Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நீல நிற நிழல்கள் (10)

நீல நிற நிழல்கள் (10)

ம்பாய் சில்வர்ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ரமணியைப் பார்த்துக் கொண்டே டெலிபோனில் கீதாம்பரியோடு பேசினான்.

“மிஸஸ் கீதாம்பரி ஹரிஹரன் ப்ளீஸ்!”

“ஹோல்டிங்”

“மேடம்! உங்க கணவர் உங்களோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறார். இணைப்பு தரட்டுமா?”

“ப்ளீஸ்…”

ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் ரிஸீவரின் வாயைத் தன் இடது கை விரலால் பொத்திக் கொண்டு, கவலை முகத்தோடு ஏறிட்டான்.

“சார்! நீங்க சொன்னது போலவே மிஸஸ் கீதாம்பரியிடம் பேசிவிட்டேன். அவர்கள் லைனில் இருக்கிறார்கள்… பேசுங்கள்…”

“தாங்க்யூ வெரி மச்!” ரமணி சற்றே நடுக்கமாக ரிஸீவரை வாங்கி ஹரிஹரனைப் போல் பேச ஆரம்பித்தான்.

“கீ… கீ… கீதாம்பரி…!”

கீதாம்பரி மறுமுனையில் வெடித்தாள். “இப்ப மணி எவ்வளவு தெரியுமா…? ஏழரை. அஞ்சு மணிக்கே போன் பண்றதாக் காலையில சொன்னீங்க…”

“லைன் கிடைக்கலை… அஞ்சு மணியிலிருந்து உனக்கு ட்ரை பண்றேன்.”

“பொய்யி… பொய்யி…”

“அட… நிஜமாத்தான்! பம்பாய் டெலிபோன் பகல் நேரத்துல எப்பவுமே பிஸிதான்.”

“சரி… நம்பறேன்! ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு ஃப்ளைட் எத்தனை மணிக்கு?”

“ஃப்ளைட்ல ஏதோ மெக்கானிக்கல் ப்ராப்ளம். கடைசியா கிடைச்ச தகவல்படி ராத்திரி ஒன்பது மணிக்கு ஃப்ளைட்.”

“அப்படீன்னா… இன்னும் அரைமணி நேரத்துல நீங்க ஏர்போர்ட்டுக்கு கிளம்பியாகணும்.”

“ஆமா… லக்கேஜெல்லாம் பேக் பண்ணியாச்சு. ஓட்டல் பில் ரெடி ஆயிட்டிருக்கு.”

“இப்ப காய்ச்சலும் ஜலதோஷமும் எப்படியிருக்கு?”

ரமணி வரவழைத்துக் கொண்ட ஒரு செயற்கை உற்சாகத்தோடு சொன்னான்.

“போயே போச்சு!…”

“ஆமா… காலையில போன் பண்ணின போதும் சரி… இப்ப போன் பண்ணிப் பேசிட்டிருக்கிற போதும் சரி… ஒரு முக்கியமான
நபரைப் பத்தி நீங்க விசாரிக்கவே இல்லையே…?”

ரமணி திகைத்தான்.

“மு… மு… முக்கியமான நபரா…?”

“ஆமா!”

“யா… யாரு?”

“இப்படி நீங்க யார்னு கேட்டதுக்கே ஐ.பி.ஸி-படி என்ன தண்டனை வேணும்னாலும் தரலாம். உங்களுக்கு அரை நிமிஷம் அவகாசம் தர்றேன். அதுக்குள்ளே அந்த முக்கியமான நபர் யார்னு நீங்க சொல்லிடணும்.”

“அம்மாவா?”

“நோ!”

“அப்பா?”

“இல்லை.”

“உங்கம்மாவா?”

“பம்பாய் போனதும் ஏன் இப்படி மண்டாயிட்டீங்க?”

“நீ யாரைச் சொல்றேன்னு புரியலை கீதாம்பரி!”

“நீங்க மட்டும் என் பக்கத்துல இருந்திருந்தீங்கன்னா உங்க காதை அப்படியே திருகி எடுத்திருப்பேன்.”

ரமணிக்குக் கீதாம்பரியின் கொஞ்சலும் ஊடலும் பெரிய அவஸ்தையாக இருந்தது. நெற்றியில் வியர்வை, சரம் கட்டியது.

“என்ன பேச்சையே காணோம்?”

“வந்து… வந்து…”

“அந்த முக்கியமான வி.வி.ஐ.பி யார்னு இன்னும் உங்க ஞாபகத்துக்கு வரலையா?”

“வ… வ… வரலை.”

“சரி… வயித்துல ரிஸீவரை வைக்கிறேன். உங்க பிள்ளைகிட்ட பேசுங்க!”

ரமணியின் கண்களை நீர் வலியோடு கீறியது. ‘கடவுளே! இது என்ன கொடுமை!’

கீதாம்பரி கோபம் குறையாமல் பேசிக் கொண்டிருந்தாள். “உங்க புள்ளையை நீங்க விசாரிக்கலைன்னு அவனுக்கு மகாக் கோபம். உதைன்னா உதை சரியா உதை! பாருங்க… இப்பக்கூட உதைக்கிறான்.”

“அ… அப்படியா… ஊருக்கு வந்ததும் அவனை நான் பேசிக்கிறேன்…” கஷ்டப்பட்டுச் சிரித்த ரமணி மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவசரக் குரலில் சொன்னான்.

“கீதாம்பரி! ஏர்போர்ட் போக எனக்கு பஸ் வந்தாச்சு, கிளம்பட்டுமா?”

“ஃப்ராங்ஃபர்ட் போய்ச் சேர்ந்ததுமே உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் சரி… முதல் காரியமா எனக்கு போன் பண்ணனும்!”

“சரி!”

“இப்ப சரின்னு சொல்லிட்டு அப்புறம் ஸாரி சொல்லக் கூடாது! நாளைக்குக் காலையில பத்து மணிக்குள்ளே உங்க போனை எதிர்பார்ப்பேன்.”

“சரி! ரிஸீவரை வெச்சுடட்டுமா?”

“ஏன் இப்படிப் பறக்கறீங்க?… எனக்குத் தராம போனாலும் உங்க மகனுக்காவது கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டு ரிஸீவரை வெச்சுடுங்க.”

“எ… எதைக் கொ… கொடுக்கறது?”

“சரியாப் போச்சு! பம்பாய் போனதிலிருந்தே நீங்க அவுட் ஆஃப் ஆர்டர். உங்க பிஸினஸ் டூரை முடிச்சுக்கிட்டு ஊருக்கு வாங்க… சாவகாசமாப் பேசிக்கலாம்.”

“குட்நைட் கீதாம்பரி!”

“ம்… ம்…”

ரமணி ரிஸீவரை வைத்துவிட்டுக் கர்சீப்பை எடுத்து ஈரமான கண்களை ஒற்றிக்கொண்டான். ரிசப்ஷனிஸ்ட் இளைஞனை ஏறிட்டான். “உங்கள் உதவிக்கு நன்றி!”

“சார்! இந்த நாடகத்தை எத்தனை நாளைக்குத்தான் போட முடியும்?”

“என் அண்ணிக்குக் குழந்தை பிறக்கிற வரைக்கும்.”

“உங்களோடு வந்த திவாகர் கீதாம்பரியின் பிரதரா?”

“ஆமாம்.”

“இப்போது அவர் எங்கே?”

“அஸ்தியைச் சேகரம் பண்ண மின்சார மயானத்துக்குச் சென்றிருக்கிறார். நாளைக்குக் காலை மெட்ராஸ் ஃப்ளைட்டில் நாங்கள் புறப்படுகிறோம். இரண்டு டிக்கெட்களுக்கு ஏற்பாடு செய்து விடுங்கள்!”

கவலை தோய்ந்த கண்களோடு ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் தலையாட்டிக் கொண்டிருக்கும்போது ஓட்டலின் போர்டிகோவில் அந்தப் போலீஸ் ஜீப் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா பான் மெல்கிற வாயோடு கீழே குதித்து, வேகமாக ரமணியை நோக்கி வந்தார்.

“மிஸ்டர் ரமணி, ஒரு நிமிஷம் இப்படி வாங்க!”

ரமணி குழப்பமாக எழுந்து போனான்.

“என்ன சார்?”

மல்ஹோத்ரா ஹாலின் ஓரத்துக்குக் கூட்டிப்போய் நிறுத்திக் கொண்டு பான் வாசனை முகத்தில் மோதக் கேட்டார்.

“உங்களுக்குக் கொடுத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் காப்பியைப் படிச்சுப் பார்த்தீங்களா?”

“இல்ல சார்!”

“படிச்சுப் பாருங்க… ஒரு உண்மை புரியும்.”

“என்ன உண்மை சார்?”

“லாரி விபத்தில் இறந்துபோனது உங்க பிரதர் ஹரிஹரன் இல்லை என்கிற உண்மை.”

*******

லாபரட்டரியின் இருட்டுக்குள் டார்ச் உமிழ்ந்த வெளிச்சத்தில் ஷெல்ஃப் திரைச்சீலைக்குக் கீழே தெரிந்த அந்த ஒரு ஜோடிக் கால்களையே அதிர்ச்சியாகச் சில விநாடிகள் பார்த்த சதுர்வேதி, கையிலிருந்த ரிவால்வரைச் சர்வஜாக்கிரதையாக்கிக் கொண்டு குரல் கொடுத்தார்:

“கம் அவுட்!”

அந்தக் கால்கள் அப்படியே நின்றிருந்தன. இந்தியில் கத்தினார். “வா வெளியே!”

நிசப்தம்.

சதுர்வேதி இரைந்தார்.

“இப்போ வெளியே வரப்போறியா இல்லையா?”

திரைச்சீலை மெள்ள அசைய, வியர்த்த முகமும் மருண்ட விழிகளுமாக ஓர் இளைஞன் வெளிப்பட்டான். கல்லூரி மாணவனைப் போன்ற தோற்றம். பிடரி வழிய கேசம். பேகி பாண்ட் ஷர்ட், மணிக்கட்டில் செப்புக்காப்பு.

இந்தியில் சேவித்தான்.

“மாப் கரோ ஸாப்!”

“வா இப்படி!…” ரிவால்வரை அசைத்துக் கூப்பிட்டார் சதுர்வேதி. அவன் தயங்கித் தயங்கி வந்தான்.

“உன் பேர் என்ன?”

“விட்டல்.”

“எதுக்காக இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சே?”

“அது… வந்து… வந்து…” அவனுடைய தொண்டைக் குழிக்குள் ஆதாம் ஆப்பிள் அவஸ்தையாக மேலேறி இறங்கியது.

“ம்… சொல்லு!”

“நிஷா உள்ளே இருக்காளா இல்லையான்னு பார்க்க வந்தேன்.”

சதுர்வேதியும் ஆர்யாவும் திகைப்பாக ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். பின் விட்டலை ஏறிட்டார் சதுர்வேதி.

“நிஷா இங்கே வந்தது உனக்கு எப்படித் தெரியும்?”

“அது… அது… வந்து… கடந்த ஒரு வார காலமா அவ எங்கே வெளியே போனாலும் பின்தொடர்ந்து போறதுதான் என்னோட வேலை…”

“எதுக்காக?”

“அ… அவளை நான் விரும்பறேன்.”

“அவ உன்னை விரும்பறாளா?”

“இல்லை! விடாப்பிடியா அவ போற இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து போய் அவ காதலைச் சம்பாதிச்சுடலாம்னு நினைச்சேன். இன்னிக்கும் அவ வீட்டை விட்டுக் கிளம்பினதும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.”

“நீ பின் தொடர்ந்து வந்தது அவளுக்குத் தெரியுமா?”

“தெரியாது. அவ இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் நான் ரோட்ல இருக்கிற ஒரு பழைய தகரக் கொட்டகைக்கு கீழே போய் நின்னுக்கிட்டேன். நிஷாவுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன். ரொம்ப நேரமாகியும் நிஷா வெளியே வராததனால…”

“உள்ளே வந்தவளைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுக்காக நீ உள்ளே வந்துட்டே…?”

“ஆமா!”

விட்டல் கலக்கமாகத் தலையசைத்தான்.

“கேட் பூட்டியிருந்ததே… எப்படி உள்ளே நுழைஞ்சே?”

“ஒரு கார் உள்ளே வர்றதுக்காக நீங்க கேட்டைத் திறந்ததும்… காருக்குப் பின்னாடியே நானும் வந்துட்டேன்.”

சதுர்வேதி ஆர்யாவைப் பார்த்துப் புன்னகைத்தார். “காதல் வேகத்தைப் பார்த்தியா?”

விட்டல் தன் வியர்த்த முகத்தை வழித்துக்கொண்டு சேவித்தான். “நான் இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சது தப்புதான். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க! நான் நிஷாவைப் பார்க்கத்தான் வந்தேன்… திருட வரலை.”

சதுர்வேதி மெள்ளச் சிரித்தார். “நீ திருட வந்திருந்தா இந்நேரம் உன்னைச் சந்தோஷமா வெளியே விட்டிருப்போம். ஆனா, நீ நிஷாவைத் தேடிக்கிட்டு வந்துட்டே. எங்களைப் பொறுத்தவரைக்கும் அது பெரிய தப்பு.”

“ச… சார்…!”

“நிஷா இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சதை நீ பார்த்தே இல்லையா?”

“ஆ… ஆமா…”

“அவ இந்த வீட்டை விட்டு வெளியே போகலைன்னும் உனக்குத் தெரியும் இல்லையா?”

“ஆ… ஆமா சார்…”

“இந்த உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்ட நீ, இனிமே இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது.”

“ச… சார்…!” விட்டல் திகில் உறைந்த பார்வை பார்க்க, ஆர்யா சிரித்தாள்.

“இன்னிக்கு இந்த லாபரட்டரிக்குக் கிடைச்சிருக்கிற ரெண்டாவது பரிசோதனை எலி நீ!”

கண்ணாடி ஜன்னல்களில் மின்னல் வெளிச்சம் அவசர முத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, வெளியே மழை பம்பாயைப் புரட்டி எடுக்கும் சத்தம் பெரிதாகக் கேட்டது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top