சேதிநாட்டரசி முன் நின்ற அந்தணர்,தேவியே! தங்கள் முன் நிற்கும் இந்தப்பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்றார். அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். தமயந்தியிடம்,இவர்கள் நாட்டில் இத்தனை காலம் இருந்தாயே! இந்த பேரரசியை யாரென்று நீயும் அறிந்து கொள்ளவில்லை. காரணம், நீ இவர்களை இளமையிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,என்றவர், அரசியை நோக்கி,
அம்மா! இவள் உங்கள் மூத்த சகோதரியின் மகள். அதாவது, நீங்கள் இவளுக்கு சிற்றன்னை முறை வேண்டும், என்றார்.அவள் அதிர்ந்து போனாள். தமயந்தியை அள்ளி அணைத்துக் கொண்டாள். அன்புமகளே! இளவரசியான நீயா, இத்தனை நாளும் எங்கள் இல்லத்தில் இருந்தாய்? உன் துயர் அறிந்துமா நான் தீர்க்காமல் இருந்தேன்! என்றவள் மயங்கியே விழுந்துவிட்டாள்.
அவளுக்கு சுற்றியிருந்தவர்கள் மயக்கம் தெளிவித்தனர். சேதிநாட்டரசன், தன் மனைவி மயக்கமடைந்த செய்தியறிந்து விரைந்து வந்தான். கண்விழித்த ராணி,அன்பரே! இவள் என் சகோதரி மகள். இந்த மறையவர் சொன்னபிறகு தான், இவள் நம் உறவினர் என்று தெரிய வந்தது. இவளைப் பத்திரமாக, விதர்ப்ப நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளுக்கு இனியாவது நல்ல காலம் பிறக்கட்டும். இவளது கணவன் நிச்சயம் இவளுடன் வந்து சேர்வான், என்றாள்.
சேதிநாட்டரசனும் மனம் மகிழ்ந்து அவளைத் தேரில் ஏற்றி அந்தணருடன் அனுப்பி வைத்தான். அவள் சென்ற தேர் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்ததோ இல்லையோ, மக்களெல்லாம் குழுமி விட்டனர். அழகே உருவாய் இருந்த தங்கள் இளவரசி, கணவனால் கைவிடப்பட்டு, குழந்தைகளையும் இதுவரைக் காணாமல், உருக்குலைந்து வந்தது கண்டு அவர்கள் அழுதனர். குறிப்பாகப் பெண்கள், அம்மா! உங்களுக்கா இந்த நிலை வரவேண்டும்! என வாய்விட்டுப் புலம்பினர். சிலர் மணலில் விழுந்து புரண்டு அழுதனர்.
நமக்கே இப்படி இருக்கிறது. அரண்மனையில் இருக்கும் இளவரசியின் தந்தை வீமராஜாவும், தாயும் இவளது இந்தக் கோலத்தைப் பார்த்தால் மனமொடிந்து போவார்களே! என்ன நடக்கப்போகிறதோ, என்று பயந்தவர்களும் உண்டு. பெண்ணே! உன் கணவன் உன்னை விட்டுப் பிரிந்து நடுக்காட்டில் தவிக்கவிட்டானே! அப்போது நீ என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாயோ? என்று கதறியவர்களும் உண்டு.இவ்வாறாக தமயந்தி நாடு வந்த சேர்ந்த அந்த சமயத்தில்,
அவளை விட்டுப் பிரிந்து சென்ற நளன் கால்போன போக்கில் சென்றான். ஓரிடத்தில் பெருந்தீ எரிந்து கொண்டிருந்தது. மன்னா, என்னைக் காப்பாற்று…என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது, காப்பாற்று, என்று அபயக்குரல் எழுந்தது. தன்னை ஒரு மன்னன் எனத்தெரிந்து அழைப்பது யார் எனத் தெரியாமல் நளன் சுற்றுமுற்றும் பார்த்தான். தீக்குள் இருந்து குரல் வருவது கேட்டதும், ஐயோ! யாரோ தீயில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள், என உறுதிப் படுத்திக் கொண்டான். கருணையுள்ளம் கொண்ட அவன் அங்கு ஓடினான்.தீக்குள் புகுந்து உள்ளே சிக்கித்தவிப்பவரைக் காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த வேளையில்,
முன்பு அவன் தேவர்களின் திருமண விருப்பத்தை தமயந்தியிடம் தெரிவிப்பதற்காக தூது சென்ற போது, இந்திரன், அக்னி முதலானவர்கள் அளித்த வரம் ஞாபகத்திற்கு வந்தது. அதன்படி அக்னி அவனைச் சுடாது என்பது அவன் பெற்ற வரம். அந்த வரத்தைப் பயன்படுத்தி, அக்னி பகவானை மனதார துதித்தான். ஐயனே! இந்த நெருப்புக்குள் யாரோ சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்றான். யாரென்றே தெரியாத, நல்லவனா, கெட்டவனா என்றே புரியாத முன்பின் அறியாதவர்களுக்காகச் செய்யும் உதவி இருக்கிறதே! இது மிகப்பெரிய உதவி! நல்ல மனமுடையவர்களால் தான் அதைச் செய்ய முடியும்!
அப்போது, முன்பு கேட்ட குரல் பேசியது.மன்னா! நீ சிறந்த குணநலன்களைக் கொண்டவன் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரிய தபஸ்வி. வேதநூல் களைக் கற்றறிந்தவன். இந்த நெருப்பில் சிக்கித் தவிக்கிறேன். என்னை கார்க் கோடகன் என்பர். நான் நாகங்களுக்கு தலைவன், என்னைக் காப்பாற்று. நெருப்பில் இருந்து தூக்கி வெளியே விடு, என்றது. நளனும் அக்னியைத் துதிக்கவே, அவன் பாம்பைக் கையில் தூக்கினான். இந்நேரத்தில், சனீஸ்வரர் தன் பணியைத் துவக்கி விட்டார். பாம்பு அவனிடம்,மகாராஜா! என்னை உடனே வீசி விடாதே. ஒன்று, இரண்டு என எண்ணி தச (பத்து) என எண்ணி முடித்தபின் தரையில் விடு, என்றது.
அப்பாவி நளனுக்கு, தச என்பதற்கு பத்து என்ற பொருள் தான் தெரியும். அதற்கு கடி என்ற பொருள் இருப்பது தெரியாது. இவனும் அந்த பாம்பு சொன்னது போல எண்ணவே, தச என்றதும் அவனைக் கடித்து விட்டது பாம்பு. அவ்வளவு தான்! நளனின் உடலில் விஷமேறி, காண்பவர் வியக்கும் வண்ணமிருந்த அவனது சிவப்பழகு, கன்னங்கரேலென்றாகி விட்டது. கார்க்கோடகா! இது முறையா? ஆபத்தில் தவித்த உன்னைக் காத்த எனக்கு இப்படி ஒரு கதியைத் தந்துவிட்டாயே! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? என்றான்.
மன்னவனே! உன்னைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்தேன். நீ இந்தக் காட்டில் மனைவியைப் பிரிந்து சுற்றுவதை நான் அறிவேன். மனிதனுக்கு எல்லா கஷ்டங்களும் விதிப்படியே வருகின்றன. இந்த கரிய நிறத்தில் மாறியதன் காரணத்தை நீ விரைவிலேயே தெரிந்து கொள்வாய். இந்த கருப்பு தான் உன்னைக் காப்பாற்றப் போகிறது. அதே நேரம், கொடிய வெப்பத்தை எனக்காக தாங்கிய உன் வள்ளல் தன்மைக்கு பரிசும் தரப்போகிறேன். இதோ! பிடி! என்று ஒரு அழகிய ஆடை ஒன்றை நீட்டியது. இந்த ஆடை எனக்கு எதற்கு?என்றான் நளன்.