நெற்றிப்பொட்டில் ரிவால்வரின் வாய் இம்சையாய் உறுத்த, டாக்டர் சதுர்வேதி திவாகரைப் பலியாட்டைப் போலப் பார்த்தார்.
“நோ… நோ… என்னைக் கொன்னுடாதே! உனக்கு வேண்டிய… ப… பணத்தை நா… நான் தர்றேன்!”
திவாகர் சிரித்தான். “ஸாரி… டாக்டர் சார்! என்னுடைய திட்டத்துக்கு நீங்க கொடுக்கிற முழு ஒத்துழைப்பு பணத்துல இல்லை. உங்க உயிர்லதான் இருக்கு… பேசாம வாங்கிக்கறீங்களா?”
“நோ…!” சதுர்வேதி மிரண்டு அலறிக் கொண்டிருக்கும்போதே ரிவால்வரின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டது. சைலன்ஸரின் உபயத்தில் தோட்டா உமிழப்பட… சதுர்வேதியின் மண்டையோடு அதிர்ந்து ஒரு பக்கமாய்ப் பொத்துக் கொண்டு ரத்தத்தை உடனே வழியவிட்டது. நிலைத்த விழிகளோடு ஒரு முழு நிமிஷம் உயிருக்காகப் போராடிய டாக்டர், பின் உடம்பின் சின்னச் சின்னத் துடிப்புகள் அடங்கிச் சாவகாசமாய் ஒரே திசையை வெறிக்க ஆரம்பித்தார்.
திவாகரின் பார்வை இப்போது வால்சந்தின் கிலிபிடித்த முகத்தின் மேல் படிந்தது.
“வால்சந்த்! ரெண்டாவது தோட்டாவை நீ வாங்கிக்கிறியா… இல்லே, ஆர்யாவுக்குத் தரட்டுமா?”
ரிவால்வர் இரண்டு பேரையுமே மாறி மாறிப் பார்த்தது.
அதே வினாடிகளில்…
குர்லா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஷிண்டேவுக்கு முன்பாய் உட்கார்ந்து, வியர்த்த முகத்தைக் கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டே பதற்றக் குரலில் பேசினான் அனில்குமார்.
“சார்! புனேயிலிருந்து அரைமணி நேரத்துக்கு முந்திதான் பாம்பே வந்தேன். வந்ததுமே விட்டல் காணாமப் போன விஷயமா என்னை என்கொயர் பண்றதுக்காக நீங்க வந்துட்டுப் போன விஷயத்தை என்னோட அப்பா சொன்னார். அதான் வந்தேன்…”
“விட்டலைப் பத்தி நீ என்ன சொல்லப் போறே…?”
“சார்! அவன் காணாமப் போனதா சொல்லப்படுகிற அந்தச் சாயந்தர நேரம் எனக்கு போன் பண்ணியிருந்தான். ரெண்டு பேரும் எக்சல்ஸையர் தியேட்டருக்கு சினிமா பார்க்கப்போறதா ப்ரோக்ராம். நான் விட்டலுக்காகக் காத்திட்டிருந்தபோது ஆறு மணி சுமாருக்கு அவன் கிட்டயிருந்து எனக்கு போன் வந்தது.”
ஷிண்டே நிமிர்ந்தார். அனில்குமார் தொடர்ந்தான்:
“விட்டல் போன் பண்ணிச் சொன்ன விஷயம் இதுதான் சார். ‘நான் சினிமாவுக்கு வர முடியாது. நிஷாவை ஃபாலோ பண்ணிப் போயிட்டிருக்கேன். இப்போ நிஷா விலே பார்லே ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர் ரோட்டில் இருக்கும் ஒரு பங்களாவுக்குள்ளே போயிருக்கா… நான் பங்களாவுக்கு எதிரே இருக்கிற கராத்தே ட்ரெயினிங் சென்டருக்குச் சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் வாசல்ல அவளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். பங்களாவுக்குள்ளே போயிருக்கிற நிஷா எத்தனை மணிக்கு வெளியே வருவாள்னு தெரியலை… ஸோ… எனக்காக நீ வெயிட் பண்ணிட்டிருக்காம சினிமாவுக்குப் போ… நாளைக்குக் காலையில மீட் பண்ணலாம்’னு சொன்னான்.”
ஷிண்டே பதற்றக் கவசத்தை அணிந்து கொண்டார். “விலே பார்லே ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர் ரோடா?”
“ஆமா சார்!”
“அது யாருடைய பங்களான்னு விட்டல் சொன்னானா?”
“சொல்லலை சார்!”
“பட்… பங்களாவுக்கு எதிரே ஒரு கராத்தே ட்ரெயினிங் சென்டர் இருக்குன்னு சொன்னானா?”
“ஆமா சார்!”
ஷிண்டே நாற்காலியை வேகமாய்த் தள்ளிக்கொண்டு எழுந்தார். “டூ நாட் த்ரீ!”
“சார்!” கான்ஸ்டபிள் விறைப்புக்கு வந்தார்.
“ஜீப்பை ரெடி பண்ணு!”
மாசிலாமணி மனப் பிராந்தியம் முழுவதும் கலவரப் பகுதியாக மாறியிருக்க, வீட்டு டெலிபோனில் குரல் எக்கி பம்பாய் சில்வர்ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“நான் ரமணியோட ஃபாதர் பேசறேன். ரமணிகிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணும்…”
“அவர் ரூம்ல இல்லையே!”
“திவாகர்…?”
“அவரும் இல்லை…”
“ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?”
“தெரியலை சார்!”
“எனக்காக நீங்க ஒரு உதவி பண்ண முடியுமா?”
“கண்டிப்பா… சொல்லுங்க ஸாப்!”
“ரமணி அறைக்குத் திரும்பியதும் திவாகருக்குத் தெரியாம, நான் போன் பண்ணின விஷயத்தை ரமணிக்குச் சொல்லி என்னை என் வீட்டு டெலிபோன்ல காண்டாக்ட் பண்ணச் சொல்ல முடியுமா?”
“சொல்றேன் சார்!”
“இந்த விஷயம் திவாகருக்குத் தெரியக் கூடாது!”
“தெரியாது சார்… நீங்க கவலைப்படாதீங்க!”
மாசிலாமணி வியர்த்த முகமாய் ரிஸீவரை வைத்துவிட்டு ஆயாசமாய்க் கண்களை மூடிக்கொண்டு நாற்காலிக்குச் சாய்ந்தார்.
திவாகரின் கையில் இருந்த ரிவால்வர் ஆர்யாவையும் வால்சந்தையும் மாறி மாறிக் குறிபார்த்துப் பின் வால்சந்தை மட்டும் தன் ஒற்றைக் கண்ணால் முறைக்க ஆரம்பித்தது.
திவாகர் மெள்ளச் சிரித்தான்.
“ரெண்டாவது தோட்டா உனக்குத்தான்.”
“நை… ஸாப்… தயா… சர்லோ…” இரண்டு கைகளையும் சேவிப்பது போல் பாவ்லா செய்து திவாகரின் காலில் விழப்போகிறவன் மாதிரிக் குனிந்து, பின் எதிர்பார்க்காத ஒரு விநாடியில் ‘குபீர்’ என்று பாய்ந்து திவாகரை நோக்கித் தன் எஃகுக் கையை வீச… அவன் குனிந்து கொண்டு வயிற்றில் உதைத்தான்.
“நெக்…”
அடிவயிற்றில் கனத்த மரணவலியோடு வால்சந்த் மல்லாந்து விழ, திவாகரின் கையிலிருந்த ரிவால்வர் சட்டென்று குனிந்து கோபமான தோட்டா ஒன்றை உமிழ்ந்தது. மார்புப்பகுதி செக்கர் வானமாய் மாற… வால்சந்த் தன் வாழ்க்கையின் கடைசி விநாடிகள் இழக்க ஆரம்பித்தான்.
திவாகர் ரிவால்வரின் வாயை ஊதிவிட்டு ஆர்யாவைப் பார்த்தான். “இவனோட அந்தப் பாய்ச்சலை ஆரம்பத்திலேயே எதிர்பார்த்தேன்… லேட் பண்ணிட்டான்.”
லேப் அறைக்குள் மிஞ்சியிருந்த ஹரிஹரனும் ஆர்யாவும் திகில் உறைந்த பார்வைகளைத் திவாகரின் முகத்தின் மேல் பதிக்க… அவன் ஒரு கோணல் சிரிப்பு சிரித்தான்.
“இனி ஆர்யா!”
விலேபார்லே ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த அந்த நிசப்தமான சாலைக்குள் போலீஸ் ஜீப் நுழைந்தது.
ஜீப்பின் முன்இருக்கையில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ஷிண்டே உன்னிப்பாகச் சாலையின் இரண்டு பக்கத்தையும் பார்த்துக்கொண்டே வந்தார்.
பின் ஸீட்டுகளில் நான்கு கான்ஸ்டபிள்கள் கையில் நீளமான தடிகளோடு நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
சாலை சின்னதாய் ஒரு வளைவுக்கு உட்பட்டுத் திரும்பியதும் ஷிண்டே குரல் கொடுத்தார்.
“ஸ்டாப்!”
ஜீப் ஓர் அவசர பிரேக்குக்குக் கட்டுப்பட்டு டயர்களைத் தேய்த்துச் சாலையோரம் ஒதுங்கியது.
ஷிண்டே கீழே இறங்க, தெருவிளக்கு வெளிச்சத்தில் அந்த போர்டு தெரிந்தது.
‘Dragan karate training Centre’
‘அனில்குமார் சொன்ன கராத்தே ட்ரெயினிங் சென்டர் இதுவாகத்தான் இருக்க வேண்டும்!’
எதிர்ப்பக்கம் திரும்பிப் பார்த்தார்.
சாத்தப்பட்ட காம்பெளண்ட் கேட்டோடு அந்த பங்களா தெரிந்தது. ஒரே ஒரு கண்ணாடி ஜன்னலில் மட்டும் சோகையான மஞ்சள் நிற வெளிச்சம் ஒட்டியிருந்தது.
மெள்ளக் குரல் கொடுத்தார்:
“கான்ஸ்டபிள்!”
“சார்!”
“ஜீப்பைத் தள்ளி மறைவாய் நிறுத்திட்டு என் பின்னாடி வாங்க…”
“யேஸ் சார்!”
ஷிண்டே ரோட்டைக் கடந்து காம்பெளண்ட் கேட்டுக்கு வந்து, அதை மெள்ளத் தள்ளிப் பார்த்தார்.
ரகசியம் பேசுவது போல் அது திறந்து கொண்டது. உள்ளே நுழைந்து பூட்ஸ் சத்தங்களைக் குறைத்துக்கொண்டு போர்டிகோவை நோக்கிப் போனார்கள்.
திவாகர் ரிவால்வரால் ஆர்யாவைத் துல்லியமாய் அளவெடுத்தான். ஆர்யா விதிர்விதிர்த்துப்போய் மரண பயத்தைக் கண்களில் தேக்கிக் கொண்டு மெதுவாய்ப் பின்வாங்கினாள்.
திவாகர் புன்னகைத்தான். “பிரயோஜனமில்லை ஆர்யா… ஒரு ரெண்டு நிமிஷம் அதிகப்படியா உயிர் வாழறதால உனக்கு எதுவும் கிடைக்கப் போறதில்லை.”
ஆர்யா பின்னால் நகர முயன்று, முடியாமல் சுவருக்கு அப்பிக்கொண்டு அப்படியே மண்டிபோட்டு உட்கார்ந்தாள்.
“இது உத்தமம்!”
சிரித்துக்கொண்டே ஆர்யாவை நோக்கி நகர முயன்று, நிஷா படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைக் கடந்த விநாடி…
“த்த்த்த்ட்ட்…”
திவாகரின் கையிலிருந்த ரிவால்வரை யாரோ தட்டிப் பறித்தார்கள். அவன் அதிர்ந்து திரும்ப, ஸ்ட்ரெச்சரில் எழுந்து உட்கார்ந்திருக்கிற நிஷா தெரிந்தாள்.
விழிகளில் டன் டன்னாய்ச் சோர்வு தெரிந்தாலும், ஓர் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு அவளைச் சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஆர்யா பிரமிப்பாய் நிஷாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரண்டாவது தடவை அவளுக்கு மயக்க ஊசி போடாதது மூளைக்குச் சந்தோஷமாய் உறைத்தது.
திவாகர் திக்கித்துப்போய் நிஷாவையே பார்க்க… அவள் ரிவால்வரை அசைத்தாள்.
“தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக்கொண்டு அப்படியே மண்டிபோட்டு உட்கார்!”
நிஷாவையே திவாகர் வெறித்துப் பார்த்துக்கொண்டு, தன் தலைக்குப் பின்னால் இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மடங்கி உட்கார்ந்தான். மூளை பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலியாய்ப் பரபரவென்று யோசித்தது.
‘என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்?’
திவாகர் மேலிருந்த பார்வையைக் கொஞ்சமும் அகற்றிக் கொள்ளாமள் நிஷா கூப்பிட்டாள்.
“ஆர்யா!”
‘ம்… ம்… ம்…”
அவள் நடுங்கிக் கொண்டே வந்தாள்.
“நாற்காலியில் பிணைக்கப்பட்டிருக்கிற ஹரிஹரனை விடுவி!”
ஆர்யா பயப் பார்வை பார்த்துக் கொண்டே போய் ஹரிஹரனை விடுவித்தாள். அவன் விருட்டென்று எழுந்து ஓடி வந்து நிஷாவின் கையிலிருந்த ரிவால்வரை வாங்கிக் கொண்டு திவாகரைக் குறிபார்த்தான்.
“ரமணியை எங்கே கொண்டு போயிருக்கே?”
திவாகர் மெளனம் அனுஷ்டிக்க ஹரிஹரன் வெறி பிடித்த மாதிரி கத்தினான்: “ம்! சொல்லு… ரமணி எங்கே?”
திவாகர் பதில் சொல்லும் முன் வாசலில் காலிங்பெல் வீறிட்டது.
நிஷா குரல் கொடுத்தாள். “ஆர்யா! இனி பழைய விசுவாசம் உனக்கு உதவாது. வந்திருக்கிறது யார்னு போய்ப் பாரு. நமக்கு வேண்டியவங்களாயிருந்தா உள்ளே கூட்டிட்டு வா!”
ஆர்யா தலையசைத்துவிட்டு வாசல் கதவை நோக்கிப் போய், ஒரு நிமிஷ அவகாசத்தில் காக்கி யூனிஃபார்ம்களோடு உள்ளே வந்தாள்.
இன்ஸ்பெக்டர் ஷிண்டே அடுத்த பத்து நிமிஷத்துக்குள் நடந்து முடிந்த சம்பவங்களை ‘ஹரிஹரன், நிஷா’ மூலம் கிரகித்துக்கொண்டு திவாகரை நெருங்கி அவனுடைய தலைமுடியைக் கொத்தாய்ப் பற்றினார். ஆவேசமாய் உலுக்கினார்.
“ரமணியை உன்னோட ஆட்கள் எங்கே கொண்டு போயிருக்காங்க?”
“எ… எ… எனக்குத் தெரியாது…”
ஷிண்டேயின் ஸ்டீல் முஷ்டி திவாகர் சில்லு மூக்கைச் சிதிலமாக்க, ரத்தம் கொட்டியது.
“ம்… சொல்லு… எங்கே ரமணி?”
ரத்தம் வழியும் வாயோடு சிரித்தான் திவாகர். “தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை… இந்நேரம் அவன் கதை முடிந்திருக்கும்.”
“யூ… ராஸ்கல்!” ஹரிஹரன் வீறிட்டுக் கத்தி எட்டி உதைக்க முயன்றான்.
பக்கத்து அறைக்குள் டெலிபோன் அடித்தது. திவாகரைக் கான்ஸ்டபிள்களிடம் தள்ளிவிட்டு ஆர்யாவைப் பார்த்தார் ஷிண்டே.
“இந்நேரத்துல யார் போன் பண்ணுவாங்க?”
“அநேகமாய் ஜோஷி…”
“வா… என்னோடு!”
டெலிபோன் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஆர்யா ரிஸீவரை எடுப்பதற்குமுன் ஷிண்டே சொன்னார்: “இதோ பார் ஆர்யா… இந்தக் கேஸ் கோர்ட்டுக்குப் போகும்போது நீதான் அப்ரூவர். உனக்கு ஒரு மாசச்சிறைத் தண்டனைகூடக் கிடைக்காம நான் பார்த்துக்கிறேன். போன்ல பேசறது ஜோஷியா இருந்தா… இங்கே நடந்த விஷயங்களைப் பத்தி எதுவுமே தெரியப்படுத்தாம… ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவரை இங்கே வரவழைக்கணும்!”
ஆர்யா தலையசைத்துவிட்டு ரிஸீவரை எடுத்தாள். குரல் கொடுத்தாள்.
“ஹலோ…”
“ஆர்யா…! நான் ஜோஷி பேசறேன்…” உடனே ஆர்யா தன் இடதுகை விரல்களால் ரிஸீவரை அழுத்தமாய் மூடிக்கொண்டு
ஷிண்டேயை ஏறிட்டாள்.
“ஜோஷிதான்…”
“சரி… பேசி இங்கே வரவழை!”
ஆர்யா பேச்சைத் தொடர்ந்தாள்.
“சொல்லுங்க சார்!”
“டாக்டர் பக்கத்துல இருக்காரா ஆர்யா?”
“இல்ல சார்… அவருக்கு மறுபடியும் லேசா நெஞ்சுவலி வந்தது. படுத்து ரெஸ்ட் எடுத்துட்டிருக்கார்.”
“ஆர்யா…! நான் இப்போ சொல்லப்போகிற செய்தியைக் கேட்டா சந்தோஷத்துல டாக்டர் எந்திரிச்சு உட்கார்ந்துடுவார்…”
“அப்படியென்ன சார் சந்தோஷமான விஷயம்?”
“மூணு எலி உயிரோடு கிடைச்சிருக்கு…”
“மூணு எலியா!”
“ஆமா ஆர்யா… மூணுமே ஆண் எலிகள். இதுல இருக்கிற ஒரு கூடுதல் சந்தோஷம்… மாட்டிக்கிட்ட எலிகளில் ஒரு எலி ரமணி. ஹரிஹரனோட தம்பி.”
“எ… எப்படி… சார் இது…?”
“சாத்தியமாச்சுன்னு கேட்கறியா? கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னோட அறை ஜன்னலிலிருந்து எதேச்சையா வெளியே பார்த்தப்ப நம்ம வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளியிருக்கிற ட்ரான்ஸ்ஃபார்மருக்குப் பின்னாடியிருந்து ரமணி எட்டி எட்டிப் பார்த்துட்டிருந்தான். வேவுபார்க்க வந்தவனைச் சும்மா விடலாமா? நைஸா நம்ம வாட்ச்மேனைக் கூட்டிக்கிட்டு துப்பாக்கியும் கையுமா பங்களாவின் பின்பக்க வழியா டிரான்ஸ்ஃபார்மர் இருந்த இடத்துக்குப் போனேன்… அந்தச் சமயத்துலதான் வேற யாரோ ரெண்டு பேர் ரமணியைத் தாக்கி ஒரு சின்ன டெம்போ வேன்ல கடத்திட்டுப் போகப் பார்த்தாங்க. நானும் வாட்ச்மேனும் துப்பாக்கிமுனையில அவங்களை மடக்கி பங்களாவுக்குக் கொண்டுவந்து, மயக்கமருந்து கலந்த கூல்ட்ரிங்க்ஸைக் குடிக்க வெச்சு நாலு மணி நேரத்துக்கு எழுந்திரிக்க முடியாதபடி பண்ணியிருக்கோம்…”
“ஈஸிட்…? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க சார்… விஷயத்தை டாக்டர்கிட்ட சொல்லி அவர் என்ன சொல்றார்ன்னு கேட்டுட்டு வர்றேன்.”
“ம்… போய் கேட்டுட்டு வா… நான் லைன்லேயே இருக்கேன்.”
ஆர்யா ரிஸீவரை ஒருக்களித்து வைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் ஷிண்டேவுக்கு ஜாடை காட்டி வெளியே கூட்டிவந்து விஷயத்தைச் சொன்னாள். அவர் சில விநாடிகளை யோசனையில் கரைத்து விட்டு மெல்லிய குரலோடு ஆர்யாவின் காதருகே குனிந்தார்.
“மயக்கமாயிருக்கிற அந்த மூணு பேரையும் அவரோட கார் பின்ஸீட்ல படுக்க வெச்சு, இங்கேயே கொண்டாந்துடச் சொல்லு… கார் இங்கே வந்ததும் மடக்கிடலாம்.”
ஆர்யா தலையாட்டிவிட்டு டெலிபோனை நோக்கிப் போனாள். ரிஸீவரை எடுத்துக்கொண்டு ஷிண்டே சொன்ன வாசகங்களை டாக்டர் சதுர்வேதி சொன்னது போலச் சொல்ல, மறுமுனையில் ஜோஷி உற்சாகித்தார்.
“இதோ… புறப்பட்டுட்டேன்.”
சரியாய் இருபது நிமிஷம்…
ஜோஷியின் கார் சதுர்வேதியின் பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் மெளனமானது. ஜோஷி இறங்கினார்.
போர்டிகோ படிகளில் ஆர்யா தெரிந்தாள்.
“ஆர்யா…! மூணு எலிகளையும் கொண்டாந்துட்டேன். வால்சந்த் உள்ளே இருந்தா அனுப்பு… ஒவ்வொரு எலியா எடுத்துப் போகட்டும்.”
ஆர்யா மெளனமாய் அவரையே பார்த்து கொண்டிருக்க… மூன்று திசைகளிலும் கான்ஸ்டபிள்களின் நிழல்கள் உற்பத்தியாகி, அவரை மெள்ள மெள்ளச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தன.
ஜோஷி முகம் மாறினார். பார்வையைச் சுற்றிச் சுற்றிப் போட்டார்.
“ஆ… ஆர்யா… இ… இவங்க… இவங்க…?”
“வாங்க மிஸ்டர் ஜோஷீ! உள்ளே போய் வெளிச்சத்தில உட்கார்ந்து சாவகாசமா பேசலாம்.”
ஜோஷியின் வியர்த்த பிடரியில் இன்ஸ்பெக்டர் ஷிண்டே கை வைத்தார்.
சென்னை…
அழைப்புமணிச் சத்தம் கேட்டு, தூங்காமல் படுத்திருந்த மாசிலாமணி எழுந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.
விடியற்காலை ஐந்து மணி.
போய்க் கதவைத் திறந்தார்.
வெளியே…
வைகறை இருட்டில் ஹரிஹரனும் ரமணியும் நின்றிருந்தார்கள்.
“அ… அப்பா…!”
பாய்ந்து அவர்களைக் கட்டிக் கொண்டார் மாசிலாமணி. விழிகளில் சந்தோஷ நீர் தெறித்தது.
“ஹ… ஹரி… உன்னை திரும்ப உயிரோடு பார்த்துட்டிருகேன். இது கனவில்லையே…?”
ஹரியின் கண்களிலும் நீர்.
“நிஜமோ நிஜம்…! அப்பா! பம்பாயிலிருந்து உங்களுக்கு போன் பண்ண அவகாசமில்லை. காரணம் மிட்நைட் ஃப்ளைட்டைப் பிடிக்கிற அவசரம்.”
“சரி… திவாகர் எங்கே…?”
“நான் மொதல்ல கீதாம்பரியைப் பார்க்கணும். வாங்கப்பா! கார்ல போய்கிட்டே பேசுவோம்… திவாகரைப் பத்தின சில கசப்பான விஷயங்கள் இப்போதைக்கு உடனடியா கீதாம்பரிக்குத் தெரிய வேண்டாம்!”
“ஹரி… நீ என்னடா சொல்றே?”
“சில நிழல்களை நாம நிஜம்னு நினைச்சுட்டோம்ப்பா!…”
“ஹரி…”
“ரமணி எல்லாத்தையும் சொல்லுவான்… வாங்கப்பா!…”
வீட்டைப் பூட்டிக்கொண்டு காரில் ஏறும்போது ஹரிஹரன் மாசிலாமணியிடம் மெல்லிய குரலில் கேட்டான்…
“அப்பா… குழந்தை யார் ஜாடை…? என் மாதிரியா… கீதாம்பரி மாதிரியா…?”
மாசிலாமணி புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:
“என் மாதிரி!”