மெக்சிகோ நாட்டில் வசிக்கும் மொலினா தபியா என்ற 31 வயதுப் பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன் மகள் பூனைக்குட்டியை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இரண்டு வயதாகும் மொலினாவின் மகள், சிறிய பூனைக்குட்டி ஒன்றைத் தலைகீழாகப் பிடித்து விளையாடுவது, பூனையை அதட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. உடனே ‘கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் பூனையைத் துன்புறுத்த அனுமதிப்பதும் அதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வதும் வெட்கக்கேடானது’ என்கிற ரீதியில் பலர் கமென்ட் அளிக்க, சிலர் போலீஸில் மொலினா மீது புகார் அளித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மொலினா ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டீ ஆக்டிவேட் செய்துவிட்டார். ஆனால் அப்லோட் செய்திருந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் அப்பிலும் தீயாகப் பரவியது. மொலினா மகள் செல்லமாகத்தான் பூனையுடன் விளையாடுகிறார் என்று ஒரு பக்கமும் பிராணிகளை வதைக்கக் கூடாது என்று இன்னொரு பக்கமும் ஆன்லைன்வாசிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தார்கள். பூனை பாவம் பொல்லாதுய்யா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 47 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் புதிய சாதனை(!) படைத்தது. இந்த நிலையில் இந்த மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில், ‘இந்த டீமை வெச்சுக்கிட்டு லாலிபாப்தான் சாப்பிடணும்’, ‘நாங்க ஜெயிக்க மாட்டோம். அதனால் உலகக்கோப்பையைத் திருப்பித் தர மாட்டோம்’ என மீம்ஸ் கிரியேட் செய்து ஏகத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களைக் கலாய்த்துத் தள்ளினார்கள். அப்செட்டான தோனியிடம், ‘உலகக்கோப்பைக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது… நெக்ஸ்ட் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘நெக்ஸ்ட் ரெஸ்ட்தான்’ என வடிவேலு பாணியில் பதிலளித்து இருக்கிறார். பட்ட டீமிலே படும்!
நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற உமாசங்கர் ஐ.ஏ.எஸ் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவருடைய மதம் சார்ந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டது தமிழகம் முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த உமாசங்கரோ, ‘ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுகிறார்கள். நான் எனது வேலை முடிந்தவுடன் எங்கோ ஓர் இடத்துக்குச் சென்று என் கடமையை ஆற்றுகிறேன். அரசு அலுவகங்களில் நான் எந்தவிதப் பிரசாரமும் செய்யவில்லை’ என விளக்கம் கொடுக்க சர்ச்சை ஓய்ந்தது. அடுத்த நாளே டி.வி பேட்டி ஒன்றில் ‘இயேசுவைப் பிரார்த்தித்து நான் கை வைத்தால், இறந்த மனிதன் உயிரோடு திரும்புவான்’ என்ற ரேஞ்சில் ஏகத்தும் பேட்டியளிக்க தமிழகம் முழுவதும் ஆன்லைன்வாசிகளின் இந்த வார அவல்பொரி ஆனார் உமாசங்கர். என்ன சார் இப்பிடி பண்றீங்களே சார்!