“வால்ச்சந்த்…!”
கையில் சாவிக் கொத்தோடு பங்களாவின் இருட்டுக்குள் நகர்ந்து வாசல்கதவை நோக்கிச் செல்ல முயன்ற வால் சந்த், ஆர்யாவின் குரல் கேட்டதும் நின்றான்.
“என்னங்கம்மா?”
“வாசல் கதவோட லாக்கர் கொஞ்சம் நுட்பமானது. மேக்னடிக் லாக். வெறும் சாவியைப் போட்டா அது வாயைத் திறக்காது…”
“வேற என்னம்மா பண்ணனும்?”
“வாசல்கதவுக்குப் பக்கத்திலேயே இடதுபக்கமா, சின்னதா ஒரு மரஷெல்ஃப் இருக்கு. அந்த ஷெல்ஃபுக்குள்ளே ஸ்பேனர் சைஸில் ஒரு மேக்னடிக் ரிலீவர் இருக்கு. அது பாட்டரியில் இயங்குகிற அமைப்பு. கருவியோட தலைமாட்டில் இருக்கிற கடுகு சைஸ் பட்டனை ஒரு நிமிஷம் அழுத்திக்கிட்டிருந்தாப் போதும்… அந்த ரிலீவர் மின்காந்தமா மாறிடும். அது மின்காந்தமா மாறினதும் கதவு லாக்கர் துவாரத்துக்கு நேரா வெச்சுக்கிட்டு, சாவியை உள்ளே விட்டு மூணு தடவை திருகணும். அப்பத்தான் லாக் ரிலீஸாகும்.”
“சரிங்கம்மா!”
“புரியுதா? இல்லை… மறுபடியும் ஒரு தடவை சொல்லட்டுமா?”
“வேண்டாங்கம்மா! நான் பார்த்துக்கறேன்.”
வால்சந்த் இருட்டில் கரைந்துவிட, ஆர்யா பங்களாவைச் சுற்றிக் கொண்டு, வாசல்கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.
உள்ளே ‘நடை’ச் சத்தம்… தொடர்ந்து அடுத்த சில விநாடிகளில் ஷெல்ஃப் திறக்கப்படும் சத்தம்.
பிறகு மெளனம்.
ஆர்யா குரல் கொடுத்தாள்:
“வால்சந்த்!…”
“அம்மா!…”
“மேக்னடிக் ரிலீவர் கிடைச்சுதா?”
“ம், கிடைச்சுதம்மா!”
“நான் சொன்னபடி அதை லாக்கர் துவாரத்துக்கு நேரா வெச்சுக்கிட்டு, சாவியை உள்ளே விட்டு மூணு தடவை திருகு… அதுக்கு முந்தி ரிலீவர்ல இருக்கிற பட்டனை அழுத்தி, அதை மின்காந்தமா மாத்தணும்…”
“சரிங்கம்மா!”
ஆர்யா காத்திருந்தாள்.
ஒரு நிமிஷம் ஒரு யுகம் மாதிரி கழிய, இரண்டாவது நிமிஷத்தின் ஆரம்பத்தில், சாவி மூன்று முறை திருகப்பட்டு ‘ப்ளக்’ எண்ற சத்தத்தோடு லாக்கர் சுதந்திரம் வாங்கிக் கொண்டது.
சத்தமில்லாமல் கதவு திறக்க, ஆர்யா பதட்டமாய் உள்ளே நுழைந்தாள்.
“முதலில் டாக்டரைப் பார்க்கவேண்டும்!”
கண்களுக்குப் பழக்கமாகிவிட்ட இருட்டில், எதன் மீதும் மோதிக்கொள்ளாமல் வேகமாக நடைபோட்டு, கீழே விழுந்துகிடந்த சதுர்வேதியை நெருங்கி மண்டியிட்டாள். புறங்கையில் சுவாசம் பார்த்து அவருடைய மார்பில் காதை வைத்தாள்.
இதயம் யோசித்து யோசித்துத் துடித்துக் கொண்டிருந்தது.
“டாக்… டர்…!”
கன்னங்களைத் தட்டினாள். சலனமில்லாமல் தலை ஆடியது.
“டா… டாக்டர்…”
“……..”
“டாக்டர்…!”
வால்சந்த் தீக்குச்சி ஒன்றை உரசி, அதன் ஒளிப்பிழம்பை டாக்டரின் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டுவர, அவருடைய கண்ணிமைகளில் மெலிதான நடுக்கம் தெரிந்தது.
“வால்சந்த்!”
“அம்மா!”
“அந்தப் ‘பீங்கான் மக்’கை எடுத்துட்டுப் போய் வாஷ் பேஸின்ல தண்ணி பிடிச்சுட்டு வா!”
பிடித்துக்கொண்டு வந்தான்.
ஆர்யா வலது உள்ளங்கையில் நீரை நிரப்பிக் கொண்டு, டாக்டரின் முக மையத்தில் ‘ர்ர்ர்ரப்’பென்று அடித்தாள்.
சதுர்வேதியின் உடம்பு உடனே ஒரு சிலிர்ப்புக்கு உட்பட்டது. வலதுகையும் வலதுகாலும் ஒருமுறை மடங்கி நீண்டது.
“டா… டாக்டர்…!”
“…….”
“டாக்டர்… நான்… ஆர்யா…”
“ம்… ம்… ம்… ம்…”
படபடவென்று கன்னங்களைத் தட்டிவிட்டு, மறுபடியும் நீரைத் தெளிக்க, சதுர்வேதியின் கண்ணிமைகள் பிரிந்தன.
வால்சந்த் இன்னொரு தீக்குச்சியை உரசினான். ஒரு அரசியல்வாதியின் வாக்குறுதி போல் ஒரு இன்ஸ்டன்ட் வெளிச்சம் உற்பத்தியாகி டாக்டரின் முகத்தைத் தெளிவாய்க் காட்டியது.
“ம்… ம்… ம்…”
“டாக்டர்!… நான் ஆர்யா…”
சதுர்வேதியின் உதடுகள் மெதுவாக அசைந்தன. கை மெள்ள உயர்ந்தது. “ஆ… ஆர்யா…”
“டா… டாக்டர்! உங்களுக்கு என்னாச்சு? யார் உங்களை இப்படித் தாக்கினது?”
சதுர்வேதியின் கண்கள் இப்போது பரபரவென்று சுழன்றன. “ஆ… ஆ… ஆர்யா…”
“சொ… சொல்லுங்க… டாக்டர்!… உங்களைத் தலையில் அடிச்சுக் காயப்படுத்தினது யாரு?”
சதுர்வேதி மூச்சிரைந்துகொண்டே எழுந்து உட்கார்ந்தார். “ஆர்யா… நீ… நீ… ஜோ… ஜோஷி… வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டியா…?”
““டாக்டர்! என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. விட்டலோட பாடியை ஜோஷிகிட்ட ஒப்படைச்சுட்டு, வால் சந்த்தோடு பத்திரமா வந்துட்டேன். இங்கே உங்க நிலைமைதான் சரியில்லை. பங்களாவுக்குள்ள நுழைஞ்சு உங்களைத் தாக்கினது யாரு?”
சதுர்வேதி ஈனஸ்வரக் குரலோடு தலையாட்டினார். “யா… யாரும் இல்லை…”
ஆர்யாவின் முகம் திகைப்பைப் பூசிக்கொண்டது.
“எ… என்னது… யாருமில்லையா? பின்னே நெத்தியில இவ்வளவு பெரிய காயம் எப்படி டாக்டர்?”
“அது… அது… நான் மயக்கமாகிக் கீழே சாஞ்சபோது மர பீரோவோட விளிம்பு நெத்தியில் மோதியிருக்கு… ரத்தம் வெளியேறிட்டிருக்கும்போதே அன்கான்ஷியஸ் ஸ்டேஜுக்குப் போயிட்டேன்…”
ஆர்யாவின் ஆச்சரியம் அதிகமாயிற்று.
“டாக்டர்! உங்களுக்கு எதனால திடீர்னு மயக்கம் வந்தது?”
சதுர்வேதி பீறிட்டு வந்த மூச்சிரைப்பைச் சீராக்கிக் கொண்டு, சோர்ந்த கண்களால் ஆர்யாவை ஏறிட்டார்.
“நீ விட்டலோட டெட்பாடியோடு கார்ல புறப்பட்டுப் போனதும் ஜீன் மேனிபுலேஷனைக் கண்டினியூ பண்றதுக்காக லேப்புக்குள்ளே வந்தேன். திடீர்னு மார்பை அடைச்சுது. ராத்திரியிலிருந்தே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன். பி.பி அதிகமானதைக் கண்டுக்காம நான்பாட்டுக்கு இருந்ததினாலே மைல்டா ஹார்ட் அட்டாக். வலி அதிகமாறதுக்குள்ளே சமாளிக்க நினைச்சு, மாத்திரை எடுக்க மறுபடியும் வெளியே வந்தேன். பீரோவை நெருங்கறதுக்குள்ள வலி அதிகமாயிடுச்சு… அரக்கப்பரக்க பீரோவைத் திறந்து மாத்திரையை எடுத்து வாயில போட்டேன்… மூச்சுத் திணறலும் தலை சுத்தலும் அதிகமாகி உடம்பு என் வசம் இல்லாம சாஞ்சேன். பீரோவோட விளிம்புல நெத்திபட்டு ரத்தமாப் பொத்துக்கிட்டது வரை ஞாபகமிருக்கு… அதுக்கப்புறம் எதுவும் ஞாபகமில்லை… ஆமா, நீ எப்படி உள்ளே வந்தே?”
தன் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியேற்றிய ஆர்யா, சின்னதாய்ப் புன்னகைத்தாள்.
“எல்லாத்தையும் அப்புறமா சொல்றேன்… டாக்டர், மொதல்ல உங்களுக்கு ஹார்ட் பெயின் எப்படியிருக்குன்னு சொல்லுங்க!”
“மாத்திரை உள்ளே போனதால வலி இப்ப பரவாயில்லை… ஆனா, ப்ரீத்திங் ட்ரபுள் இருக்கு. அட்லீஸ்ட் ஒரு நாள் முழுக்க நான் ரெஸ்ட்ல இருந்து ஆகணும். என்னை என்னோட ரூமுக்குக் கூட்டிட்டுப் போய்ப் படுக்க வெச்சு ஒரு பெத்தடின் இஞ்செக்ஷனைப் போட்டுரு ஆர்யா!…”
“டாக்டர்… உங்க நெத்திக் காயமும் பெரிசாயிருக்கு. ஹாஸ்பிடலுக்குப் போயிடலாமா? ஒரு ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறமா வந்து லேப் வொர்க்கை கண்டினியூ பண்ணலாம்.”
“வேண்டாம்… இது மைல்ட் அட்டாக்தான். ஒரு கோர்ஸ் மாத்திரைகளைச் சாப்பிட்டு இங்கேயே ரெஸ்ட் எடுத்தாப் போதும்… நான் ரெஸ்ட்ல இருக்கும்போதே நீ ஜீன் மேனிபுலேஷன் ஷெட்யூலைக் கவனிக்கலாம். ராகினியோட ரிஸர்ச் ஷெட்யூல் சரியான ரிசல்ட்டைத் தராதபட்சத்தில், புதுசா வந்து மாட்டியிருக்கிற நிஷாவோட மண்டையை நாளைக்குத் திறக்கணும்…”
ஆர்யாவின் புன்னகை இப்போது பெரிதாயிற்று. “டாக்டர்! இன்னிக்கு மிஸ்டர் ஜோஷி மூலமா ஒரு ஆரோக்கியமான ஆண் எலி நமக்குக் கிடைச்சிருக்கு.”
“ஆண் எலியா?”
“ம்… பேர் ஹரிஹரன், மெட்ராஸ் எலி. ஏதோ பிஸினஸ் ப்ராப்ளத்துல மிஸ்டர் ஜோஷிகிட்ட எக்கச்சக்கமா வந்து மாட்டிக்கிச்சு. விட்டல்ங்கிற செத்த எலியைக் கொடுக்கப்போன எனக்கு, ஒரு உயிருள்ள எலியைக் கொடுத்தார் ஜோஷி.”
சதுர்வேதியின் சோர்ந்த கண்களிலும் சந்தோஷம் பளிச்சிட்டது. “இப்ப… அந்த எலி எங்கே…?”
“நம்ம கார்ல… பின்ஸீட்டுக்குக் கீழே முழு மயக்கத்துல கிறங்கிக்கிடக்கு. விடியும்போதுதான் கண்ணைத் திறந்து பார்க்கும்.”
தன் உடம்பின் உபாதைகளையும் மறந்து, பல்செட் உபயத்தால் குரூரமாய்ப் புன்னகைத்தார் டாக்டர்.
“ஆர்யா! இதுவரைக்கும் நம்ம ஜீன் ட்ரான்ஸ்ஃபர் சோதனைக்கு உபயோகப்படுத்தப்பட்ட எல்லா எலிகளுமே பெண் எலிகள்தான். சோதனையில் நாம எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காம போனதுக்குக் காரணம் இதுவாகவும் இருக்கலாம். நாளைக்கு நிஷாவோட மண்டையைத் திறக்கிறதுக்குப் பதிலா ஹரிஹரனோட மண்டையைத் திறந்து, ஜீன் ட்ரான்ஸ்ஃபர்க்குப் புதுசா பிள்ளையார் சுழி போடலாம்…”
“ஆண் எலியைப் பார்க்கறீங்களா டாக்டர்?”
“இப்பவே!…”
ஆர்யா எழுந்தாள்.
“வால்சந்த்! நீ போய்க் காம்பெளண்ட் கேட்டைத் திறந்து வை… பின்னாடியே வர்றேன்.”
அவன் தலையாட்டிவிட்டுச் சாவிக்கொத்தோடு வெளியே போய்க் காம்பெளண்ட் கேட்டை விரிய விரியத் திறந்து வைக்க… ஆர்யா ரோட்டில் நிறுத்தியிருந்த காரை உள்ளே ஓட்டி வந்து போர்டிகோவில் நிறுத்தினாள். அதற்குள் வால்சந்த் காம்பெளண்ட் கேட்டைச் சாத்திவிட்டு, வேக நடையில் வந்து காரின் பின்பக்கக் கதவைத் திறந்து, ஸீட்டுக்குக் கீழே ஒரு ஹோல்டால் மாதிரி திணிக்கப்பட்டிருந்த ஹரிஹரனை வெளியே இழுத்தான்.
அடம்பிடிக்காமல் வந்த ஹரிஹரனை வாரி இரண்டு கைகளாலும் ஒரு குழந்தை போல் தூக்கிக் கொண்டு உள்ளே போனான் வால் சந்த். ஆர்யா பின்தொடர்ந்தாள்.
வலது கையால் மோவாயைத் தாங்கிக் கொண்டு டெலிபோனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாசிலாமணியை அழுது களைத்த கண்களோடு கீதாம்பரியின் அம்மா பர்வதம் நெருங்கினாள்.
“பம்பாயிலிருந்து ரமணியும் திவாகரும் ஏதாவது தகவல் கொடுத்தாங்களா?”
மாசிலாமணி நிமிர்ந்து இறுகிப்போன முகத்தோடு தலையாட்டினார். இல்லையென்பது போல.
பர்வதம் அழுகையில் வெடித்தாள். “கீதாம்பரி மயக்கத்துல இருக்காள்னுதான் பேரு… வாய் ஓயாம அரற்றிட்டிருக்கா… ‘உங்க புள்ளைக்கு போன்பண்ணுங்க மாமா… நான் அவர்கிட்ட பேசணும்…’ இதே வாக்கியத்தை மந்திரம் ஜெபிக்கிற மாதிரி சொல்லிட்டிருக்கா. உடம்பு, ஜுரத்துல அக்னிக் குண்டமாட்டம் கொதிக்குது.”
கிழிபட்ட மனதோடு கண்களில் நீர் பனிக்க எழுந்தார் மாசிலாமணி.
“ரெண்டு மணி நேரமா பம்பாயிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவ்வளவு பெரிய பம்பாய்ல ரமணியும் திவாகரும் ஹரிஹரனை எப்படிக் கண்டுபிடிக்கப் போறாங்கன்னும் புரியலை… அப்படியே கண்டுபிடிச்சாலும் ஹரிஹரன் உயிரோடு இருப்பான்ங்கிற நம்பிக்கையும் எனக்கு இல்லை.”
“உங்க வாயாலே அப்படிச் சொல்லாதீங்க! உங்க புள்ளைக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.”
“நம்மை நாமே ஏமாத்திக்கிட்டிருக்கோம்… ஹரிஹரனோட உயிருக்கு ஆபத்து இல்லைன்னா இந்நேரம் அவன் உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் சரி… போன் பண்ணிப் பேசியிருப்பான்.”
பர்வதம் ஒரு உச்சபட்ச அழுகைக்குத் தயாரானபோது அந்த நர்ஸ் பக்கத்தில் வந்து நின்றாள். மாசிலாமணியை ஏறிட்டாள்.
“சார்! டாக்டரம்மா உங்களை அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க.”
நைந்துபோன காகிதமாய் நகர்ந்து வராந்தாவின் கடைசியில் இருந்த டாக்டர் மனோரஞ்சிதத்தின் அறைக்குள் நுழைந்தார். மேஜையின் மேல் தன் இரு முழங்கைகளையும் ஊன்றி, இறுக்கமான முகபாவத்தோடு உட்கார்ந்திருந்த மனோரஞ்சிதம் மெளனமாய் அவருக்கு இருக்கையைக் காட்டினாள். அவர் உட்கார்ந்ததும் கேட்டாள்:
“பம்பாயிலிருந்து ஏதாவது தகவல்…?”
“இல்லை…” தலையாட்டிய மாசிலாமணியின் கண்களில் நீர் பளபளத்தது.
“என்ன பண்ணப் போறீங்க?”
“பு… பு… புரியலை… டாக்டர்…”
“கீதாம்பரியை ரெண்டு நாளைக்காவது சந்தோஷமா வெச்சிருந்தாப் போதும்… அதுக்கப்புறம் அவளைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லை. அவளை ஒரு தற்காலிக சந்தோஷத்துல வைக்கறதுக்காக மறுபடியும் ரமணியையே ஹரிஹரன் மாதிரி பேச வெச்சா என்ன?”
“அது முடியாது டாக்டர்!”
“ஏன்?”
“அவளுக்கு ஏதோ பொறி தட்டி உஷார் ஆயிட்டா. ரமணியோட குரலைக் கண்டுபிடிச்சுடுவா. ஹரிஹரனுக்கும் ரமணிக்கும் குரல் ஒரே மாதிரி இருந்தாலும் பேசறவிதத்துல ரமணி கொஞ்சம் வித்தியாசப்படறான். அண்ணி ஸ்தானத்தில் இருக்கிற கீதாம்பரியை மனைவியா பாவிச்சுக்கிட்டுப் பேச அவனால முடியலை…”
“உங்க மருமக உங்களுக்கு உயிரோடு வேணுமா, இல்லையா?”
“வேணும்…”
“அப்படீன்னா… நாளைக்குக் காலையில எட்டு மணிக்கு ரமணியை பம்பாயிலிருந்து ஹரிஹரன் ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து பேசற மாதிரி பேசச் சொல்லுங்க…” டாக்டர் தீர்க்கமான குரலில் சொல்ல, மாசிலாமணி பதட்டப்பட்டார்.
“கீதாம்பரி கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடுவா டாக்டர்!”
“பார்க்கலாம்… ரமணியை மொதல்ல பேசச் சொல்லுங்க!”
(தொடரும்)