Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 21

பேய்கள் ஓய்வதில்லை – 21

அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான்  யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி.

எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார்.

பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்!

யாரை?

என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை!

பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா?

எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ஆறுமாச கர்ப்பிணியா இருந்த என் பெண்டாட்டியை தீ வைச்சு கொளுத்தினாங்களே அது தப்பில்லையா?

இதை சொல்லும் போது ரவியின் முகம் அப்படியே சிவந்தது! ஆக்ரோஷமாக கத்தினான்.

சரி! அதுக்காக

என்னை கொன்னவங்களை தேடிகிட்டு இருக்கேன்! சில பேரை முடிச்சாச்சு! சிலபேர் பாக்கி இருக்கு! வந்த காரியம் முடிஞ்சதும் போயிருவேன்!

நீ போயிருவே ஆனா அப்பாவி இந்த ரவி இல்லே போலிஸ் கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கும்.

கண்டிப்பா மாட்ட மாட்டான்!

எப்படி சொல்றே?

நான் இவன் உடம்பிலே தங்கறேன்! ஆனா இவன் கையால எந்த கொலையும் செய்யலை!

புரியும் படியா சொல்லு!

எனக்கு தங்குமிடம் வேணும்! என் உடலுக்கு சக்தி வேணும்! அதுக்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு உடல்தான் ரவி! என் ஆன்மா அவன் உடம்புல தங்கி இருக்கு! இது தற்காலிகம்தான்! அது சாந்தியடைஞ்சதும் போக வேண்டிய இடத்திற்கு போயிரும்! இவன் உடல் என்னோட தங்குமிடம் மட்டும் தான்! இவனைக் கொண்டு நான் எந்த கொலையும் பண்ணலை! இவன் மூலமா கொலையாளிகளோட இடத்திற்கு போறேன்! அப்புறம் இவனை விட்டு பிரிஞ்சுதான் என்னோட பழிவாங்கலை செய்யறேன்.

ஆனா கொலை நடந்த இடத்தில இவன் இருப்பானே! ஏதாவது சாட்சியம் கிடைச்சா ரவியோட வாழ்க்கை பாதிக்கப்படுமே!

கண்டிப்பா பாதிக்க படாது!

எப்படி சொல்றே!

ரவி யாரையும் கொல்லலை! நான் தான் கொல்லறேன்! இதை நான் எங்க வேணாலும் சொல்வேன்!

நீ சொல்லுவே ஆனா கோர்ட் நம்பணுமே!

ரவியின் உடலில் இருந்த அந்த ஆவி உறுமியது! என்னை விடு! நான் போகனும்! உன் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டிருக்க முடியாது!

நீ இப்ப என் கோட்டையில் இருக்கே! என் பேச்சை கேட்டாத்தான்  உனக்கு விடுதலை!

அது முடியாது! நான் கிளம்பறேன்! ரவி அந்த சக்கரத்தில் இருந்து ஒரு அடி வைத்திருப்பான்! ஆ.. என்று அலறியவாறே விழுந்தான்.

முகேஷ் மிகவும் பயந்து போயிருந்தான். சித்தப்பா என்ன? ரவிக்கு என்ன ஆயிற்று?

ஒண்ணும் இல்ல! நீ பயப்படாதே! இது ஒரு துர் ஆவி!

இதை உங்களாலே விரட்ட முடியாதா சித்தப்பா?

விரட்டணும்!

என்ன சித்தப்பா ஒரு மாதிரி தயக்கமா சொல்றீங்க!

தயக்கம் எதுவும் இல்லை! ஆனா அந்த மகேஷ் ஆவியோட பேசினதுல அதன் செயல்ல ஒரு நியாயம் இருக்கறாமாதிரி தோணுது!

அதுக்காக அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்களா? ரவி என்னாவான்?

நீ என்கிட்டே வந்துட்டே இல்லே! ஒண்ணும் ஆகமாட்டான்! இப்போதைக்கு அவன் மேல இருக்கிற ஆவி எங்கேயும் போகாத மாதிரி கட்டு போட்டிருக்கேன். அதன் பிறகு வர்ற அமாவாசையிலே அதை அவன் கிட்ட இருந்து இறக்கி ஒரு பாட்டில்லே சிறை வைச்சிடிறேன்!

என்ன சித்தப்பா! அலாவுதீன் கதை மாதிரி சொல்றீங்க!

அடங்காத ஆவிகளை இப்படி பாட்டில்ல இறக்கி  சீல் வைச்சி பூமிக்கு அடியிலேயோ இல்ல கடல்லேயோ தூக்கி வீசிடுவோம்!

என்னமோ போங்க! ரவி நல்ல படியா குணமானா போதும்!

கண்டிப்பா குணமாயிருவான் கவலைப்படாதே!

ஆமாம் சித்தப்பா! ஆவிங்கன்னா என்ன? அதை நேர்ல பார்க்க முடியுமா?

துர் மரணம் அடைஞ்சவங்களோட ஆத்மாதான் ஆவி! இறந்த உடல்ல அது மீண்டும் புக முடியாது. ஆனா அதனோட ஆசைகள் பூர்த்தி அடைஞ்சி இருக்காது, அதனோட ஆயுசு இன்னும் இருக்கும். அதனாலே அது மேல் உலகமும் போக முடியாது. இப்படி ரெண்டு கெட்டான் நிலையில அது வாழ்ந்த இடத்தில் அலைஞ்சி கிட்டு இருக்கும். அதனோட ஆயுள் முடியறவரைக்கும் அது இப்படித்தான் வாழ வேண்டியிருக்கும். அதன் பின்னர் தான் அது மேல் உலகம் போய் அப்புறம் பாவ புண்ணிய கணக்கு எல்லாம் பார்த்து அடுத்த பிறவி இல்லே மோட்சம்.

சித்தப்பா! பிறவியிலே உங்களுக்கு நம்பிக்கை இருக்கா!

நமக்கு அடுத்த பிறவின்னு  ஒண்ணு இருக்கா?

அது பெரிய ஆராய்ச்சிக்குரிய விசயம்! பல சித்தர்களும் முனிவர்களும் பிறவி இருக்குதுன்னு பாடி வைச்சிட்டு போயிருக்காங்க! நம்முடைய புராணங்களும் பிறவி இருக்குதுன்னு சொல்லுது. ஆனா இதுவரைக்கும் இது உண்மைன்னு நிரூபீக்க படலை!

சரி சித்தப்பா! இப்ப ரவி மேல இருக்கிற ஆவியோட  ஐ மீன் மகேஷ் என்கிற ஆவியோட பழைய வாழ்க்கை வரலாறு எப்படி தெரிஞ்சிக்கிறது. திரும்பவும் இப்படி சக்கரம் எல்லாம் வரைஞ்சி பூஜை எல்லாம் செஞ்சிதான் தெரிஞ்சிக்கணுமா?

இன்னொரு முறையும் இருக்கு!

அது என்ன முறை சித்தப்பா?

அதுதான் ஆவியோட பேசற ஓஜா போர்டு முறை!

அது எப்படி?சித்தப்பா ஆவியோட பேசறது?

சொல்றேன்! அதுக்கு முன்னாலே சுடுகாட்டு வரைக்கும் போய் மீண்டு வந்த ஒரு மனுசனை பத்தி தெரியுமா உனக்கு?

என்னது சுடுகாட்டுக்கு போயி மீண்டு வந்துட்டாரா?

ஆமாம் நம்ப பக்கத்து ஊரில ஒரு ஆசாமி திடீர்னு செத்து போயிட்டான். எல்லாருக்கும் தகவல் சொல்லி அனுப்பிச்சி எல்லா சடங்கும் முடிச்சிட்டாங்க! சுடுகாட்டுக்கு கொண்டு போய் பிணத்தைவச்சி கட்டையும் அடுக்கிட்டாங்க!

தீ வைக்கற சமயம்! நம்மாளு திடீர்னு எழுந்திருக்கான்!

அங்கிருந்தவங்க பதறி அடிச்சிகிட்டு ஓட  ஆரம்பிச்சிட்டாங்க! அப்புறம் இவன் நில்லுங்க! நில்லுங்க! நான் பேயி இல்ல மனுசந்தான்னு கத்தவும் ஒருத்தரு ரெண்டு பேரு கொஞ்சம் தைரியம் வந்து நின்னாங்களாம்!

அப்புறம்?

அவன் மேல போன கதைய கதைகதையா சொன்னானாம்? எம கிங்கரர்கள் வந்தாங்களாம்! பாசக்கயிற்றை வீசினாங்களாம்? அப்படியே கட்டி இழுத்துகிட்டு போய் எமன் முன்னாடி நிறுத்தினாங்களாம். அப்ப சித்திர குப்தன் இவனோட விதியை படிச்சிட்டு இவன் சாகற நேரம் இது இல்ல! மாத்தி அழைச்சிட்டு வந்துட்டாங்க என்று சொன்னானாம்!

எமன் ரொம்ப கோபப்பட்டு சீக்கிரம் இவன் உடம்புல உயிரை கொண்டு போய் சேருங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாராம்! இவனும் தூங்கி முழிச்சாப்பல எழுந்திகிட்டானாம்!

அப்புறம் என்ன ஆச்சி சித்தப்பா?

என்னதான் அவன் கதை சொன்னாலும் நம்ம மக்க அவனை திரும்பவும் வீட்டுக்குள்ளே சேர்த்துக்கலை! இப்ப தனியா சுடுகாட்டில தான் இருக்கான்.

ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கே?

சரி இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது? விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்குது! இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்குமா?

அப்ப நீ நம்பலையா?

ஊகும்! இது ஏதோ டுபாக்கூரா இருக்கும்!

ஆனா உன் நண்பனை பேய் பிடிச்சிருக்குன்னு மட்டும் எப்படி நம்பறே?

சித்தப்பா நீங்க என்ன சொல்ல வறீங்க?

எவனோ எமனை பார்த்து வந்ததை நம்ப மாட்டேன்னு சொல்ற நீ உன் ப்ரெண்டுக்கு பேய் பிடிச்சிருக்கிறதை மட்டும் எப்படி நம்புற?

ஏன்னா இவன் வித்தியாசமா நடந்துக்கிறான்! செய்கை எல்லாம் பயங்கரமா இருக்கு!

அப்ப கண்ணாலே பார்த்தா நம்புவே இல்லையா?

ஆமாம் சித்தப்பா! கண்ணால பார்க்கிற காட்சிங்க கூட இப்ப பொய்யாகிருதே அப்படி இருக்கும் போது கதைகளை நம்பறது கஷ்டம்தான்!

உன் ப்ரெண்ட் ஏன் தனக்கு பேய் பிடிச்சிருக்கிறதா வேசம் போடக்கூடாது?என்று சுவாமிஜி கேட்க அவரையே  வியப்பாய் பார்த்தான் முகேஷ்! இதை பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் ரவி! அவன் கண்கள் சிவந்தன!

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top