Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » நவீன வானவியலின் பிறப்பு!!!

நவீன வானவியலின் பிறப்பு!!!

உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்

பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.

சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.

சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.


கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top