புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்…யாராவது ஒருவருக்கு…ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற எண்ணமிருந்தாலும், சனீஸ்வரரே உறுதியளித்து விட்டதால் வெற்றிபெற்று, நாட்டை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுவிட்டான். சனீஸ்வரரிடம் அனுமதி பெற்று, நெய்தல் நாட்டில் இருந்து தனது காளை வாகனத்தில் ஏறி புட்கரன் நிடதநாடு நோக்கிச் சென்றான். திடீரென அண்ணன் முன்னறிவிப்பின்றி வந்தது கண்ட நளன், அண்ணா! திடீரென வந்துள்ளாயே! ஏனோ! என்று கேட்டான். நளனே! நான் உன்னோடு சூதாடுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். உனக்கு அதில் ஆர்வமில்லாமலா இருக்கும்! மன்னர்களுக்கே உரித்தான விளையாட்டு தானே இது! கொஞ்சம்புத்தி வேண்டும். புத்தியில்லாதவர்களுக்கு மட்டும் இது ஒத்துப்போகாது. நீ தான் மகாபுத்திசாலியாயிற்றே! என்று சற்று பொடி வைத்துப் பேசினான். ஒருவேளை நளன் மறுத்தால், அவனைப் புத்தி கெட்டவன் என்று சொல்லலாமே என்பது புட்கரன் போட்ட கணக்கு. அவனது கணக்கு தப்பவும் இல்லை. சரி அண்ணா! அதற்கென்ன! விளையாடி விட்டால் போகிறது, என்று ஒப்புதல் அளித்து விட்டான்.
இதைக் கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ராஜாவுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று? இந்த புட்கரன் கொடிய எண்ணத்துடன் வந்துள்ளான் என்பதை நளமகாராஜா புரிந்து கொள்ளவில்லையே! ஐயோ! இந்த தேசத்தைக் காப்பாற்றுவது நம் கடமை. மன்னன் தவறு செய்யும் போது, அமைச்சர்கள் இடித்துரைக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நாம் மன்னனுக்கு புத்தி சொல்வோம், என்று முதலமைச்சர் மற்ற மந்திரிகளிடம் கூறினார்.அவர்கள் நளனை அணுகினர்.மகாராஜா! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. இருப்பினும், தாங்கள் புட்கரனுடன் சூதாடுவது கொஞ்சமும் சரியில்லாதது. இந்த உலகத்தில் ஐந்து செயல்களை மிகமிகக் கொடிதானது என்றும், உயிரையும் மானத்தையும் அழித்து விடக்கூடியது என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அடுத்தவன் மனைவியை விரும்புவது, பொய் சொல்வது, மது அருந்துவது, ஒருவன் இன்னொருவனுக்கு செய்கிற உதவியைக் கெடுப்பது..குறிப்பாக, ஒருவனுக்கு பணஉதவி செய்வதைத் தடுப்பது, சூதாடுவது ஆகியவையே அந்த பஞ்சமா பாதகச் செயல்கள். நீங்கள் சூதாட ஒப்புதல் அளித்தது எங்களை மிரளச் செய்திருக்கிறது. ஏதாவது, காரணம் சொல்லி அதை நிறுத்தி விடுங்கள். வேண்டாம் மன்னவரே! உங்களையும், தங்கள் அன்புத்துணைவியாரையும், மக்களையும் காக்க எங்கள் வார்த்தைக்கு மதிப்பளியுங்கள், என்றனர். ஒருவன் நல்லவனாக இருந்தாலும், அவனுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். அது மட்டுமல்ல! புத்தி சொன்னவர்களுக்கும் தொல்லை செய்யத் தொடங்கி விடுவான். நளன் புத்தியைக் கெடுப்பது சனீஸ்வரன் இல்லையா! அவனுக்கு இந்த புத்திமதி ஏறுமா? அமைச்சர்களின் சொல்லை அவன் கேட்க மறுத்து விட்டான். இதைத்தான் இவன் தலையில் சனி ஏறி நின்று நடனமாடுகிறான் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
அமைச்சர்கள் அவனது அமைதியைக் கண்டு பயந்து அவனுக்கு இன்னொரு முறை அறிவுரை சொன்னார்கள்.மகாராஜா! சூதாட்டம் ஒரு மனிதனின் குணத்தையும் உருவத்தையும் மாற்றி விடும். இதில் தங்கள் சொத்து சுகத்தை இழந்தவர்கள் வறுமையால் தோல் சுருங்கி, அடையாளமே தெரியாமல் போய்விடுவார்கள். இது ஒருவனின் குலப்பெருமையை அழித்து விடும். பணம் போய்விட்டால் தர்மசிந்தனை குலைந்து விடும். சமுதாயத்தில், ஏழை, எளியவர்கள், வாழத்தகுதியற்றவர்கள் கூட மானம் போகிற மாதிரி பேசுவார்கள். இதுவரை உறவுக்காரர்களாக இருப்பவர்கள், நம் செல்வமின்மை கண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்களிடையே உள்ள நல்லுறவு அழிந்து விடும். அதுமட்டுமல்ல அரசே! பகடைக்காயை கையில் எடுப்பவர்களும், விலைமாதர்களிடம் சுகம் தேடி அலைபவர்களும் வஞ்சக எண்ணங்களுக்கு இடம் கொடுப்பார்கள் என்று நம் முன்னோர் எழுதி வைத்துள்ளனர். நாங்கள் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், என்றனர். நளனுக்கோ இவர்கள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் அதிகமானது. அமைச்சர்களே! உங்கள் புத்திமதி எனக்குத் தேவையில்லை. நான் புட்கரனுடன் சூதாடுவதாக ஒப்புதல் அளித்துவிட்டேன். இப்போது வேண்டாம் என்றால் மட்டும், என் மானம் மரியாதை போகாதா? நடக்கப் போவது நல்லதோ, கெட்டதோ அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம், செல்லுங்கள் இங்கிருந்து! என்று கோபமாகக் கத்தினான்.விதியை மாற்ற யாரால் இயலும் என்ற அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.உண்மை தான்! ஒரு சமயம் அந்த பெருமாளையே விதி விரட்டியடித்ததாம். அது என்ன?