Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நீல நிற நிழல்கள் (18)

நீல நிற நிழல்கள் (18)

வ்யமாக எழுந்து கும்பிட்ட அந்த நபருக்கு வயது இரண்டு இருபது இருக்கலாம். முடி கொட்ட ஆரம்பித்துவிட்ட மண்டையில், அஞ்சிய ரோமங்கள் கட்டுப்பாட்டை இழந்து சிலும்பிக் கொண்டு தெரிய, வெளிறிப் போன நிறத்தில் காக்கி பாண்ட், காக்கி சர்ட் அணிந்திருந்தான். முகத்தில் மெலிதாய் ஒரு பயக் கோட்டிங்.

ஒரு லேசர் பார்வையோடு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேட்டார்:

“யார் நீ?”

அவன் தன் மார்புக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டான். “ஸாப்! நான் ஒரு டாக்ஸி டிரைவர். என் பேர் சஹாடே. நேத்து ராத்திரி ஒன்பதரை மணி சுமாருக்கு, இந்த ஓட்டல்ல தங்கியிருந்த ஒருத்தர் எதிரில் இருக்கிற டாக்ஸி ஸ்டாண்டுக்கு வந்தார். அப்போ மழை பெய்ஞ்சிட்டிருந்தது. ஸ்டாண்ட்ல என்னோட டாக்ஸி மட்டும்தான் இருந்தது.”

மல்ஹோத்ரா, ரமணி, திவாகர் மூன்று பேருமே டாக்ஸி டிரைவர் சஹாடேவையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஒரு மிடறு எச்சிலை அவஸ்தையாய் விழுங்கிவிட்டுத் தொடர்ந்தான்.

” ‘மலபார்ஹில்ஸ் வரைக்கும் போய் ஒருத்தரைப் பார்த்துட்டு வரணும். டாக்ஸி வருமா’ன்னு கேட்டார். பெய்யற மழையைப் பார்த்துட்டு நான் மொதல்ல மாட்டேன்னு சொன்னேன். ஆனா, அவர் ரெண்டு மடங்கு மீட்டர் சார்ஜ் தர்றேன்னு சொன்னதும் சவாரிக்கு ஒப்புக்கிட்டேன். மலபார்ஹில்ஸ்ல ஏதோ ஒரு அவென்யூ பேரைச் சொன்னார். இப்போ அது ஞாபகத்துக்கு வரலை ஸாப்.”

“பரவாயில்லை. மேல சொல்லு…”

“டாக்ஸி, மலபார்ஹில்ஸ் கமலா நேரு பார்க்குக்குப் பக்கத்துல போயிட்டிருந்தப்ப திடீர்னு இன்ஜின்ல ஏதோ ப்ராப்ளம். வண்டி நின்னுடுச்சு. இறங்கி ரிப்பேர் பார்த்தேன். வண்டி சரியாகலை. அரைமணி நேரத்துக்கும் மேலே ஆகும் போலத் தோணிச்சு. வண்டியில் வந்த சார்கிட்ட நிலைமையைச் சொன்னேன். அதுக்கு அவர் ‘பரவாயில்லை, வண்டியை இங்கேயே நிறுத்தி ரிப்பேர் பார்த்து வை! நான் பார்க்க வேண்டிய நபர் பக்கத்துலதான் இருப்பார். போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்’னு சொன்னார். நான் தயக்கமா அவரைப் பார்த்ததும் அவர் மெள்ளச் சிரித்தார். ‘என்ன… என் மேல நம்பிக்கையில்லையா? ஓட்டல் சில்வர் ஸாண்ட், ரூம் நெம்பர் 527இல்தான் தங்கியிருக்கேன். என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லேன்னா பணத்தை வேணும்னாலும் குடுத்துட்டுப் போறேன்’னு சொன்னார். அவரைப் பணம் வாங்கிக்காமே போய்ட்டு வரச் சொன்னேன். அவர் லேசா தூறிட்டிருந்த மழையில தலைக்கு கர்ச்சீப்பைப் போட்டுக்கிட்டுப் பார்க்குக்குப் பக்கவாட்டில இருந்த ரோட்டுக்குள்ளே போனாரு…”

சஹாடே மறுபடியும் எச்சிலை விழுங்கிவிட்டுத் தொடர்ந்தான்:

“அவர் போனப்புறம் நான் டாக்ஸியைச் சரி பார்த்து வெச்சுக்கிட்டு வெயிட் பண்ண ஆரம்பிச்சேன். போனவர் போனவர்தான். ஆள் திரும்பியே வரலை. ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு நான் தாதர்ல இருக்கிற என் வீட்டுக்குப் போயிட்டேன். நாளைக்கு ஓட்டலுக்குப் போய் டாக்ஸி சார்ஜை கலெக்ட் பண்ணிக்கலாம்கிற எண்ணத்துல புறப்பட்டு வந்துட்டேன். ஆனா, காலையில் என்னால எழுந்திரிக்க முடியலை. நேத்து மழையில நனைஞ்சுக்கிட்டே ரிப்பேர் பார்த்ததினால காய்ச்சல் வந்து சாயந்திரம் வரைக்கும் சிரமப்பட்டேன். மாத்திரை சாப்பிட்டுக் காய்ச்சல் கொஞ்சம் குறைஞ்சதும் பார்ட்டிகிட்டே டாக்ஸி சார்ஜ் வாங்கிட்டுப் போலாம்ன்னு ஓட்டலுக்கு வந்து கெளண்ட்டர்ல இருக்கிற அந்தப் பொண்ணுகிட்டே விசாரிச்சேன். உடனே அந்தப் பொண்ணு, ‘ரூம் நெம்பர் 527-இல் தங்கியிருந்தவரைக் காணோம்னு போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க… இன்னும் கொஞ்சநேரத்துல போலீஸ் இங்கே வரும். அவர்கிட்ட நேத்து நடந்ததை நீ சொல்ல வேண்டியிருக்கும். போய் அப்படி உட்காரு’ன்னு சொல்லி இங்கேயே இருக்க வெச்சுட்டாங்க.”

ரமணி, திவாகர் இரண்டு பேரையும் மல்ஹோத்ரா ஏறிட்டபடி கேட்டார்:

“மலபார்ஹில்ஸில் உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?”

“இல்ல சார்!”

“கண்டிப்பா இல்லே சார்!”

“உங்க பிசினஸோடு சம்பந்தப்பட்டவங்க யாராவது…?”

ரமணி தீர்க்கமாய்த் தலையாட்டினான்.

“அப்படி யாரும் இல்ல சார். அது பத்தி எனக்குச் சந்தேகமே கிடையாது.”

மீண்டும் மல்ஹோத்ராவின் பார்வை டாக்ஸி டிரைவரிடம் திரும்பியது.

“உன் பேர் என்ன சொன்னே?”

“சஹாடே.”

“உன் வண்டில வந்தவர் டாக்ஸியை விட்டு இறங்கி கமலா நேரு பார்க்குக்குப் பக்கவாட்டுல இருக்கிற ரோட்டுக்குப் போனார்னு சொன்னே… இல்லையா?”

“ஆமா ஸாப்!”

“அந்த ரோடு பேர் என்ன?”

“ரோட்டுக்குப் பேர் இல்லை ஸாப். செவன்த் க்ராஸ்னு போட்டிருந்தது.”

“எவ்வளவு நேரம் வெயிட்டிங்ல இருந்தே?”

“ரெண்டு மணி நேரம்.”

“அதாவது பன்னிரண்டு மணி வரைக்கும்?”

“ஆமா ஸாப்!”

“காத்திருந்து பார்த்துட்டு வீட்டுக்குப் போயிட்டே?”

“ஆமா ஸாப்!”

“வீட்டுக்குப் போறதுக்கு முந்தி அந்த செவன்த் க்ராஸ் ரோட்டுக்குள்ளே போய் அவரைத் தேடினியா?”

“இல்ல ஸாப்!”

“ஏன்…?”

“மழை அதிகமா பெய்ய ஆரம்பிச்சது. பசியும் குளிரும் வேற… என்னால தாங்க முடியலை! டாக்ஸி சார்ஜை நாளைக்கு வாங்கிக்கலாம்கிற நம்பிக்கையில் வீட்டுக்கு வந்துட்டேன்.”

“நல்லா யோசனை பண்ணிப் பாரு… உன் டாக்ஸியில அவர் ஏறும்போது, போகவேண்டிய இடத்தோட அட்ரஸைச் சொன்னாரா?”

“சரியான அட்ரஸைச் சொல்லலை ஸாப். ஒரு அவென்யூ பேரைச் சொல்லிட்டுக் கூடவே மலபார்ஹில்ஸ்னு சொன்னார். அவ்வளவுதான்.”

“சரி… வந்து ஜீப்ல ஏறு!”

“ஸாப்…”

“பயப்படாதே… இப்போ மலபார்ஹில்ஸ் போறோம். உன்னோட டாக்ஸி ரிப்பேராகி நின்ன இடத்தையும், அவர் இறங்கிப் போன ரோட்டையும் நீ காட்டப் போறே அவ்வளவுதான்..!”

“ஸாப்… நான் புள்ளகுட்டிக்காரன். பாசஞ்சர் காணாமே போன இந்தக் கேஸ்ல என்னைச் சம்பந்தப்படுத்தி உள்ளே தள்ளிடாதிங்க…!”

மல்ஹோத்ரா மெள்ளப் புன்னகைத்து, டாக்ஸி டிரைவரின் தோளைத் தட்டினார்.

“போலீஸாலே உனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. வா… வந்து இடத்தைக் காட்டு! மத்ததை நாங்க பார்த்துக்கறோம்!”

வால் சந்த், டாக்டர் சதுர்வேதியின் பங்களாவுக்குள் நுழைந்து வலது பக்கவாட்டுக்குப் போய், காற்றுக்குக் ‘க்ரீச் க்ரீச்’ என்று அசைந்து கொண்டிருந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று, மெதுவாய்ப் பார்வையை அவிழ்த்து உள்ளே அனுப்பினான்.

இருட்டுக்கு எதுவுமே தட்டுப்பட மறுத்தது.

மெள்ளக் குரல் கொடுத்தான்:

“டாக்டர் ஸாப்!…”

உள்ளே மெளனம்.

“டாக்டர் ஸாப்!…” வால் சந்த் குரலை உயர்த்திக் கத்தினான்.

பதிலில்லை.

எல்லாத் திசைகளிலும் ஆழ்கடல் அமைதி. மழை நீர் மட்டும் எங்கோ ‘லொட் லொட்’டென்று சொட்டிக் கொண்டிருந்தது.

வால் சந்த் சுற்றம்முற்றும் பார்த்துவிட்டு, க்ரில் கம்பிகளைப் பற்றிக் கொண்டு ஜன்னல் திட்டின்மேல் ஏறி நின்று, பங்களாவுக்குள்ளே பார்வையை எட்டின வரைக்கும் அனுப்பினான்.

ஆரம்பத்தில் மசமசப்பாய்த் தெரிந்தன பொருட்களெல்லாம். நிமிஷ நேரப் பார்வையை எட்டின வரைக்கும் அனுப்பினான்.

கண்ணாடி பொருத்தப்பட்ட பீரோக்கள், நீளமான மேஜைகள், அலமாரிகள், உயரமான ஸ்டூல்கள் என்று வால் சந்தின் பார்வை தத்திக்கொண்டே போயிற்று.

‘டாக்டர் எங்கே…?’

“டாக்டர் ஸாப்!…”

உள்ளே செதுக்கிய நிசப்தம்.

‘என்ன செய்யலாம்…? பங்களாவின் பின்பக்கத்துக்குப் போய் அங்கேயிருக்கிற ஜன்னலில் குரல் கொடுத்துப் பார்க்கலாமா?’

யோசிப்பைச் செயல்படுத்துவதற்காகக் கீழே இறங்க முயன்ற வால் சந்தின் பார்வை சட்டென்று சிக்கியது.

‘உள்ளே அந்த மர பீரோவுக்குப் பக்கத்தில், ஏதோ கறுப்பாய்க் குவிந்து கிடக்கிறதே… அது என்ன..?’

அவன் பார்வை உன்னிப்பாகியது.

‘யாரோ குப்புற விழுந்து கிடக்கிறார்கள்!’

‘அது… யார்… டாக்டரா…? இல்லை வேறு யாராவதா?’ வால் சந்தின் முதுகுத் தண்டுவடத்தில் பனிக்கட்டி ஒன்று ஸ்லோமோஷனில் வழுக்க, ஜன்னல் திட்டிலிருந்து கீழே குதித்து, மழை நீரைச் ‘ச்சொத் ச்சொத்’ என்று மிதித்துக்கொண்டு காம்பெளண்ட் கேட்டை நோக்கி ஓடினான்.

சாத்தியிருந்த கேட்டின் மறுபக்கத்தில் காரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஆர்யா, வால் சந்த் வேக வேகமாய் வருவதைப் பார்த்ததும் காரினின்றும் இறங்கி அவனைச் சமீபித்தாள்.

“என்ன வால் சந்த்?”

“அம்மா! டாக்டர்… டாக்டர்னு நான் கூப்பிட்ட குரலுக்கு உள்ளேயிருந்து எந்தப் பதிலும் இல்லை… ஆனா உள்ளேயிருக்கிற பீரோவுக்குப் பக்கத்துல யாரோ விழுந்து கிடக்கிற மாதிரி தெரியுது.”

ஆர்யாவின் உடம்பில் இருந்த வியர்வைச் சுரப்பிகள் அத்தனையும் ஓவர் டைம் எடுத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தன.

“வி… வி… விழுந்து கிடக்கிறது யாரு… டாக்டரா?”

“தெரியல்லேம்மா! உள்ளுக்குள்ளே ஒரே இருட்டாயிருக்கு…”

“வால் சந்த்… இந்த கேட்டோட உள்பக்கப் பூட்டைத் திறக்க முடியுமான்னு பாரு!”

“முடியாதம்மா! பூட்டு பெரிசா இருக்கு உடைக்கவும் முடியாது…”

“பங்களாவுக்குள்ளே ஏதோ நடந்திருக்கு. நான் காரை லாக் பண்ணிட்டு உள்ளே வர்றேன்.”

“எப்படீம்மா வருவீங்க?”

“சுவரேறிக் குதிச்சுத்தான்…” சொன்ன ஆர்யா காருக்குப் போய், நான்கு கதவுகளையும் அறைந்து சாத்தி லாக் செய்துகொண்டு காம்பெளண்ட் சுவருக்கு வந்தாள்.

ரோட்டோரமாய்க் கிடந்த ஒரு பெரிய கல்லைச் சிரமமாய் உருட்டிச் சுவருக்குப் பக்கத்தில் போட்டு, அதன் உச்சியைப் பிடித்துக் கொண்டு எம்பினாள். வலது முழங்கையில் ஏற்பட்ட ஒரு சின்ன ரத்தச் சிராய்ப்போடு மறுபக்கம் குதித்தாள். மழைச் சேறு சிதறி முகத்தில் தெறித்ததையும் பொருட்படுத்தாமல் வால் சந்தோடு நடந்தாள்.

பதற்றமான நடை.

ஜன்னல் வந்தது.

“திட்டு மேல ஏறி இடதுகை பக்கமா இருக்கிற பீரோகிட்ட பாருங்கம்மா!”

ஆர்யா ஏறிப் பார்த்தாள்.

மூச்சடைத்துக் கொண்டது.

‘விழுந்து கிடப்பது யார்… டாக்டரா… இல்லை வேறு யாராவதா…?’

“வால் சந்த்!”

“அம்மா…”

“உன்கிட்ட தீப்பெட்டி இருக்கா?”

“இருக்கும்மா!”

“ரெண்டடி மூணடி நீளத்துக்கு ஏதாவது குச்சி கிடைக்குமான்னு பாரு…”

“எதுக்கம்மா?”

“கேள்வி கேட்காதே! போய்க் கொண்டா…”

வால் சந்த் மசமசப்பான அந்த இருட்டில் நடந்து போய் ஒரு மரக்கிளையை ஒடித்து மூன்றடி நீளத்துக்கு, கட்டை விரல் பருமனுக்குக் குச்சி ஒன்றைக் கொண்டு வந்தான்.

ஆர்யா அந்தக் குச்சியை வாங்கி, தன் இடுப்பில் வைத்திருந்த கர்ச்சீப்பை எடுத்து அதன் நுனியில் கட்டினாள்.

“வால் சந்த்… ஒரு தீக்குச்சியை உரசி இதைப் பற்ற வை!…”

அவன் பற்ற வைக்க, ஒரு இன்ஸ்டண்ட் தீப்பந்தம் உருவாகி அங்கிருந்த இருட்டை விரட்டியது.

அந்த வெளிச்சத்தை அப்படியே ஜன்னலின் க்ரில் கம்பி இடைவெளி வழியே உள்ளே கொண்டு போனாள் ஆர்யா.

வெளிச்சம் உள்ளுக்குள் நிரம்ப, பீரோவுக்குப் பக்கத்தில் குப்புற விழுந்து கிடந்த உருவம் சட்டென்று புலப்பட்டது.

டாக்டர் சதுர்வேதி!

குப்புற விழுந்து கிடந்த அவருடைய வழுக்கை மண்டையில் ஒரு ரத்த அபிஷேகம் நடந்து உறைந்து போயிருந்தது.

கை, கால்கள் ஓர் அவஸ்தையான கோணத்தில் மடங்கியிருக்க, டார்ச் லைட் கண்ணாடி சில்லுச் சில்லாய் உடைந்து சிதறியிருந்தது.

ஆர்யாவின் அடிவயிற்றில் ஒரு பிரளயம் கண்விழித்தது.

லேபர் அறையிலிருந்து வெளிப்பட்ட டாக்டர் மனோரஞ்சிதத்தின் முகம் ஒரு கவலைப் படுதாவை அணிந்திருக்க, மாசிலாமணியும் திலகமும் பதற்றமாய் நெருங்கினார்கள்.

“டா… டாக்டர்…”

“உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான்…”

“செளடேஸ்வரீ… ஈ… ஈ… ஈ… ஈ…!” திலகம் கைகளைக் குவித்துக் கண்களை மூட, மாசிலாமணி டாக்டரம்மாவைக் குரல் நடுங்க ஏறிட்டார்.

“டா… டாக்டர்…! கீ… கீதாம்பரிக்கு…”

“ஸாரி டு ஸே திஸ்… எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம். ஷி ஈஸ் கெளண்ட்டிங் ஹர் மினிட்ஸ்.”

“டா… டாக்டர்!…”

“ரெண்டு உயிரையுமே காப்பாத்தப் பெரிய அளவில் முயற்சி எடுத்துக்கிட்டேன். இருந்தும் விதியோட பார்வை வேறுவிதமா இருக்கும்போது நாம என்ன பண்ணமுடியும்? வீ ஆர் ஹெல்ப்லஸ்…”

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top