1996 – உலக கோப்பை
1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை.
1987க்குப் பிறகு 1996ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிக்கொண்டது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் இலங்கையில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மறுத்துவிட்டன.
தொடர் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அங்கே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இலங்கை செல்ல இந்த இரு அணிகளும் மறுத்துவிட்டன.
இந்த தொடரில் ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. முதல் 15 ஓவர்களில் களத்தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள் 1992 தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனால் எல்லைக் கோட்டுக்கு அருகே அதிகம் பேர் நிற்க இடம் தராத இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பந்துகளைத் தூக்கி அடிக்கும் திறன் கொண்டவர்கள் போட்டிகளின் முடிவுகளை நிர்ணயிக்க ஆரம்பித்தார்கள்.
இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் இதில் சிறந்து விளங்கின. இதில் தனி முத்திரை பதித்தவர் இலங்கையின் சனத் ஜெயசூரியா. சனத் ஜெயசூர்யாவின் அதிரடி, போட்டி நடக்கும் முறையையே மாற்றி எழுதியது.
இந்நிலையில் யானை பலம் கொண்ட அவுஸ்திரேலிய அணியை லாகூரில் இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது இலங்கை. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்ய அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன் படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக டெய்லர் 74 ஓட்டங்களையும், பொண்டிங் 45 ஓட்டங்களையும், பெவன் 36 ஓட்டங்களையும் குவித்தனர்.
இலங்கை தரப்பில் மிரட்டிய டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 242 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 22 பந்துகள் மீதமுள்ள நிலையிலே 245 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான சனத் ஜெயசூரியா, கலுவிதறனா ஒற்றை ஓட்டங்களில் ஆட்டமிழக்க அந்த அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக இருந்தது.
இதனையடுத்து குருசின்ஹ 65 ஓட்டங்களையும், டி சில்வா 107 ஓட்டங்களையும், ரணதுங்கா 47 ஓட்டங்களையும் எடுக்க இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி உலகப்பார்வையை தன் பக்கம் திருப்பி சாதனை படைத்தது.