பிரச்சினைக்குரிய கடல் எல்லையில் ஏற்பட்ட மோதலில், வட கொரியாவும், தென் கொரியாவும் துப்பாக்கிச்சூடு நடத்தின.
எதிரி நாடுகள்
கொரிய தீபகற்பத்தில் 1953–ஆம் ஆண்டு நடந்து முடிந்த போருக்கு பின்னர், வடகொரியாவும், தென் கொரியாவும் பகைமை கொள்ள தொடங்கின. இரு தரப்பிலும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது.
சமீபத்தில் தென் கொரியாவும், வடகொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பயிற்சியின்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்போவதாக மிரட்டலும் விடுத்தது.
சமரசப் பேச்சு
ஆனால் தென்கொரியாவில் இன்சியோன் நகரில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரு தரப்புக்கும் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்தப் போட்டிக்கு வடகொரியா தடகள வீரர்களை அனுப்பியது. நிறைவு விழாவில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் யுன்னுக்கு நெருக்கமான மூத்த அதிகாரிகள் ஹவாங் பியாங் சோ, சோ ரயாங் ஹே, கிம் யாங் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தென்கொரியாவில் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த சமரசப் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர்வது எனவும் முடிவு செய்தனர். இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வரவேற்றார்.
மோதல்
இவ்விரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக கடல் எல்லையில் எயான்பியாங் தீவின் அருகே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில், பிரச்சினைக்குரிய பகுதியில், வடகொரியாவின் ரோந்துப்படகு ஒன்று நேற்று நுழைந்து விட்டது.
உடனே தென்கொரிய கடற்படை கப்பலில் இருந்து அந்தப் படகை எச்சரிக்கும் விதத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு வடகொரிய ரோந்துப்படகில் இருந்தும் எச்சரிக்கும் விதத்தில் சுடப்பட்டது.
உயிர்ச்சேதம் இல்லை
இரு தரப்பிலுமே, எதிர் எதிர் தரப்பினரை குறி வைத்து சுட வில்லை என தகவல்கள் கூறுகின்றன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதே பகுதியில் கடந்த 2010–ம் ஆண்டு, வடகொரியா நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.