நிலத்தில் ஊர்வனவற்றில் முக்கியமான உயிரினமான பாம்புகள், பல்லிகளின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவை என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். காரணம், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பாம்பு படிமங்களில் சிறிய கால்கள் போன்ற உறுப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் சுமார் 10¼ கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பு படிவங்கள் இதுவரை கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ள ஒரு குவாரி ஒன்றில் இருந்து மிகவும் பழமை வாய்ந்த 4 பாம்பு படிவங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது தற்போதைய படிமத்தை விட 6½ கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது அதாவது 16¾ கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பாம்புகளின் தோற்றம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த படிமங்களிலும் சிறிய ரக மூட்டுகள் போன்ற உறுப்புகள் காணப்பட்டு உள்ளன. இது தரையை பற்றிப்பிடிப்பதற்காகவே பயன்பட்டிருக்கும் என்றும், நடப்பதற்கல்ல என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.