ரெயின்கோட!!!

சக்திவேல், ராமநாதபுரம் டவுனில் தன் வேலைகளை முடித்தபோது இரவு மணி 12.00. அகால வேளையைப் பற்றி சக்திவேல் கவலைப்படவில்லை. அவிடம் Suzuki பைக் இருந்ததால், தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதில் அவனுக்கு தயக்கமோ தடையோ இல்லை.
‘இந்த நடுராத்திரியில் போகாவிட்டால் என்ன, விடிந்ததும் நேரத்தில் போகலாமே. வானம்கூட இருண்டுட்டு வருது’ என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள். சக்திவேல் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. கையில் ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு, வீணாக நண்பர்கள் வீட்டுக்கு சென்று அவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. பைக்கை ஸ்டார்ட் செய்தான். தன் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டான்.
காற்று ஜில்லென்று அடித்தது. சிறிது நேரத்தில் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது. வண்டியைப் பாதையோரமாக நிறுத்தினான். வண்டியின் பக்கவாட்டிலுள்ள பெட்டியைத் திறந்து, ரெயின்கோட் எடுத்து மாட்டிக் கொண்டான். தலையில் ஹெல்மெட், குளிருக்கு இதமாக ரெயின்கோட், பைக் 60 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்தது.
கேப்பேரி மேடம் தாண்டி ஒரு திருப்பம். மரத்தடியில் யாரோ நிற்பது போல தெரிந்தது. பைக்கின் வேகத்தைக் குறைத்தபோது, நிற்பது ஒரு பெண் என்பது ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. தனியாக அதுவும் இந்த நேரத்தில் ஒரு பெண் நிற்பதைப் பார்த்ததும் சக்திவேலுக்குப் பலவிதமான எண்ணங்கள் மனதில் ஊட ஆரம்பித்தன.
பைக் அவளை நெருங்கும்போது அந்தப் பெண் மரத்தடியை விட்டு சற்று முன்னாள் பாதை ஓரம் வந்து கை காட்டி பைக்கை நிறுத்த சைகை செய்தாள். ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் உருவம் நன்றாக தெரிந்தது. மழையில் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தாள். தயங்கியபடி கை காட்டிய விதமும் தோற்றமும் சக்திவேலுக்கு பைக்கை நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று மனதில் பட்டது. பைக்கை நிறுத்தினான்.
‘என்னம்மா… என்ன விஷயம்?’

‘சார் கடைசி பஸ்ஸை விட்டுட்டேன். நான் ஊருக்கு போகணும்.’

(அந்தப் பெண் சொன்ன ஊரை இங்கே குறிப்பிட முடியவில்லை. காரணம் இந்த அனுபவத்தைத் தன் வாழ்க்கையில் சந்தித்த சக்திவேல், சில காரணங்களை முன்னிட்டு சில பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்).

சக்திவேல் செல்லும் வழியில்தான் அந்தப் பெண் சொன்ன கிராமம் இருந்தது. அந்தப் பெண்ணின் முகமும் பேசிய விதமும் சக்திவேலுக்கு நம்பிக்கையூட்டின. தான் போட்டிருந்த ரெயின்கோட்டை கழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் சிறிது தயக்கத்துக்குப் பின் ரெயின்கோட்டை வாங்கிப் போட்டுக் கொண்டாள். பைக்கின் பின்புறம் ஏறி உட்காரச் சொன்னான். உட்கார்ந்தாள். பைக் புறப்பட்டது.

இந்தப் பெண் எதற்காகத் தனியாக வந்தாள்? பஸ் கிடைக்கவில்லை என்று கூறுவது உண்மையான காரணம்தானா? வேறு ஏதாவது சிக்கலா? சக்திவேல் கேட்க நினைத்தான். ஏனோ கேட்கவில்லை. அந்தப் பெண் சொன்ன கிராமத்தின் பஸ் ஸ்டாப் வந்தது.

‘இந்த ஊரில் நீ எங்கு போகவேண்டும் சொல்லு அங்கேயே இறக்கி விடுகிறேன்’ என்றான் சக்திவேல். அவள் வழி சொன்னாள். அந்தக் கிராமத்தின் இரண்டாவது சந்தில் ஒரு வேப்பமரத்துக்கு அடுத்திருந்த வீட்டை அவள் காட்டினாள். சக்திவேல் பைக்கை அங்கே நிறுத்தினான். அந்த பெண் கிழே இறங்கினான். எதிரில் உள்ள 2 -ம் நம்பர் வீட்டைக் காட்டி, ‘இதுதான் என் வீடு’ என்றாள்.

சக்திவேலுக்குக் கைக்கூப்பி நன்றி கூறினாள். சக்திவேல் ஒரு மனநிறைவோடு தன் கிராமத்தை நோக்கி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

இரண்டு கி.மீ. கடந்து வந்த பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. ரெயின்கோட்டை திருப்பி வாங்கவில்லை. சரி, வீடுதான் தெரியுமே, நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான். திரும்பி போய், அந்தப் பெண் வீட்டை அப்போதே தட்டிக் கேட்பது நாகரிகமாகத் தோன்றவில்லை.

அடுத்த நாள் சக்திவேல் தன் கிராமத்திலிருந்து மீண்டும் ராமநாதபுரம் செல்ல வேண்டிய ஊர் அவசர வேலையும் வந்தது. சரி, போகும் வழியில் ரெயின் கோட்டையும் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண் இறங்கிய கிராமத்துக்குச் சென்றான்.பஸ் ஸ்டாப்பை தாண்டி இரண்டாவது சந்தில் திரும்பி சரியாக அந்த வேப்ப மரத்தை ஒட்டிய வீட்டில் பைக்கை நிறுத்தினான்.

கதவு தாழிடப்பட்டது. உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. அந்த வீட்டின் கதவைத் தட்டினான். கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. பிறகு கதவு திறந்தது.
ஒரு வயதான அம்மாள் கதவை திறந்தாள். என்ன விஷயம் என்றாள். சக்திவேல் நடந்த விஷயத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

அதற்கு அந்த மூதாட்டி யோசனையோடு சொன்ன பதில், ‘அப்படி யாரும் இந்த வீட்டில் இல்லையே.’

அப்போது அந்த வீட்டின் உல் அறையிலிருந்து ஆறேழு பேர் வெளியில் வந்தார்கள். சக்திவேலைச் சந்தேகத்தோடு பார்த்தனர். சூழ்நிலையைப் பார்த்த உடன், அந்த வீட்டில் எதோ ஒரு விசேஷம் நடப்பதையும், அதற்குக் குடும்பத்தோடு உறவினர்கள் வந்திருப்பதையும் சக்திவேல் புரிந்து கொண்டான்.
அந்த உறவினர் கூட்டத்தில் நேற்று இரவு தன் பைக்கில் லிப்ட் லேட்டு வந்த பெண் இருக்கிறாளா என்று தேடினான். அகப்படவில்லை.

கண்களை நாலா பக்கமும் அலையவிட்டபோது சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படம் சக்திவேல் கண்ணில்பட்டது. வைத்த கண் வாங்காமல் அந்தப் படத்தையே பார்த்தான். அந்தப் புகைப்படத்தில் இருந்தது அந்தப் பெண்தான். முந்தைய இரவில் சக்திவேல் பைக்கில் ஏறி வந்தவள். ஆனால் அந்த போட்டோ? சந்தானம் குங்குமம் வைக்கப்பட்டு, மாலை போடப்பட்ட போட்டோ? சக்திவேலுக்கு குப்பென்று வியர்த்தது.

‘இவள் தான், இந்தப் பெண்தான்! எனக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. நேற்று என் பைக்கில் வந்து, நான் ரெயின்கோட் கொடுத்தது இந்தப் பெண்ணிடம்தான்’ – என்று திக்கித் திணறி சொல்லி முடித்தபோது அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீட்டின் மூதாட்டி சொன்ன விபரம் கேட்டு சக்திவேல் அப்படியே மலைத்து நின்றான்.

‘போட்டோவில் இருக்கிறது என் பெரிய பொண்ணுதான். அவ திடீர் மாரடைப்புல செத்து இன்னையோட சரியா ஒரு வருஷம் முடியுது. இன்னைக்கு அவளுக்கு தெவசம் கொடுக்கத்தான் சொந்த பந்தமெல்லாம் கூடியிருக்கோம்’ என்றாள்.
சக்திவேலுக்கு நேற்று இரவு அந்தப் பெண் வழியில் மரத்தடியில் மழையில் நனைந்தபடி நின்றது, பைக்கை நிறுத்தியது, ரெயின்கோட் கொடுத்தது, வேப்பமரத்தடியில் இறக்கிவிட்டது, அந்த பெண் நன்றி கூறியது எல்லாமே எல்லாமே ஒரு முறை நினைவில் வந்து உடம்பு சில்லிட்டது. இப்போது மாலை போட்ட அந்தப் போட்டோவைப் பார்த்தான். அந்தப் பெண் சக்திவேலைப் பார்த்து சிரிப்பதுபோல இருந்தது.

அப்போது அந்த வீட்டுக்கு வந்த உறவினர்களில் ஒரு பெரியவர், ‘அந்தப் பொண்ணு இந்த வீட்டு மேல ரொம்பப் பிரியமா இருந்தா. தெவசம் அன்னைக்கு அந்தப் பொண்ணு உங்க பைக்கில் ஏறி இதே வீட்டுக்கு வந்திருக்கிறதுல எதோ ஒரு அர்த்தம் இருக்கு. அவ இந்த வீட்டுக்குக் காவல் தெய்வமா இருப்பா’ என்றார்.
அதே பெரியவர் சக்திவேலைப் பார்த்தார். ‘தம்பி, நீயும் இன்னைக்கு இருந்து தெவசத்துல கலந்துகிட்டு போறது நல்லதுன்னு என் மனசுக்குப் படுது. என்னன்னு எனக்குச் சொல்லத் தெரியல. எதோ ஒரு வகையில உனக்கு இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்’ என்றார். சக்திவேலுவால் மறுக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் எல்லோரும் பூஜைப் பொருட்களுடன் அந்தப் பெண்ணை அடக்கம் செய்திருந்த கல்லறைக்குப் போனார்கள். அங்கே அந்த ஆச்சரியம் காத்திருந்தது. அந்தப் பெண் அடக்கம் செய்யப்பட்ட குழி மேட்டில் ஒரு குச்சியில் எதோ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. சக்திவேல் அருகில் சென்று பார்த்தான். அது அவனது ரெயின்கோட். உறைந்து போனான்.

இந்த விபரம் தெரிந்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். சிலர் அந்த ரெயின்கோட்டை சக்திவேல் எடுத்துக் கொள்ளலாம் என்றனர். ஆனால் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அப்போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. ரெயின்கோட்டை எடுத்து, அந்தப் பெண் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல் போர்த்தி விட்டு சக்திவேல், எதோ ஒரு திருப்தியுடன் திரும்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top