ரெண்டுங்கெட்டான் வயசு என்று சொல்வது போல பொன்னேரியும் ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். அதை நகரம் என்றும் சொல்லமுடியாது. கிராமம் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும் ஓரளவு வசதிகள் உள்ள நகரம் அது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒரு ரயில் நிலையம், மையத்தில் பேருந்து நிலையம். பல்பொருள் அங்காடிகள் என நிறைந்து நின்றாலும் புழங்கும் மக்கள் எல்லோருமே பெரும்பாலும் கிராமவாசிகளே. ஏனெனில் பொன்னேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களே அதை விடுத்து நாலாபுறமும் கிராமங்களே இருந்தன. இந்த கிராமங்களில் ஒன்றில்தான் நமது கதை துவங்கி இருக்கவேண்டும் நான் நேற்று எழுதியிருந்தால். எதிர்பாராதவிதமாக இன்று எழுதுவதால் பொன்னேரியில் நமது கதை துவங்குகிறது.
பொன்னேரியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வீட்டுக்குத்தேவையான பொருட்களை பார்த்துபார்த்து எடுத்து ட்ராலியில் போட்டுக்கொண்டிருந்தான் ராகவன். அப்போதுதான் அவனது அலைபேசி ஒலித்தது. அட கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டானுங்களே என்றவாறு செல்லின் திரையை பார்த்த அவனுக்கு ஆச்சர்யம் வினோத் அழைத்திருந்தான்.
வினோத் அவனது பால்ய நண்பன். இப்போது வெளிநாட்டில் இருந்தான். என்னடா இவன் இந்த நேரத்தில் கூப்பிடுகிறான். என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே ஆன் செய்தான். ராகவா! எங்க இருக்க? என்றான் வினோத். நான் இருக்கறது இருக்கட்டும் என்ன திடீர்னு போன் அடிக்கிற இந்த அன் டைமில் என்றான்ராகவன்.
வினோத் ராகவா நான் சென்னை வந்து நாலு நாள் ஆகுது! உன்கிட்ட கொஞ்சம் அர்ஜெண்டா பேசனும் வீட்டுக்கு கிளம்பி வந்து கிட்டு இருக்கேன்.நீ வீட்லதானே இருக்கே என்றான். அவன் குரலில் பதட்டம் தெரிந்தது.
என்னடா ஏன் ஒருமாதிரி பேசற? என்ன ஆச்சு?
அதெல்லாம் நேர்ல சொல்றேன் நீ வீட்லதானே இருக்கே?
இல்லடா ஜஸ்ட் பொன்னேரி வந்திருக்கேன் இன்னும் ஹாப்னவர்ல வீட்டுக்கு போயிடுவேன். நீ ஆன் தி வேல இருக்கியா? இல்ல கிளம்பப் போறியா?
நான் புழல் தாண்டியாச்சு! இன்னும் ஒரு பத்தே நிமிசத்துல பஞ்செட்டியில இருப்பேன்.
அது நடக்காது மச்சி! வழியில டோல்கேட் இருக்கு இது பீக் அவர்! எப்படியும் அரைமணிநேரம் மடக்கிடும்! அதுக்குள்ள நான் பஞ்செட்டி வந்திடுவேன் பை என்று செல்லை அணைத்தான் ராகவன்.
பஞ்ஜெட்டி புதிதாக அமைக்கும் ஆறுவழிச் சாலைகளால் அடையாளம் இழந்திருந்தது. புதிது புதிதாக காம்ப்ளக்ஸ்கள் முளைத்திருந்தது. சாராயக் கடை இருந்த இடத்தில் டாஸ்மாக் முளைத்து இருந்தது. குடிமகன்கள் சந்தோஷமாய் குடித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் பரிகாரத்தலம் என்ற வளைவு பக்தர்களை ஊருக்குள் வரவேற்றுக் கொண்டிருந்தது.
அந்த வளைவு வழியாக நுழைந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தோமானால் அழகான ஆலயம் ஒன்று நம் இடதுபுறம் தெரியும் உயர்ந்த கோபுரத்தில் புறாக்கள் கூப்பிட விசாலமான தெருவில் நான்கைந்து வாகனங்கள் அந்த ஆலயத்தின் முன் நின்றிருக்கும் அதை தாண்டி உள்ளே நுழைந்தோமானால் அகத்திய தீர்த்தத்திற்கு பின்னால் வரிசையாக முளைத்திருக்கும் வீடுகள் தென்படும்.பெரும்ப்பாலும் கூலித்தொழிலாளிகள் நிறைந்திருக்கும் அந்த தெருவில் அமைந்திருந்தது முகேஷின் வீடு.
மாலைப்பொழுது முடிந்து இரவு உதயமாகி ஏறக்குறைய எல்லோர் வீடுகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான வீடுகளில் டீவி ஓடும் சப்தம் ஃபேன்களின் இரைச்சல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன.வெளியே ஆடிமாதமாதலால் நாய்கள் ஒருவித குதூகலத்தில் சுற்றி வந்தன.
அகத்தியர் தீர்த்தத்தில் மழைக்காலத்தில் கூட நீர் நிறைந்திருப்பதில்லை அருகிலேயே ஒரு நடுநிலைப்பள்ளி இருப்பதால் அந்த மாணவர்கள் கிரிக்கெட் ஆட அந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். அரசமரம் ஒன்றும் அந்த குளக்கரையில் உண்டு. அதன் நிழல் நிலா வெளிச்சத்தில் விகாரமாய் தெரிந்தது.
முகேஷின் வீட்டில் டீவி ஓடிக்கொண்டிருந்தது. ஜெயா டீவியின் ஆவிகள் ஆயிரம் என்ற நிகழ்ச்சி அது. ஏண்டா இந்த மாதிரி வெத்து நிகழ்ச்சியெல்லாம் பார்த்துகிட்டு சேனலை மாத்துடா என்றான் ரவி. இருடா இருடா இண்ட்ரஸ்டா இருக்குடா! இதோ பாருடா இந்த மரத்தில பேய் இருக்குதாம் ராத்திரியில் வர்ரவங்களை பயமுறுத்துதாம். 12 மணிக்கு மேல இந்த பக்கமா வர எல்லோரும் பயப்படறாங்களாம்! என்று விவரித்தான் முகேஷ்.
ரவி, இதெல்லாம் சுத்த ஏமாத்து தனம்! என்றான். அம்பத்தூர் பக்கத்துல கூட ஒரு எலக்டிரிக் போஸ்ட்ல லைட் எரியலையாம்! அது பேயோட வேலைன்னு நேத்து ஒரு பேப்பர்ல படிச்சேன். உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு! இன்னும் நீங்க பேயி பிசாசுன்னு பேத்திகிட்டு இருக்கீங்களே! ராஜ் டீவிய மாத்துடா! அதுல புதியதோர் கவிஞன் செய்வோம் போட்டுகிட்டு இருப்பான் என்றான்.
அப்ப நீ இந்த பேய் பிசாசை எல்லாம் நம்ப மாட்டியா என்றான் முகேஷ்.
கண்டிப்பா! ஒரு பேய் என் முன்னால வந்து நின்னு நான் தான் இன்னாரோட பேய்னு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்!
கண்டிப்பா ஒரு நாள் அது நடக்கத்தான் போகுது! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டுப்பா! எனக்கு சில அனுபவங்களும் உண்டு.
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! நீ ரொம்ப பயந்த சுபாவம் உடையவன் உனக்கு எதைக் கண்டாலும் பயம் அதான் பேய் பிசாசுன்னு சொல்லிகிட்டுத் திரியறே!
இல்லடா! இதெல்லாம் உண்மை! எங்க குடும்பத்தில எங்க சித்தப்பா ஒரு பெரிய மந்திரவாதின்னு உனக்கு தெரியுமில்லை!
ஆமாம் அவரு பெரிய மந்திரவாதி! நக்கலாக சிரித்தான் ரவி.
அவரோட வீக்னஸ் பத்தி பேச வேண்டாம்! ஆனா அவர் பேயை அடக்கின கதையெல்லாம் என்கிட்ட சொல்லியிருக்காரு! இவ்வளவு ஏன் நம்ம ஜானி சின்ன வயசுல ஒரு பேயபார்த்து பயந்துட்டான் தெரியுமா?
அவன் பார்த்தது பேயுன்னு உனக்கு எப்படி தெரியும்? எங்க சித்தப்பாதான் சொன்னாரு!
நான் அவரையே நம்ப மாட்டேன்! அவரு சொல்லறதை நம்பச் சொல்றியா?
சரி நீ நம்ப வேணாம்! நான் நம்பிட்டு போறேன். என்றான் வருத்தத்துடன் முகேஷ்.
அப்புறம் அந்த ஜானி பயந்தான்னு சொன்னியே அது என்ன மேட்டரு!
பாத்தியா பாத்தியா! உனக்கே ஆர்வம் வந்திருச்சு!
அவனை பரிதாபத்துடன் பார்த்த ரவி! எனக்கு ஆர்வமும் இல்லே ஒண்ணுமும் இல்லே! உன் மூஞ்சி போன போக்கு சகிக்கலை! அதான் கேட்டேன்! சரி சொல்லு!
நாம எல்லாம் டியுசன் படிச்சோம் ஞாபகம் இருக்கா! ஆமா! கோயிலாண்ட படிச்சோம் அதுக்கென்ன? அப்ப மாஸ்டர் நாம லேட்டா வந்தா கோயிலை சுத்தி ஓடவிடுவார். அப்ப ஒரு நாள் ஜானி லேட்டா வந்திருக்கான்.மாஸ்டரும் ஓட விட்டிருக்காரு. ரெண்டு ரவுண்ட் ஓடின ஜானிக்கு தன் பின்னால யாரோ ஓடி வரா மாதிரி தோணவும் திரும்பி பார்த்திருக்கான். கருப்பா எதுவோ தென்படவும் அவனால் பேசக்கூட முடியலை . ஓரே ஓட்டமா ஓடிவந்து மாஸ்டர்கிட்ட நின்னான். பேயி பேயின்னு உளறினான்.
மாஸ்டர் அவனுக்கு தண்ணி கொடுத்து தட்டிக் கொடுத்து கேட்டப்பதான் இந்த விவரம் தெரிஞ்சது. அப்புறம் அந்தபக்கம்யாரையும் தனியா ஓட விடறதில்லை மாஸ்டரு.
சரி இருக்கட்டும்! அப்புறம் எப்படி அவன் கூட ஓடினது பேயின்னு கண்டுபிடிச்சீங்க?
ஜானியோட அம்மா எங்க சித்தப்பா கிட்ட வந்து திருநீறு மந்திரிச்சாங்க அப்ப சித்தப்பாதான் சொன்னாரு அது காத்து சேஷ்டைன்னு.
காத்து சேஷ்டையோ கருப்பு சேஷ்டையோ! உன்கிட்ட பேசிகிட்டு இருந்ததுல நேரம் ஓடியே போயிடுச்சு நான் கிளம்பறேன் என்று ரவி கிளம்பும் முன் ஓடிக் கொண்டிருந்த டீ வி அணைந்தது.
சே கரண்ட் போயிடுச்சு!
இன்வெர்ட்டர் ஒண்ணு வாங்கிடு! இந்த பிரச்சனை இப்ப தீராது. இரு கேண்டில் ஏத்தலாம் என்றுகேண்டிலை தடவியபோது. அருகில் ஒரு உருவம் தோன்றியது.
ரவி! ரவி! என்று அழைத்தான் முகேஷ்!
அவனை ஏன் கூப்பிடறே! அவன் தான் பேயை நம்ப மாட்டானே என்றது அந்த உருவம்.
அப்ப நீ! நீ… !
அட பயப்படாத நண்பா! இவ்வளோ தைரியமா இருந்த இப்ப கரண்ட் போனதும் இப்படி நடுங்கிறியே!
நீ ர.. ரவி தானே! ஏன் உன் குரல் மாறிப் போய் இருக்குது!
ஹா! ஹா! நல்லா கேக்குறியே கேள்வி உடம்புதான் ரவியோடது உசுரு என்னோடது இல்லே!ஹாஹா! என்று விகாரமாய் சிரித்தது அந்த குரல்.
விதிர் விதிர்த்து நின்றான் முகேஷ்!
தொடரும்….