Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-2

நளதமயந்தி பகுதி-2

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு கொண்டிருந்தோம். ஒருநாள், தமயந்தி நாங்கள் அலைந்து கொண்டிருந்த தடாகத்தின் பக்கமாக வந்தாள். அவளது அழகும், நடை எங்களையும் விட நளினமாக இருந்ததைக் கண்ட நாங்கள் வெட்கப் பட்டு தலை குனிந்தோம். ஆஹா…இவளல்லவோ உலகப் பேரழகி. இவளைப் போல இனிமேல் நாங்களும் நடக்க வேண்டும். இவளிடமல்லவா நடை பயில வேண்டும் என்று எண்ணினோம். இப்படிப்பட்ட பேரழகு பெட்டகத்திற்கேற்ற கட்டழகன் நீயே என்று முடிவெடுத்தோம். நீ தமயந்தியை மணந்து கொண்டால், உனது நந்தவனத்திற்கே வந்து அந்த பேரழகியின் செல்லப்பறவைகளாக இருந்து, அவளிடம் நடை கற்றுக் கொள்வோம், என்றது.அந்தப் பறவையின் வித்தியாசமான விளக்கம் நளனை மிகவும் கவர்ந்தது.

 

அந்த கட்டழகியை எனக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்வாயா அன்னமே என்று தன்னை மறந்து கேட்டான்.

நிச்சயமாக! உனக்காக நான் தமயந்தியிடம் தூது போகிறேன். அவளிடம் உன்னைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கண்டதும் வருவதல்ல காதல்! அது மனங்களின் இணைப்பில் விளைவது! உங்கள் மனங்களை இணைக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். தமயந்தி உன் மார்பில் சாய்வது உறுதி. அவளை மனைவியாக அடையும் பாக்கியம் உனக்கே கிடைக்கும், வருந்தாதே, எனக்கூறிய அன்னம், அவனிடம் விடைபெற்று விதர்ப்ப நாடு நோக்கி பறந்தது.

பறவையை அனுப்பி விட்ட நளன், தமயந்தியின் அழகை கற்பனை செய்து பார்த்தான். அவளை மனதிற்குள்ளேயே ஓவியமாக வடித்தான். அந்த ஓவியம் அப்படியே அவனது கண்களில் பிரதிபலித்தது. தமயந்தி…தமயந்தி… என புலம்ப ஆரம்பித்து விட்டான். ஏ அன்னமே! விதர்ப்பம் போய் சேர்ந்து விட்டாயா? என் தமயந்தியைப் பார்த்தாயா? அவளிடம் எனது காதலைச் சொல்லி விட்டாயா? அவள் என்ன சொன்னாள்? போ…போ… என் பேரழகுக்கு முன்னால், அந்த நளன் என்ன மன்மதனா என்று அவள் ஒதுக்கி விட்டால், என் நிலை என்னாகும்…என்னால் சிந்தித்தே பார்க்க முடியவில்லையே! அன்னமே! என் அன்னத்தைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடு. என் இதயம் உடைந்து நொறுங்கிப் போவதற்குள் விரைந்து வா, என்று உருகி உருகி தனக்குத்தானே பேசினான்.

அவனது இந்த புலம்பல் யார் காதிலாவது விழுந்தால், ஐயோ! நம் மகாராஜாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்பார்கள். தோகை விரித்த மயிலை அவன் பார்த்தால் தமயந்தி இந்த மயிலைப் போல இருப்பாளோ என்பான். குயிலின் குரல் கேட்டால், அவளது குரலும் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணுவான். காற்றில் அசைந்தாடும் பூங்கொடிகளைப் பார்த்தால், கொடிகளே! உங்களைப் போல் தான் என் தமயந்தியின் இடையழகும் இருக்குமோ, வாருங்கள், என் அருகே வாருங்கள், என்று பித்துப்பிடித்தவன் போல அந்தக் கொடிகளை வருடி விட்டான். மலர்களின் வாசனையை நுகர்ந்த அவன், மலர்களே! நீங்கள் <தரும் வாசனையை விட என் தமயந்தியின் கூந்தல் நறுமணம் மிக்கதாக இருக்குமா? என்று கேட்டான். இப்படி தமயந்தி தாசனாகி, நளமகாராஜா தவித்துக் கொண்டிருந்த வேளையில், அன்னப்பறவை தமயந்தியின் இல்லத்தை அடைந்தது.

 

தமயந்தி என்று அழைத்தது. ஆ…பேசும் பறவையா, தமயந்தி ஆவலோடு ஓடிவந்தாள். அதன் அழகு அவளைக் கவரவே தன் மடியில் தூக்கி வைத்து வருடினாள். அன்னமே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என் பெயரை நீ எப்படி அறிவாய்! சொல்! என்று கேள்விகளை அடுக்கினாள். என் உயிர் உன் கையில், என்று சம்பந்தமில்லாமல் பதிலளித்தது அன்னம். ஐயோ! உன்னை யாரேனும் துன்புறுத்த எண்ணியுள்ளார்களா? இனி, அந்தக் கவலை வேண்டாம், நீ என்னுடனேயே இருந்துவிடு, என்ற தமயந்தியிடம், எனக்கு ஒன்றுமில்லை தமயந்தி! நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் நிடதநாட்டு மன்னன் நளன். ஏன் அவருக்கென்ன?  அவரது உ<யிர் யார் கையில் சிக்கியிருக்கிறதாம், என்றாள் ஏதும் அறியாமல். கேள் பெண்ணே! என்ற அன்னம், தமயந்தி! நளனின் மனது தங்கம். அவனது இதயத்திற்குள் ரத்தம் பாயவில்லை! அன்பும், இரக்கமும் மட்டுமே ஆறு போல் ஓடுகிறது. அவனது ஆட்சி தர்மத்தைக் கட்டிக்காக்கும் நல்லாட்சியாக விளங்குகிறது. அன்பில் மட்டுமல்ல! நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான் நல்ல அழகன் என்றும் சொல்வேன்.

அவனது பரந்த தோள்களைப் பார்க்கும் இளம்பெண்களெல்லாம், அவன் நினைவாகவே கிடக்கிறார்கள். உம்…;நீயும் பேரழகி. அந்தக் கட்டழகனைப் போன்ற ஒருவன், உனக்கு கணவனானால், என்னைப் போன்ற அழகான அன்னங்களெல்லாம் காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டியது தான்! அதன் பின் நாட்டுக்குள் அழகு காட்ட நாங்கள் தேவையில்லை, என்றது.

அன்னம் சொன்ன வார்த்தைகள் தமயந்தியின் நெஞ்சில் ஆழமாகப் பாய்ந்தது. பெண்ணுக்கு தேவை அன்புக்கணவன், அவனே அழகனாகவும் அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி. அவனுக்கு செல்வமும் கோடிகோடியாய் இருக்கிறதென்றால் இரட்டிப்பு சந்தோஷம். இப்படி எல்லாம் இணைந்த வடிவாக அல்லவா இந்த அன்னம் சொல்லும் வாலிபர் என் கண்ணில் தெரிகிறார்! அவரை மணந்து கொள்ளலாமே… தமயந்தியின் எண்ண அலைகளை அன்னம் புரிந்து கொண்டது.

கடந்த பிறவியில் என்ன செய்தோம், ஏது செய்தோம் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால், நமக்கு ஒரு துன்பம் வருகிறதென்றால், அது கடந்த பிறவியில் செய்த பாவத்தின் பலனே! இன்பம் வருகிறதென்றாலும், கடந்த பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனே! அன்னப்பறவையின் செயல் இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் மனிதப்பிறவி எடுத்துள்ள ஒவ்வொருவரும், இதுவரையில் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தமாக இந்தப் பிறவியிலேயே ஏதேனும் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.

 

தமயந்தி அந்த அன்னத்திடம், அன்னமே! நீ சொல்லும் அந்த ஆணழகனை நான் இதுவரைக் கண்டதேயில்லை. ஆனாலும், என்னவோ… அவனோடு பலகாலம் வாழ்ந்தது போன்ற உணர்வு என்னுள் எழுகிறது. என்னை அறியாமல் அவன்மேல் காதல் வயப்பட்டு விட்டேன். எனக்காக அவனிடம் தூது போய் என் காதலை அவனிடம் சொல்வாயா? என்று நாணத்துடன் சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top