டாக்டர் சதுர்வேதி, பீரோவுக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் நிஷாவின் இதயத்துடிப்பு உச்சபட்சத்துக்குப் போய், நடுமுதுகில் வியர்வைக் கால்வாய் ஒன்று ‘திடும்’ என்று உற்பத்தியாகி உள்ளாடையை நனைத்தது. மூச்சு விடுகிற சத்தத்தைக் கூட டாக்டர் உணர்ந்துவிடாமல் இருப்பதற்காகத் தன் வாயையும் மூக்கையும் சேர்த்து வலது கை விரல்களால் அழுத்திக் கொண்டாள்.
டாக்டர், பீரோவை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு எதையோ கிளறிப் பார்த்துக்கொண்டிருக்க… ஆர்யா, காம்பெளண்ட் கதவை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு வாசல் கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
“டாக்டர்!”
“ம்…”
“அந்தப் பொண்ணு எந்தப் பக்கம் போனாள்னே தெரியலை!”
“அவ எந்தப் பக்கம் போனா என்ன? எப்படியோ இந்த இடத்தை விட்டுத் தொலைஞ்சாளே, அதுவே போதும்!”
“அவளை எதுக்காக வரச் சொல்லணும், வரச் சொல்லிட்டு இப்போ எதுக்காக அவஸ்தைப்படணும்?”
“நான் எங்கே இவளை வரச் சொன்னேன்? பத்து நாளைக்கு முன்னாடி செமினார் முடிஞ்சு வெளியே வந்து கார் ஏறும்போது, ஓடிவந்து தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டா. புறப்படற நேரத்துல ‘தொணதொண’ன்னு கேள்விகளைக் கேட்க ஆரம்பிச்சா. ‘நீ கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல நேரமில்லை’ன்னு சொன்னேன். ‘அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரட்டுமா’ன்னு கேட்டா. நான் அவகிட்டயிருந்து விடுபட்டா போதும்ங்கிற நினைப்பில் தலையை ஆட்டி வெச்சேன். கரெக்டா அம்பு தெச்ச மாதிரி வந்துட்டா! இவ வருவாள்னு நான் நினைச்சே பார்க்கலை.”
“மறுபடியும் அவளை வரச் சொல்லியிருக்கீங்க போலிருக்கு?”
“வேற வழி…? அப்படிச் சொல்லலைன்னா அவ இங்கிருந்து நகர மாட்டாளே!”
“டாக்டர்! இந்தப் பத்திரிக்கைகாரங்ககிட்ட நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்! பேட்டி கீட்டின்னு பக்கத்துல வந்தா அண்டவே விடக்கூடாது!”
“இனி அந்தப் பொண்ணு எப்போ வந்தாலும் சரி, நான் வெளியூர் போயிருக்கிறதா சொல்லிடு! காம்பெளண்ட் கேட்டை லாக் பண்ணிட்டியா?”
“பண்ணிட்டேன்.”
“வெளியே மழை பெய்யுதா?”
“பலமா இல்லை, லேசா ட்ரிஸிலிங். பட், ஆகாயம் எந்த நிமிஷமும் பொத்துக்கிற ஸ்டேஜில்தான் இருக்கு! பீரோவில் என்ன தேடறீங்க டாக்டர்?”
“ராகினியோட ‘ஸெல் கல்ச்சர்’ ரிப்போர்ட்!”
“அது சர்ஜரி தியேட்டர் பீரோவில் இருக்கு டாக்டர்.”
“எதுக்காக அங்கே கொண்டு போனே?”
“நேத்திக்கு நீங்கதானே டாக்டர் கேட்டீங்க?”
“ஓ ஸாரி! வா, தியேட்டருக்குப் போலாம்!” பீரோவை அறைந்து சாத்தினார் சதுர்வேதி.
“வாசல் கதவை உட்பக்கமா தாழ் போட்டியா?”
“போட்டேன். இனி யாரோட தொந்தரவும் இருக்காது டாக்டர்!”
“நீ இன்னொரு காரியத்தையும் பண்ணிடு ஆர்யா!”
“என்ன டாக்டர்?”
“டெலிபோன் ரிஸீவரை எடுத்துக் கீழே வெச்சுடு! நாம தியேட்டர்ல ராகினிகிட்ட இருக்கும்போது அது கத்த ஆரம்பிச்சா வெளியே வர வேண்டியிருக்கும்.”
“நீங்க தியேட்டருக்குப் போயிட்டிருங்க டாக்டர்! நான் ரிஸீவரை எடுத்து வெச்சுட்டு வந்துடறேன்.”
சதுர்வேதி நகர்ந்து போக முயல, ஆர்யா சட்டென்று குறுக்கிட்டாள்.
“டாக்டர்!”
சதுர்வேதி நின்றார்.
“ம்…?”
“உங்க ஜிப்பா பாக்கெட்ல என்ன இருக்கு?”
“ஒண்ணுமில்லையே! கர்ச்சீப்தான் வெச்சிருக்கேன். எதுக்காக கேட்டே?”
“உங்க ஜிப்பா பாக்கெட்டையே நாலைஞ்சு ஈ சுத்திச் சுத்தி வருது பாருங்க!”
குனிந்து பக்கவாட்டில் பார்த்தார். நெற்றியில் கோடுகள் விழ ஆச்சரியப்பட்டார்.
“அட… ஆமாம்! எதுக்காக இந்த ஈக்கள் விஜயம்?” சொல்லிக்கொண்டே ஜிப்பா பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துத் தன் வெள்ளைக் கர்ச்சீப்பை உருவினார்.
கர்ச்சீப் முழுக்க ரத்தக்கறைத் தீற்றல்கள்.
சதுர்வேதி சிரித்தார். “கொஞ்ச நேரத்துக்கு முந்தி ராகினியோட உடம்பிலிருந்து ரத்தம் எடுக்கும்போது, ரத்தம் சிதறி என் கையில பட்டுட்டது. கர்ச்சீப்பால் அதைத் துடைச்சுட்டு ஞாபக மறதியா ஜிப்பா பாக்கெட்டுக்குள்ளே போட்டுக்கிட்டேன் போலிருக்கு. இந்தா, இதை ஸ்டெரிலைஸ் பண்ணிடு!”
ரத்தக்கறை படிந்த கர்ச்சீப்பை ஆர்யாவை நோக்கி எறிந்துவிட்டு அறையின் வலதுபக்க மூலையில் இருந்த இன்னொரு கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார் சதுர்வேதி. ஆர்யா ஹாலை நோக்கிப் போக, சில விநாடிகளுக்குக் காலடிச்சத்தங்கள் கேட்டன.
பின்…
அமைதி.
பீரோவுக்குப் பின்னால் மறைவாய் நின்றிருந்த நிஷா ஏறக்குறைய வியர்வையில் குளித்திருந்தாள்.
இதயப்பிரதேசம் முழுவதும் வேடந்தாங்கல் ஏரிப் பறவைகளின் இரைச்சல்.
‘இந்த டாக்டர் சதுர்வேதியும் அந்தப் பெண் ஆர்யாவும் சரியான நபர்கள் இல்லை..! இவர்களிடம் ஏதோ தப்பு இருக்கிறது! யார் அந்த ராகினி? அவளை இங்கே வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கண்டிபிடித்தாக வேண்டும்!’
நிஷா பீரோவின் மறைவிலிருந்து மெள்ள வெளிப்பட்டாள். சதுர்வேதி வெளியேறிச் சென்ற கதவை நோக்கி, உடம்பு பூராவும் தடவிக்கொண்ட ஜாக்கிரதை உணர்வோடு நடந்தாள்.
பங்களாவுக்கு வெளியே தூறிக்கொண்டிருந்த மழை இப்போது தன் வேகத்தை அதிகரித்திருந்தது.
அறைக்குக் கூட்டிப்போய் ரமணி சொன்னதைக் கேட்டு மாசிலாமணியும் திலகமும் தம் இதயப் பாகங்களில் உடைந்தார்கள்…
“டே… டேய்… ரமணி… ஈ…ஈ…ஈ…! நீ என்னடா சொல்றே…!” கத்தி அழ முயன்ற அம்மாவின் வாயைப் பொத்தினான் ரமணி.
“ஐயோ… அம்மா!… அழுது ஆர்பாட்டம் பண்ணிடாதே! இந்த விஷயம் இப்போ அண்ணி வரைக்கும் போகக்கூடாது! அண்ணனுக்கு இப்படின்னு தெரிஞ்சா, நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிற அண்ணிக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம்.”
மாசிலாமணி திக்கித்த விழிகளோடு ரமணியின் கைகளைப் பற்றினார்.
“ர… ரமணி…! தகவல் சொன்னது யாரு?”
“சில்வர் ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிலிருந்து பேசினாங்க. ஓட்டலுக்கு எதிரே இருக்கிற ரோட்டை க்ராஸ் பண்ணும்போது லாரி வந்து மோதியிருக்கு. ஸ்பாட்லயே அண்ணன் உயிர் போயிருக்கு. பாடியை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போயிருக்காங்க. பாடியை ரிஸீவ் பண்ணிக்க வரச் சொல்லியிருக்காங்க.”
திலகம் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு தளர்ந்துபோய்ச் சுவருக்குச் சாய்ந்து உட்கார்ந்தாள்.
மாசிலாமணி, துக்கத்தில் அடைத்துக் கொண்ட தொண்டையோடு கேட்டார்.
“ரமணி! இப்போ… என்னடா பண்றது?”
ரமணி பெருமூச்சொன்றை உஷ்ணமாக வெளியேற்றி விட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னான், “நாளைக்குக் காலையில பம்பாய் போற ஃப்ளைட்ல நீங்களும் நானும் புறப்பட்டுப் போய் அண்ணனோட பாடியை வாங்கிட்டு வந்துடலாம். நாம பம்பாயிலிருந்து திரும்பறதுக்குள்ளே அம்மா அண்ணிக்கு விஷயத்தைப் பக்குவமா எடுத்துச் சொல்லி…”
ரமணி பேச்சை முடிக்கவில்லை. திலகம் தலை தலையாக அடித்துக்கொண்டு இரண்டு கைகளையும் வேகமாக ஆட்டியபடி அரற்றினாள்.
“மா… மாட்டேன்!… என் வாயால் அதைச் சொல்ல மாட்டேண்டா ரமணி! வயிறு நிறையக் குழந்தைய வெச்சுக்கிட்டு அவ பதைபதைக்கத் துடிக்கிறதை என்னால கண்கொண்டு பார்க்க முடியாது. ஹரிக்கு இப்படின்னு கேள்விப்பட்டா, அந்த நிமிஷமே உயிரை விட்டுடுவா உன்னோட அண்ணி…”
“விஷயத்தை எப்படியாவது சொல்லியாகணுமே! இதை எத்தனை நேரத்துக்குத்தான் மறைக்க முடியும்?”
மாசிலாமணி ரமணியின் தோள்மேல் கையை வைத்தார்! “ரமணி! உங்கம்மா சொல்ற மாதிரி, ஹரிஹரனோட மரணத்தைக் கீதாம்பரியால இந்த நிலைமையில் தாங்கிக்க முடியாது. அவளோட பிரசவம் வரைக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தாம ரகசியமா வெச்சிருந்து அப்புறமா சொல்லிக்கலாம்.”
ரமணி பிரமித்தான்.
“அப்பா!… இது நடக்கக்கூடிய காரியமா?”
“கொஞ்சம் முன்யோசனையோடு நடந்துக்கிட்டா எதையும் நடத்திக் காட்டலாம்.”
“அப்பா! நீங்க இப்போ என்ன சொல்ல வர்றீங்க?”
“நீ எதையும் மறுத்துப் பேசாம நான் சொல்றபடி கேட்பியா?”
“சொல்லுங்கப்பா!”
“கீதாம்பரிக்குப் பிரசவம் முடிகிற வரைக்கும் ஹரியோட மரணம் நம்ம ரிலேடிவ் சர்க்கிளுக்கோ, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளுக்கோ
தெரியவே கூடாது! நாளைக்கு மார்னிங் ஃப்ளைட்ல பம்பாய்க்கு நீ மட்டும் போறே…”
“நான் மட்டுமா?…”
“ஆமா! நீ மட்டும் போய் ஹரியோட பாடியை வாங்கித் தகனம் பண்ணிடு!”
திலகம் அழுகையில் வெடித்தாள். “என்னங்க கொடுமை இது! பெத்த பிள்ளையோட முகத்தைக் கூடப் பார்க்காம…”
“அழுது புலம்பிட்டிருக்க இது நேரமில்லை திலகம். ஒரு பெரிய உயிரையும் ஒரு சின்ன உயிரையும் காப்பாத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.”
திலகம் பதில் பேசத் தோன்றாமல் அழுகையில் ஆழ்ந்து போக, ரமணி மாசிலாமணியை ஏறிட்டான்.
“அப்பா! அண்ணன் இறந்த செய்தியை யாருக்குச் சொல்லாமல் போனாலும் ஒருத்தருக்குச் சொல்லியாகணும்.”
“யாருக்கு?”
“அண்ணியோட அம்மாவுக்கும் அண்ணன் திவாகருக்கும்.”
“சொல்லணும்னு நீ நினைக்கிறியா?”
“ஆமா! சம்பந்தி வீட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டியது முறை இல்லையா?”
“அப்படீன்னா ஒரு காரியம் பண்ணு!”
“என்ன?”
“கீதாம்பரியோட அம்மாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம்! அவளோட அண்ணன்கிட்ட மட்டும் சொல்லிடு. முடிஞ்சா அவனையும் பம்பாய்க்குக் கூட்டிட்டுப் போய்க் காரியங்களைப் பண்ணிட்டு வந்துடு!”
ரமணியின் கண்கள் கலங்கியிருக்க, உதடுகள் அழுகையில் துடித்தன.
“அப்பா! நானும் அண்ணியோட அண்ணன் திவாகரும் பம்பாய்க்குப் போய்க் காரியங்களைப் பண்ணிட்டு வர்றது பெரிசில்லை, ஆனா அதுக்கப்புறம் அண்ணியைப் பிரசவம் முடிகிற வரைக்கும் சமாளிக்கிறது எப்படி? அண்ணன் ஹரி பம்பாய்லேர்ந்து டெலிபோன்ல பேசலைன்னதுமே அண்ணி பட்ட பாட்டைத்தான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி பார்த்தீங்களே? பிரசவ டேட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு. இந்த இருபது நாள்ல அண்ணன் தினம் ஒரு தடவை போன் பண்ணிப் பேசியாகணுமே!”
மாசிலாமணி கண்களைத் துடைத்துக் கொண்டு தலையாட்டினார். “அந்தப் பிரச்சினையையும் சமாளிச்சுடலாம்.”
“எப்படி?” ரமணி, கண்களை வியப்பில் விரித்துக் கொண்டிருக்கும்போதே சாத்தியிருந்த அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“டொக்… டொக்…”
மூன்று பேரும் சட்டென்று பேச்சை நிறுத்திக் கண்ணீரில் நனைந்த விழிகளைத் துடைத்துக் கொண்டார்கள். ரமணி குரலைத் தாழ்த்திக்கொண்டு தாயிடம் சொன்னான்.
“அம்மா! கதவைத் தட்டறது அண்ணிதான். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடாதே! முகத்தை எப்பவும் மாதிரி வெச்சுக்கிட்டுப் பேசு.”
திலகம் கலவரமாகத் தலையாட்டினாள்.
ரமணி மெதுவாகச் சென்று தாழ்ப்பாளை விலக்கிக் கதவைத் திறந்தான்.
வெளியே,
கீதாம்பரி பம்மிய வயிற்றோடு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி நின்றிருந்தாள்.
கேட்டாள் சிரித்தபடி,
“கதவைச் சாத்திக்கிட்டு மூணு பேருக்குள்ளே அப்படியென்ன ரகசியம்? நானும் தெரிஞ்சுக்கலாமா?…”
(தொடரும்)