Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நீல நிற நிழல்கள் (28)

நீல நிற நிழல்கள் (28)

மாசிலாமணி பயம் ஈஷிக்கொண்ட பார்வையோடு அந்த நர்ஸை ஏறிட்டார். “நீ என்னம்மா சொல்றே? பம்பாய்ல எனக்குத் தெரியாமே சதி நடந்துட்டிருக்கா…!”

“ஆமா சார்! கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஹாஸ்பிடலுக்குப் பின்பக்கமா இருக்கிற டாய்லெட்டுக்கு நான் போனபோது, இருட்டுல ஒரு மரத்துக்குக் கீழே உங்க சம்பந்தியம்மாவும் லுங்கி கட்டின ஒரு ஆளும் நின்னு மெதுவான குரல்ல பேசிட்டிருந்தாங்க. என் மனசுக்கு ஏதோ சந்தேகம் தட்டவே அவங்களுக்குத் தெரியாம மறைவா நின்னு அவங்க பேசிட்டிருந்ததைக் கேட்டேன்.”

“எ… என்ன… பே… பேசிக்கிட்டாங்க?”

“பம்பாயிலிருந்து திவாகர் போன் பண்ணியிருந்தான். மெட்ராஸ்ல செய்ய இருந்த காரியங்களைப் பம்பாய்லேயே முடிச்சுட்டு வந்துடறானாம். இங்கே… மாசிலாமணிக்கும் மத்தவங்களுக்கும் சந்தேகம் வராதபடி உங்களை நடந்துக்கச் சொன்னான்னு அந்த லுங்கி கட்டின ஆள் உங்க சம்பந்தியம்மாகிட்ட சொல்லிட்டிருந்தான்.”

“அ… அப்புறம்?”

“உங்க சம்பந்தியம்மா அரக்கப்பரக்க பயந்து அங்கேயும் இங்கேயும் பார்த்துக்கிட்டு ‘சரி நீ போயிட்டு அப்புறமா வா… இப்ப எதுவும் பேச வேண்டாம்’ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாங்க. அந்த ஆளும் உடனே போயிட்டான்.”

“பேசினது இவ்வளவுதானா?”

“ஆமா சார்!”

மாசிலாமணி தன் தாடையைத் தேய்த்துக் கொண்டு கலக்கமாக நிற்க… அந்த நர்ஸ் பேச்சைத் தொடர்ந்தாள்:

“சார்! என் மனசுக்கு அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது விபரீதமாப் படப்போய்த்தான் உங்ககிட்ட அதைச் சொல்றேன்…”

“நீ இப்ப வந்து சொன்னது நல்லதாப் போச்சும்மா… உன்னை என்னோட சொந்தப் பொண்ணு மாதிரி நினைச்சு உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லப் போறேன். அதை நீ மனசுல வெச்சிக்கிட்டு எனக்காக ஒரு காரியம் பண்ணணும்…”

“சொல்லுங்க சார்! என்னால முடிஞ்ச உதவியைப் பண்ண நான் தயாராயிருக்கேன்.”

மாசிலாமணி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நர்ஸிடம் குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

“அந்தப் பர்வதம், கீதாம்பரியைப் பெத்த அம்மா கிடையாது…”

நர்ஸ் திகைத்துக் கண்களைச் சமுத்திரப் பரப்புக்கு விரித்தாள். “சா… சார்… நீங்க என்ன சொல்றீங்க…!”

“ஆமாம்மா… கீதாம்பரிக்கு அஞ்சு வயசாயிருக்கும்போதே அவளோட அப்பாவும் அம்மாவும் ஒரு ரோடு ஆக்ஸிடெண்ட்ல இறந்து போயிட்டாங்க. அப்போ அவங்க கர்நாடகா ஷிமோகாவில் இருந்தாங்க. பெத்தவங்களை இழந்து அநாதையாயிட்ட குழந்தை கீதாம்பரியைப் பக்கத்து வீட்டுல இருந்த பர்வதம் எடுத்து வளர்த்தா. சின்ன வயசிலேயே கணவனை இழந்துட்ட பர்வதத்துக்குத் திவாகர் ஒரே பையன். பர்வதத்தைத் தன்னோட தாயாகவும் திவாகரை அண்ணனாகவும் நினைச்சுத் தன்னை வளர்த்த அவங்க மேல பாசத்தைக் கொட்டிக்கிட்டு வந்திருக்கா கீதாம்பரி. எங்க கம்பெனியோட ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்காக இண்டர்வியூ நடத்தியபோது கேண்டிடேட்டாக வந்த கீதாம்பரியை ஹரிஹரனுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போனதால உடனே ஷிமோகாவிலிருந்து பர்வதத்தையும் திவாகரையும் வரவழைச்சுக் கீதாம்பரிக்கும் ஹரிஹரனுக்கும் கல்யாணத்தைப் பேசி முடிவு பண்ணினோம். ‘கீதாம்பரி தான் பெத்த பெண்ணில்லை’ என்கிற விஷயத்தைப் பர்வதம் மறைக்காம அன்னிக்கே சொல்லிட்டா. பொண்ணு லட்சணமா, லட்சுமிகரமாயிருந்ததால அதை நாங்க பெரிய விஷயமாவே எடுத்துக்கலை. கல்யாணத்தை விமரிசையா செஞ்சு முடிச்சோம்…”

“கீதாம்பரிக்கு இந்த உண்மை தெரியுமில்லையா?”

“தெரியும்…” சொன்ன மாசிலாமணி குரலை இன்னமும் தாழ்த்திக் கொண்டார். “கொஞ்ச நாளாகவே கீதாம்பரி அடுத்த தெருவில் இருக்கிற பர்வதத்தோட வீட்டுக்குப் போறதில்லை. அதே மாதிரி திவாகர் எங்க வீட்டுக்கு வந்தாலும் அவனோடு சரியா பேசறதில்லை. நான் காரணம் கேட்டபோது ‘அவங்க முன்னே மாதிரி இல்ல மாமா… பேச்செல்லாம் ஒரு மாதிரியாயிருக்கு’ன்னு சொன்னா. கீதாம்பரி ஏன் அன்னிக்கு அப்படிச் சொன்னாள்னு இப்பத்தான் எனக்குப் புரியுது… அம்மாவும் மகனும் ஏதோ உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்காங்க. அதைக் கண்டுபிடிச்சாகணும்… அந்த அம்மாவை நேரடியாகவும் கேட்க முடியாது. அதனால நீ ஒரு காரியம் பண்ணணும்…!”

“சொல்லுங்க சார்! எதுன்னாலும் செய்யறேன்.”

“நீ ராத்திரி முழுக்கத் தூங்காம, ஹாஸ்பிடல்ல இருக்கிற பர்வதத்தை நோட் பண்ணணும். அந்த லுங்கி கட்டின பேர்வழி மறுபடியும் பர்வதத்துகிட்ட ஏதாவது சொல்ல வரலாம். அந்தச் சமயத்துல அவங்க என்ன பேசறாங்கன்னு நீ கேட்க வேண்டியது அவசியம்…!”

“இனி எனக்கு ட்யூட்டி அந்த அம்மாவைக் கவனிக்கிறதுதான் சார்!”

“நான் வீட்டுக்குப் போய் அங்கிருந்து டெலிபோன் மூலமா பம்பாயில இருக்கிற ரமணிக்குப் புதுசா கிளம்பியிருக்கிற இந்த விபரீதத்தைச் சொல்லிடறேன்…”

“சார்… இந்த விஷயத்தை நான் சொன்னதா யாருக்கும் தெரிய வேண்டாம்!”

“அந்தக் கவலையே உனக்கு வேண்டாம்மா! இந்தப் பிரச்னையை எப்படி அணுகணுமோ அப்படி அணுகித் தீர்த்துக்கப் போறேன். நீ மட்டும் பர்வதத்தைக் கண்கொத்திப் பாம்பாட்டம் கவனிச்சுட்டிருந்தா போதும்… நான் வீட்டுக்குப் போயிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்.”

அந்த நர்ஸ் தலையாட்ட, மாசிலாமணி அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஹாஸ்பிடலின் போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்.

திவாகர் கையில் ரிவால்வரோடு ஹரிஹரனிடம் குனிந்து சிரித்தான்.

“என்ன… ஹரி… அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டே? இந்த மாதிரி அருமையான ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் கடந்த ஆறு மாசகாலமா காத்திட்டிருந்தேன். மெட்ராஸிலேயே உன்னையும் உன்னோட தம்பி ரமணியையும் என்னோட ஆட்களை விட்டுத் தீர்த்துக்கட்ட இரண்டு தடவை முயற்சி பண்ணினேன்… முடியலை.”

ஹரிஹரனின் விழிகள் இன்னமும் திக்கித்துப் போயிருக்க… உதடுகள் மட்டும் அதிர்ச்சியில் தன்னிச்சையாகப் பிரிந்து வார்த்தைகளை உதிரி உதிரியாக உதிர்த்தன.

“தி… திவாகர்… என்… என்னையும்… ர… ரமணியையும் கொல்ற… அ… அளவுக்கு… எ… எங்க… மேல உனக்கு எ… என்ன… ப… ப…?”

“பகைன்னு கேக்கறியா…? இது பகையில்லை ஹரி… ஒரு லட்சிய வெறி! என்ன லட்சியம்னு கேக்கறியா… உன்னோட குடும்பத்தில என் உடன்பிறவா சகோதரி கீதாம்பரி ஒருத்திக்கு மட்டுமே எல்லா சொத்துக்களும் சேரணும்… அந்தச் சொத்து நிழல்ல நானும் என்னோட அம்மாவும் ஒண்டிக்கிட்டு வருங்காலத்தோட ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா கழிக்கணும். இந்த லட்சியத் திட்டம் நீ கீதாம்பரியைக் கைப்பிடிக்கிறதுக்கு முந்தியே என்னால உருவாக்கப்பட்டு என்னோடு அம்மாவால அங்கீகரிக்கப்பட்ட ஒண்ணு. இது கீதாம்பரிக்கு தெரியாது.”

ஹரிஹரனின் கண்களில் உச்சப்பட்சக் கிலி தெரிய… திவாகர் தன் கையிலிருந்த ரிவால்வரால் அவனுடைய நெற்றியில் ஒரு கோடு போட்டான்.

“பணத்துக்காகவா இவ்வளவு பெரிய பாதகம்ன்னு நீ கேக்கலாம்… எனக்கு வேற வழி தெரியலையே ஹரிஹரன்! சொந்தத்துல ஏதேதோ பிஸினஸ் பண்ணிப் பார்த்தேன்… எதுவுமே சரிப்பட்டு வரலை… ஊர் முழுக்கக் கடன். கீதாம்பரிகிட்ட ரெண்டு மூணு தடவை ஜாடை மாடையா பணம் கேட்டுப் பார்த்தேன். அந்தப் பேச்சையே எடுக்காதேன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம்தான் என்னோட லட்சியத் திட்டத்தைச் செயல்படுத்தற முயற்சிகளை எடுத்துக்கிட்டேன். ரெண்டு நாளைக்கு முந்தி விடியகாலை நேரத்துல ரமணி என்கிட்ட வந்து பம்பாய்ல நீ ஒரு லாரி விபத்துல இறந்துட்டதா சொன்னதும் என் மனசுக்குள்ளே ஒரு தீபாவளி. என்னோட வேலையில பாதி வேலையைக் குறைச்சுட்ட கடவுளுக்கு நன்றி சொன்னேன். ஆனா, ரமணியோடு பம்பாய்க்கு வந்த பின்னாடி, விபத்துல செத்தது நீ இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்குப் பலமான அதிர்ச்சி! இருந்தாலும் ஒரு சின்ன சந்தோஷம். இதே பம்பாயில், காணாமல் போயிருக்கிற உன்னைத் தேடிக்கிட்டே ரமணியையும், அதுக்கப்புறமா உன்னையும் தீர்த்துக்கட்ட ஊரிலிருந்து என்னோட ஆட்கள் ரெண்டு பேரை வரவழைச்சேன்… இந்த நிமிஷம் ரமணி அவங்க பிடியில.”

ஹரிஹரனின் தொண்டைக்குழி பய எச்சிலை அவஸ்தையாக விழுங்கியது.

“தி… திவாகர்… உ… உனக்கு வே… வேண்டியது பணம்தானே…! தர்றேன்… எவ்வளவு வேணும்னாலும் தர்றேன்… கீதாம்பரிக்குத் தெரியாம தர்றேன். ரமணியையும் என்னையும் ஒண்ணும் பண்ணிடாதே! எங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆனா… எங்க அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருக்கமாட்டாங்க.”

“அவங்களும் உயிரோடு இருக்கக் கூடாதுன்னுதானே நாங்க நினைக்கிறோம்! இப்போதைக்குக் கீதாம்பரி உயிரோடு இல்லாம போனாலும் எங்களுக்கு அக்கறையில்லை. ஏன்னா… அவளோட குழந்தை எங்களுக்குப் போதும். அந்தக் குழந்தைக்கு கார்டியனா இருந்துக்கிட்டே உங்க வீட்டுச் சொத்துல கைவைக்கலாமே!”

“தி… திவாகர்…”

“இனி இங்கே பேச்சில்லை… செயல்தான்” சொன்ன திவாகர் சுவரோரமாகக் கண்களில் மரணபயத்தோடு மண்டிபோட்டு உட்கார்ந்திருந்த டாக்டர் சதுர்வேதி, ஆர்யா, வால்சந்த் மூன்று பேரையும் பார்வையால் நனைத்துவிட்டுச் சதுர்வேதியிடம் வந்தான்.

“டாக்டர்! ஜோஷியோட மூளைக்கோளாறு மகனைக் குணப்படுத்தறதுக்காக நீங்க ஏதோ ஜீன் ஆராய்ச்சி பண்றதாகவும் அதுக்காகச் சில உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறதாகவும் வால்சந்த் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். நீங்க இனிமே இந்த ஆராய்ச்சியைப் பண்ணமாட்டீங்க… ஏன்னா… உயிரோடு இருக்கமாட்டீங்க!”

சதுர்வேதி கலவரமாய் நிமிர்ந்தார். திவாகர் தொடர்ந்தான்: “வாழ்க்கையில் என்னோட லட்சியத்தை அடையறதுக்காக ஜோஷியும் நீங்களும் எனக்குப் பெரிய அளவுல உதவி பண்ணியிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் பண்ணின இந்த உதவிக்கு இந்த ஜென்மத்துல நன்றி சொல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை எனக்கு. இந்த விஷயத்துல நான் ஜோஷிக்குக் கோயில் கட்டிக் கும்பிடணும். ஏன் தெரியுமா? உங்களையெல்லாம் சுட்டுகொல்லப் போறது நானாக இருந்தாலும் பழியை சுமக்கப் போகிறவர் ஜோஷிதான். ஜோஷி உங்களையெல்லாம் ஏன் கொலை செய்யணும்? அதுக்கும் காரணம் வெச்சிருக்கேன்.”

திவாகர் பேசிக்கொண்டிருக்கும்போதே வால்சந்த் மெள்ள எழ முயல, சட்டென்று ரிவால்வர் அவன் பக்கம் திரும்பியது.

“இன்னொரு தடவை நீ அசைஞ்சா உன்னோட மார்புல ரத்தப்பொத்தல் விழுந்துடும். இது உனக்கு மட்டும் தர்ற எச்சரிக்கையில்லை. எல்லோருக்கும் சேர்த்துத்தான்…”

வால்சந்த் மண்டியிட்டு அப்படியே உட்கார்ந்து கொள்ள, திவாகர் பேச்சைத் தொடர்ந்தான்:

“ஜோஷி உங்களையெல்லாம் கொலை செய்யறதுக்கான காரணம் இதுதான். தன் மகனோட மூளைக்கோளாறை ஜீன் ட்ரான்ஸ்ஃபர் மூலமா குணப்படுத்துவதாய்ச் சொன்ன டாக்டர் சதுர்வேதி, லட்சக்கணக்குல பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டார். ஆத்திரம் தாளாத ஜோஷி லாபரெட்டரிக்கு வந்து டாக்டரையும் ஆர்யாவையும் வால்சந்த்தையும் மயக்கமாய்க் கிடக்கிற நிஷாவையும் ஹரிஹரனையும் சுட்டுக் கொன்றுவிட்டார். இந்த வாக்குமூலத்தை போலீஸில் சொல்லப்போவது வேறு யாருமில்லை… வால்சந்துதான்.”

எல்லோரும் பார்வைகளைத் திவாகரின் முகத்தில் ஆணியடித்த மாதிரி பதித்திருக்க, திவாகர் ஒரு சின்னச் சிரிப்போடு தொடர்ந்தான்:

“வால்சந்துன்னா உண்மையிலேயே வால்சந்த் கிடையாது. அதாவது தோட்டாவை நெஞ்சில் வாங்கிக் கொண்டு உயிர் போகிற நிலைமையில் வால்சந்த் போலீஸுக்கு போன் செய்து பேசுகிற மாதிரி பேசப்போகிறவன் நான்தான். வால்சந்த்தோட குரல் இதுக்கு முந்தி போலீஸுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கொலைகளைப் பண்ணினது ஜோஷிதான்னு போலீஸ் நம்ப இன்னோரு பலமான சாட்சியம், ரிவால்வரை வால்சந்த்கிட்ட கொடுத்துட்டார். அது இப்போ என் கையில இருக்கு.”
ஹரிஹரன் குரல் நடுங்கக் குறுக்கிட்டான்.

“தி… திவாகர்…!”

“என்ன ஹரி?”

“எ… எ… என்னோட தம்பி ரமணியை ஒண்ணும் பண்ணிடாதே…!”

திவாகர் மெள்ளச் சிரித்தான். “இது திட்டத்தோட கடைசிக்கட்டம். மறுபரிசீலனை பண்ண வழியே இல்லை. ஜோஷியைத் தேடிப் போலீஸ் அவரது பங்களாவுக்குப் போகும்போது என் ஆட்களோட போனஸா ரமணியின் டெட்பாடி அவரோட வீட்டுப் பின்பக்கப் புதர்ல இருக்கும்.”

“நோ…!”

“கத்திப் பிரயோஜனமில்லை ஹரி! டாக்டர் தன்னோட ஆராய்ச்சி வெற்றியடையணும்ங்கிறதுக்காகச் சில உயிர்களை அழிச்ச மாதிரி நான் வாழ்க்கையோட செல்வச் செழிப்பை அனுபவிப்பதற்காகச் சில பேரைத் தீர்த்துக் கட்டறதுல தப்பேயில்லை…”

“வே… வேண்டாம்… திவாகர்! நீ எவ்வளவுதான் சாமர்த்தியமா காரியங்களைப் பண்ணினாலும் போலீஸ்கிட்டயிருந்து உன்னால தப்பிக்க முடியாது.”

திவாகர் புன்னகைத்தான். “போலீஸோட சந்தேகப் பார்வை என் மேல விழ வாய்ப்பே இல்லை ஹரி. உங்களுக்கெல்லாம் கபால மோட்சம் கொடுத்துட்டு, நான் நேரா ஓட்டலுக்குப் போய்க் கொஞ்ச நேரம் என்னை ஆசுவாசப்படுத்திக்கிட்டு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணி நல்லபிள்ளை மாதிரி பேசுவேன். சார்! ரூம்ல என்னோடு படுத்துத் தூங்கிட்டிருந்த ரமணியைக் காணோம் சார்! ஒரு மணி நேரத்துக்கு முந்தி வரைக்கும் ‘இந்த ராத்திரிக்குள்ளே அண்ணன் ஹரிஹரனை எப்படியாவது கண்டுபிடிக்கணும்’ன்னு புலம்பிட்டிருந்தான். திடீர்னு எனக்குத் தூக்கம் கலைஞ்சு கண்விழிச்சுப் பார்க்கும்போது அவனைக் காணலை. ‘இனி போலீஸை நம்பிப் பிரயோஜனமில்லை. ஹரிஹரனைக் கண்டுபிடிக்கத் தனிப்பட்ட முறையில்தான் முயற்சிகள் எடுத்துக்கணும்’னு சொல்லிட்டிருந்தான். அப்படியெல்லாம் முயற்சி செய்யக்கூடாதுன்னு நான் சொன்னது அவனுக்குப் பிடிக்கலை. தனியாகவே கிளம்பிப் போயிட்டான் போலிருக்கு… இப்படி ஒரு டயலாக்கை நான் விட்டா போலீஸ் என் மேல சந்தேகப்பட முடியுமா?”

அறைக்குள் இப்போது பலத்த நிசப்தம் நிலவ… மண்டியிட்டிருந்த சதுர்வேதி ஏதோ சொல்வதற்காக முயற்சிக்க, திவாகர் கையமர்த்தினான்.

“கருணை மனு எதுவும் வேண்டாம் டாக்டர்! இது அறுவடை நேரம். வாழ்க்கையோட சாயந்தர நேரத்துல இருக்கிற உங்களுக்கு
முதல் தோட்டாவைத் தர்றேன்… வாங்கிக்கறீங்களா?”

திவாகர் பேசிக்கொண்டே நடந்து போய்ச் சதுர்வேதியின் நெற்றிப்பொட்டில் ரிவால்வரின் உலோக வாயைச் சிலீரென்று பதித்தான்.
ட்ரிக்கரை ஆட்காட்டி விரல் கொக்கி போட்டது!

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top