சிங்கப்பூர்,
புதன்கிழமையன்று தமிழகத்தை போலவே சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, மேளங்கள் வாசிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் இந்தியர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அவர்களை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்தது.
இதற்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து, அந்நாட்டு சட்டத்துறை மந்திரி கே.சண்முகம், சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘சிங்கப்பூரில் பாத யாத்திரைகளுக்கு அனுமதியில்லை என்பதை பலரும் அறிவதில்லை. 1964-ல் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் திமிதி பண்டிகைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மதத்திற்கும் இங்கே (சிங்கப்பூரில்) இப்படியொரு சலுகை வழங்கப்பட்டதில்லை. ஆனால், பாத யாத்திரையின் போது மேளங்கள் வாசிக்க அனுமதி கிடையாது. இப்படியிருக்க, போலீசாரின் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்ல சிந்தனையுள்ள சிங்கப்பூர் மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். போலீசார் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எவ்வித காரணமும் இன்றி அவர்களை தாக்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு சிங்கப்பூர் மக்கள் ஆதரவளிப்பதை கைவிட வேண்டும்.’ என்றார்.