Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » உலகின் தீரா மர்மங்கள் – 2

உலகின் தீரா மர்மங்கள் – 2

மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும்.

சரி… முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்…

எகிப்தும் பிரமிடுகளும்

எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.

கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ… இல்லை… வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top