இன்னிக்கு ராத்திரியே என்னை கொன்னவனோட பொணம் விழும்! அதை உங்க யாராலும் தடுக்க முடியாது! கண்களில் கோபம் மின்ன சொன்ன செல்வியை பார்த்து பாய் தன் சாந்தமான விழிகளால் அமைதிப்படுத்தினார்.
அம்மா ப்ரவீணா! பழிக்கு பழி வாங்கி விட்டால் எல்லாம் சரியாயிடுமா? அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவன் திரும்பவும் உன்னை பழி வாங்குவான்! தவறுக்கு சரியான தண்டனை மன்னிப்புதான்மா! என்றார்.
பாய்! நீங்க வேணா இப்படி அஹிம்சை பேசலாம்! ஆனா பாதிக்கப்பட்டது நான்! எனக்குத்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். மூணு வருசமா இதுக்குத்தான் நான் காத்துகிட்டு இருந்தேன்! இன்னிக்குத்தான் அதுக்கான வாய்ப்பு கூடி வந்திருக்கு! என்னை நீங்க தடுக்காதீங்க! மீறி தடுத்தாலும் அதையும் நான் மீறி போய்கிட்டே இருப்பேன்.
உண்மைதாம்மா! நீ சொல்றது! நீ பாதிக்கப்பட்டவதான்! ஆனா இது முடிஞ்சு போன ஒரு விசயம்! நீ மறுபடியும் ஆரம்பிச்சு வைக்கணுமா? இது உன் தலைவிதி! இப்படி சாகணும்னு எழுதி இருக்கு!
நல்லா தெரிஞ்ச நீங்களே இப்படி பேசக்கூடாது பாய்! தலைவிதி வேறு! என் முடிவு இவர்களால் எழுதப்பட்டிருக்கிறது! விதிப்படி செத்திருந்தா என் ஆத்மா இப்படி அலைஞ்சிகிட்டு இருந்திருக்காது!
சரிம்மா! அவங்க உன்னை கொன்னவங்களாவே இருக்கட்டும்! ஆனா நீ அவங்களை கொல்லனுமா? நீ இந்த பொண்ணு ரூபத்துல கொல்வதாலே இந்த பொண்ணுக்குத்தானே ஆபத்து. நீ செஞ்ச காரியத்துக்கு இந்த பொண்ணு தண்டனை அனுபவிக்கனுமே அதை கொஞ்சம் யோசித்துப்பார்!
பாய்! உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது! அதனாலே பேச விரும்பலை! நான் என் முடிவை மாத்திக்க விரும்பலை! முடிஞ்சா நீங்க தடுத்துக்குங்க!
அதே வினாடி செல்வி அப்படியே மயக்கமுற்றாள்! வினோத் அவளை கைத்தாங்கலாய் தாங்கிக் கொண்டான். பாய் உதட்டை பிதுக்கினார். வினோத் பாயைப் பார்த்தான். என்ன பாய்! என்ன செய்யலாம்?
இது மிகவும் வன்மம் கொண்டு அலையற ஆத்மாவா இருக்கு? இதை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். அதும் போக்குல விட்டுத்தான் பிடிக்கணும்.
ஆனா! இந்த ஆவிபாட்டுக்கு கொலை அது இதுன்னு பண்ணிடுச்சுன்னா இந்த செல்வி பொண்ணு இல்ல தண்டனை அனுபவிக்க வேண்டியதா போயிடும்! நீங்கதான் ஏதாவது செய்யனும் பாய்.
செய்யலாம்! அந்த அல்லாதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். நான் நாகூர் ஆண்டவரை தியானம் செய்யறேன்! பல அற்புதங்களை படைச்ச அவர் இதுக்கும் ஒரு வழி சொல்வார்.
பாய் உள்ளே சென்று தியானத்தில் ஆழ்ந்து விட வினோத்தும் அவருடன் சென்று மனதார நாகூர் ஆண்டவரை வேண்டிக்கொண்டான்! நாகூர் ஆண்டவரே! செல்வியை பிடித்திருக்கும் இந்த துர் ஆத்மாவை சாந்திப்படுத்து. செல்வியை குணப்படுத்து! மிகவும் உருக்கமாக வேண்டிக் கொண்டு கண்களை திறந்தபோது அவனது எதிரில் ஒரு வெண்மையான உருவம் புன்னகையுடன் தென்பட்டது. வினோத் சிலிர்த்துப் போனான். அப்படியே தலை வணங்கினான். அந்த உருவம் ஆசி வழங்கி அப்படியே மறைந்து போனது.
மீண்டும் கண்களை திறந்தான். இப்போது எதையும் காணவில்லை! அப்படியே வியந்து போயிருந்தான் வினோத். இப்போது பாய் கண்களை திறந்தார். வினோத்தை பார்த்தார். பாய்! ஒரு ஆச்சர்யம்! நீங்க தியானத்துல இருந்தபோது நானும் அப்படியே ஆண்டவரை வேண்டிக் கொண்டிருந்தேன். அவர் அப்படியே காட்சி கொடுத்தார் ஆசியும் வழங்கினார்.
பாய் புன்சிரித்தார்! நீ புண்ணியம் செய்திருக்கிறாய் வினோத்! நாகூர் ஆண்டவரின் ஆசி உனக்கிருக்கிறது! கண்டிப்பாக உன்னை அவர் ரட்சிப்பார்! இனி பயமில்லை! செல்விக்கும் எதுவும் ஆகாது. நீ பயப்படவேண்டியது இல்லை! எல்லாவற்றையும் அந்த நாகூர் ஆண்டவர் பார்த்துக் கொள்வார். நாம் அவர் மீது பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாம். என்றார்.
பாய்! நீங்கள் தியானத்தில் இருந்தீர்களே! ஏதாவது..?
அதுதான் சொல்லி விட்டேனே! உனக்கு இனி கவலை இல்லை! எல்லாவற்றையும் அந்த ஆண்டவர் பார்த்துக் கொள்வார். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்! ஆனால் செல்விக்கு அதனால் எந்த ஆபத்தும் வராது.
உண்மையாகவா பாய்?
கடவுளிடம் நம்பிக்கை வைத்தபின் சந்தேகப்படக்கூடாது வினோத்! நாகூர் ஆண்டவர் யாருக்கும் சாமான்யமாக காட்சி தரமாட்டார். உனக்கு அவரது ஆசி இருக்கிறது நீ கவலைப்படாதே! செல்வியை அழைத்துக் கொண்டு நீ உன் அறைக்கு செல்!
அப்போதுதான் வினோத் செல்வியைத் தேடினான். செல்வி..! அவள் மயக்கமானது அங்கேயே படுக்கை வைத்து விட்டு வந்து விட்டேன். இதோ போய் பார்க்கிறேன்.
செல்வி! செல்வி! அழைத்துக் கொண்டு சென்றவன் அதிர்ந்தான். அங்கே செல்வியைக் காணோம்! பாய் செல்வியைக் காணோம்! என்று கத்தினான்.
அங்கே வந்த பாய், பதட்டப்படாதே! அவள் எழுந்து அறைக்கும் சென்று இருக்கலாம்! அங்கே போய் பார்!
இல்லை பாய்! எனக்கு பயமாக இருக்கிறது! நீங்களும் வாருங்கள்!
இருவரும் அந்த மசூதியின் பக்க வாட்டில் அமைந்திருந்த பக்தர்களின் தங்கும் விடுதியை நோக்கி வந்தனர். அங்கிருந்த அறைகளில் செல்விக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர். அங்கு கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை தட்டினர்.
சில நிமிட தட்டலுக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. திறந்தவள் செல்விதான்!
அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விட்டான் வினோத்.
என்ன வினோத் பயந்துட்டீங்களா? செல்வி கேட்டாள்.
இ.. இல்ல நீ திடீர்னு காணாம போனதும் கொஞ்சம் பரபரப்பு! அவ்வளவுதான்!
நீங்க பாட்டுக்கு என்னை அங்கே விட்டுட்டு காணாம போயிட்டீங்க! நான் அப்படியே வந்தேன். பாய் சொன்னதா இந்த அறையை காட்டினாங்க! ஒரே அசதியா இருந்துச்சு! அதான் படுத்து தூங்கிட்டேன். ஆமா நீங்க இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க!
வினோத் ஏதோ சொல்ல முயன்றபோது பாய் கை அமர்த்தினார். ஒண்ணுமில்லேம்மா! நானும் தம்பியும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். வேற ஓண்ணும் இல்ல நீ படுத்து தூங்கு! வா தம்பி! நாம உன்னோட அறைக்கு போகலாம்!
குட் நைட்! சொல்லிவிட்டு வினோத் தன் அறைக்குள் சென்றான். கவலைப்படாதே தம்பி! அந்த நாகூரார் எல்லாத்தையும் பார்த்துப்பார்! நீங்க எந்த கவலையும் இல்லாமே தூங்குங்க! நாளைய பொழுது நல்லதாய் விடியும் என்றார் பாய்.
தலையசைத்த வினோத் உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான். சட்டென்று அவனுக்கு தூக்கம் வர மறுத்தது. இந்த செல்வி யார்? நான் ஏன் துபாய் வேலையை விட்டு வரவேண்டும். இவளைக் கூட்டி வந்து இத்தனை சிக்கல்களில் சிக்க வேண்டும். இன்னும் என்ன நடக்குமோ என்று பல்வேறு சிந்தனைகள் அவனை போட்டு வாட்டி எடுத்தது.
அப்படியே எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை!
நள்ளிரவு மணி பன்னிரண்டு இருக்கும்! அந்த மசூதியே நிசப்தமாய் இருந்தது. செல்வி யாரோ எழுப்பியது போல படுக்கையில் இருந்து எழுந்தாள். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அப்படியே நடக்கத்தொடங்கினாள். விடுதியில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வழியில் நடக்கத்தொடங்கினாள். அந்த வழியெங்கும் இருபுறமும் தென்னை மரங்கள் இருந்தன. அந்த நள்ளிரவில் அவை தலைவிரித்து நின்ற கோலம் பயங்கரமாக இருந்தது. பக்கத்து வயல்களில் இருந்தும் அந்த தென்னை மரங்களில் இருந்தும் சில்வண்டுகளின் சப்தமும் பறவைகளின் சப்தமும் மட்டும் அந்த அமைதியை கிழித்துக் கொண்டிருந்தன.
செல்வி அது எதையும் லட்சியம் செய்யாதவாறு வேகமாக அந்த பாதையில் நடந்தாள் பிரதான சாலைக்கு வந்தாள். பொன்னேரி செல்லும் அந்த சாலை இரு புறமும் புளிய மரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டது. தூரத்தே அந்த இரவிலும் ஒன்றிரண்டு வாகனங்கள் வருவது விளக்கு வெளிச்சத்தில் இருந்து தெரிந்தது. செல்வி அந்த சாலைக்கு வந்தாள்.
அந்த சாலையில் சற்று தூரம் நடந்து நடுமையத்தில் நின்று கொண்டாள். இப்போது அவள் கூந்தலை விரித்துவிட்டுக் கொண்டாள். கண்களில் ஒரு வெறி தென்பட்டது. அந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்த அவள் முகத்தில் ஒரு புன் சிரிப்பு தென்பட்டது. ஆம் அவள் எதிர்ப்பார்த்தது நடக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சிதான் அது.
அந்த சாலையில் வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது! அதைப்பற்றி கவலைப்படாது நடு சாலையில் தலைவிரித்து நின்று கொண்டிருந்தாள் செல்வி.
சாலை நடுவே தலைவிரிகோலமாக இருக்கும் பெண்ணை அருகில் வரும்போது தான் கவனித்தான் அந்த லாரி டிரைவர். லாரி அவன் கட்டுப்பாட்டில் இல்லை! ஸ்டீரியங்கை திருப்பினான்.
அந்த லாரி வேகமாக வேகமாக செல்வியை நோக்கி வந்து அருகில் இருந்த மரத்தில் மிக வேகமாக மோதியது. அந்த டிரைவரின் மண்டை பிளந்தது. செல்வி சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
தொடரும்….