மலைப்பாம்பு கறியை சாப்பிட்ட ஆசாமிக்கு 9 ஆண்டு ஜெயில்
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார்.
அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அரிசி சாதத்தில் குண்டு துளைக்காத உடை
சீனாவில் ராணுவம் தன் வீரர்களுக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளை தொடர்ந்து அளிப்பது வாடிக்கையான ஒன்று.
இப்படி ஷென்யாங் ராணுவ பிரிவு, தனது படை வீரர்களுக்கு பல்வேறு முக்கியமான பயிற்சிகளை அளித்தது. அதில் தரை வழி போர்ப் பயிற்சியில், எதிரி நாட்டு படை வீரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பிப்பது எப்படி என்பதுவும் ஒரு பயிற்சியாக தரப்படுகிறது.
இந்த பயிற்சியின் போது, ஒரு வீரர் தனது சீருடையில் எதிரியின் குண்டு தாக்குதல்கள் தன்னை தாக்காமல் பாதுகாத்துக் கொண்டார். அவர் அசகாய சூரர் என்ற பாராட்டையும் பெற்று விட்டார்.
ஆனால் அவர் வேக வைத்த அரிசி சாதத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத உடையை அணிந்து, அதிகாரிகளை ஏமாற்றி இருப்பது அப்புறம்தான் தெரிய வந்தது.
வீரரின் செயல், சீன ராணுவத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சர்ச்சையில் சிக்கிய நடிகையின் ‘செல்பி’
பிரபல ஆங்கில நடிகையான லிண்ட்சே லோகன் அண்மையில் ‘செல்பி’ கேமராவில் தன்னை படம் பிடித்து அதை ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டும் இருந்தார்.
மெலிந்த தேகம் கொண்ட லிண்ட்சே இது பற்றி கூறுகையில் “சிக்குன்குன்யா நோயில் இருந்து விடுபடுவதற்கு நான் அணிந்த பிரபல நிறுவனத்தின் ஒரு ஜோடி கச்சிதமான உள்ளாடைகளே காரணம். அதை அணிந்ததால் தான் சிக்குன்குன்யாவுக்கு எதிராக என்னால் போராட முடிந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட செல்பி புகைப்படம் உல்டா செய்யப்பட்டு உள்ளது என்று லிண்ட்சே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்களும், விமர்சகர்களும் குமுறி இருக்கிறார்கள்.
லிண்ட்சே ஒரு மேஜைக்கு அருகே நின்று படம் எடுத்து உள்ளார். ஆனால் அந்த மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் பாட்டில்கள் எல்லாம் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதை எப்படி நம்புவது? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
குழந்தையின் பெயரை மாற்றிய நீதிபதி
பிரான்ஸ் நாட்டின் வாலென்சியனஸ் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சிலமாதங்களுக்கு முன்பு பிறந்த தங்களது குழந்தைக்கு ‘நுடெல்லா’ என்று பெயர் சூட்டி இருந்தனர். இது அந்த நாட்டின் பிரபலமான ஒரு உணவின் பெயர் ஆகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அந்த குழந்தையின் பெற்றோரை ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த வழக்கின் மீதான விசாரணை அண்மையில் மீண்டும் நடந்தபோது, கோர்ட்டு நீதிபதி, “இதுபோல பெயர் வைப்பதால் எதிர்காலத்தில் அந்த குழந்தையின் பெயர் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகும். மேலும், உணவுப் பண்டத்தின் பெயரை வைப்பது அதை பரப்புவது போலவும் அமையும்’’ என்று கூறிவிட்டு குழந்தைக்கு ‘யெல்லா’ என்ற பெயரை சூட்டினார்.