சில விநாடி யோசனைக்குப் பின், ஆர்யா நெற்றியில் சரம் கட்டியிருந்த வியர்வையை இடதுகை ஆட்காட்டி விரலால் வழித்துக்கொண்டே வால் சந்தை ஏறிட்டாள்.
“வால் சந்த்!…”
“அம்மா!…”
“டாக்டர் கிடக்கிற கோலத்தைப் பார்த்தா அவர் உயிரோடு இருப்பார்னு எனக்குத் தோணலை… டாக்டரோட மரணத்துக்குக் காரணமான நிஷாவை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே தப்ப விட்டுடக் கூடாது. எப்படியாவது அவளை மடக்கியாகணும்!”
“இந்தப் பங்களாவுக்குள்ளே போறதுக்குப் பின்பக்கமா ஏதாவது வழி இருக்காம்மா?”
“இல்லையே!”
“ஏதாவது ஒரு வழியில் நான் பங்களாவுக்குள்ளே போயிட்டா அந்தப் பொண்ணை எப்படியாவது மடக்கிடுவேன்.”
ஆர்யா புதிதாய் வியர்த்து வழிந்துகொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். இப்போது மனசுக்குள் மழை.
“என்ன செய்யலாம்?”
“கோட்டை மாதிரியான இந்தப் பங்களாவுக்குள் சாமான்யமாய் உள்ளே நுழைய முடியாதே!”
“அம்மா…”
“ம்…”
“உள்ளே போறதுக்கு ஏதாவது வழி கிடைக்குமான்னு பங்களாவை ஒரு தடவை சுத்திப் பார்த்துட்டு வர்றேன். நீங்க இதே இடத்துல நில்லுங்க.”
“இரு வால் சந்த்… நானும் வர்றேன்.”
இருவரும் நடந்தார்கள். தேங்கியிருந்த மழைத் தண்ணீர் தெறித்தது. வீசிய காற்றுக்கு மரத்தின் இலைகளில் ஒட்டியிருந்த பாலன்ஸ் மழைநீர் திவலைகளாய் உருண்டு சொட்டியது.
“அம்மா! ஜோஷி அய்யாவைப் பார்க்க நீங்களும் டாக்டரும் கார்ல ஒண்ணாவே வந்திருக்கலாம். பங்களாவுக்குள்ளே தனியா அவரை விட்டுட்டு நீங்க மட்டும் வந்திருக்கக் கூடாது.”
“நீ இப்ப சொன்னதைதான் டாக்டர்கிட்டேயும் சொன்னேன். அவர் கேட்கலே… ‘நான் லேப் வேலைகளைப் பார்த்துட்டிருக்கேன். நீ போய்ட்டு வந்துடு’ன்னு சொன்னார்.”
“அந்தப் பொண்ணு நிஷாவுக்குப் போட்ட மயக்க ஊசிமருந்து எத்தனை மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்னு சொன்னீங்கம்மா?”
“நாலு மணி நேரத்துக்கு! உள்ளே நடந்திருக்கிற விபரீதத்தைப் பார்த்தா அவளுக்கு முன்னாடியே மயக்கம் தெளிஞ்சிருக்கணும். கேஜ் ரூமுக்கு வெளியே வந்து லேப் வேலையில் ஈடுபட்டிருந்த டாக்டரைத் தாக்கியிருக்கணும்… அதுக்கப்புறம் வெளியே தப்பிச்சுப் போக முயற்சி பண்ணிக் கதவோட லாக்கை விடுவிக்க முடியாம உள்ளேயே முடங்கியிருக்கணும்… கரண்ட் வந்த பிறகு தப்பிக்கிற முயற்சியில் மறுபடியும் அவள் ஈடுபடலாம்.”
பேசிக்கொண்டே பங்களாவின் பின்பக்கம் வந்தார்கள். நடந்து கொண்டிருந்த வால் சந்த் சட்டென்று நின்றான்.
“அம்மா…”
“என்ன வால் சந்த்…?”
அவன் பார்வை மொட்டைமாடியில் நிலைத்திருந்தது.
“அது சிம்னிதானேம்மா?”
ஆர்யாவின் பார்வை உயர்ந்து மொட்டைமாடியின் இருட்டில் மசமசப்பாய்த் தெரிந்த அந்த சிமெண்ட் பில்லர் புகைபோக்கியின் மேல் நிலைத்தது.
“ஆமா… அது சிம்னிதான். வேண்டாத பொருள்களைப் போட்டு எரிக்கிறதுக்காக டாக்டர் கட்டின சிம்னி. இது இப்போ உபயோகத்துல இல்லை.”
“வழி கிடைச்சாச்சும்மா!” வால் சந்தின் பற்கள் இருட்டில் ஒரு சாக்பீஸ் கோடு மாதிரி தெரிந்தது.
“வால் சந்த்… நீ என்ன சொல்றே?”
“பங்களாவுக்குள்ளே போறதுக்கு அந்தச் சிம்னிதாம்மா வழி.”
“அதுக்குள்ளே எப்படிப் போகமுடியும்? அது ஒரு குழாய் மாதிரி. பிடிமானம் எதுவும் கிடையாது. இறங்கினா இருபதடி உயரத்திலிருந்து செங்குத்தாய்ப் போய்க் கீழே விழுந்து கையையும் காலையும் உடைச்சுக்க வேண்டியதுதான்.”
“இல்லேம்மா. என்னால அதுக்குள்ளே நுழைஞ்சு பத்திரமாக் கீழே இறங்க முடியும்.”
“எப்படி…?”
“குழாய்க்குள்ளே இறங்கி, குழாயோட ஒரு பக்கத்துக்கு முதுகையும், இன்னொரு பக்கத்துக்கு ரெண்டு கால்களோட பாதங்களையும் அழுத்தம் கொடுத்து வெச்சுக்கிட்டு அங்குலம் அங்குலமா கீழ்நோக்கி இறங்கணும்.”
“இது சாத்தியமா?”
“சாத்தியம்தாம்மா!”
“சரி… அப்படீன்னா இறங்கு. உள்ளே ஏதாவது விபரீதம்னா பக்கவாட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்துக் குரல் கொடு.”
“சரிங்கம்மா!”
“உள்ளே நிஷா எந்த மாதிரியான ஆயுதத்தைக் கையில் வெச்சுக்கிட்டு, எந்த இடத்துல ஒளிஞ்சுக்கிட்டிருப்பான்னு தெரியாது. நீ உள்ளே எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் சர்வ ஜாக்கிரதையோடு இருக்கணும். முடிஞ்சா அவளை உயிரோடு மடக்கு. இல்லேன்னா தீர்த்துடு!”
“சரிங்கம்மா!”
தலையாட்டிய வால் சந்த், கண்களுக்கு இப்போது நன்கு பழக்கமாகிவிட்ட இருட்டில் மெதுவாய் நடந்துபோய், ஜன்னல் திட்டில் கால் வைத்து சன்ஷேடில் தொற்றி ஏறி, பேராபட் சுவரில் ஊர்ந்து மொட்டைமாடிக்குப் போனான்.
மாடியின் தளம் பூராவும் சொதசொதவென்ற ஈரம். வால் சந்த் ஜாக்கிரதையாய் நடந்து, புகைபோக்கியை நெருங்கி அதன் மேடையின் மேல் தாவி, சிம்னியின் வாயை மூடியிருந்த கான்க்ரீட் சதுரத்தைச் சிரமமாய் நகர்த்தி வைத்துவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.
கரி இருட்டு.
கையை உள்ளேவிட்டு அளைய… விரல்களில் நூலாம்படை பிசுபிசுப்பாய் ஒட்டிக் கொண்டது. எம்பி அதன் வாய்ப் பகுதியில் உட்கார்ந்து, பின் மெதுவாய் உள்ளே நுழைந்தான். புகைபோக்கியின் விளிம்பை இரண்டு கைகளால் பற்றிக் கொண்டு உடலைக் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே நுழைத்து, குழாயின் விட்டத்தை அடைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாய்க் கீழே சரிந்தான்.
பத்து நிமிஷச் சிரமத்துக்குப் பிறகு, பங்களாவின் தரைப்பரப்பை வால் சந்தின் பாதங்கள் உணர்ந்தன.
கீதாம்பரியின் அம்மா பர்வதம் உடம்பு பதைபதைக்க ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து, லேபர் வார்டைத் தொட்டு, இருண்டு போன முகங்களோடு உட்கார்ந்திருந்த மாசிலாமணி, திலகத்துக்கு முன்னால் போய் நின்றாள். மூச்சு இரைத்தது.
“விஷயத்தைக் கேள்விப்பட்டு ஓடி வந்துட்டிருக்கேன். கீதாம்பரிக்குப் பிரசவம் ஆயிடுச்சா?”
“ஆயிடுச்சு. பையன் பொறந்திருக்கான்.”
“மகமாயி…!” என்று கண்களில் நீர் பனிக்க சந்தோஷித்த பர்வதம் திலகத்தின் முகத்திலும், மாசிலாமணியின் முகத்திலும் தெரிந்த கவலைப்பூச்சைப் பார்த்ததும் நெற்றி சுருக்கினாள்.
“ஏன் என்னமோ போல இருக்கீங்க… சுகப் பிரசவம்தானே?”
திலகம் பதில் சொல்ல முடியாமல் புடவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, மாசிலாமணி உடைந்த குரலோடு பர்வதத்தை ஏறிட்டார்.
“சம்பந்தியம்மா… கீதாம்பரிக்குப் பையன் பிறந்த சந்தோஷமான விஷயத்தைக் காட்டிலும் இன்னோரு சந்தோஷமான விஷயம் பம்பாயிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு முந்தி வந்தது. பம்பாய் லாரி விபத்துல இறந்தது ஹரிஹரன் இல்லையாம்… ரமணியும் திவாகரும் போன் பண்ணியிருந்தாங்க.”
“மகமாயி…!” மறுபடியும் பர்வதத்தின் கண்களில் சந்தோஷ நீர் பளபளத்தது.
மாசிலாமணி தொடர்ந்தார்: “ஆனா… இந்தச் சந்தோஷங்களையெல்லாம் நாம அனுபவிக்க முடியாதபடி கீதாம்பரி மோசம் பண்ணிட்டுப் போயிடுவா போலிருக்கு…”
“என்ன சொ… சொல்றீங்க…?”
“கீதாம்பரி இப்போ ஐ.ஸி யூனிட்ல இருக்கா. பல்ஸ்ரேட் வேகமா விழுந்துட்டு வர்றதாத் தகவல். நாலைஞ்சு டாக்டர்ஸ் உள்ளே இருந்து பார்த்துட்டிருக்காங்க…”
பர்வதத்தின் முகத்தில் அதுவரைக்கும் ஒட்டியிருந்த சந்தோஷம் சட்டென்று விலக, கண்கள் திக்கித்து நின்றன.
“என்… ரா… ராஜாத்தீ… ஈ… ஈ… ஈ…!” பர்வதத்தின் வாய் தன்னிச்சையாய்த் திறந்து அலற, வேகமாய் வந்த ஒரு நர்ஸ் அவளுடைய தோளைப் பற்றினாள்.
“இதோ பாருங்கம்மா… அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமே அந்த நாற்காலியில போய் உட்காருங்க! உங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது.”
மாசிலாமணி பர்வதத்தை ஆசுவாசப்படுத்தி உட்கார்த்தி வைத்தார். “கீதாம்பரி நம்மைவிட்டுப் போயிட மாட்டா… தைரியமா இருங்கம்மா! ஸ்டேட்ஸிலிருந்து திரும்பிய டாக்டர் மகாலட்சுமி உடனடியா போன்ல கிடைச்சு, இங்கே வந்து கீதாம்பரியைப் பார்த்துட்டிருக்காங்க.”
“எம் பொண்ணை நான் பார்க்கணுமே!”
“பார்க்கலாம்… பொறுமையா இருங்க! ஹரிஹரன் சாகலே என்கிற சந்தோஷச் செய்தியை நமக்குக் கொடுத்திருக்கிற தெய்வம் கீதாம்பரியை மாத்திரம் கொண்டு போயிடுமா என்ன?”
மாசிலாமணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஸ்டாஃப் நர்ஸ் ஒருத்தி வேகவேகமாய் வந்தாள்.
“சார்!”
“என்னம்மா?”
“டாக்டரம்மா உங்களை உடனே வரச் சொன்னாங்க.”
மாசிலாமணி தவிப்பாய் எழுந்தார்.
“கீதாம்பரியோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கம்மா?”
“எனக்குத் தெரியலை சார். ஐ.ஸி யூனிட்டுக்கு உங்களை உடனே வரச் சொல்லி இன்டர்காம் மூலமாத் தகவல்.”
மாசிலாமணி வராந்தாவில் வேகமாய் நடை போட, பின்னால் பதற்ற உடம்புகளோடு திலகமும் பர்வதமும் தொடர்ந்தார்கள்.
ஒரு நிமிஷ நடை.
நிசப்தமாய் ஐ.ஸி யூனிட் வந்தது.
வெள்ளைப் பெயிண்ட் அடித்த கதவுக்கு வெளியே டாக்டர் மனோரஞ்சிதமும் டாக்டர் மகாலட்சுமியும் நின்றிருந்தார்கள்.
“டா… டாக்டர்!”
மனோரஞ்சிதம் புன்னகைத்தாள்.
“டோன்ட் பி எமோஷனல்! கீதாம்பரி அபாயக் கட்டத்தைத் தாண்டிட்டா. கான்ஷியஸும் இருக்கு.”
“டா… டா… டாக்டர்…” மாசிலாமணியின் மனசுக்குள் ஒரு சந்தோஷச் சூறாவளி. விழிகளைக் கீறிக்கொண்டு வெள்ளமாய்க் கண்ணீர்.
டாக்டர் மகாலட்சுமி பெரிதாய்ப் புன்னகைத்தாள். “உங்க மருமகப் பொண்ணு கண்ணை விழிச்சுப் பார்த்ததுமே ரெண்டு கேள்வி கேட்டா… முதல் கேள்வி ‘என்ன குழந்தை?’ ரெண்டாவது கேள்வி ‘மாமா எங்கே?’ ”
“உள்ளே போய்ப் பார்க்கலாமா டாக்டர்?”
“அதுக்குத்தானே உங்களை வரச்சொல்லியிருக்கு. போய்ப் பாருங்க… ஆனா அதிக நேரம் பேச வேண்டாம்!…”
மாசிலாமணி, திலகம், பர்வதம் மூன்று பேரும் ஐ.ஸி யூனிட்டின் ஏர்கண்டிஷன் ஜில்லிப்புக்குள் நுழைந்தார்கள். சற்று உயரமாய்ப் போட்ட கட்டிலில் கீதாம்பரியின் வெளுத்த முகம் தெரிந்தது. கண்ணிமைகளை மூடியிருந்தாள்.
கட்டிலைச் சூழ்ந்தார்கள்.
மாசிலாமணி குனிந்து குரல் கொடுத்தார்:
“அம்மா… கீதாம்பரி!…”
“……”
“நான் மாமா வந்திருக்கேம்மா…”
கீதாம்பரியின் கண்ணிமைகள் மெள்ளப் பிரிந்தன. கண்ணின் பார்வைகள் சோகையாய் அலைந்து மாசிலாமணியின் முகத்தில் நின்றன. நீர்ப்பசையற்ற வறண்ட உதடுகளை மெள்ள அசைத்தாள்.
“மா… மாமா…”
“என்னம்மா…?”
“கு… குழந்தை பிறந்த… வி… விஷயத்தை ஜெ… ஜெர்மனியில் இ… இருக்கிற… உ… உங்க மகனுக்கு போ… போன் பண்ணிச் சொல்லிட்டீங்களா…?”
இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா, ரமணி, திவாகர் மூன்று பேரும் மெள்ள நடைபோட்டு ரோட்டின் வளைவில் இருந்த ஜோஷியின் பங்களாவை நெருங்கினார்கள். காற்றில் இலவசமாய்ப் பன்னீர்ப் பூக்களின் வாசனை.
காம்பெளண்ட் கேட் வெறுமனே சாத்தப்பட்டிருக்க, மல்ஹோத்ரா தள்ளினார். அது சத்தமில்லாமல் பின்வாங்க… நுழைந்தார்கள்.
போர்டிகோவில் நிறுத்தியிருந்த கண்டஸாவை மஞ்சள் பாலீஷ் துணியால் துடைத்துக் கொண்டிருந்த யூனிஃபார்ம் அணிந்த டிரைவர், இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தினான்.
மல்ஹோத்ரா அவனை நெருங்கிக் கேட்டார்.
“மிஸ்டர் ஜோஷியைப் பார்க்கணும். உள்ளே இருக்காரா?”
“இருக்கார் ஸாப்.”
“ஓய்வா இருக்காரா… பிஸியா இருக்காரா?”
“ஹால்ல ஓய்வாத்தான் இருக்கார்…”
“போய் அனுமதி கேட்டுட்டு வா!”
டிரைவர் தலையாட்டிவிட்டு உள்ளே போய் அந்த நிமிஷம் முடிவதற்குள் வெளியே வந்தான்.
“வரச் சொன்னார் ஸாப்.”
போர்டிகோ படிகள் ஏறி மூன்று பேரும் உள்ளே போக, பரந்த ஹாலில் போட்டிருந்த சோபாவில் ஜோஷி தெரிந்தார். வாயில் பைப். தலைக்கு மேல் புகை. எதிரே இருந்த சோபாவைக் காட்டிக் கொண்டே சொன்னார் ஜோஷி.
“வெல்கம் இன்ஸ்பெக்டர்… அயாம் ஜோஷி.”
“தொந்தரவுக்கு மன்னிக்கணும்! உங்ககிட்ட ஒரு சின்ன விசாரணைக்காக வந்திருக்கேன்.”
மனசுக்குள் பயம் உதைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தார் ஜோஷி. “ப்ளஷர் ஈஸ் மைன்! என்ன விசாரணை?”
மல்ஹோத்ரா சோபாவுக்குச் சாய்ந்தபடியே கேட்டார். “உங்களுக்கு ஹரிஹரன் என்கிற பெயரில் யாரையாவது தெரியுமா மிஸ்டர் ஜோஷி?”
ஜோஷியின் ரத்த ஓட்டம் இடறியது.
(தொடரும்)