பீஜிங்,
வரும் மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சீனாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடனான சுஷ்மா சுவராஜின் சந்திப்பை மையப்படுத்தி அந்நாட்டு செய்தி சேனல்கள், பத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அதுமட்டுமல்ல பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் குறிப்பாக, சில்க் ரோடு பிராஜக்ட்டுகள் பற்றியும் சீன மீடியாக்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தது.
அங்குள்ள அரசால் நடத்தப்படும் நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’, சீனாவின் கம்யூனிச கட்சியால் நடத்தப்பட்டு வரும் ‘சீனா டெய்லி’ உள்ளிட்ட பத்திரிகைகள் பிரதமர் மோடியின் மே மாத வருகையை தலைப்புச் செய்திகளாக அலங்கரித்திருந்தன. சுஷ்மா சுவராஜின் சந்திப்பை அங்குள்ள அரசு செய்தி ஊடகமான சிசிடிவி விரிவாக கவரேஜ் செய்திருந்தது. சீனா-இந்தியாவுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை இந்தியா பொறுமையாக கையாள வேண்டும் என சீன அதிபர் கூறியிருந்ததை பல பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டிருந்தன.