Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம்!!!
அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம்!!!

அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம்!!!

கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது.

சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.
சில பேர் அவரை வணங்கினார்கள். அந்தச் சாமியார் தோள்பட்டையில் மாட்டியிருந்த நீளமான பையிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். காணிக்கைகளை வாங்கவில்லை. அவர் கொடுத்த விபூதியில் பொடிப் பொடியாக எலும்புகள் தென்பட்டதாகக் சிலர் மிரட்சியுடன் பேசிக் கொண்டார்கள்.
‘அவர் சாதாரணாக சாமியார் கிடையாது, பெரிய மந்திரவாதி’ என்று சிலர் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்கள். அவர் கொடுப்பது சுடுகாட்டு எலும்புகளைப் பொடி செய்த பவுடர் தான் – அது சாதாரண விபூதி அல்ல என்று சிலர் வாங்குவதைத் தவிர்த்தனர்.
சாமியார், பகல் முழுவதும் கோவில் மரத்தடியில் தென்பட்டார். ஆனால் இரவில் அங்கு இல்லை. கோவில் சத்திரத்திலும் அவர் தங்கவில்லை. கிராமத்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இரவு நேரம் அந்த ஊரின் சுடுகாட்டைத் தாண்டித்தான் காவலுக்குப் போனார்கள். அப்போது அந்த சாமியார் அங்கே உள்ள ஒரு பெரிய புளியமரத்தின் கிளையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அதைக் கிராமத்து மக்கள் நம்பவில்லை.
எங்கிருந்து இந்தச் சாமியார் முளைத்தார்? எதற்க்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்? நல்லவர் தானா? இல்லை, மர்மமான ஆசாமியா? அவரால் ஊருக்கு ஏதாவது கெட்டது நேர்ந்து விடுமா?
பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள். அந்த ஊரில் துணிச்சலான பட்டாளத்துக்காரர் ஒருவர் இருந்தார். ஓர் மக்கள் சிலர், பட்டாளத்துக்காரரை அணுகி, சாமியார் குறித்து விசாரிக்கச் சொன்னார்கள். அவரும் சம்மதித்து சாமியாரிடம் விசாரிக்கப் போனார்.
அப்போது பிற்பகல் மூன்று மணியிருக்கும். எப்போதும் கோவில் மரத்தடியில் இருக்கும் சாமியார் அப்போது அங்கே இல்லை. பட்டாளத்துக்காரர் அந்த மர நிழலிலேயே காத்திருந்தார். நல்ல வெயில் காலம். மரத்து நிழலில் போட்டிருந்த ஒரு வட்டமான கல்லில் அசதியாகப் படுத்த பட்டாளத்துக்காரர் அப்படியே தூங்கிவிட்டார். கண் விழித்துப் பார்த்தபோது இருட்டியிருந்தது. அவசரமாக எழுந்த பட்டாளத்துக்காரர் தனது வீட்டுக்கு விரைந்தார். மனைவி வாசலிலேயே காத்திருந்தால், ஓர் எதிர்பார்க்காத செய்தியோடு.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் அந்தச் சாமியார் இங்கே வந்தாருங்க. ஒரு ரோஜாப் பூவை என் தலையில் வச்சுக்கக் குடுத்தாரு. எனக்குப் பயமா இருந்தது. வேண்டான்னும் சொல்ல முடியல. ரோஜாப்பூவை வாங்கி பேசாம சாமி ஸ்டேண்டுல இருக்கிற கிண்ணத்துல வெச்சிட்டேன்’.
எல்லாவற்றையும் பட்டாலத்துக்காரர் மௌனமாகக் கேட்டுக் கொண்டார். எதோ ஒன்று வித்தியாசமாக அல்லது விபரீதமாக நடக்கப்போகிறது என்று அவரது உள்ளுணர்வு உறுத்தியது. அந்த விபரீதம் அன்று இரவே தன் வீட்டில் நடக்கும் என்று பட்டாளத்துக்காரர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
அன்று இரவு பட்டாளத்துக்காரரின் மனைவி மஞ்சுளா, தூக்குப் போட்டு அகால மரணமடைந்த தனது மாமன் மகன் முத்துவேலுவைப் பற்றி சம்பந்தமில்லாமல் வெகுநேரம் பட்டாளத்துக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
 
பட்டாளத்துக்காரருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. மனைவி ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசினால் போதும். அது அவருக்கு தாலாட்டு. தூங்கிவிடுவார். இது அவர் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் அன்றைக்கு பதினைந்து நிமிடங்கள் மஞ்சுளா தொடர்ந்து தன் வயமிழந்து பேசிக்கொண்டிருந்தாள். பிறகு சில கேள்விகளை பட்டாளத்துக்காரரிடம் கேட்டிருக்கிறாள். அதற்க்கு எந்த பதிலும் வராத பிறகே கணவன் தூங்கித் தொலைத்து விட்டான் என்று முணுமுணுத்தபடி அவளும் தூங்க முயற்சித்திருக்கிறாள். ஏனோ தூக்கம் வரவில்லை.
கடிகாரத்தில் இரவு 12 மணி அடித்தது. பெரிதாக ஓர் ஊளைச் சத்தம் கேட்டது. அது தெரு நாயாக இருக்க வாய்ப்பில்லை. நரியாகத்தானிருக்க வேண்டும். மனதில் இனம் புரியாத ஒரு பயம் இருட்டாகக் கப்பியது. இமைகள்கூட மூட மறுத்தன.
அப்போது அவள் பார்வையில் ஒரு கிண்ணம் மிதந்து பறந்து போவது தெரிந்தது. அதன் உள்ளே அன்று மாலை சாமியார் கொடுத்த பெரிய ‘ரோஜாப்பூ’ இருப்பதும் மஞ்சுலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சாமி ஸ்டேண்டுக்கு அவள் பார்வை அவசரமாகத் திரும்பியது. அங்கே கிண்ணம் இல்லை. ஒரு வினாடி பயந்து உறைந்து போனாள். பக்கத்தில் துணிச்சல் மிக்க பட்டாளத்துக் கணவன் படுத்திருந்தது அவளுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது.
நாக்கு குளறக் கத்தியபடி கணவனின் தோளைப் பிடித்து உலுக்கினாள். உடனே கண் விழித்த பட்டாளத்துக்காரர் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்துவிட்டார்.
பூக்கிண்ணம்… மந்திரவாதி சாமியார்… தானாப் பறந்து… தோ… கதவுத் தாழை திறக்குதுங்க. தொடர்பற்றுத்தான் பயத்தில் உளறினாள்.
பட்டாளம் பார்வை வாசல் கதவுப் பக்கம் பதிந்தது. தன் மனைவி கனவு கண்டு பிதற்றவில்லை என்பது உடனே புரிந்தது.
தலையில் வைக்கச் சொல்லி சாமியார் கொடுத்த ரோஜாப்பூவை தன் மனைவி தன் தலையில் வைக்காமல் – சாமி ஸ்டேண்டில் இருந்த எவர்சில்வர் கிண்ணத்தில் வைத்ததாக அன்று மாலை சொன்னதும் பட்டாளத்துக்குப் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.
இப்போது அந்தக் கிண்ணம் ரோஜாப்பூவோடு தானாகப் பறந்து போய் கதவின் தாழ்ப்பாளைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருப்பதையும் பட்டாளம் கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டு கவனித்தார்.
அடுத்த நிமிடமே அவர் மனதில் ஒரு ‘லாஜிக்’ உதித்தது.
ஒருவேளை அந்த சாமியார் சொன்னபடி தன் மனைவி மஞ்சுளா ரோஜாப்பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு படுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அந்தக் கிண்ணம் போலவே தன் மனைவியும் தன்னிச்சையாக எழுந்து இந்த இரவு 12 மணி இருட்டில் கதவைத் திறந்து கொண்டு தனக்குத் தெரியாமலே போயிருப்பாள். அப்படியானால் தனது அழகான, அன்பான மனைவியை எதற்காகவோ தன்னை விட்டு அந்தச் சாமியார் பிரிக்கப் பார்க்கிறாரா? இந்தத் திட்டத்துடன் தான் அந்த மர்மச் சாமியார் இந்தக் கிராமத்தில் வந்து ‘டென்ட்’ அடித்திருக்கிறாரா?
பட்டாளத்துக்குக் கோபம் உச்சக்கட்ட எல்லையைத் தொட்டது. கட்டிலை விட்டு வேகமாக எழுந்தார். பக்கத்து அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த ரிவால்வரை எடுத்தார்.

அப்போது அந்தப் பூக்கிண்ணம் கதவின் உள் தாழ்ப்பாளை நெம்பித் திறந்து விட்டது. ஆனால் கதவு மூடியபடியே தான் இருந்தது. எவர்சில்வர் கிண்ணம் கொஞ்சம் சாய்மானம் கொண்டது. கிண்ணத்தின் விளிம்பைப் பயன்படுத்திக் கதவைத் திறந்தும் விட்டது. அதற்குப் பிறகு கிண்ணம் சாய்மான நிலையை மாற்றிக் கொண்டு நிமிர்ந்து கொண்டது. திறந்த கதவு வழியாக வெளியே போக ஆரம்பித்தது.

சுடுவதற்காகச் சரியாகக் கூறி கூடப் பார்த்துவிட்டார் பட்டாளம். அந்த கணத்தில்தான் அவருக்குப் புத்திசாலித்தனமாக ஒரு யோசனை உதயமானது. இப்போது நாம் கோபப்பட்டுச் சுடப்போவது பூக்கின்னத்தைத்தான். அந்த மோசடி சாமியாரை அல்ல. அதைவிட, இந்தப் பூக்கின்னத்தைத் தொடர்ந்து பின்னால் போனாள், கண்டிப்பாக அது சாமியார் இந்த அகால வேளையில் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
சுடவேண்டியது அந்தச் சாமியாரைத்தான்.
இப்படி உஷாரான பட்டாளம் தன் மனைவியைப் பார்த்து மெதுவான குரலில், ‘பயப்படாமல் நீ வீட்டுல கதவைத் தாழ் போட்டுட்டு இரு. நான் அந்தப் பூக்கிண்ணம் எங்க போகுதுன்னு பார்த்து, அதுக்குப் பிறகு என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டு வர்றேன்’.
பட்டாளம் ‘லோடு’ செய்யப்பட்ட துப்பாக்கியைப் பார்த்துக் கொண்டே பேசினார். ஆனால் மஞ்சுளா பலமாகத் தலையாட்டி மறுத்தாள்.
‘என்னை தனியா விட்டுட்டு நீங்க எங்கேயும் போக வேண்டாம். கண்டிப்பாக நீங்க இல்லாத நேரம் பார்த்து அந்தப் பாவி சாமியார் இங்கே வந்திருவான்’.
மனைவி சொல்வதும் பட்டாளத்துக்குச் சரியாகத்தான் மனதில் பட்டது. இருந்தாலும் இவ்வளவு பெரிய பயங்கரம் தன் வீட்டில் நடந்த பிறகு, என்ன ஏது என்று தெரியாமல் வீட்டுக்குள் பயந்து கொண்டு இருந்தாள் எப்படி?
ராணுவ அவசரத்தில் அவர் மூளை அலர்ட் ஆனது.
மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவசரமாக வெளியே கதவைத் தாண்டி வந்தார். அப்போது பூக்கிண்ணமும் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் அந்தரத்தில் மிதந்தபடி கிழக்கு திசைப் பாதையில் போக ஆரம்பித்திருந்ததையும் பட்டாளம் தவறாமல் கண்காணித்துக் கொண்டார். பக்கத்திலிருக்கும் கந்தசாமி அண்ணன் வீட்டுக் கதவைத் தட்டினார்.
‘அண்ணே… ஒரு அவசரம். நான் பட்டாளம் வந்திருக்கிறேன். சீக்கிரமாகக் கதவைத் திறங்க’ குரல்கொடுத்தார்.
கந்தசாமி அண்ணன் ஊருக்கு ஒத்தாசையானவர். விரைவாகவே கதவைத் திறந்தார். பின்னாலேயே அவர் மனைவி கேள்விக்குறியுடன்.

பட்டாளம் ராணுவ கோட் வேட் பாணியில் சுருக்கமாக –

‘அதோ அந்தப் பூ வைத்த எங்க வீட்டுக் கிண்ணம் வீதி முனையில் பறந்து போய்க்கிட்டு இருக்குது. மஞ்சுளா தனியா வீட்டில் இருக்க பயப்படுறா. அவ அண்ணியோடு இருக்கட்டும். நான் பூக்கிண்ணம் எங்கே போகுதுன்னு தவறவிடாம கவனிக்க முன்னால போறேன். முடிஞ்சா ஒரு டார்ச் லைட்டோடு நீங்களும் வாங்கண்ணே!’
பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் பட்டாளம் போர்க்கால முனைப்போடு பூக்கிண்ணத்தைப் பின் தொடர்ந்தார். கந்தசாமி அண்ணனும் சமயோஜித முன்னெச்சரிக்கை உணர்வோடு 5 செல் எவரெடி டார்ச் லைட்டோடும், எப்போதும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் குத்தீட்டியுடனும் புறப்பட்டார். பூக்கின்னமும் மெதுவாகத்தான் பறந்து போய்க் கொண்டிருப்பதை கந்தசாமி அண்ணன் ஒரு முறை டார்ச் அடித்து அனுமானித்துக் கொண்டார். எனவே பதற்றப்படாமல் அந்த வீதியில் குடியிருந்த பத்து பேரை படை திரட்டிக் கொண்டார்.
இப்படி ஒரு கூட்டமாகப் போனாலும், அந்தப் பூக்கிண்ணம் கிழக்கே போய் வடக்கு வீதியில் திரும்பிக் கடைசியில் சுடுகாட்டை நோக்கிப் பயணப்பட்டதை கூட்டத்தினர் உணர்ந்தபோது, அந்த டிசம்பர் குளிரிலும் எல்லோருக்கும் உடல் வியர்த்தது.
சுடுகாட்டை எல்லோரும் மிக அருகாமையில் நெருங்கிவிட்ட போதும் பணி மூட்டத்தில் அங்கே தனியாக நின்ற புளிய மரம்கூட மங்கலாகவே தெரிந்தது. இருந்தாலும், எதோ ஒரு கரகரப்பான முணுமுணுப்பு ஓசை மட்டும் எல்லோருக்கும் தெளிவாகவே கேட்டது.
‘வந்துரு தாயி, வந்துரு. உன் தாய்மாமன் உம மேலே எம்புட்டு உசுரு வச்சிருக்கான். அவன் ஆசையை அவன் இச்சாதாரிப் பேயா மாறுன பொறகாவது நெறவேத்த வா தாயி… சீக்கிரம் வா…’
இந்த வாசகங்களை அந்தச் சாமியார் திரும்பத் திரும்பக் கரகரப்பான குரலில் உச்சரித்ததை பட்டாளம் உணர்ந்து கொண்டார். இப்போது பூக்கிண்ணம் மெதுமெதுவாக அந்தச் சாமியாரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
இன்னும் சில அடிகள் நெருங்கியபோது பாதாள பைரவி போன்ற அந்தச் சாமியார், கண்களை மூடி ஒரு கல்லறையின் முன் ஜபித்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது.
அந்தக் கல்லறை – பட்டாளத்துக்காரரின் மனைவி மஞ்சுளாவின் முறைமாமன் முத்துவேலுவினுடையது.
சாமியார் கண்ணில்பட்டவுடன் சுட்டுவிட வேண்டும் என்ற பட்டாளத்தின் தீர்மானத்தைக்கூட அந்தச் சுடுகாட்டில் அப்போது நடந்த மர்மமான சம்பவங்கள் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டன. கும்பலைக் கண்ட சாமியார் தப்பி ஓட முயற்சி செய்தார். ஒரே அமுக்காக அமுக்கினார்கள். அந்தரத்தில் அதுவரை அதிசயமாகப் பறந்து வந்த பூக்கிண்ணம் அந்தக் கணத்தில் தடுமாறித் தரையில் விழுந்தது.
சின்ன வயதில் பெரிதாக எந்தக் காரணக் காரியம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளாவின் முறைமாமன் பெயரை, சம்பந்தமே இல்லாதை அந்தச் சாமியார் உச்சரித்ததிலிருந்து, இந்தப் பூக்கிண்ணம் அதிசயமாகப் பறந்து அர்த்த ராத்திரியில் சுடுகாடு நோக்கி வந்ததை நிதர்சனமாகப் பார்த்த பிறகு, துப்புத்துலக்க வேண்டிய கோணம் சாமியாரைத் தண்டிப்பதையும் தாண்டிப் போய்விட்டது.

பிடிபட்ட சாமியாரும் கொஞ்சம்கூட அச்சப்படாமல் சில அதிர்ச்சி தரும் ஆவி உலக அமானுஷ்யங்களை விளக்கினார்.

முத்துவேலு, தன் மாமன் மகள் மஞ்சுளாவைத் திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று உயிரோடு இருந்தபோது திட்டமிட்டிருக்கிறான்.
ஆனால் ஒரு நிலத்தகராறு காரணமாக முத்துவேலுவின் குடும்பமும், மஞ்சுளாவின் குடும்பமும் போலீஸ், கோர்ட் என்று போய் ஜென்ம எதிரிகளாக மாறிவிட்டனர்.
இந்த நிலையில் முத்துவேலு தன் ஆழமான காதலை மஞ்சுளாவுக்குத் தெரியப்படுத்த வெகு பிரயத்தனப்பட்டிருக்கிறான். அது குடும்ப விரோதம் காரணமாக முடியாமலே போய்விட்டது. அப்போதுதான் பட்டாளத்துக்காரர் தனது ராணுவ கான்ட்ராக்ட் முடித்து மீண்டும் தனது சொந்த கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்தார். மஞ்சுளாவின் குடும்பத்தில் பென் எடுக்கும் உறவுமுறையும் அவருக்கு இருந்தது.
ஒரே வாரத்தில் கிராமத்து அம்மன் கோவிலில் ‘பூக் கேட்டு’ அது விரும்பியபடியே கிடைக்க, பட்டாளம் – மஞ்சுளாவின் திருமணம் விமரிசையாகவே நடந்தது. தன் காதலை மஞ்சுளாவிடம் வெளிப்படுத்தக் கூட சந்தர்ப்பம் கிடைக்காத முத்துவேலு, மனமுடைந்து யாரிடமும் காரண காரியத்தைக் கூட சொல்லாமல் தூக்குப் போட்டு இறந்துவிட்டான்.
இதுவரை நடந்தது, நாம் வாழும் உலகநடைமுறைதான். ஆனால் முத்துவேலு மரணம் அடைந்தபிறகு என்ன நடந்தது என்கிற ஆவி உலக வழிமுறைகளை அந்தச் சாமியார் மந்திரவாதி சொல்லித்தான் அந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொண்டார்கள். நிறைவேறாத ஆசையுடன் அவசரப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட அந்த முத்துவேலுவின் ஆத்மா, ஆவி உலகத்திலும் சந்தம் அடையவில்லையாம். எனவே முத்துவேலுவின் ஆத்மா மரணத்துக்குப்பின் அது அடையவேண்டிய ஓர் அமைதியான உயர்நிலையை எட்டவில்லை.
எப்படியாவது எந்த வழியிலாவது ‘மஞ்சுளாவை’ அடைந்தே தீர வேண்டும் என்ற அழுத்தமான உணர்வோடு மீண்டும் இந்த உலகத்தையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் படைத்த ‘மீடியம்’கள் மூலம் முத்துவேலுவின் ஆவி பேசியிருக்கிறது.
அந்த சாமியாரும் ஒரு மீடியம் தான். முத்துவேலுவின் ஆவி, சாமியாரிடம் தனது நிறைவேறாத ஆசையை எப்படியாவது நிறைவேற்றிக் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பிரதி உபகாரமாகச் சில சித்துவேலைகளை, சாமியார் விருப்பப்படி தன் ஆவிஉலக ‘பவர்’களை வைத்து செய்து கொடுப்பதாகவும் முத்துவேலுவின் ஆவி ‘சத்தியம்’ செய்து கொடுத்திருந்ததாம்.
இப்படி சாமியார் சொன்ன விளக்கம், மக்களுக்கு நம்பும்படியாகத்தான் இருந்தது. எனவே அவர்கள் அந்தச் சாமியாரை மன்னித்து விட்டு விடும்படி பட்டாளத்துக்காரரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கந்தசாமி அண்ணனும் பட்டாளமும் தீவிரமாக ஆலோசனை செய்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டிப் பேசி சாமியாரை போலீசில் ஒப்படைத்து, கேஸ் போட்டார்கள்.
இரண்டு மூன்று வருட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்பாவிப் பெண்களின் உயிருக்கும் உடமைக்கும் கௌரவத்துக்கும் ஆபத்து விளைவித்ததாக அந்த சாமியாருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top