அமானுஷ்யன் – 99

கேசவதாஸ் இன்னமும் டிவி முன் தான் அமர்ந்திருந்தார். டிவியில் ராஜாராம் ரெட்டியைப் பார்த்த போது அவருக்கு ஏற்பட்ட திகைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆளுக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வி அவர் மனதில் உடனே எழுந்தது. இதற்கு ஒரே பதில் தான் இருக்க முடியும் என்பது அவருக்குப் புரிந்தது. சிபிஐயும் அமானுஷ்யன் விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ராஜாராம் ரெட்டியைப் பார்க்கப் பார்க்க மனதில் ஏதோ நெருட ஆரம்பித்தது. இந்த ஆள் தான் இப்போது சிபிஐயின் தலைவர் என்பதும் பழைய டைரக்டர் கோமாவில் படுத்து விட்டதால் இவரை நியமித்திருக்கிறார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது.

கோமா என்றாலே அவருக்கு அமானுஷ்யன் நினைவு தான் முதலில் வரும் நிலைக்கு அவர் வந்திருந்தார். ஜெயினின் கோமா அவன் கை வண்ணமாக இருக்குமோ என்ற சந்தேகம் பலக்கவே சிபிஐயில் தனக்கிருக்கும் நண்பர் ஒருவருக்கு உடனடியாக போன் செய்து பொதுவாகப் பேசுவது போல் பேசி ஜெயினின் கோமா பற்றி விசாரித்தார். ஜெயினிற்கு கோமா ஏற்பட்ட போது கூட இருந்தவர் ராஜாராம் ரெட்டி தான் என்று தெரிந்த போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனிதர் மிக நல்லவர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே என்று ஒரு கணம் யோசித்தார். ஆனால் இப்போது அமானுஷ்யன் விவகாரத்தில் அவர் இருப்பது டிவி மூலம் உறுதியாக, ஜெயினின் கோமா சமயத்திலும் பக்கத்தில் இருந்தது அவர் தான் என்ற தகவலும் தெரிய பழைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார்.

அவருக்கு அந்தக் கல்லூரியில் அமானுஷ்யனைப் பிடித்து வைத்திருக்க வேண்டும், அதனால் தான் அங்கே போக நிருபர்களை அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது. போலீஸ், மந்திரி, சிபிஐ மூன்று பெரிய அதிகார மையங்களையும் பகைத்துக் கொண்டு அமானுஷ்யன் தப்பித்து பிழைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் அதை அவரால் 100 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவன் விஷயத்தில் எதையும் அவரால் கணிக்க முடியவில்லை.

ஒருவேளை தப்பித்தால் அவன் கண்டிப்பாக அவரைத் தேடி வர வாய்ப்பு உண்டு. முன்பே மிரட்டி விட்டுப் போனவன் திரும்பி வந்தால்… என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க உடனடியாக மனைவியையும், குடும்பத்தையும் எங்காவது தூரத்திற்கு அனுப்ப முடிவெடுத்தார்.

**********

ராஜாராம் ரெட்டியை மெல்ல குறுந்தாடி மனிதன் நெருங்கினான். ராஜாராம் ரெட்டி கூட்டத்திலிருந்து மெல்ல பின் வாங்கினார். பொது இடத்தில் அவனைப் போன்ற நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியக் கூடாது என்று நினைக்கும் அவருக்கு அவன் அருகில் வந்தது எரிச்சலைத் தந்தது. ஆனாலும் அவன் நெருங்கவே, தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவனைக் கேள்விக் குறியுடன் பார்த்தார்.

அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவனை அங்கேயே விசாரிக்கச் சொல்கிறார்கள். அவனை வேறெங்காவது கூட்டிக் கொண்டு போய் விசாரித்தால் அவன் தப்பித்து விடுவான். அது மட்டும் வேண்டாம் என்கிறார்கள்”

டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்து இப்படிக் கண்டவனுக்கெல்லாம் தெரிய வைத்து அவனுக்குப் பதிலும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தன்னைத் தள்ளிய அந்த நிருபர் கூட்டத்தைராஜாராம் ரெட்டி மனதார சபித்தார். ஏதோ நிருபர் ஒருவர் ரகசியமாகக் கேட்பதற்கு அப்படியே பதில் சொல்பவர் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டு சொன்னார். “இந்த நிருபர்கள் கூட்டத்தை விட்டு நாங்களே அவன் பக்கம் போகாமல் தவிக்கிறோம். இதில் எப்படிப் போய் அவனை விசாரிப்பது? இப்போது அவனைப் பிடித்து கட்டிப் போட்டிருக்கிறோம். அவனை வேறிடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகும் போது கைகால்களை நன்றாக இறுக்கிக் கட்டி வாயையும் துணியால் மூடி தான் குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு போகப் போகிறோம். அவனிடம் விசாரித்து விட்டு உங்களிடம் பிணத்தை சீக்கிரமாய் தந்து விடுகிறோம்”

“அவனிடம் எங்களுக்கும் விசாரிக்க வேண்டி இருக்கிறது”

ராஜாராம் ரெட்டி சொன்னார். “அப்படியானால் நாங்கள் விசாரித்து விட்டு உங்களிடம் அவனை ஒப்படைத்து விடுகிறோம். அப்புறம் உங்கள் பாடு, அவன் பாடு” என்றவர் அதற்கு மேல் அவனிடம் பேச விரும்பாமல் எக்ஸிடம் போய் ஏதோ கலந்தாலோசிப்பது போல் பேசினார்.

குறுந்தாடிக்காரன் தனியாகப் போய் லாட்ஜில் இருந்த ஆளிற்குப் போன் செய்து ரெட்டி சொன்னதைச் சொன்னான். ரெட்டி சொன்னது போல நகர முடியாதபடி இறுக்கிக் கட்டி எடுத்துச் சென்றால் அமானுஷ்யன் எதுவும் செய்ய முடியாது என்ற யதார்த்த நிலை லாட்ஜில் இருந்த ஆசாமிக்கும் புரிந்தாலும் ஏனோ ஒரு இனம் புரியாத அவநம்பிக்கையும் கூடவே வந்தது. அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னான். “என்ன ஆனாலும் அவர்கள் அவனைக் கூட்டிக் கொண்டு போகும் போது நீங்களும் கூடவே போங்கள். அவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள்”

ஒரு நிருபர் எக்ஸையும், ரெட்டியையும் பார்த்து கேள்வி கேட்டார். “இப்போது இந்தக் கல்லூரியில் இருக்கலாம் என்று நினைக்கும் தீவிரவாதி அல்லது தீவிரவாதிகள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்?”

ரெட்டி சொன்னார். “அதைப் பற்றி தான் நான் இவரிடமும் கேட்டுக் கொண்டு இருந்தேன். தீவிரவாதிகள் இருப்பது உண்மை தானா, இருந்தால் இருப்பது ஒரு ஆளா, இல்லை பல ஆட்களா, அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், என்று போலீசுக்கும் தெரியவில்லை. கல்லூரியின் உள்ளே சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவரம் தெரிந்து விடும்.”

இன்னொரு நிருபர் கேட்டார். “இது போல் எத்தனையோ பொய் புகார்கள் வருகின்றன என்று நேற்று தான் போலீஸ் அதிகாரிகள் சொன்னார்கள். அப்படி இருக்கிற போது இதை மட்டும் உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பி வந்து சோதனை போடுவதற்குக் காரணம் ஏதாவது இருக்கிறதா?”

வேறொரு நிருபர் கேட்டார். “ஒரு வேளை வெடிகுண்டு ஏதாவது வைத்திருப்பார்களோ?”

ரெட்டிக்குக் கோபம் பொங்கி வந்தது. உண்மையான செய்திகளைப் போடுவதற்கு பதிலாக செய்திகளை உருவாக்கிப் போடுவது தான் இவர்களுடைய வேலையோ? இவர்கள் அடிக்கும் கூத்துக்கு எல்லையே இல்லையா? கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். “எல்லாவற்றையும் சிறிது நேரத்தில் அறிந்து கொள்ளலாம். அதுவரையில் பொறுமையாக இருங்கள்”

ரெட்டி எக்ஸை தனியாக அழைத்துக் கொண்டு பேசினார். “என்ன செய்யலாம். இந்த கூட்டம் நம்மை விடுவதாயில்லை”

“மொத்தத்தில் என் நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். கேசவதாஸ் சாருக்குத் தெரியாமல் இந்த வேலைகளை எல்லாம் செய்கிறோம். இப்போது டிவியிலேயே வந்து விட்டது. என்ன சொல்வாரோ தெரியவில்லை. அந்த அமானுஷ்யனை சாகடிக்கும் முன்னால் நம்மை சாகடித்து விடுவான் போல் இருக்கிறது”

“கேசவதாஸ் பற்றி கவலைப்படாதீர்கள். மந்திரியைக் கை காண்பியுங்கள். அவர் அடங்கி விடுவார். இப்போது நாம் இங்கே மாட்டிக் கொண்டிருக்கிறோம். எப்படி தப்பிப்பது என்று பாருங்கள். அந்தக் கல்லூரிக்குப் பின் பக்கம் என்ன இருக்கிறது? அந்த வழியாக அவனைக் கூட்டிக் கொண்டு போக முடியுமா?”

“கல்லூரிக்குப் பின் பக்கம் பெரிய மதில் சுவர் இருக்கிறது. பத்தடிக்கும் மேல் இருக்கும். அதற்குப் பின்னால் ஒரு முள் காடு இருக்கிறது. அதையும் தாண்டினால் சாக்கடை. அதனால் பின் பக்கம் போவதை மறந்து விடுங்கள். முன்னால் இந்த சனியன்களைத் தாண்டி தான் போக வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு வழியை யோசியுங்கள்”

ராஜாராம் ரெட்டி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

நடப்பதை எல்லாம் தூர இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சலீம் விரைவாக அங்குள்ள நிலவரத்தைக் கணித்து தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்தான். அமானுஷ்யன் உண்மையிலேயே கல்லூரிக்குள்ளே இருந்து தப்பிப்பது சாத்தியம் என்றால் அவனுக்கு வேலை. அமானுஷ்யன் தப்பிப்பானா? மாட்டானா? எப்படியாவது தப்பிக்கிறான் என்று வைத்துக் கொண்டால் என்ன செய்வான் என்று யோசித்தான். இந்தக் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விட்டால் வெகு சுலபமாக அவன் அங்கிருந்து மாயமாகி விடுவான். ஆனால் அந்தக் கல்லூரியில் இருந்து அந்த போலீஸ் பட்டாளம் வேனோடு நின்று கொண்டிருக்கும் இடம் நிறைய தூரம் இருக்கிறது. அவன் வருவது தெரிந்தால் அத்தனை பேரும் திரும்பி சுட்டு விடுவார்கள். அதனால் அவன் கூட்டத்தோடு கலந்து விடுவது இப்போதைக்கு முடியாத காரியம். ஒருவேளை இந்த நிருபர் கூட்டம் கல்லூரி வரை போய் சூழ்ந்து கொண்டால் மட்டுமே அவன் இவர்களோடு கலந்து விட முடியும். ஆனால் என்ன ஆனாலும் இவர்களை கல்லூரி பக்கம் விடுவதில்லை என்று போலீஸ் உறுதியாக இருப்பது தெரிகிறது? கல்லூரிக்குப் பின் பக்கம் என்ன இருக்கிறது என்று அங்கிருந்த சிலரிடம் விசாரித்தான். அவர்கள் சொன்னார்கள். மதில்சுவர் முள் காடு, சாக்கடை எல்லாம் மற்ற நபர்களை தடுத்து நிறுத்தலாம். ஆனால் அமானுஷ்யனை….?

அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். கிட்டத்தட்ட அரைத் தூக்கத்திற்குப் போய் விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவன் கடந்த கால நினைவு ஒன்று மின்னலாக வந்து போனது.

அவன் ஒரு வங்கி முன் நின்று கொண்டிருக்கிறான். அந்த வங்கிக்கு எதிரில் ஒரு பெரிய சர்ச் இருந்தது. யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு வங்கிக்குள் அவன் நுழைகிறான்.

வங்கி அதிகாரி ஒருவர் அவனை வரவேற்றார். “வாருங்கள் அஜீஸ் சார். டெபாசிட் ஏதாவது போடுகிறார்களா? இல்லை வழக்கம் போல லாக்கரை உபயோகப்படுத்த வந்திருக்கிறீர்களா?”

அக்‌ஷய் சிரித்தான். “கண்டிப்பாக டெபாசிட் போடுகிறேன். எனக்கு வர வேண்டிய தொகை இன்னும் ஏனோ வரவில்லை. வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை உங்களுக்கு டெபாசிட் தருவது தான். இப்போது லாக்கர் வேலையாகத் தான் வந்திருக்கிறேன்.”

அதிகாரி சிரித்தபடி சொன்னார். “சரி. இந்த ஊரில் எங்கள் வங்கி மாதிரி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிற வங்கி வேறெதுவும் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சீக்கிரம் எங்களுக்கு பெரிய தொகை டெபாசிட் தரவேண்டும். உங்கள் லாக்கர் எண் என்ன?”

நினைவுச் சங்கிலி மறுபடி அறுந்தது. அக்‌ஷய் கண் விழித்தான். நிலவரத்தை மறுபடி கவனித்தான். அவன் அருகில் இருந்த போலீஸ்காரர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மிக அருகிலேயே இருந்தார்கள். அறைக்கு வெளியே இருந்த போலீஸ்காரர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர்கள் பேசியதைக் காது கொடுத்தான்.

“இன்னும் அங்கே கூட்டம் கலையவில்லையா?”

“இல்லை.”

“கூட்டம் இங்கே வராதே”

“நம் ஆட்கள் வர விட மாட்டார்கள்”

“நம் ஆட்கள் எங்கே நிற்கிறார்கள்?”

“அரை கிலோமீட்டர் தள்ளி”

இவர்களிடமிருந்து தப்பித்தாலும் முன் வழியே போக முடியாது என்று அக்‌ஷய் கணக்குப் போட்டான். அரை கிலோ மீட்டர் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத் தூவி கடந்து விட முடியாது! தப்பித்துப் போனாலும் பின்னால் தான் போக வேண்டும். பின்னால் பெரிய சுவர் இருக்கிறது . அதற்கும் பின்னால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை…

அவர்கள் அவனைப் பார்ப்பதை உணர்ந்து மீண்டும் அவன் கண்களை மூடினான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top