Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-14

நளதமயந்தி பகுதி-14

இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது.

நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன்  பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். இனி உங்கள் ராஜா புட்கரன் தான். அவர் இடும் சட்டதிட்டங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும். மீறுபவர்கள் மரணக்கயிற்றில் உங்களை நீங்களே மாட்டிக் கொள்ளத் தயாரானதாக அர்த்தம். இது மகாராஜா புட்கரனின் உத்தரவு…., என்று முரசு அறைவோன் சத்தமாக நீட்டி முழக்கினான்.

நளன் தனது நிலை குறித்து வருந்தினான். சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டில் இறங்கி, நாட்டை இழந்தோம், ஏதுமறியா அபலைப் பெண்ணான இந்த தமயந்தியின் கால்கள் பஞ்சுமெத்தையையும், மலர்ப்பாதையையும், சிவப்புக் கம்பளத்øயும் தவிர வேறு எதிலும் நடந்தறியாதவை. இப்போது அவளை கல்லும், மண்ணும், முள்ளும் குவிந்த பாதையில் நடக்க வைத்து புண்படுத்துகிறோமே! இப்போது ஊரில் கூட இருக்க இயலாத நிலை வந்துவிட்டதே! தனக்கு ஆதரவளிப்பவர்களையும் கொல்வேன் என புட்கரன் மிரட்டுகிறானே! தன்னால் தமயந்தியின் வாழ்வு இருளானது போதாதென்று, இந்த அப்பாவி ஜனங்களின் உயிரும் போக வேண்டுமா! ஐயோ! இதற்கு காரணம் இந்த சூதல்லவா! என்று தனக்குள் புலம்பினான். பொழுதுபோக்கு கிளப்கள் என்ற பெயரில் நடக்கும் சூதாட்ட கிளப்களுக்கு செல்பவர்கள் நளனின் நிலையை உணர வேண்டும். சூதாட்டத்தில் கில்லாடியான ஒரு புட்கரன் பல நளன்களை உருவாக்கி விடுவான்.

சூதாடுபவர் மட்டுமல்ல…அவன் மனைவி, மக்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். மானம் போகும், ஏன்…உயிரே கூட போகும்! நளதமயந்திக்கு இரண்டு செல்லப் பிள்ளைகள் பிறந்தார் கள் அல்லவா! அந்த மகளையும், மகனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறினர். ஒரு துக்கவீட்டில், இறந்தவரின் உறவினர்கள் எப்படி சோகத்துடன் இருப்பார்களோ, அந்தளவுக்கு துயரமடைந்தனர் மக்கள்.

இதையெல்லாம் விட மேலாக, பால் குடி மறவாத பச்சிளம் குழந்தைகள் கூட, அன்று தங்கள் தாயிடம் பால் குடிக்க மறுத்து, சோர்ந்திருந்தன. நளன் வீதியில் நடக்க ஆரம்பித்தான். தமயந்தியின் பஞ்சுப்பாதங்கள் நஞ்சில் தோய்த்த கத்தியில் மிதித்தது போல் தடுமாற ஆரம்பித்தது. குழந்தைகளின் பிஞ்சுப்பாதங்களோ இதையும் விட அதிகமாக தள்ளாடின. அம்மா…அப்பா என அவர்கள் அழுதபடியே நடந்தனர்.

 

……………….இந்த இடத்தில் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு என்னதான் ஆண்டவன் வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருந்தாலும், குழந்தைளுக்கு கஷ்டநஷ்டத்தைப் பற்றிய அறிவையும் ஊட்டி வளர்க்க வேண்டும். காலையில் நூடுல்ஸ், பூரி மசாலா, மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார் என விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தாலும் கூட, பழைய சாதம் என்ற ஒன்று இப்படி இருக்கும் என்பதையும், கிராமத்து ஏழைக் குழந்தைகள் அதைச் சாப்பிட்டு விட்டு தான் பள்ளிக்கு  கிளம்புகிறார்கள் என்பதையும் சொல்லித் தர வேண்டும், எதற்கெடுத்தாலும் கார், பஸ், ஆட்டோ என கிளம்பாமல், நடக்கவும் சொல்லித் தர வேண்டும். வாழ்வில் யாருக்கும் எப்போதும் ஏற்ற இறக்கம் வரலாம். அதைச் சமாளிப்பது பற்றிய அறிவு நம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்த வரை புத்தருக்கு ஒன்றும் தெரியாது. வெளியே வந்த பின் தானே மரணம், நோய் பற்றியெல்லாம் உணர்ந்தார்! அதுபோல நம் பிள்ளைகளை சுதந்திரமாக உலகநடப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அனுப்ப வேண்டும்………………………………………………………………………………………………………………………………

நளனின் பிள்ளைகள் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! அவர்களுக்கு தெருமுனை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது! அப்படிப்பட்ட பிள்ளைகள் இன்று தெருவில் சிரமத்துடன் நடந்தனர். நீண்ட தூரம் நடந்து நாட்டின் எல்லையை அவர்கள் கடந்து விட்டார்கள். எங்கே போக வேண்டும் என்று நளனுக்குப் புரியவில்லை. குழந்தைகள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். தமயந்தியோ பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள்.அப்பா! நாம் எங்கே போகிறோம்? கடக்க வேண்டிய தூரம் முடிந்து விட்டதா? இன்னும் போக வேண்டுமா? என்று அழுதபடியே கேட்டாள் மகள்.

மகனோ, அம்மாவின் கால்களைக் கட்டிக்ககொண்டு, அம்மா! என்னால் நடக்கவே முடியவில்லை. எங்காவது அமர்வோமா! என கண்ணீருடன் கெஞ்சலாகக் கேட்டான். பன்னீர் தூவி வளர்த்த தன் குழந்தைகளின் கண்களில் கண்ணீரா! தமயந்தியின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. நளனுக்கு அவர்களின் துயரத்தைப் பார்க்கும் சக்தி இல்லவே இல்லை. வெட்கம் வேறு வாட்டி வதைத்தது!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ஆம்…எதைத் தொடங்கினாலும், ஒரு மனிதனுக்கு முதலில் தன் மனைவி, பிள்ளைகளின் முகம் நினைவுக்கு வர வேண்டும்..இதைச் செய்தால் அவர்களுக்கு நன்மை விளையுமா! கேடு வந்துவிடுமா என்று ஆராய வேண்டும்.இதைச் செய்யாத எந்த மனிதனாக இருந்தாலும், தன் மனைவி, பிள்ளைகள் முகத்தில் கூட விழிக்க இயலாத நிலை ஏற்படும்!>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

என்ன தான் சனி ஆட்டினாலும், சுயபுத்தி என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அந்த புத்தியை இறைவன் தந்திருக்கிறான் அல்லவா! அந்த இறைவனைப் பற்றிய நினைப்பு வந்திருந்தால், இந்த சனியால் ஏதாவது செய்திருக்க முடியுமா! காலம் கடந்த பின் நளன் வருந்துகிறான். வரும் முன்னர் தன்னைப் பாதுகாத்து கொள்ளாதவனின் வாழ்க்கை எரிந்து தானே போகும்!  நளன் தமயந்தியிடம், அன்பே! இனியும் பிள்ளைகள் கதறுவதை என்னால் தாங்க முடியாது. அதனால், நீ பிள்ளைகளுடன் உன் தந்தை வீட்டுக்குப் போ, என்றான். இதுகேட்டு தமயந்தி அதிர்ந்துவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top