Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » பூமிக்கு அருகே வந்த சிறுகோளின் நிலவு

பூமிக்கு அருகே வந்த சிறுகோளின் நிலவு

எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கிற விண்வெளியில் புதிர்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லை. அதனால் விண்வெளி தொடர்பான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த வாரம், பூமிக்கு அருகே வந்த ஒரு சிறிய கோளுக்கு தனி நிலவு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஏறக்குறைய ஒரு பெரிய சொகுசுக்கப்பல் அளவுக்கு இருக்கும் இந்த சிறுகோளை நாசாவின் ரேடார்கள் படம் பிடித்திருந்தன. அவற்றை ஆராய்ந்தபோது, அந்தச் சிறுகோளின் வெளிவட்டப்பாதையில் ஒரு நிலவு சுற்றிவருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவு சுமார் ஏழு மீட்டர் அகலம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 12 லட்சம் கிலோமீட்டர்கள் தொலைவில் இந்தச் சிறுகோள் சென்றபோது இரவு வானத்தில் இது தெளிவாகத் தெரிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

பூமிக்கும் நிலவுக்கும் இடையில் இருக்கும் தூரத்தைவிட இந்த தூரம் மூன்று மடங்கு அதிகமானதாகும்.

200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சிறுகோள் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு இன்னொருமுறை வேறு எந்தச் சிறுகோளும் பூமிக்கு இவ்வளவு அருகில் வராது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் இருக்கும் சிறுகோள்களில் சுமார் 16 சதவீத சிறுகோள்களுக்கு தனித்தனி நிலவுகள் இருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகின்றனர்.

இதுபோன்ற சிறுகோள்கள் அல்லது பெரிய விண்கற்கள் பூமிக்கு அருகில் வரும்போது பெரும் பரபரப்பு ஏற்படும். ஆனால் அவற்றால், வரும் சில ஆண்டுகளுக்கு ஆபத்தில்லை என்பது நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும் செய்திதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top