இதுதானே மன்னனுக்குரிய தர்மம்! ஆனால், புத்தி கெட்ட இவனும் சூதாட ஒப்புக் கொண்டான். இப்படி பகுத்தறிவைப் பயன்படுத்தாத எந்த ஜீவனையும் இறைவன் தண்டித்தே தீருவான். அதற்காக, அவன் தன் சார்பில் நியமித்த பிரதிநிதி தான் சனீஸ்வரன். இரண்டு லட்சம் பொன்னையும் தோற்றான் நளன்.
சூதாட்டம் வெறிபிடித்த ஒரு விளையாட்டு. நகைகள், இரண்டு லட்சத்தை இழந்தாயிற்று! இதோடு எழுந்து போவோம் என்று போயிருக்க வேண்டும்! அவன் போகவில்லை. போகவும் முடியாது, ஏனெனில், சூதாட்டத்தில் ஜெயித்தவன், தோற்றவனை ஏளனமாகப் பார்ப்பான். கேவலமாகப் பேசுவான். இந்த வெறியுடன் தோற்றவன் தன்னிடமுள்ள மற்ற பொருட்களையும் பணயம் வைப்பான். மீண்டும் தோற்று ஒன்றுமில்லாமல் தெருவுக்கு வருவான். நளமகாராஜா புத்தி பேதலித்து கோடி பொன்னை பணயமாக வைத்தான். அவனது கஜானா இருப்பே அவ்வளவு தான்! பகடையின் உருளலில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இழந்தான்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால், அவன் பேரரசன். இப்போது பிச்சைக்காரன். இந்த லட்சுமி இருக்கிறாளே! இவள் ஓரிடத்தில் நிலைக்கமாட்டாள். அவளுக்கு அசலா என்று ஒரு பெயருண்டு. அதாவது ஓடிக்கொண்டே இருப்பவள் என்று பொருள். நேற்று வரை நளனின் கஜானாவில் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு கிடந்தவள் இன்று புட்கரன் வீட்டுக்குப் போய்விட்டாள். நல்லவன் ஒருவன் கெட்டுப்போகிறான் என்றால், லட்சுமி தாயாரால் தாங்க முடியாது. அவள் கெட்டவன் வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியானால் தானே நல்லவன் நல்லவனாக இருப்பான்! இவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான், இவன் வீட்டில் செல்வம் கொட்டிக்கிடக்கிறதே என்று நாமே கூட பல சமயங்களில் சில பணக்காரர்களைப் பற்றி அங்கலாய்க்கிறோம். இப்படிப்பட்டவர்களை மேலும் அழிக்கவும், அவர்கள் மனதில் நிம்மதியில்லாமல் செய்யவுமே லட்சுமி தாய் தன் ஓட்டப்பந்தயத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள் என்பது தான் நிஜம். எனவே, பணக்காரனாக இல்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை.
இவ்வுலகில் பொருளில்லாதவர் அவ்வுலகில் அருளைப் பெறுமளவிலான நிலைமை நிச்சயம் ஏற்படும்.மனிதனுக்கு புத்தி கெட்டு விட்டால். அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். புட்கரன் நளனுக்கு ஆசை காட்டினான். தம்பி! பொற்காசுகள் போனால் என்ன! உன்னிடம் தேர்ப்படை, குதிரைப்படை எல்லாம் உள்ளதே! தேர் என்றால் சாதாரணத் தேரா அது! பத்துலட்சம் நவரத்தினங்களால் அவற்றை அலங்கரித்துள்ளாயாமே! அந்த தேர்கள்…இதோ, நீ இழந்த பணத்துக்கு சமம். அவற்றை வைத்து ஆடு! ஜெயித்தால், இங்கே இருக்கும் அத்தனையையும்…என் பொருட்களையும் சேர்த்து கூட எடுத்துக் கொள், என்றான்.
சனீஸ்வரனே துணையிருக்கும் போது அவன் என்ன வேண்டுமானாலும் பேசத்தானே செய்வான்… உம்…அவனுக்கு பொங்குசனி காலம்! பேசுகிறான்… இதையறியாத நளன், அந்தக் கெட்டவன் சொன்னதை அப்படியே கேட்டான்.
பகடையை மிக மிக மிக கவனமாகத்தான் உருட்டினான்.அதுவும் சரியாகத்தான் உருண்டது…இவன் நான்கு என்ற எண்ணைச் சொல்லி உருட்ட, ஒரு பக்க பகடையில் இரண்டு புள்ளிகள்…அடுத்த கட்டையில் இரண்டு விழுந்து படீரென இன்னொரு சுற்று சுற்றியது…மூன்றாகிப் போய் விட்டது. அவ்வளவு தான்! அவ்வளவையும் தன் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டான் புட்கரன். அடுத்து யானைப்படை பறிபோயிற்று. அடுத்து காலாட்படையை தோற்றான். வக்கிரபுத்தி படைத்த புட்கரன், நளனே! இப்போது ஒன்றைக் கேட்கிறேன். உன் அரண்மனையில் அழகான பெண்கள் சேடிகளாக (பணிப்பெண்கள்) இருக்கின்றனர். அவர்களை வைத்து ஆடேன். நீ வென்று விட்டால், அவர்களுக்கு நிகராக தோற்ற அனைத்தையும் தந்து விடுகிறேன், என்றான்.