Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » லிப்டில் நடந்த பயங்கரம்!!!
லிப்டில் நடந்த பயங்கரம்!!!

லிப்டில் நடந்த பயங்கரம்!!!

கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ‘உண்மை நிகழ்ச்சி’, என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது.

அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்கடையில் இருந்த Ghost Sightings என்ற புத்தகத்தை எதேச்சையாகப் புரட்டியபோது – அந்தப் பேய் பற்றிய விவரமான ரிப்போர்ட் இருந்தது!

அந்தக் கடைக்கு நான் திடீரென்று போனதும், குறிப்பிட்ட ஒரு ஷெல்ப் முன்னால் நின்றதும் (வேறு எதோ Travel புத்தகங்கள் அடுக்கியிருந்த அலமாரி அது!) அந்தப் புத்தகத்தை நோக்கி என் கரம் நீண்டதும்… எப்படி நிகழ்ந்தது என்று வியப்பாக இருக்கிறது!

1896 இல், பாரீஸில், பிரிட்டிஷ் தூதராக இருந்த ஹாமில்டன் ப்ளாக்வுட் என்பவர் சந்தித்த, தலைசுற்ற வைத்த ஆவி அது.

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்வுட் அயர்லாந்துக்கு சென்றபோது ஆபேலி என்கிற ஊரில், பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். ஓரிரவு, நல்ல தூக்கத்தில் இருந்த அவருடைய காதுகளில் விபரீதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விழித்துக் கொண்டபிறகும் எங்கேயிருந்தோ அழுகைக் குரலும், யாரோ விம்மிக் கதறுவது போன்ற சத்தமும் கேட்க, எச்சரிக்கையுடனும் ஆர்வத்துடனும் எழுந்து வெளியே வந்தார் ப்ளாக்வுட்.

மீண்டும் கரகரத்த குரலும் அமானுஷ்யமான (நரியோ, நாயோ) ஊளையிடும் சத்தமும் தோட்டத்திலிருந்து வருவது போலத் தோன்றியது.

துணிச்சலைக் கூட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கித் தோட்டத்துக்கு சென்றார் ப்ளாக்வுட். முந்தைய மாலையில் பார்த்தபோது அந்தத் தோட்டம் அழகிய சோலையாக இருந்தது போல நினைவு. இப்போது சற்று மாறியிருந்தது. மரங்கள் கரடுமுரடாக இருந்தன. ஏராளமாக மண்டியிருந்த புதர்களுக்கு இடையே ஆங்காங்கே சிலுவைக் குறிகளோடு பழைய கல்லறைகள்!

மெல்ல முன்னேறினார் ப்ளாக்வுட். சற்றுத் தொலைவில், மரநிழலில் எதோ நிழலாடியது போல இருந்தது. ‘யார் நீங்கள்?’ என்று உரக்கக் கேட்டவாறு நடையை வேகப்படுத்தினார் ப்ளாக்வுட். அவருக்கு முன்னே முப்பது அடி தொலைவிலே ஓர் உருவம் மெல்லக் குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் தோளில் ஒரு சவப்பெட்டி!

‘கொஞ்சம் நில்லுங்கள்!’ என்றார் ப்ளாக்வுட் குரலை உயர்த்தி. அந்த உருவம் குனிந்து சவப்பெட்டியைக் கிழே வைத்துவிட்டு மெல்லத் திரும்பிப் பார்த்தது. அந்தக் கொடூரமான வெளிறிய முகத்தையும், மிருகத்தனமாகப் பளிச்சிட்ட கண்களையும் பார்த்தவுடன் சற்றுக் கலவரமடைந்து நாலடி பின்வாங்கினார் ப்ளாக்வுட்.

அந்த உருவம் தன் இடது கரத்தை எச்சரிக்கையாக உயர்த்தி ‘வராதே’ என்பது போலச் சைகை செய்தது. பிறகு மங்கலாகி மறைந்து போனது!

குழப்பத்தோடும் பதட்டத்தோடும் தன் அறைக்குத் திரும்பிய ப்ளாக்வுட், மறுநாள் காலையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தோட்டம் பழையபடி சாதாரணமாக, அழகாக இருந்தது!

ஓராண்டுக்குப் பிறகு…

பிரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட ப்ளாக்வுட்டுக்கு பாரிஸ் நகரில் உள்ள பிரபல க்ராண்ட் ஹோட்டலில் வரவேற்ப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்து முடிந்தவுடன் தன் உதவியாளர்களுடன் லிப்டில் ஏறச் சென்றார் ப்ளாக்வுட். அதற்குள் லிப்ட்டில் நிறைய பேர் நுழைந்தார்கள். தூதர் என்பதால் ஓரிருவர் பணிவுடன் வெளியே வந்து அவருக்கு வழிவிட்டார்கள். ப்ளாக்வுட் உள்ளே நுழைய நகர்ந்தபோது அவர் பார்வை லிப்டுக்குள் நிலை குத்தியது.

அங்கே அவரையே உற்றுப் பார்த்தவாறு அந்த லிப்ட் ஆபரேட்டர்! திடுக்கிட்டுப் போனார் தூதர்.

முன்பு அயர்லாந்தில் மாளிகைத் தோட்டத்தில் சவப்பெட்டியோடு சென்ற அதே உருவம்! அதே கொடூரமான விழிகள்!

அந்த உருவம் கூர்ந்து தூதரை வெறித்துப் பார்த்து மெல்லத் தலையசைத்தது.
கலவரத்தில் ஆழ்ந்த ப்ளாக்வுட் லிப்டில் ஏறவில்லை. கதவுகள் மூட, லிப்ட் கிளம்பியது.

ரிசப்ஷனுக்கு ப்ளாக்வுட் திரும்பிய சமயம், லிப்ட் உள்ளேயிருந்து பயங்கரமான சத்தம் கேட்க, எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
அங்கே, கேபிள் அறுந்து படுவேகமாகக் கிழே விழுந்து, லிப்டில் உள்ள எல்லோருமே இறந்திருந்தனர்.

குறிப்பாக, அந்த லிப்ட் ஆபரேட்டரின் உடலை தூதர் கவனித்தபோது… அவன்… அதன் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.
பல பத்திரிக்கைகளில் உண்மை நிகழ்ச்சி என்ற தலைப்பில் வெளியான வியப்பேற்படுத்திய பேய்கதை இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top