பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்… அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை… யாராக இருந்தாலும் சரி – இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட… காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஒரு உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு போகும்.
காரணம் – வேம்பயர்! அதாவது, டிராகுலா. டிராகுலா என்பது உயிருள்ள பிணம். இந்தப் பிணம் ரத்தவெறி பிடித்தது! இரவானால் தன் உடம்புத் தோலை உரித்து வைத்து விட்டு வௌவால் மாதிரி பறந்து வரும். இதைக் கண்டு, உலகமே அத்தனை கதவுகளையும் அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிவிடும். ஆனால், வேம்பயர் விடாது. சாவித்துவாரம் அளவுக்கு ஒரு சந்து இருந்தால்க்கூடப்போதும் உள்ளே வந்து தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் ரத்தத்தை அது குடித்துவிடும்.
ரத்தவேறியோடு காமவெறியும் பிடித்த வேம்பயராக இருந்ததால், இதனிடம் மாட்டும் இளம் பெண்கள்… வேண்டாம் அவர்கள் எப்படிச் செத்துபோவார்கள் என்பதைச் சொல்லாமல் இருந்து விடுவோம்.
இதிலே எது கதை… எது உண்மை… எது ஜோடனை… எது வதந்தி… என்று இனம்பிரித்து பார்க்கமுடியாத அளவுக்கு உலகமே பயத்தில் இருண்ட கண்களோடு அப்போது இருந்தது. அதனால், அவர்கள் பார்த்துப் பயந்ததேல்லாம் ட்ராகுலாவாகத் தெரிந்தது.
ருமானிய மொழியில் ‘ட்ராகூல்’ என்றால், ரத்தவெறி பிடித்த சாத்தான் என்று அர்த்தம்! டிராகுலா யாரைக் கொன்று ரத்தத்தைக் குடிக்கிறதோ, அவர்களும் ரத்தவெறி பிடித்த டிராகுலாவாக மாறிவிடுவார்கள் என்பதால், ‘டிராகுலாவால் கொல்லப்பட்டவர்’ என்று சந்தேகப்படும் நபர்களின் பிணங்களை அட்டைக்கரி ஆகும் அளவுக்குத் தீயிலே பொசுக்கிப் பூமிக்கு வெகு ஆழத்தில் புதைத்தார்கள்.
நீலநிறக் கண்களை உடையவர்கள்… பிறக்கும்போதே பற்களோடு பிறக்கும் குழந்தைகள்… மூளைக்கோளாறு கொண்டவர்கள்… இவர்கள் எல்லோரையுமே டிராகுலா என்று உலகம் அஞ்சி விலகியது.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அரக்கத்தனங்களுடன் வேம்பயர் தோன்ற ஆரம்பித்தது.
சிலுவைக்குறி, பூண்டு – இவை இரண்டுக்கு மட்டுமே வேம்பயர் அஞ்சும் என்ற நம்பிக்கை இருந்ததால், மக்கள் தங்கள் கழுத்தில் சிலுவைக் குறியையும் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பூண்டுக் கொத்துகளையும் தொங்கவிட்டார்கள்.
உலகம் விஞ்ஞான யுகத்தில் காலடி எடுத்துவைத்த பிறகும்கூட வேம்பயர் மறையவில்லை. எப்படி ஆரம்பித்தது இந்த டிராகுலா பீதி?
1430 -ம் ஆண்டு ட்ரான்சில்வேனியாவில் (இப்போது ருமேனியாவில் இருக்கிறது) வ்ளாட் டிராகுலா என்ற ஊர் இளவரசன் இருந்தான். பிறகு, இந்த சிறுவன் மன்னனாக ஆனபிறகு தான் சிறைப் பிடிக்கும் துருக்கியர்களைப் பழிக்குப் பழி வாங்க அவர்களை இரும்பு கம்பிகளால் குத்திக் குத்தி சித்ரவதை செய்தான். அப்போது அவனுக்கு ரத்தத்தின் சுவை பிடிக்க ஆரம்பித்தது! மனித மாமிசம் அவன் நாக்கை தாளம்போட வைத்தது! தன்னை எதிர்ப்பவர்களை அவன் கொதிக்கும் நீரில் தள்ளினான். பாலியல் குற்றம் புரியும் பெண்களின் உடம்புத் தோலை முழுவதுமாக உரித்துவிட்டு அவர்கள் கதறக் கதற… நம்மால் கற்பனை செய்யவே முடியாத காரியங்களை செய்தான்.
ஒரு நாள் அவனுக்கு ரொம்ப போர் அடிக்க, தன் படைகளோடு ஒரு கிராமத்துக்குப் போன அவன் ஒரே நாளில் தன் சொந்த நாட்டைச் சேர்ந்த முப்பதாயிரம் மக்களை மிருகங்களைப் போல வேட்டையாடிக் கொன்றான். வ்ளாட் டிராகுலா பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 1476 -ம் ஆண்டு அவன் துருக்கியர்களால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.
ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவன் சவப்பெடியைத் திறந்துபார்த்தபோது அங்கே அவனின் பிணம் இல்லை! இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவ… வ்ளாட் டிராகுலாவால் பலர் ரத்தம் உறிஞ்சப்பட்டுக் கொல்லப்படுவதாக வதந்தி பரவியது. அப்போது ஆரம்பித்த வதந்தியும் பயமும் பல நூறு ஆண்டுகள் ஆகியும் மறையவில்லை. இந்தப் பயத்தை மறையவிடாமல் செய்யும் பொறுப்பை வதந்திகளும் மக்களின் அறியாமையும் ஏற்றுக்கொண்டன. பிறகு, இந்த வேலையை நாவலாசிரியர்களும் சினிமாக்காரர்களும் ஏற்றுக்கொண்டனர். ட்ராகுலாவை வைத்து நாவல்கள் எழுதப்படாத மொழியே இல்லை!
ஜெர்மனியில் 1828 -ம் ஆண்டில் வெற்றிகரமாக ஒரு ‘டிராகுலா’ நாடகமே போட்டார்கள். பிறகு 1897 -ம் ஆண்டு ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய ‘டிராகுலா’ தான் இதில் நம்பர் ஒன்! கற்பனை கலந்து எழுதிய அந்த புத்தகம் உலகப்புகழ் பெற்று, இன்றுவரை அந்தப் புத்தகத்தின் அடிப்படையில்தான் டிராகுலா சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. பிறகு வந்த திரைப்படங்களில் கிறிஸ்டோபர் லீ டிராகுலாவாக வந்து எல்லோரையும் பயமுறுத்தியது தனி(திரை)க்கதை!
டிராகுலா எப்படித் தோற்றமளிக்கும் என்பதையும் மிகுந்த கற்பனையோடு எழுத்தாளர்கள் முடிவு செய்தார்கள்! வெளிறிப் போன முகம், ‘ஜில்’ என்று உடல், நீண்ட கருப்பு அங்கி! கதவு மூடி இருந்தால்கூடச் சாவித் துவாரம் வழியாக அறைக்குள்ளே புகுந்துவிடும். அதன் உடல் அட்டை (Leech) மாதிரி! ரத்தம் கிடைக்காவிட்டால், ‘எகிப்திய மம்மி’ மாதிரி இளைத்து விடும். ரத்தம் குடிக்க குடிக்கக் ‘கும்’மென்று பருமனாகும்!
கூர்மையான கோரைப் பற்கள், நீலநிற விழிகள் உண்டு. நமக்கெல்லாம் மூக்கில் இரு துவாரங்கள் (Nostrils) உண்டு. டிராகுலாவுக்கு ஒரே ஒரு துவாரம்தான்! இறந்துபோன பிறகு தான் டிராகுலா ஆகமுடியும்! டிராகுலாவுக்குச் சூரிய வெளிச்சம் ஆகாது. விடிவதற்குள் மனித இரையைத் தேடித் பிடித்துக் கடித்து ரத்தம் குடித்துவிட்டுக் கல்லறைப் பெட்டிக்குள் சென்று படுத்துக் கொண்டு விடும். ‘சூரியன் வந்தால் செத்துப் போய்விடுமா?’ என்கிற கேள்வி அர்த்தமற்றது. செத்துப் போனவர்தானே டிராகுலா ஆகமுடியும்! பின், டிராகுலாவை எப்படித்தான் ஒழிப்பது? முதலில் அது எந்தக் கல்லறைக்குள் இருக்கிறது என்பதை இடுகாட்டுக்குச் சென்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்!
சென்ற நூற்றாண்டில், பூசாரிகள் உதவியுடன் ஒவ்வொரு கல்லறையாகத் தோண்டி ட்ராகுலாவைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். உடனே தலையை வெட்டி எடுத்து, அங்கேயே அதனுடைய கால்களுக்கு நடுவில் தலையை வைத்துவிட்டால், டிராகுலா பிறகு எழுந்து வராது! (கல்லறையில் இருப்பது டிராகுலா என்று எப்படி தெரிந்துகொள்வது? டிராகுலா என்றால், அது எலும்புக்கூடாக மாறியிருக்காது!) ஊசியால் குத்தினால், டிராகுலாவுக்கு ரத்தம் வரும்! ரத்த ஓட்டத்தை நிறுத்த, அதன் இதயத்தைப் பிய்த்தெடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எரித்துவிடுவார்கள். எல்லோருக்கும் தெரிந்த சினிமாக்கள் மூலம் பிரபலமான ஒரு வழி – மரத்தால் செய்யப்பட்ட பெரிய ஆணியை, அதன் இதயத்துக்குள் செலுத்துவது தான்! மொத்தத்தில், உலகமெங்கும் மக்கள் ‘டிராகுலா’வை நம்ப விரும்பினார்கள்!
பொதுவாகவே சினிமா டிராகுலாக்கள் ரொமாண்டிக் டைப். சினிமாவில் டிராகுலா மென்மையாக அணைத்துக்கொண்டு, கழுத்தில் சுருக்கென்று தன் கோரைப் பல்லால் கடித்து, வழியும் ரத்தத்தை கச்சிதமாகச் சுவைக்கும்! அதில் விபரீதமாக ரொமான்ஸும் கலந்திருக்கிறது! நியூயார்க்கில் உள்ள ‘வாம்பையர் சோதனை ஆராய்ச்சி மையம்’ ஒன்று உண்டு. அதன் தலைமை மருத்துவரான ஸ்டீபன் கேப்லான், பெண்களிடையே எடுத்த ஒரு விசித்திரமான கருத்துக் கணிப்பில் என்பது சதவிகிதம் பெண்கள் ‘சந்தர்ப்பம் கிடைத்தால் வாம்பயருடன் (குறிப்பாக டிராகுலாவுடன்) உடலுறவு வைத்துக் கொள்வேன்’ என்று குறிப்பிட்டார்கள்! டிராகுலாவுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா?
சரி… அப்படியென்றால் வேம்பயர் என்ற ஒன்று இருந்ததா இல்லையா? தெரியாது! ஆனால், மனித ரத்தம் குடிக்கும் வேம்பயர் வவ்வால்கள் உலகில் உண்டு. இது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.