அப்படி, போலந்து நாட்டின் அவுஷ்விட்சிலும் ஜெர்மானிய நாஜிக்கள் ஒரு கொலை முகாமை ஏற்படுத்தினர். 1940-1945 காலகட்டத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் யூதர்கள்.
இங்கே உயிருடன் எஞ்சியிருந்தவர்களை சோவியத் படையினர் விடுவித்தனர். அந்த நிகழ்வின் 70-வது ஆண்டு நிறைவு தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, முகாமில் இருந்து உயிர் தப்பியவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நினைவஞ்சலியின் தொடக்கத்தில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து பிரார்த்தனை ஒன்றும் நடந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், போர்க்காலத்தில் நாஜி ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட நேச நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆனால் ரஷ்ய அதிபர் புதின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அவரது அலுவலகத் தலைமை அதிகாரி கலந்து கொண்டார்.
சமீபத்தில் போலந்து வெளியுறவு அமைச்சர் கிரேகோர்ஸ் ஷெட்டினா, அவுஷ்விட்ஸ் முகாமை சோவியத் படையினர் விடுவிக்கவில்லை, உக்ரேனியப் படைகளே விடுவித்தனர் என்று கூறியது ரஷ்யாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த கால வலிகளை நினைவுகூர்வதிலும் இதுபோல சர்ச்சைகள்!