ந ளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை போல், பால் மாறா முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டா பிரிவது? வேண்டாம்.. இங்கேயே இருந்து விடலாம்… என்று எண்ணியவனின் மனதில் கலியாகிய சனீஸ்வரன் மீண்டும் வந்து விளையாடினான்.
போடா போ, இவள் படும் பாட்டை சகிக்கும் சக்தி உனக்கில்லை, புறப்படு, என்று விரட்டினான்.ஆம்..கிளம்ப வேண்டியது தான்! அவள் படும்பாட்டை என்னால் சகிக்க முடியாது. புறப்படுகிறேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவனின் மனம் தயிர் கடையும் மத்தை கயிறைப் பிடித்து இழுக்கும்போது, அங்குமிங்கும் கயிறு போய்வருமே…அதுபோல் வருவதும், போவதுமாக இருந்தான். ஒரு வழியாக, உள்ள உறுதியுடன் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான். செல்லும் வழியில் அவன் தெய்வத்தை நினைத்தான்.
தெய்வமே! அனாதைகளுக்கு நீயே அடைக்கலம். என் தமயந்தியை அனாதையாக விட்டு வந்து விட்டேன். உன்னை நம்பியே அவளை விட்டு வந்திருக்கிறேன். அவளுக்கு ஒரு கஷ்டம் வருமானால், அவளை நீயே பாதுகாத்தருள வேண்டும். இந்தக் காட்டில் இருக்கும் தேவதைகளே! நீங்கள் என் தமயந்திக்கு பாதுகாவலாக இருங்கள். அவள் என்னிடம் பேரன்பு கொண்டவள், நானில்லாமல் தவித்துப் போவாள். நீங்களே அவளுக்கு அடைக்கலம் தர வேண்டும், என வேண்டியபடியே நீண்டதூரம் போய்விட்டான். நள்ளிரவை நெருங்கியது. ஏதோ காரணத்தால், தூக்கத்தில் உருண்ட தமயந்தி கண் விழித்துப் பார்த்தாள். இருளென்பதால் ஏதும் தெரியவில்லை. காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம், ஆங்காங்கே கேட்கும் மிருகங்களின் ஒலி தவிர வேறு எதுவும் அவள் காதில் விழவில்லை. இருளில் தடவிப் பார்த்தாள். அருகில் இருந்த மணாளனைக் காணவில்லை.
மன்னா…மன்னா… எங்கே இருக்கிறீர்கள்? இந்த இருளில் என்னைத் தவிக்க விட்டு எங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று, பக்கத்தில் எங்காவது அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் மெதுவாக அவள் அழைத்தாள். சப்தமே இல்லை. சற்று உரக்க மன்னவரே! எங்கிருக்கிறீர்கள்? என்று கத்தினாள். பலனில்லை. போய் விட்டாரா! என்னைத் தவிக்க விட்டு எங்கோ போய்விட்டாரே! இறைவா! நட்ட நடுகாட்டில் கட்டியவர் என்னை விட்டுச்சென்று விட்டாரே! நான் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பதற்கென்றே பிறந்தவளா? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவள் புலம்பினாள்.
பயம் ஆட்டிப்படைத்தது. நடனமாடிக் கொண்டிருந்த மயில் மீது, வேடன் விடுத்த அம்பு தைத்ததும் அது எப்படி துடித்துப் போகுமோ அதுபோல இருந்தது தமயந்தியின் மனநிலை. கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, கூந்தல் கலைய அழுது புரண்டாள். விடிய விடிய எங்கும் போகத் தோன்றாமல் அவள் அங்கேயே கிடந்து என்னவரே! எங்கே போய்விட்டீர்கள்! இது உங்களுக்கே அடுக்குமா! இறைவா! ஒரு அபலைப் பெண்ணென்றும் பாராமல் இப்படி கொடுமைக்கு ஆளாக்கிப் பார்க்கிறாயே! என்று அந்தக் காட்டிலுள்ள புலியின் கண்களிலும் கண்ணீர் வழியும் வகையில் அவள் உருகி அழுதாள். அவளது துன்பத்தை சற்றே தணிக்கும் வகையில் சூரியன் உதயமானான்.
அவள் முன்னால் சில மான்கள் துள்ளி ஓடின. மயில்கள் தோகை விரித்தாட ஆரம்பித்தன. மான்களே! மயில்களே! நீங்கள் நீண்ட காலம் இந்தக் காட்டில் மகிழ்வுடன் வாழ வேண்டும். என் மன்னவரைக் கண்டீர்களா? அவர் எங்கிருக்கிறார்? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள், என்று கதறினாள்.அங்குமிங்கும் சுற்றினாள். அந்த நேரத்தில் வேகமாக ஏதோ ஒன்று அவளது கால்களைப் பற்றி இழுத்தது. தன்னை யார் இழுக்கிறார்கள் என்று பார்த்தபோது, மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கியிருப்பதே அவளுக்கு புரிந்தது. அவள் அலறினாள்.
மகாராஜா… மகாராஜா…இந்தப் பாம்பிடம் சிக்கிக் கொண்டேன். அது என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஓடி வந்து காப்பாற்றுங்கள், என்ற அவளது அலறல் சுற்றுப்புற மெங்கும் எதிரொலித்தது. இதற்குள் பாம்பு அவளது வயிறு வரை உள்ளே இழுத்து விட்டது. அப்போது அவளது பேச்சு மாறியது. தாங்கள் என்னை விட்டுப் பிரிந்த போதே என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாத கல் மனம் கொண்டவள் என்பதால், இந்தப் பாம்பு என்னை விழுங்குகிறது போலும்! இருப்பினும், இந்த கல் நெஞ்சத்தவளை மன்னித்து என்னைக் காப்பாற்ற ஓடோடி வாருங் கள், என்றாள்.
கிட்டத்தட்ட இறந்து விடுவோம் என்ற நிலை வந்ததும், என் இறைவனாகிய நளமகராஜனே! இந்த உலகில் இருந்து பிரிய அனுமதி கொடுங்கள், என்று மனதுக்குள் வேண்டிய வேளையில், வேடன் ஒருவன், ஏதோ அலறல் சத்தம் கேட்கிறதே எனக் கூர்ந்து கவனித்தபடி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்த தமயந்தி, மனதில் சற்று நம்பிக்கை பிறக்கவே, ஐயா! இந்தப் பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,என்று கத்தினாள்.
உடனே வேடன் அந்த பாம்பை தன் வாளால் வெட்ட, அது வலி தாங்காமல் வாயைப் பிளந்தது. இதைப் பயன்படுத்தி அவளை வெளியே இழுத்துப் போட்டான். பாம்பு வலியில் புரண்டபடிதவித்துக் கொண்டிருக்க, அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றான் வேடன்.ஐயா! என்னைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றினீர்! இதற்கு பிரதி உபகாரம் என்ன செய்தாலும் தகும். தங்களுக்கு நன்றி, என்றாள்.
வேடன் அவளை என்னவோ போல பார்த்தான். இப்படி ஒரு பருவச்சிட்டா? இவளைப் போல் பேரழகி பூமிதனில் யாருண்டு, நான் ஒரு இளவஞ்சியைத் தான் காப்பாற்றியிருக்கிறேன்! என்று அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவன், ஆம்..உன்னைக் காப்பாற்றியதற்கு எனக்கு பரிசு வேண்டும் தான்! ஆம்…அந்தப் பரிசு நீ தான்! என்றவன், அவளை ஆசையுடன் நெருங்கினான்.