Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-8

நளதமயந்தி பகுதி-8

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான்.
வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள்.நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! அழகில் மன்மதன். இவரது ஊரில் இருக்கும் சோலையில் அந்த நாங்களுடன் தங்கியிருந்தாரோ! நாங்கள் என்று இவர் குறிப்பிட்டது பெண்களாக இருக்குமோ! அப்படியானால், எனக்கு முன்பே இவருக்கு பெண்களிடம் உறவு இருந்திருக்கிறது. இது தெரிந்தால், இவருக்கு நான் கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன். இந்த ஆண்களே இப்படித்தான்! வண்டுகள்! ஓரிடத்தில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். மனைவி அருகில் இருக்கும் போது கூட அந்த நாங்கள் இவரது நினைவுக்கு வருகிறார்கள். இன்னும் ஊருக்குப் போனதும், இவர் அந்த நாங்கள் பின்னால் அலைவார். நான் போய் இழுத்துக்கொண்டு வர வேண்டும். என்ன மனிதர் இவர், காதல் மொழி பேசும் போது, என்னைத் தவிர வேறு யாரையும் ஏறிட்டுக்கூட பார்த்ததில்லை என்றார். இப்போது, யாரையோ சிந்திக்கிறார். அந்த அன்னம் மட்டும் இப்போது என் கையில்கிடைத்தால்… அதன் கழுத்தை திருகி விடுவேன், அது செய்த வேலை தானே இவ்வளவும்.. அவள் கோபத்துடன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<சந்தேகம்…. பெண்களுக்கே உரித்தான குணம், அதிலும் காதலித்து திருமணம் செய்யும் பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் ஆண்களைப் பாடாய் படுத்தி விடுவார்கள். ஆண்கள் என்ன வார்த்தை பேசினாலும் சரி…அதைக் குதர்க்கமாக்கி, என்னென்னவோ சிந்திப்பார்கள்.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 

தமயந்தியும் இதற்கு விதிவிலக்கா என்ன! அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு முகத்தைத் திருப்பியிருக்கிறாள். அப்பாவி நளன்…ஆஹா..இவளுக்கு என்னாயிற்று! இத்தனை நேரம் சந்தோஷமாகத்தானே பேசினாள். இப்போது சந்தோஷத்துக்கு தோஷம் வந்துவிட்டதே! ஏதாவது தப்பாக பேசி விட்டோமா! அப்படி வித்தியாசமாக ஏதும் பேசவில்லையே. அவன், அவள் முகத்தை மெதுவாகத் திருப்ப, அவள் பொசுக்கென்று எழுந்து விசுக்கென்று மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ஆண், பெண் என்ற இனத்திற்கிடையே இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த ஊடல். வள்ளுவரின் மனைவி வாசுகி, கணவரின் செயல்பாடுகளை கடைசி வரை கண்டுகொண்டதே இல்லை என்று சொல்வதை எல்லாம் ஒருபக்கம் நம்பவே முடியவில்லை. ஊடல் இன்பத்தில் அவர் நிரம்பவே திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவ அறிவு இல்லாமலா, ஊடல் என்ற தனி அத்தியாயத்தையே அவர் படைத்திருக்க முடியும்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

 

தமயந்தி! ஏன் உன் முகத்தில் திடீர் மாற்றம்? என்ன ஆனது உனக்கு? என்றான் கவலையுடன். மனைவி குளத்தில் குளித்ததில், புதுத்தண்ணீர் பிடிக்காமல் ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற கவலை அவனுக்கு!அவளது கொவ்வைச் செவ்விதழ் ஏதோ பேசத்துடித்தது. கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் அந்த நிழற்சோலையிலும் வியர்வைத்துளிகள். அந்தத்துளிகள் அவளது அழகு முகத்தில் முத்துக்களைப் பதித்தது போல் இருந்ததை, அந்த நிலையிலும் நளன் ரசித்தான். அந்த அழகு அவனை மயக்க அவளை அணைக்க முயன்றான். அவள் விலகிச் சென்றாள்.

தனது சந்தேகத்தை அவனிடம் எப்படி கேட்பது? தமயந்தி அமைதியாக இருந்தாள். அந்த அமைதி நளனை மேலும் சங்கடத்துக் குள்ளாக்கியது. நம்மிடம் ஏதோ தப்பு கண்டுபிடித்திருக்கிறாள். அதனால் தான் இந்த மாற்றம் என்பதைப் புரிந்து கொண்ட அவனும் ஏதும் பேசாமல் படீரென தரையில் விழுந்தான். தன் அன்பு மனைவியின் கால்களை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டான்.

அவளுக்கு பரமதிருப்தி. கணவன் காலடியில் கிடக்கிறான் என்றால் எந்தப் பெண்ணுக்குத் தான் இன்பம் பிறக்காது! இவன் தனக்காக எதையும் செய்வான் என்ற எண்ணம் மேலிட அவள் அவனை எழுப்பினாள். அப்படியே அணைத்துக் கொண்டாள். கோபம் பறந்தது. ஊடல் தீர்ந்தது. அவர்களது பயணமும் தொடர்ந்தது.

கங்கைக்கரை வழியே அவர்கள் தங்கள் ஊரை அடைந்தனர். வான் முட்ட உயர்ந்து நின்ற மாளிகைகள் அங்கே இருந்தன. இது தான் நமது ஊர் என்று தமயந்தியிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான் நளன். ஊருக்குள் சென்ற புதுமணத்தம்பதியரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வரவேற்பு வளைவுகளின் அழகில் சொக்கிப்போனாள் தமயந்தி. மக்களுக்கு  இருவருமாக இணைந்து பரிசுகளை வாரி வழங்கினர். மக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர்.

நளமகாராஜன் தமயந்தியுடன் நிடதநாடு வந்து சேர்ந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதுவரை அவர்களுக்குள் எந்த கருத்து பேதமும் வந்ததில்லை. இன்பமாய் வாழ்வைக் கழித்தனர். பிள்ளைச்செல்வங்கள் இருவர் பிறந்தனர். தங்கள் இன்ப வாழ்வின் சின்னங் களான அந்த புத்திரர்களைப் பார்த்து பார்த்து தமயந்தி மகிழ்ந்திருப்பாள். தாயுடனும், தந்தையுடனும் விளையாடி மகிழ்வதில் இளவரசர்களுக்கு தனி விருப்பம்.

 

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ராஜாவாயினும், ராணியாயினும்,  பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும்…  யாராயிருந்தால் என்ன! துன்பம் என்னும் கொடிய பேய் எல்லோர் வாழ்விலும் புகுந்து விடுகிறது.>>>>>>>>>>>>>>>>>>>>>>

நள தமயந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! துன்பம் வந்தால் தெய்வத்திடம் நாம் முறையிடலாம். ஆனால், தெய்வமே துன்பத்தைக் கொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்வது! ஆம்..தெய்வப்பிறவிகளான இந்திராதி தேவர்கள், தமயந்தி தங்களுக்கு கிடைக்காமல் போனதால் ஆத்திரம் கொண்டு, நளனுக்கு துன்பம் இழைக்க சதித்திட்டம் தீட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top