்ல யாரும் இல்ல ஒண்டி கட்டைதான்! கேப்பாரு இல்ல! நீங்களும் பயந்து போயி இருக்கீங்க  வாங்க போகலாம் என்று பெரியவரும் அவர்களுடன் கிளம்பினார்.

ஒரு அரைமணி நேர நடையில் முகேஷின் வீட்டு வாசலுக்கு வந்தனர் மூவரும். வெளியில் இருந்த நாய் குரைத்தது. சே சும்மாயிரு என்று கதவை திறந்து விட்டு வாங்க தாத்தா உள்ளாற வாங்க என்ற போது அங்கு தாத்தாவை காண வில்லை!

சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தான்  அவரை காணவே இல்லை! இது என்ன  ஆச்சர்யமாக இருக்கிறதே வீடு வரை பேசிக் கொண்டு வந்தவர் எப்படி மாயமானார் ஒன்றும் தெரியவில்லையே இன்று நடப்பதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறதே என்று உள்ளே வாடா ரவி என்று அழைத்தான் முகேஷ்.

ரவி உள்ளே நுழைய அவனை பார்த்து வாலைக்குழைத்து வரும் நாய் வழக்கத்திற்கு மாறாக பெரும் சத்தம் போட்டு குரைத்தது. அந்த நாயையே வெறித்துப் பார்த்தான் ரவி.

 

வீட்டுக்காரன் அலறியபடியே, ஆ அம்மா! யாரு இந்த பொண்ணு? என் வீட்டுக்குள்ள வந்து என்னையே அடிக்குது  என்று கன்னத்தில் கை வைத்தபடி புலம்ப அவன் மனைவி அடி ஆத்தி! இந்த கொள்ளையை பாருடி! சக்களத்தி மவளே நானே என் புருசனை அடிச்சது இல்லே நீ யாருடி அவ உன்னை என்ன செய்யறேன் பாரு என்று துடைப்ப கட்டையை தூக்கி வந்தாள்.

ஒரு நொடிதான் இருக்கும்! அந்த துடைப்பம் அவள் கையில் இருந்து இப்போது செல்வியின் கைக்கு மாறி இருந்தது.

பசியோட வந்திருக்கேன்! ஆறு மாச பசி! கொஞ்சமா? நஞ்சமா? ஆறுமாசம் ஆச்சுடி சாப்பிட்டு! கொஞ்சமா ருசி பார்த்தா என்னையே அடிக்க வர்ரியா? வர்ரியா? ம்ம்! வா இப்ப வா என்று பாய்ந்து அந்த வீட்டுக்காரியை துடைப்பத்தால் மாறி மாறி அடிக்க துவங்க,

அப்போதுதான் அந்த வீட்டுக்காரிக்கு இது ஏதோ பைத்தியமோ? அல்லது வேறு எதோ என்று புரிந்து இருக்க வேண்டும் போல! அம்மா தாயி தெரியாம செஞ்சி புட்டேன்! நீ உன் இஷ்டத்துக்கு துண்ணு தாயி! என்ன விட்டுடும்மா! என்று காலில் விழுந்தாள்.

ம்! அப்படி வா வழிக்கு என்று உள்ளே சென்ற செல்வி ஒரு பெரிய தட்டு எடுத்து வைத்துக் கொண்டு அங்கிருந்த குண்டானில் இருந்த சோறு முழுவதும் கவிழ்த்துக் கொண்டாள் . அதில் சட்டியில் இருந்த குழம்பு அனைத்தையும் கொட்டி பிசைந்து கைநிறைய எடுத்து  சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் பின்னாலேயே வந்து அவள் செய்த அட்டகாசத்தை பார்த்துவிட்டு செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தனர் ராகவனும் வினோத்தும்.

அடி வாங்கிய வீட்டுக்காரர், கன்னத்தை தடவியபடியே உங்க வீட்டு புள்ளையா சாமி? இப்படி கருவாட்டுகுழம்பை அள்ளி திங்குது என்று ராகவனை கேட்க, அவன் பதில் பேசாமல் வினோத்தை பார்த்தான்.

சாரிடா ராகவா என்றான்.

இப்ப சாரி கேட்டு என்ன பிரயோசனம்? முதல்ல இவளை இங்கிருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போற வழியை பார்க்கணும். சார்! மன்னிச்சுடுங்க! இது இவனோட சம்சாரம். கொஞ்சம் மெண்டல். ஹிஹி கொஞ்சம் அதிகமாயிடுச்சு!

மெண்டல எல்லாம் ஏன்யா வீதில உலாவ விடறீங்க? எனக்கென்னமோ அந்த பொண்ணுக்கு மெண்டல்னு தோணலை?

பின்ன ?

அதுக்கு பேயி பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்! முதல்ல ஏதாவது ஒரு நல்ல மந்திரவாதிகிட்ட கொண்டு போயி மந்திரிங்க?

நம்ம பூஜாரி கிட்ட போலாம்னு நினைக்கறேன் என்றான் ராகவன்.

ம்ம்! அதுக்கெல்லாம் இந்த பேய் அடங்காதுன்னு தோணுது! நீங்க பாய் யாராவையாது பாருங்க! அதோ பாருங்க அந்த பொண்ணு அசால்டா படி அரிசி சோறு முழுசையும் திண்ணு முடிச்சிடுத்து என்றார் அடிவாங்கிய அப்பாவி.

உண்மைதான் செல்வி அந்த குண்டானை காலி செய்து இருந்தாள். ஏவ் என்று ஏப்பம் வேறு! ராகவன் மிரண்டான்.அந்த வீட்டுக்காரிக்கோ இன்று நம்முடைய விருந்து போச்சே என்று இருந்தது.

முழுவதும் சாப்பிட்டு  முடித்த செல்வி ஒன்றும் நடவாதது போல எழுந்து வந்து இவர்களை கவனியாது அவள் பாட்டுக்கு வெளியே சென்றாள். செல்வி செல்வி நில்லு எங்க போறே என்று அவள் பின்னால் குரல் கொடுத்துக் கொண்டு சென்றான் வினோத்.

ஆனால் அதை செல்வி காதில் வாங்கியதாக தெரியவில்லை! அவள் பாட்டுக்கு நடக்கத் தொடங்கினாள்.

என்ன சாமி? என்ன நடக்குது? யாரு இந்த பொண்ணு? என்றார் அடிவாங்கிய வீட்டுக்காரர்.

யாருக்குத் தெரியும்?

தெரியாதையா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க?

அட  வினோத் வரேன்னு சொன்னான்! வான்னு சொன்னேன். ஆனா இந்த மாதிரி வில்லங்கத்தோட வருவான்னு நினைக்கலேயே என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு செல்வி வந்தாள்.

என்ன என்ன வில்லங்கம்? என்றாள் சாதுவாய்

நீ இப்ப வெளியே போகலை உன் கூட வினோத் வந்தானே எங்க அவன்?

இல்லையே இப்பத்தான் நான் உள்ளெயே வரேன்! சாப்பிட கூப்பிட்டுட்டு ஆளையே காணமேன்னு பாத்தேன். ரொம்ப நேரம் வெய்ட் பண்ணேன் அப்படியே வெளியே வந்தா நீங்க தெரிஞ்சீங்க உங்க கூடத்தான் அவரு இருப்பாருன்னு வந்தேன் ஆமா அவரு எங்கே?

இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல சாதுவாக கேட்ட செல்வியை வியப்புடன் பார்த்தான் ராகவன்.

இன்னாமா சொல்றே என் ஊட்டுக்குள்ளே புகுந்து ஒரு அரை விட்டு கருவாட்டு குழம்பையும் படி அரிசி சோறும் தின்னுபுட்டு கூப்பிட கூப்பிட நிக்காம போனே இப்ப என்னடான்னா? என்றாள் அந்த வீட்டுக்காரி.

என்னது நானா? எனக்கு நான் வெஜ்ஜே பிடிக்காது! உங்க வீட்டுல கருவாட்டு குழம்பு தின்னேனா? என்ன சொல்றீங்க? நான் இப்பத்தான் பசியோட பேஷ் வாஷ் பண்ணிட்டு இவர் வீட்டுல இருந்து வரேன். என்னை பார்த்து இப்படி சொல்றீங்களே?

அட என்னாடா இது பாப்பா விளையாடுது!

நான் விளையாடவும் இல்ல ஒண்ணும் இல்லை! ராகவ் சார்! வினோத் எங்க போனாரு வினோத் வினோத் என்று வீட்டினுள் எட்டிப்பார்த்த அவளை மறித்து அவள் கையை முகர்ந்து பார்த்தாள் அந்த வீட்டுக்காரி.

அந்த கையில் துளிக்கூட கருவாட்டு வாசம் வீசவில்லை! டெட்டால் வாசம் தான் வீசிற்று!

இது என்னமா என் கையை முகர்ந்து பார்த்துகிட்டு என்று அவள் கையை உதறியபோதுதான்  அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top