“வா நிஷா! வெல்கம்!” என்று சிரித்துக்கொண்டே புகை கசியும் வாயோடு சொன்ன சதுர்வேதியைப் பார்த்து உடம்பின் முக்கியப் பாகங்களில் உடைந்தாள் நிஷா. திக்கித்த விழிகளில் பயம் தத்தளித்தது.
சதுர்வேதியின் புன்னகை பெரிதாயிற்று. “உன்னை அப்பவே போகச் சொல்லிட்டேனே?”
“டா… டாக்டர்… அது… வந்து….”
“பத்திரிக்கை ரிப்போர்ட்டர் வேலை மாத்திரம் இல்லாமல் பார்ட் டைமா துப்பறியும் வேலை கூடப் பார்க்கிறே போலிருக்கு?…”
“டா… டாக்டர்… வெளியே மழை அதிகமாயிடுச்சு… அதான்…”
“ஒண்டிக்கலாம்னு உள்ளே வந்துட்டியாக்கும்?” சொல்லிக்கொண்டே ஒரு பீரோவின் மறைவிலிருந்து வெளிப்பட்டாள் ஆர்யா. அவளுடைய இடது கையில் இப்போது ஒரு மெட்டாலிக் பிஸ்டல் பூத்திருந்தது.
“உனக்கொரு விஷயம் தெரியுமா நிஷா? இந்த லாபரட்டரிக்குள்ளே என்னையும் டாக்டரையும் தவிர, வேற யார் இருந்தாலும் சரி, அவங்க எவ்வளவு மெள்ளமா பூனை மாதிரி நடந்தாலும் சரி, எங்க கையில் கட்டியிருக்கிற டெஸிபல் டிடெக்டர்ஸ் காட்டிக் கொடுத்துடும்.”
நிஷாவின் முன்நெற்றியில் இப்போது வியர்வை பிசுபிசுத்து மின்னியது. மெள்ளப் பின்வாங்க முயன்று, எதன் மீதோ இடித்துக் கொண்டு நின்றாள்.
சதுர்வேதி மெள்ளச் சிரித்து அவளை நோக்கி நடை போட்டார். “பயப்படாதே நிஷா! நீ இப்போ பத்திரிகை ரிப்போர்ட்டர் இல்லை; என்னோட கெஸ்ட். வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை உபசரிக்காம இருக்கலாமா?”
நிஷாவின் விழிகளில் கண்ணாடித்தாளாய்க் கண்ணீர் பளபளத்தது. நெயில்பாலீஷ் பூச்சு விரல்களைக் குவித்தாள். லிப்ஸ்டிக் தீட்டிய உதடுகள் நடுங்கின.
“டா… டாக்டர்…”
“என்னம்மா?”
“எ.. என்னை வி… வி… விட்டுடுங்க… போ… போயிடறேன்.”
“என்னது போறியா? நல்லாயிருக்கே கதை! ஆர்யா! நிஷா சொன்னதைக் கேட்டியா?”
ஆர்யா சிரித்தாள். “அப்படியெல்லாம் போயிட முடியாது நிஷா. இங்கே விருந்தாளியா வர்றவங்க அட்லீஸ்ட் பத்து நாளாவது இருந்துட்டுத்தான் போகணும்.”
“நம்ம விருந்தாளியை உள்ளே கூட்டிட்டுப் போ ஆர்யா! நான் பங்களா காம்பெளண்ட் கேட்டை உள்பக்கமாப் பூட்டிட்டு வந்துடறேன்”. சதுர்வேதி, சொல்லிவிட்டு எதிர்த் திசையை நோக்கி நடக்க, நிஷாவை நெருங்கி வலது கையால் அவளுடைய தோளைப் பற்றினாள் ஆர்யா.
“ம்… நட!”
நிஷா மிரண்டு மிரண்டு நடந்தாள். மண்ணெண்ணெய் தீர்ந்துபோன அரிக்கேன் விளக்கு தினுசில் இருதயம் ‘பக்பக்’கென்று பதைத்தது.
‘இங்கிருந்து தப்பிக்க முடியுமா? முடியாது போலிருக்கிறதே! என்ன செய்யலாம்..?’ நிஷா, வியர்த்து வழிந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது ஊதா வெளிச்சம் நிரம்பிய ஓர் அறைக்குள் திணிக்கப்பட்டாள். ஏர்கண்டிஷனரின் சின்ன உறுமல் கேட்டது. உறைந்துபோன ஏ.ஸி குளிரில் வயிற்றைப் பிறாண்டுகிற சைஸில் ஒரு கெட்ட வாசனை.
“உட்கார்!”
நிஷா ஒரு நாற்காலியில் புதைக்கப்பட்டாள். நாற்காலியின் ஆர்ம் போர்ஷனில் அவளுடைய இரண்டு கைகளின் மணிக்கட்டுகளும் கப்லிங்கால் உடனே பிணைக்கப்பட்டன. திமிற முயன்றபோது மணிக்கட்டுகளில் மரணவலி தெறித்தது.
கண்களில் நீர் தத்தளிக்க, நிஷாவின் பார்வை அந்த அறைக்குள் பயமாய்ப் பரவியது. ஊதா வெளிச்சம் காரணமாக ஆரம்பத்தில் அறையில் இருந்த பொருட்கள் கலங்கலாய்த் தெரிந்தாலும் இரண்டொரு நிமிஷங்களிலேயே பளிச்சென்று புலனாயிற்று.
நான்கைந்து கம்ப்யூட்டர் சங்கதிகளுக்கு நடுவே ஒரு ஃபைபர் க்ளாஸ் மேஜை செவ்வகமாய்த் தெரிந்தது. அதன்மேல் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு ஒரு பெண்ணின் உடல்! தலை மழுங்கச் சிரைக்கப்பட்டிருக்க… மார்பில் துணி இல்லை. இடது பக்க மார்பில் சிவப்பு வெளிச்சக் கண்ணோடு சிகரெட் பாக்கெட் சைஸில் ஒரு சாம்பல் நிறக் கருவி பொருத்தப்பட்டுத் தெரிந்தது. சிரைத்த தலையின் பின்பக்க மண்டையோட்டில் ஒரு துளை தெரிய, அதன் கீழ்ப்பகுதியில் நூல்நூலாக ரத்தம்…
நிஷாவின் இதயம் பாலத்தின்மேல் ஓடும் ரயிலாக மாறிக் கொண்டிருக்கும்போதே…
சதுர்வேதி உள்ளே வந்தார். மழையில் லேசாக நனைந்திருந்தார். நிஷாவைப் பார்த்துப் புன்னைகைத்தார்.
“என்ன நிஷா… நாற்காலி வசதியா இருக்கா? இங்கே வர்ற கெஸ்ட்டுகளுக்காகவே பிரத்யேகமா தயார் பண்ணின நாற்காலி இது” சொன்னவர் ஆர்யாவிடம் திரும்பினார்.
“ஆர்யா!”
“டாக்டர்!”
“கெஸ்ட்டுக்குக் கூல்ட்ரிங்க் கொடுத்தியா?”
“இதோ ரெடியா இருக்கு”. கையில் வைத்திருந்த இன்ஜெக்ஷனை உயர்த்திக் காட்டினாள். பார்த்த நிஷாவின் கண்களில் திகில் ஈஷிக்கொள்ள, அந்த சிரிஞ்சின் கண்ணாடி உடம்புக்குள் மக்கிப்போன பச்சை நிறத்தில் ஒரு திரவம் அசைந்தது.
“என்ன அது?”
நிஷா கலவரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆர்யா அவளை நெருங்கி இடதுபுறத்தைப் பற்றினாள். நிஷா திமிறினாள்.
“வே… வே… வேண்டாம்!…”
“வேண்டாமா? சரியாப் போச்சு! இந்த ஒரு கூல்டிரிங்க் சாப்பிடறதுக்கே பயந்துட்டா எப்படி? இன்னும் சாப்பிட வேண்டியது இங்கே எவ்வளவோ இருக்கே! அந்தப் பொண்ணு மேஜையில படுத்துட்டிருக்கிற மாதிரி நீயும் ஒரு நாளைக்குப் படுத்துக்க வேண்டாமா?”
“நோ…!” நிஷா வீறிட்டுக் கொண்டிருக்கும்போதே அவளுடைய இடதுபுஜத்தில் ஊசி பாய, உடனே மூளைப் பகுதிக்குள் ஒரு மே மாத மத்தியான நேர வெப்பம் பரவியது.
கீதாம்பரியின் அம்மா பர்வதம், அந்த விடியற்காலையில் ரமணி சொன்னதைக் கேட்டு இடிந்துபோய்ப் பெரிய அழுகையோடு சுவருக்குச் சாய்ந்துவிட… திவாகர் அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டே கேட்டான்.
“பம்பாயிலிருந்து செய்தி எப்போ வந்தது?”
“ராத்திரி பத்தரை மணிக்கு.”
“உடனே வந்து ஏன் சொல்லலை?”
“ஒரே குழப்பமா இருந்தது… என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியலை… உன்னோட அம்மாவுக்குக்கூட இந்த விஷயம் தெரியக்கூடாதுன்னு எங்கப்பா சொன்னார். ஆனா, எனக்கு மனசு கேட்கலே… சொல்லிட்டேன். இதோ பார் திவாகர்! இப்போ எதைப் பத்தியும் பேசிட்டிருக்க நேரமில்லை. நீயும் நானும் பம்பாய் போக ஃப்ளைட்ல டிக்கெட் எடுத்தாச்சு. ரெண்டு டிரெஸ்ஸை எடுத்து வெச்சிக்கிட்டுக் கிளம்பு! இன்னும் ஒரு மணி நேரத்துல ஃப்ளைட். வாசல்ல டாக்ஸி நிக்குது.”
திவாகர் தன்னுடைய அறையை நோக்கிப் பதற்றமாகப் போக, பர்வதம் அழுகையில் வெடித்தாள்.
“இ… இது… என்னப்பா அநியாயம்? கீதாம்பரிகிட்ட மறைக்கக்கூடிய விஷயமா இது? புருஷன் முகத்தையாவது அவ கடைசியா ஒரு தடவை பார்க்க வேண்டாமா?”
ரமணியின் குரல் கம்மியது. ” அ… அம்மா! நீ… நீங்க சொல்றது சரிதான். ஆனா, அண்ணி இப்போ இன்னொரு ஜீவனையும் தாங்கிட்டிருக்காங்க. அண்ணன் இறந்த அதிர்ச்சியை நிச்சயம் அண்ணியால தாங்கிக்க முடியாது. பிரசவம் நல்லபடியா நடந்து முடியற வரைக்கும் இந்த விஷயத்தை நாம அடைகாக்கத்தான் வேணும். நானும் திவாகரும் பம்பாய்க்குப் புறப்பட்டுப் போய் அண்ணனோட பாடியை வாங்கிக் காரியங்களை முடிச்சுட்டு வந்துடறோம்.”
பர்வதம் தன் இரண்டு கைகளாலும் முகத்தில் அறைந்து கொண்டு அழ, திவாகர் தன் அறையிலிருந்து சின்ன சூட்கேஸோடு வெளிப்பட்டான்.
“அம்மா! நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் தெரியும்படியாப் பண்ணிடாதே! இப்போ நமக்குக் கீதாம்பரியோட உயிர் முக்கியம். போன உயிருக்காக அழுது, இருக்கிற உயிரை இல்லாமப் பண்ணிடாதே! நாங்க பம்பாயிலிருந்து திரும்பற வரைக்கும் நீ வீட்டுலயே இரு! தப்பித்தவறிக்கூடக் கீதாம்பரியைப் பார்க்கப் போயிடாதே! உன்னால துக்கத்தைக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது.”
பர்வதம் சுவரில் தலையை மோதிக் கொண்டாள். “டேய் திவாகர்! இவ்வளவு பெரிய பளுவை மனசுல வெச்சுக்கிட்டு நான் எப்படிடா வீட்டுல உட்கார்ந்துட்டிருக்க முடியும்?”
“அம்மா! மனசைத் திடப்படுத்திக்க! நாங்க ரெண்டே நாள்ல திரும்பி வந்துடறோம்.”
பர்வதம் சேலைத்தலைப்பால் வாயைப்பொத்திக் குலுங்கிக் கொண்டிருக்க, ரமணியும் திவாகரும் வாசலின் இருட்டில் நின்றிருந்த டாக்ஸிக்கு வந்தார்கள்.
மழை தூறிக்கொண்டிருந்த பம்பாய் மண்ணை அவர்கள் மிதித்து, டாக்ஸியில் அந்த அரசு ஹாஸ்பிட்டலுக்குப் போய்ச் சேர்ந்தபோது காலை பதினோரு மணி.
போஸ்ட்மார்ட்டம் அறை இருந்த திசையை விசாரித்து, ஜனநெரிசலை நீந்திக்கொண்டு போவதற்குள் ரமணியும் திவாகரும் வியர்த்துக் களைத்துப் போனார்கள்.
மார்ச்சுவரி அறைக்கு வெளியே நின்று வாயில் ‘பான்’ மென்றபடி யாரையோ இந்தியில் திட்டிக்கொண்டிருந்த அந்த இளவயது இன்ஸ்பெக்டருக்கு முன்பாகப் போய் நின்றார்கள். இன்ஸ்பெக்டரின் சட்டையில் குத்தியிருந்த நேம் பேட்ஜ் அவரை ‘மல்ஹோத்ரா’ என்று சொன்னது.
ரமணி தனக்குத் தெரிந்த இந்தியில் பேசினான்.
“சார்! நாங்க மெட்ராஸிலிருந்து வர்றோம். சில்வர் ஸாண்ட் ஓட்டலில் தங்கியிருந்த ஹரிஹரன் லாரி மோதி இறந்துவிட்டதாக நேத்து ராத்திரி ஓட்டலிலிருந்து போன் மெஸேஜ் வந்தது…”
மல்ஹோத்ரா, வாயில் இருந்த பான் எச்சிலைப் பக்கத்தில் இருந்த குரோட்டன்ஸ் செடியின் மேல் உமிழ்ந்துவிட்டுக் கக்கத்தில் அதக்கியிருந்த தொப்பியைத் தலைக்குக் கொடுத்தபடியே நிமிர்ந்தார்.
“உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். செத்துப்போன ஹரிஹரனுக்கு நீங்க என்ன உறவு?”
“நான் அவரோட பிரதர்.”
“இவர்?…” திவாகரைக் காட்டினார்.
“பிரதர் இன் – லா”.
மல்ஹோத்ரா பெருமூச்சுவிட்டார். “நடந்தது ஒரு மோசமான விபத்து. நேத்து ராத்திரி பத்தேகால் மணி சுமாருக்கு ப்ரீஃப்கேஸோட ஓட்டலை விட்டுப் புறப்பட்டிருக்கார் உங்க பிரதர். வாட்ச்மேன்கிட்ட டாக்ஸி ஸ்டாண்ட் எங்கே இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு ரோட்டை க்ராஸ் செய்ய முயற்சி பண்ணியிருக்கார். அந்தச் சமயத்துல வேகமா வந்த ஒரு டாங்கர் லாரி அவர் மேல மோதியிருக்கு. ஸ்பாட்லேயே தலை நசுங்கி மரணம். லாரி நிக்காமப் போயிட்டாலும் ஓட்டல் வாட்ச்மேன் நம்பரை நோட் பண்ணி இருக்கார். லாரியை மடக்கிடலாம்; கவலை இல்லை.”
ரமணி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி கேட்டான். “பாடியைப் பார்க்கலாமா சார்?”
“வாங்க!” மார்ச்சுவரியின் பெயின்ட் உதிர்ந்துபோன கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார் மல்ஹோத்ரா. இருவரும் தொடர்ந்தார்கள். தகர மேஜைகளின் மேல் பிணங்கள் பார்மலினில் ஊறி விறைத்துத் தெரிய… தரையில் பனிக்கட்டியின் ஈரம் சொதசொதத்தது. மல்ஹோத்ரா, இடத்துக்குப் பொருந்தாத புன்னகையோடு சொன்னார்.
“இன்னிக்கு சிட்டியில் ஏழெட்டுத் தற்கொலை கேஸ். மார்ச்சுவரி ஹவுஸ்ஃபுல்!”
ரமணிக்கு வயிற்றைப் பிசைந்துவிட்டது. எந்த விநாடியும் வாந்தி வருகிற உணர்வு. மல்ஹோத்ரா கேட்டார்.
“உங்க பிரதருக்கு மேரேஜ்…?”
“ஆயிடுச்சு.”
“புவர் ஃபெல்லோ!”
நடந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்று, பக்கவாட்டுத் தகர மேஜையைக் காட்டினார்.
“இதுதான்!”
ரமணியும் திவாகரும் பார்த்தார்கள். போர்த்தப்பட்ட வெள்ளை விரிப்பையும் மீறிக்கொண்டு ஒரு பக்கம் நசுங்கிய அந்தத் தலை தெரிந்தது. ரோமமும் ரத்தமும் சதையும் மிக்ஸியில் போட்டு அடித்த மாதிரி ஒரு கலவை.
மல்ஹோத்ரா, கையில் வைத்திருந்த லத்தியால் அந்தப் போர்வையை விலக்க, முழுஉடல் இப்போது பார்வைக்குக் கிடைத்தது. ‘அது அண்ணனாய் இருக்கக் கூடாது கடவுளே!’ என்கிற பதைபதைப்போடு ரமணி பார்வையைப் போட்டான்.
இதயம் நடுங்கியது!
முகம், கழுத்து, வயிறு என்று சிதைந்து போயிருந்தாலும் அது ஹரிஹரன்தான் என்பதை ரத்தக்கறையில் தோய்ந்திருந்த அந்த ஆகாயவண்ண சஃபாரி சொல்லியது. இடதுகை மணிக்கட்டில் மின்னிய வாட்ச் ஊர்ஜிதப்படுத்தியது.
மல்ஹோத்ரா ஒரு ப்ரீப்கேஸைக் கொண்டுவந்து காட்டினார். “ஆக்ஸிடெண்ட் நடந்தபோது இந்த ப்ரீஃப்கேஸ் உங்க பிரதர் கையில் இருந்தது. இது அவரோடதுதானான்னு பாருங்க!”
ரமணி வாங்கிப் பார்த்தான்.
அது ஹரிஹரனின் ப்ரீஃப்கேஸ்தான்!
லாக்கரை விடுவித்துத் திறந்தான். ஹரிஹரனுக்குப் பிடித்தமான ஆங்கில வாசகத்தின் ஸ்டிக்கர் ப்ரீஃப்கேஸின் உட்புறத்தின் மேல் ஒட்டப்பட்டிருந்தது.
FOR EVERY 10 MINTUES YOU ARE ANGRY YOU LOSE 6’00 SECONDS OF HAPPINESS!
உள்ளே டைரி, பேனா, குளிர்கண்ணாடி, வாசனை கர்ச்சிப், மணிபர்ஸ், இன்ஹேலர், ஜான்ஸன் பட்ஸ் எல்லாமே நாங்கள் ஹரிஹரனுக்குச் சொந்தம் என்று தீர்மானமாய்ச் சொல்லின. உள்ளறையில் கட்டுக்கட்டாய்க் கரன்ஸி.
ரமணி மணிபர்ஸைப் பிரித்தான். பர்ஸின் இரண்டாவது அறையில், கண்ணாடித்தாளுக்குப் பின்னால் பாஸ்போர்ட் சைஸ் கீதாம்பரி நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டோடு சிரித்தாள்.
(தொடரும்)