ப்ரவீணா! அவள் எங்கள் செல்லக்குட்டி!
என்ன பாய் சொல்றீங்க! நீங்க முஸ்லீம்! அவ இந்து அப்புறம் எப்படி அவ உங்க செல்லம்?
இந்த முஸ்லீம்- இந்து- கிறிஸ்து இந்த மதங்களை எல்லாம் கடந்த மதம் ஒண்ணு இருக்கு! அது நம்ம எல்லோர் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறது. அது சிலரிடம் வெளிப்படும் சிலரிடம் மறைந்து கிடக்கும் அதுக்கு பேருதான் அன்பு. தூய அன்பு நிறைஞ்சவங்க கிட்ட மத மாச்சர்யமெல்லாம் இருக்காது. அவங்களுக்கு தெரிஞ்சது உயிர்களிடத்தில் அன்பு செலுத்தனுங்கிறது மட்டும்தான். இதைத்தான் நபிகளும் சொன்னார். கிறித்துவும் சொன்னார். உங்க மதத்தில நிறைய பேரு சொல்லியிருக்காங்க!
சரி பாய்! ஒத்துக்கறேன்! ப்ரவீணாவை உங்களுக்கு எப்படி பழக்கம்?
அவ இந்த தர்காவிலேயேதான் வளந்தா தம்பி! இந்த தர்காவிலே அவளுக்கு தெரியாத இடம் கிடையாது. இந்த தர்காவிலே அவளுடைய செல்வாக்கு அதிகம். அப்படி வளந்தவ அவ.
நத்தம் கிராமத்துல அவ பொறந்தாலும் இந்த தர்காவிற்கு வந்து இங்கே கூட்டி பெருக்கி தர்காவை சுத்தப்படுத்தி அழகு படுத்துவா. இங்க வர எத்தனையோ பேருக்கு வழிகாட்டியா இருந்திருக்கா! அவங்களுக்கு தேவையான சவுகர்யங்களை செய்து கொடுத்திருக்கா.
அப்புறம்?
அவ மனசுக்கு அவ எப்படியோ வாழ வேண்டியவ தம்பி! ஆனா பாழாய் போன காதல் அவளையும் அழிச்சி அவ குடும்பத்தையும் அழிச்சிருச்சி!
என்ன சொல்றீங்க பாய்! ப்ரவீணா சாகறதுக்கு காரணம் காதலா?
ஆமாம் தம்பி! பெண்ணுங்களுக்கு ஒரு வயசு வரைக்கும்தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும். அதுக்கப்புறம் நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையா இருந்தாலும் வயசும் ஆர்வமும் அவங்களை சில சமயம் திசை திருப்பி விட்டுடுது. சிலர் அதில் எதிர் நீச்சல் போட்டு கரையேறிடறாங்க! பலர் கவிழ்ந்து இறந்து போறாங்க! இவ எதிர் நீச்சல் போட்டு கரையேறிட்டா! ஆனாலும் திட்டமிட்டு அவளை கவிழ்த்து விட்டுட்டாங்க!
பாய் நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியலை!
ப்ரவீணா ஒரு பையனை காதலிச்சா! இது அவ டிகிரி படிக்கும் போது ஆரம்பிச்சிருச்சு! அவ ரொம்ப ஏழ்மையான குடும்பம். அவங்க அம்மா மட்டும் தான் அப்பா இல்லை! அவங்க அம்மாவும் அந்த ஊரிலே இட்லி கடை வைச்சு நடத்தி எப்படியோ இந்த பெண்ணை கஷ்டப்பட்டு காலேஜிற்கு அனுப்பினாங்க!
போன இடத்துல காதல்! பையன் பெரிய இடம்! வழக்கம் போல மோதல் பின்னர் காதல் என்பதெல்லாம் இல்லை இது. பார்த்தவுடன் காதலும் இல்லை!
ரெண்டு வருசம் ரெண்டு பேரும் ஒரே வகுப்பிலே படிச்சும் ஒருதடவை கூட பேசிகிட்டது கூட கிடையாது. ஆனா ரெண்டுபேருமே மத்தவங்களோட நடவடிக்கையை கவனிச்சு ஒருத்தர் மேல ஒருத்தர் மதிப்பு வைச்சிருந்தாங்க. ஒருநாள் கல்லூரி ஆண்டு விழாவில பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து தெரிவிச்சுகிட்டாங்க!
அப்புறம் நட்பா மாறி அப்படியே காதலா மாறிடுச்சு! ப்ரவீணாவிற்கு அந்த பையன் மகேஷ் மேல ரொம்பவே பாசம்! ஆனா அவன் உயர்ந்த சாதிக்காரன். இவளோ வேற சாதிக்காரி! அவனோ பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரன். அவனோட அப்பா பெரிய பண்ணைக்காரர். இவளோ ஆப்பம் சுட்டு விக்கறவளோட மக!
விஷயம் அப்படியே ரெண்டு பேரோட பெற்றோருக்கும் தெரிய வந்தது. ப்ரவீணாவோட அம்மா இதை கேள்விப்பட்டதும் துடிச்சி போயிட்டா!
மகளே இது நமக்கு ஆகாது! நம்ம குடும்பத்தை கொன்னே போட்டுறுவாங்க! அவனை மறந்துடு! அப்படின்னு தீர்மானமா சொல்லிட்டா!
அங்கே மகேஷ் வீட்டிலும் தீயா கொதிச்சாங்க! கேவலம் ஒரு இட்லி கடைகாரியோட பொண்ணோட சுத்தறீயே! நம்ம தகுதி என்ன? நீ அவளை விடலேன்னா அவ உசுரு இருக்காதுன்னு மிரட்டினாங்க.
மகேசும் ப்ரவீணாவும் இதை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிட்டாங்க! ஆனா அவங்களாலே மறக்க முடியலை! அவங்க காதல் தொடர்ந்தது. ரெண்டு குடும்பமும் படிப்பு முடியறவரைக்கும் கண்டும் காணாம இருப்போம்! அப்புறம் ஒரு வழி கண்டுபிடிப்போம்னு விட்டு வைச்சாங்க!
சரி! நம்ம அப்பா அம்மா முதல்ல முரண்டு பிடிச்சாலும் கண்டுக்காம விட்டுட்டாங்கன்னு இவங்களும் காதலை கண்டின்யு பண்ணாங்க!
டிகிரி வாங்கி முடிச்சதும் முதல் இடி வந்தது.
மகேஷை மேல் படிப்பு படிக்க வெளிநாட்டுக்கு அனுப்ப போறதா அவங்கப்பா சொன்னாரு. இது ப்ரவீணாவுக்கு தெரிஞ்சதும் துடிச்சுப் போனா. இதுக்குள்ள அவங்க அம்மா அவளுக்கு பையன் தேட ஆரம்பிச்சா
நான் மகேஷைத்தான் கட்டிப்பேன்னு ப்ரவீணா பிடிவாதம் பிடிக்கவும் நாம எப்படி பண்ணையாரு கூட சம்பந்தம் வைக்கிறதுன்னு ப்ரவீனாவோட அம்மா கலங்கி நின்னப்ப பண்னையாரு அந்த இட்லி கடை காரம்மா வீட்டுக்கு வந்து நின்னாரு.
என்ன இட்லி கடை காரம்மா! பொண்ண விட்டு நல்ல பணக்கார பையனையா பார்த்து மடக்கிட்டே! என்று அவர் ஆரம்பிக்கும் போது அப்படியே கூசி போய் நின்றாள் அந்த தாய்!
தொடரும்….