Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-20

நளதமயந்தி பகுதி-20

வேடன் இப்படிச் சொன்னானோ இல்லையோ!அட தெய்வமே! இப்படி ஒரு சொல் என் காதில் விழுந்ததை விட, அந்தப் பாம்பின் பசிக்கே என்னை இரையாக்கி இருக்கலாமே! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்தவள், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

மனிதனை சூழ்நிலைகள் தான் மாற்றுகின்றன. பஞ்சணையில் படுத்தவள்…தோழிகள் மலர் தூவ கால் நோகாமல் நடந்து பழகியவள்…ஒரு கட்டத்தில், கணவனின் தவறால் காடு, மேடெல்லாம் கால் நோக நடக்கவே சிரமப்பட்டவள்… இப்போது, ஓடுகிறாள்… ஓடுகிறாள்…புதர்களையும், காட்டுச்செடி, கொடிகளையும் தாண்டி… கற்பைப் பாதுகாக்க உயிரையும் பொருட் படுத்தாத நம் தெய்வப்பெண்கள் இன்றைக்கும் நம் தேசத்துப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

வேடனுக்கோ அந்த காடு, அவன் வீடு மாதிரி…பழக்கப்பட்ட அந்த இடத்தில் அவனுக்கு ஓடுவது என்பது கஷ்டமா என்ன! வேட்டையாடும் போது, வேகமாக ஓடும் சிறுத்தையைக் கூட விடாமல் விரட்டுபவனாயிற்றே அவன்…மான்குட்டி போல் ஓடிய அவள் பின்னால் வந்து எட்டிப்பிடிக்க முயன்றான். தன்னால், இனி தப்பிக்க இயலாது என்ற நிலையில் தமயந்தியும் நின்று விட்டாள்.அந்தப் பூ இப்போது புயலாகி விட்டது. கண்களில் அனல் பறந்தது. வேடனே அவள் தோற்றம் கண்டு திகைத்து நின்று விட்டான். அந்தக் கற்புக்கனலே வேடனை எரித்து விட்டது. அவன் பஸ்மமாகி விட்டான். வேடனிடமிருந்து அவள் தப்ப காரணம் என்ன தெரியுமா? தன் கணவன் தன்னைக் கைவிட்டுப் போனதால் தானே இந்த நிலை ஏற்பட்டது என்ற எண்ணம் அவள் மனதுக்குள் இருந்தாலும், அந்த நிலையிலும் கூட, அவள் தன் கணவனைத் திட்டவில்லை. இதெல்லாம் தனது தலைவிதி என்றே நினைத்தாள்.

நன்மை நடக்கும் போது கணவரைப் பாராட்டுவதும், கஷ்டம் வந்ததும் அதற்கு அவனையே பொறுப்பாக்கி திட்டுவதும் இக்காலத்து நடைமுறை. ஆனால், அக்காலப் பெண்கள் அவ்வாறு இல்லை. எந்தச்சூழலிலும் கணவனைத் தெய்வமாகவே மதித்தனர். அதனால் தான் மாதம் மும்மாரி பெய்தது. தங்களுக்கு துன்பம் செய்தவனை கற்புக்கனலால் எரிக்குமளவு பெண்கள் சக்தி பெற்றிருந்தனர். என்ன தான் சனியின் கொடியகாலத்தை அனுபவித்தாலும் கூட, தமயந்தி தன் கற்புக்கு வந்த சோதனையில் இருந்து தப்பித்தாள் என்றால், அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மம் தான் அவளைக் காத்தது.

இந்த சமயத்தில் வணிகன் ஒருவன் அவ்வழியாக வந்தான். அவன் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் அழுவதற்கான காரணத்தைக் கேட்டான்.நான் முன் செய்த பாவத்தின் காரணமாக காட்டுக்கு வந்தேன். என் கணவரைப் பிரிந்தேன். அவரைத் தேடி அலைகின்றேன், என்றாள்.

அந்த வணிகன் நல்ல ஒழுக்கம் உடையவன். பிறர் துன்பம் கண்டு இரங்குபவன்.பெண்ணே! இந்தக் காட்டில் இனியும் இருக்காதே! இங்கிருந்து சில கல் தூரம் நடந்தால், சேதிநாடு வரும். அங்கே சென்றால், உன் பிழைப்புக்கு வழி கிடைக்கும். உன் துன்பம் தீரும்,என்றாள்.

மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றி சொன்ன தமயந்தி, வேகமாக நடந்து சேதிநாட்டை அடைந்தாள். கிழிந்த புடவையுடன் தங்கள் நாட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்ட சில பெண்கள், தங்கள் நாட்டு அரசியிடம் ஓடிச்சென்று, தாங்கள் கண்ட பெண்ணைப் பற்றிக் கூறினர்.அவளை அழைத்து வரும்படி அரசி உத்தரவிடவே, தோழிகள் தமயந்தியிடம் சென்று, தங்கள் நாட்டு அரசி அவளை வரச்சொன்னதாகக் கூறினர். தமயந்தியும் அவர்களுடன் சென்றாள்.அரசியின் பாதங்களில் விழுந்த அவள், விதிவசத்தால் தன் கணவனைப் பிரிந்த கதியைச் சொல்லி அழுதாள்.

அவள் மீது இரக்கப்பட்ட அரசி, அவளது கணவனைத் தேடிப்பிடித்து தருவதாகவும், அதுவரை பாதுகாப்பாக தன்னுடனேயே தங்கும்படியும் அடைக்கலம் அளித்தாள். ஒருவாறாக, தமயந்தி பட்ட கஷ்டத்துக்கு தற்காலிகத் தீர்வு கிடைத்தது. இதனிடையே, நளதமயந்தியால், அந்தணருடன் அனுப்பப்பட்ட அவர்களது பிள்ளைகள் விதர்ப்பநாட்டை அடைந்தனர்.

தங்கள் தாத்தா வீமனைக் கண்ட பிள்ளைகள் அரண்மனையில் நடந்த சம்பவங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். வீமன் அந்த அந்தணரிடம், அந்தணரே! நீர் வேகமாக இங்கிருந்து புறப்படும்! நளனும் தமயந்தியும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வாரும்,என உத்தரவிட்டார்.

அந்தணர் மட்டுமின்றி, பல தூதுவர்களை நாலாதிசைகளுக்கும் அனுப்பி நளதமயந்தியைக் கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார். அரசனின் கட்டளையை ஏற்ற அந்தணன், ஏழுகுதிரை பூட்டிய தேரில் நளதமயந்தியை தேடிச்சென்றார். பலநாடுகளில் தேடித்திரிந்த அவர், அழகு பொங்கும் தேசமான சேதிநாட்டை அடைந்தார்.சேதி நாட்டு அரண்மனைக்குச் சென்ற அந்தணர், அந்நாட்டு அரசியுடன் இருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் தமயந்தி என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது.

அவள் முன் பணிந்து நின்ற அவர், அம்மா! தங்களைத் தங்கள் தந்தையார் அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார், என்றார். தமயந்தி அவரது பாதங்களில் விழுந்தாள்.தமயந்தி வடித்த கண்ணீர் அவரது பாதங்களைக் கழுவியது. அவளது துயரம் தாங்காத அந்த மறையவரும் கண்ணீர் வடித்தார். இந்த சோகமான காட்சி கண்டு, சுற்றி நின்றோர் முகம் வாடி நின்றனர். இந்தப் பெண் மீது இந்த அந்தணர் எந்தளவுக்குபாசம் வைத்துள்ளார், என தங்களுக்குள்பேசிக்கொண்டனர். அப்போது தான் சேதி நாட்டரசிக்கு அதிசயிக்கத்தக்க செய்தி ஒன்று கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top