குஹாத்ரி மலையின் மாலைப்பொழுது மிகவும் ரம்யமாக இருந்தது. ஒன்றிரண்டு குயில்கள் கூவ சில்லென்று மலைக்காற்று வீசிக் கொண்டிருக்க சூரியன் அஸ்தமனத்திற்காக மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். குஹாத்திரி மலையில் பழனி ஆண்டவர் வடிவமாக வீற்றிருக்கும் அந்த தண்டபாணி கோயிலின் முன் வாசலில் சுவாமிஜியின் எதிரில் நின்று கதறி அழுது கொண்டிருந்தான் ரவி!
சுவாமிஜி! என்னை மன்னிச்சுருங்க! எனக்கு பேய் எல்லாம் பிடிக்கலை! என்னோட அக்காவை கொன்னவங்களை பழிவாங்கத்தான் இப்படி பேய் பிடிச்சா மாதிரி நடிச்சேன். ஆனா என் துரதிருஷ்டம் என்னால ஒருத்தரையும் பழி வாங்க முடியலை!
ப்ரவீணா என்னோட பெரியம்மா பொண்ணு! காதலிச்ச குத்தத்துக்காக அவளை சீரழிச்சு வீசிட்டானுங்க பாவிங்க! அப்ப நான் சின்ன பையன்! எங்க குடும்பமே இதனால அப்படியே நொறுங்கி போயிருச்சு! சென்னையிலே கொஞ்ச நாள் வசிச்ச நாங்க அங்க இருந்து திரும்பவும் பஞ்செட்டி வந்து சேர்ந்தோம்.
சின்ன வயசில புரியாத பல விசயங்கள் வயசானதும் புரிஞ்சது. என் அக்காவை கொன்னவங்களை பழிவாங்கனும்னு முடிவு பண்ணிணேன். அதுக்காக நான் விவரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். எனக்கு அதுக்கு உதவியா இருந்தது முஸ்லீம் நகர் தர்காவிலே இருக்கற பாய்தான்.
அவருகிட்டே தான் பல தகவல்கள் வாங்கிகிட்டேன்! பேய்கள் இல்லேன்னு சொல்லிகிட்டு இருந்த நான் எனக்குள்ள பேய் பிடிச்சாமாதிரி நினைச்சேன். எங்க அக்காவை கொன்னவங்கள்ல ஒருத்தன் நத்தத்துல இருக்கான்னு தகவல் தெரிஞ்சி நத்தம் போனேன். நள்ளிரவு நேரத்துல அவனை தேடிப் போனேன். ஆனா என் துரதிருஷ்டம் நான் அவனை கொல்றதுக்கு முன்னாலேயே அவனே செத்துப் போயிட்டான்.
அப்படியே ஓவ்வொருத்தரா நான் தேடி போனபோது எனக்கு முன்னாடியே அவங்க செத்து போயிட்டாங்க! எனக்கு வேலையே இல்லாம போயிருச்சு! ஆனா எனக்கு ரொம்ப சந்தோசமாத்தான் இருந்தது. பாவிங்க ஒருத்தனுக்கும் நல்ல சாவு இல்லை! கடைசியா இங்க கொண்ட பள்ளியிலே ஒருத்தன சாகடிக்க வந்த போதுதான் சுவாமிஜி உங்க கிட்ட மாட்டிகிட்டேன்.
இதுவரை மவுனமாக இருந்த சுவாமிஜி இப்போது கேட்டார். நீ கொல்ல நினைச்சவங்களை கொன்றது யாரு தெரியுமா?
தெரியாது! தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்!
உன்னோட அக்கா!
யா.. யாரு ப்ரவீணாவா?
ஆமாம்!
அவதான் உயிரோட இல்லையே?
நீ பேயா நடிச்சே! அவ பேயா இன்னொருத்தியோட உடம்புல புகுந்து வந்திருக்கா?
என்னோட அக்கா இப்ப எங்கே?
இதோ வந்துகிட்டே இருக்கா! சுவாமிஜி சொல்லி முடிக்கவும் செல்வி அங்கே வந்து நிற்கவும்சரியாக இருந்தது.
அவள் கண்களில் உக்கிரம் தாண்டவம் ஆடியது! சுவாமிஜி அதை சட்டை செய்யாமல் உட்காரு! ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கே கால் வலிக்கும்! என்றார்.
இதைக் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது!
அழாதே! உட்காரு! இதோ உன் தம்பி! உன்னை கொன்னவங்களை பழிவாங்க பேயா நடிக்க ஆரம்பிச்சிருக்கான் என்று சிரித்தார் சுவாமிஜி!
அக்கா! குரல் தழுதழுக்க செல்வியின் கைகளை பிடித்தான் ரவி
செல்வியின் கண்களும் கலங்கின! தம்பி! என்னை கொன்னவங்களை நானே பழிவாங்கிட்டேன்! நீ ஏன் வீணாக உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறாய்?
அடடா! என்ன கரிசனம் தம்பி மீது? உன் தம்பி வாழ்க்கை பாழாக கூடாது ஆனா அதே சமயம் இந்த பெண்ணின் வாழ்க்கை பாழாகலாமா?
செல்வி குலுங்கி குலுங்கி அழுதாள்.
தப்புதான் சுவாமி! ஆனால் எனக்கு இதை விட வேறு வழி தெரியவில்லை! என் தாக்குதலை செயல் படுத்த எனக்கு ஒரு உடல் தேவைப்பட்டது. அதற்குத்தான் செல்வியினுள் புகுந்து கொண்டேன். ஆனாலும் நான் பழிவாங்க நினைத்தவர்களை மிரட்டினேனே தவிர கொல்லவில்லை! செல்விக்கு எந்த பாதிப்பும் வராது.
உன் பழிவாங்கும் படலம் முடிந்து விட்டது அல்லவா? இந்த பெண்ணை விட்டுவிடு! இவளைத்தேடி இவள் பெற்றோர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுவாமி எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல கேட்கிறீர்களே! இந்த ஊரிலே எனக்கு கணக்கு ஒன்று இருக்கிறது அது தீர்ந்ததும் தான் நான் விடை பெறுவேன்.
என்ன கணக்கு அது?
இங்கதானே என்னை அடைத்து வைத்து சீரழித்தார்கள். என்னை அடைத்து வைக்க இடம் கொடுத்தவன் அவனை பழி வாங்க வேண்டாமா?
எல்லோரையும் இப்படி பழிவாங்கி கொண்டே இருந்தால் எப்படி? இடம் கொடுத்தவனுக்கு உன்னை இப்படி செய்வார்கள் என்று தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அல்லவா?
எப்படி சொல்கிறீர்கள்? அவனுக்கு தெரியாது என்று!
இப்படித்தான் என்று சுவாமி ஒருவனை முன் நிறுத்தினார். அவனுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும் தாயே! என்னை மன்னித்துவிடு என்று அவன் செல்வியின் காலில் விழுந்தான்.
தொடரும்….