ஆங்கிலத்திலும் சரி… தமிழிலும் சரி… நாமும் இதுவரை எத்தனையோ பேய் சினிமாக்களையும், சீரியல்களையும் நாவல்களையும் பார்த்தாகிவிட்டது… படித்தாகிவிட்டது… சரி… பேய் இருக்கா?… இல்லையா?… என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு… உலகம் முழுக்க பல நூறு ஆண்டா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற விஷயமிது… திடீருனு இதுக்கு நான் மட்டும் பதில் சொல்லி பல்பு வாங்கிரமுடியுமா என்ன?…
ஆனா ஒன்னுங்க… பேய் இருக்குதோ இல்லையோ… சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பேய்க்கதைகள்னாலே ஒருமாதிரி உடம்பு சிலிர்த்துக்கிட்டு பயந்துகிட்டே கேட்டுட்டு… நைட்டு ஆனதும் அதே மனசுக்குள்ள ஓடி நமக்கு கிளம்புற பீதி இருக்கே… நிஜமாவே அதுவொரு சூப்பர் அனுபவம்தாங்க! (பேயைப்பத்தி பயமேயில்லை… நான் பேயிருக்குன்னு நம்பவே மாட்டேன்னு அடம் பண்ற தைரியசாலிக்குகூட பகல்ல பேய்ப்படம் பார்த்தாங்கன்னா இருட்டுனதும் அதோட தாக்கம் கொஞ்சமாவது அவங்க மனசுக்குல இருக்கும்ன்றது அவங்க மனசாட்சிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்… எத்தனை நாளைக்குத்தான் பயப்படாதமாதிரியே நடிக்கிறது…அவ்வ்வ்வ்வ்…!)
பழிவாங்குற பேய், இரத்தம் குடிக்கிற பேய், சாராயம் குடிச்சி கோழிக்கறி தின்னுற பேய், வெள்ளையா புகை மாதிரி உருவம், தலமுடிய நீளமா விரிச்சிப்போட்டுட்டு திரியற பேய், கால் இல்லாத பேய்… தலையில்லா முண்டம்… இப்படி மனுசனோட கற்பனைல பேயப்பத்திய விஷயங்கள் விதவிதமா உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டிருந்தாலும் இன்னக்கி வரைக்கும் பேய் இல்லைன்னு சொல்றுதுக்கும், இருக்குன்னு சொல்றதுக்கும் போதுமான சாட்சிகளும் ஆராய்ச்சி முடிவுகளும் இல்லன்றதுதான் நெசம்!
எந்தவொரு சக்திக்கும் ஒரு எதிர்சக்தி இருந்தாதான் அந்த சக்தியோட வேல்யூ அதிகமாகும். அதனால மனுசன் கடவுள்னு ஒரு சக்திய உருவாக்கி வழிபடத்தொடங்கும் போதே அதுக்கான எதிர்சக்தியா உருவாக்கப்பட்ட விஷயமாத்தான் பேய் விஷயமும் இருக்கும்னு சில மெத்தப்படிச்ச மேதாவிங்க சொல்றாங்க. என்னதான் விவாதங்களும் எதிர்விவாதங்களும் நடந்தாலும் இறப்புக்கு பின்னாலானா வாழ்க்கை இன்னமும் ஆராய முடியாத புதிராவே இருக்குறதுதான் பேய் இருக்குன்னு சொல்றதுக்கும், இல்லைன்னு சொல்றதுக்குமான ஒரே விஷயமாப்போச்சு!
கிராமப்புறங்கள்ள இன்னமும் யாராவது அகால மரணமடைஞ்சிட்டாங்கன்னா அவங்க சாவுக்கு அப்புறமா கெளம்புற பேய்ச்செய்திகள் இருக்கே… அப்பப்பா… அதுவும் யாராவது தூக்கு போட்டு செத்துட்டாங்கன்னு அது இன்னும் ஹைலைட்டுதான் போங்க! அந்த கிராமங்கள்ள இருந்தீங்கன்னா ஒரு கட்டத்துல உண்மைலேயே பேய் இருக்குதுப்பான்னு நீங்களே நம்பிருவீங்கன்றதுதான் நெசம்!
நாம பலபேரு பலவிதமான பேய்ப்புகைப்படங்களப் பாத்திருப்போம். உலகம் முழுக்க பலவித பேய்ப்புகைப்படங்கள் பரவினாலும் அதுல முக்காவாசிக்குமேல ஏமாத்துவேலைன்னு நிருபிச்சிட்டாங்க. ஆனா இன்னமும் எந்தவித ஏமாத்துவேலையும் இல்லாத, எந்தவித கேமரா பிரச்சினையும், லைட்டிங் பிரச்சினையும் இல்லாத இன்னமும் இது டூப்புன்னு நிரூபிக்கப்படாத சில ஒரிஜினல் பேய்ப்புகைப்படங்கள் இருக்கு…
அந்த மாதிரி புகைப்படங்களும் அதுக்கான பின்னுரையும் டாப் 10 வரிசையில் இதோ உங்கள் பார்வைக்கு…
ஆஸ்திரேலியா – குயின்ஸ்லேண்டு புகைப்படம்-1946
இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது. தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த த்தாயை தவிர வேறு யாருமேயில்லை. ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது. (இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது !)
S.S வாட்டர் டவுண் முகங்கள் – 1924
இந்த புகைப்படம் 1924ம் ஆண்டு SS வாட்டர் டவுன் என்ற வணிகக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கடல் அலைகள். புகைப்படத்தை டெவலப் செய்தபோது அலைகளில் தெரிந்த இரண்டு முகங்களைக்கண்டு அனைவருமே அதிர்ந்து போயினர். அது வெகுசில நாட்களுக்கு முன்னர் அந்தக்கப்பலிலேயே ஒரு விபத்தில் ஒரே நேரத்தில் செத்துப்போன இரண்டு பணியாட்களின் முகங்கள். இந்தப்புகைப்படமும் பல்வேறு ஆராய்ச்சிக்களுக்குப்பிறகும் எவ்வித முடிவும் கிட்டாத ஒரு படமாகிப்போனது.
வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995
இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்தபோது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பதுபோல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது. இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப்போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை. புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை. கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியாய் தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…!!!
பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991
இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது. (பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது). அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது. மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலைபாய்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்தப்படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு!
கொராபோரீ ராக் ஆவி – 1959
இந்தப்படம் ஆஸ்திரேலியாவின் கொராபோரீ என்ற இடத்தில் 1959ம் ஆண்டு ஆர்.எஸ்.ப்ளேன்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டு இன்றளவும் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.
HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919
ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ. இந்தப்போட்டாவில் பின்னனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக். கூடுதல் தகவல்;- இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதேக்கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார். அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்!!!
நியூபை சர்ச் துறவி
இங்கிலாந்தில் KF.லார்டு என்பவரால் நார்த் யார்க்ஸைரில் உள்ள அவரது சர்ச்சில் எடுக்கப்பட்ட படம் இது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் இது டபுள் எக்ஸ்போசரோ, ஏமாற்று வேலையோ இல்லை என்று நிரூபிக்கப்பட்ட படம். இதில் தெரியும் உருவம் 9 அடி உயரத்திலிருக்கும் ஒரு துறவி போலத்தெரிந்தாலும் அந்த சர்ச்சில் அது போன்றதொரு துறவியிருந்ததாய் எந்தவித வரலாறுகளும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891
ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது. 1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது. இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரிதான் என்று உறுதியளத்தினர்.
கூடுதல் தகவல்;- இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டபோது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!!!.
ப்ரௌன் லேடி போட்டோ – 1936
பிரபலமான எல்லா புகைப்படங்களுக்கும் மேலானதாய் விளங்கும் புகழ்பெற்ற புகைப்படம்தான் இது. இந்தப்படம் இங்கிலாந்தின் ரேய்ன்ஹாம் ஹாலில் 1936ம் ஆண்டு இலண்டன் மேகஸின் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்தப்புகைப்படத்தின் மற்றுமொரு சுவாராஸ்யம்… இதுவரை எடுக்கப்பட்ட பல பேய் புகைப்படங்களில் ஆவிகளின் உருவம் பிரிண்ட் போட்ட பிறகுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்படத்திலிருக்கும் உருவம் கேமரா ஷட்டரை க்ளிக் செய்யும் சில நொடிகளுக்கு முன்னர் நேரிலும் தெரிந்திருக்கிறது. இந்தப்படமும், நெகட்டிவ்வும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு இதில் எந்தவித போலித்தனமும் இன்றளவும் கண்டறியப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
உலக அளவில் மட்டுமில்லாமல், இந்தியாவிலும் பல ஆயிரக்கணக்கான பேய்க்கதைகள் உலவுகின்றன. அவற்றில் சில உங்களின் பார்வைக்கு…
பாங்கார்ஹ் கோட்டை – ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பாங்கார்ஹ் நகரம். இங்குள்ள கோட்டைக்குள் சூரியன் மறைந்தபின் சென்றவர்கள் யாரும் என்னவாயிற்று என்றே தெரியாமல் காணாமல் போவதாக செய்திகள் உலாவுகிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மறைந்த பின்னரும், சூரியன் உதிக்கும் முன்னரும் யாரும் உள்ளே போகக்கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பும் கோட்டையை விட்டு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் அலுவலகமும் ஆவிக்கதைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.
துமாஸ் பீச் – குஜராத்
குஜராத்தில் இருக்கும் துமாஸ் என்ற ஊரின் மக்கள் அங்கிருக்கும் பீச்சுக்கு செல்பவர்களை எச்சரிக்கிறார்கள். அந்த பீச்சில் ஆவிகளின் நடமாட்டமும், சிரிப்புக்குரல்களும், அலறல் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் நாய்களின் ஓயாத ஊளைச்சத்தம் உங்களுக்கான எச்சரிக்கை எனவும் கதைகள் நிலவுகின்றன. இந்துக்களின் ஈமச்சடங்குக்கள் அனைத்தும் இந்த பீச்சில் நடத்தப்படுவதால் இங்கு வீசும் காற்று முழுவதும் ஆவிகள் நிறைந்திருப்பதாகவே நம்பப்படுகிறது.
ஷானிவர்வதா கோட்டை – புனே
புனேயிலிருக்கும் ஷானிவர்வதா கோட்டையைப்பற்றி உலவும் தகவல் கேட்கும்போதே அமானுஷ்யமானதாகத்தான் தோன்றுகிறது. இந்தக்கோட்டையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 13 வயதான இளவரசர் ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் கொலை செய்யப்பட்டாராம். பல ராத்திரிகளில் அதுவும் பௌர்ணமி போன்ற இரவுகளில் நடு ராத்திரியில் இந்தக்கோட்டையிலிருந்து ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்கிறதாம். சின்னஞ்சிறிய குரலில் ‘’மாமா என்னைக்காப்பாற்றுங்கள்… என்னைக்காப்பாற்றுங்கள்’’ என்று காற்றைக் கிழித்துக்கொண்டு அலறும் அந்தக்குரல் கொலை செய்யப்பட்ட இளவரசருக்கு சொந்தமானதாக நம்பப்படுவது அமானுஷ்யமே!!!
டன்னல் நம்பர் 103 – ஷிம்லா – கால்கா ரெயில்வே லைன்
இந்த டன்னல் நம்பர் 103ன் புகைப்படத்தைப்பார்த்தாலே அமானுஷ்யமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இதைப் பற்றிய கதைகளுக்கு பஞ்சமிருக்குமா என்ன?…
இது மட்டுமில்லாமல் ‘ராஜ் கிரண் ஹோட்டல்-மும்பை, தாஜ் ஹோட்டல்-மும்பை, ஹோட்டல் சாவாய்-முசௌரி, ராமோஜி ஃபிலிம் சிட்டி-ஹைதராபாத்’’ என இன்னும் இன்னும் உலவும் பேய்க்கதைகள் ஏராளம். இன்னும் ஆழமாகத் துருவினால் நமது தெருவுக்குத்தெரு ஒரு பேய்க்கதை நிச்சயம் கிடைக்கும்.
பேய் இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம். இறப்புக்கு பின்னாலான ஆராய்ச்சிகள் முழுமையடைய வழியில்லாதவரையிலும் பேயை நம்புவதும், நம்பாமல் வாதிப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கப்போகும் சமாச்சாரமே. பேயிருந்தாலும்… இல்லாவிட்டாலும் சாமான்யன்களான நமக்கு ஒரு சிறந்த திரில்லர் அமானுஷ்ய பொழுதுபோக்கு விஷயம்!!!