ராஜாராம் ரெட்டியின் முகத்தில் பேயறைந்த களை தெரிந்தது. மந்திரி தன்னை மிரட்டுகிறாரா இல்லை நிஜமாகவே தான் நினைப்பதைச் சொல்கிறாரா என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.
மந்திரி தாழ்ந்த குரலில் சொன்னார். “அவர்கள் நமக்கு பணம் நிறையவே தந்திருக்கிறார்கள். வாங்கிய பணத்திற்கு அவனைப் பிணமாக ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லா விட்டால் அவனுடைய அம்மாவையும், அந்தப் பையனையுமாவது ஒப்படைக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்யா விட்டால் அவர்கள் எதிரிகள் பட்டியலில் நம் பெயர் தான் முதலிடத்திற்கு வரும் என்கிறார்கள். தாடிக்காரனே பயத்துடன் தான் இருக்கிறான் என்பது அவனைப் பார்த்தாலே தெரிகிறது. ’இந்த தடவை கோட்டை விட்டு விடாதீர்கள்’ என்று சொல்லி கெஞ்சுகிறான்….”
ராஜாராம் ரெட்டி மந்திரியை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார். ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சிறிது சிறிதாய் அவருக்குக் குறைய ஆரம்பித்திருந்தது.
மந்திரி சொன்னார். “அவர்கள் கேட்கிற மாதிரி அந்த கிழவியையும், பொடியனையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு என்னவோ செய்யுங்கள் என்று விலகிக் கொண்டால் என்ன?”
“அவன் என்ன சொல்கிறான், எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் அவசியம் நமக்கு நிறையவே இருக்கிறது. அவன் ஏதாவது ஆதாரம் வைத்திருந்தால் அதையும் வாங்கி அதில் நம்மைப் பற்றிய விவரம் என்ன இருக்கிறது, அதை அழிப்பது எப்படி என்றெல்லாம் யோசித்து செய்ய வேண்டி இருக்கிறது. அவர்களிடம் இந்த இரண்டு பேரையும் ஒப்படைத்தால் அவர்கள் அவர்களுடைய பாதுகாப்பையும், பழிவாங்குவதையும் தான் பார்ப்பார்களே ஒழிய நம்மைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதனால் தான் அமானுஷ்யனை நாமே கையாள்வது நமக்கு முக்கியமாக இருக்கிறது”
மந்திரிக்கு அவர் சொல்வது ஆம் என்று பட்டது. “அப்படியானால் நாளை இரவுக்குள் அவன் பிணத்தை அவர்களிடம் ஒப்படைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்யுங்கள். இதில் நாம் சின்ன தவறு கூட செய்து விடக்கூடாது” என்று சொன்னார்.
ரெட்டி முழு நம்பிக்கையோடு சொன்னார். “நம் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லை. பயப்படாதீர்கள்”
“நம் திட்டத்தில் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் எமகாதகன் என்பதை நினைக்கையில் தான் எனக்கு உதறலாக இருக்கிறது” என்று அங்கலாய்த்த மந்திரி ஒரு முக்கிய சந்தேகத்தை எழுப்பினார். “அந்த சைத்தான் நம்மிடம் வரும் முன் போனில் சொன்ன அந்த இடங்களைப் பற்றி ரகசியமாய் தெரிவித்து விட்டு வந்தால் என்ன செய்வது?”
“அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதைப் பெரிதாய் யாரும் நினைக்காதபடி நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொல்லி புன்னகைத்தார்.
ஒரு நிமிடம் அமைதியாக நின்று யோசித்து விட்டு அக்ஷய் சஹானாவிற்குப் போன் செய்யத் தீர்மானித்தான். இன்னொரு முறை அவளிடம் பேச அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்குமா என்று அவனுக்கு நிச்சயமில்லை. அவளிடம் பேசாமலேயே போய் விட நேர்ந்தால் அவனையே அவனால் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை. மது மூலமாக அவளுக்குத் தகவல் அனுப்பி இருந்தாலும் அவள் செய்த உதவிகளை நினைத்துப் பார்க்கையில் அவள் மகன் திரும்ப வருவான் என்று நேரடியாகவே உறுதிமொழி கொடுப்பது தான் நியாயம் என்று தோன்றியது. எண்களை அழுத்தினான்.
சஹானா பேசினாள். “ஹலோ”
அவள் குரலைக் கேட்ட போது மனதில் ஒரு சிலிர்ப்பை அக்ஷய் உணர்ந்தான்.
உடனடியாக எத்தனையோ உணர்ச்சிகள் அவனுள் அலைபாய்ந்தன. “நான் அக்ஷய் பேசுகிறேன்”
அவள் திடீரென்று ஊமையானது போல் தோன்றியது.
“சஹானா…..” அக்ஷய் அழைத்தான்.
“….. சொல்லுங்கள்”
“வருண் நலமாய் இருக்கிறான். நாளைக்கு உங்களிடம் வந்து சேர்வான். இந்த இரண்டு நாளில் நீங்கள் எவ்வளவு கவலைப்பட்டு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் …. நான் இப்படி எல்லாம் ஆகும் என்று சிறிதும் நினைக்கவில்லை. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்”
அவளும் பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்ததால் மறுபடியும் பேச்சிழந்தாள். அவனை வரவழைக்க வேண்டி தான் வருணையும் அவன் தாயையும் கடத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் வருண் நாளை வருவான் என்று அவன் உத்தரவாதம் அளிக்கிறான் என்றால் இவன் அவர்களிடம் போகிறான் என்று தானே அர்த்தம். மகன் வரவில் தாயாக அவள் ஆனந்தப்பட்டாலும் அவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ளப் போகிறான் என்பதை நினைக்கையில் இதயத்தின் ஆழத்தில் இரத்தம் கசிந்தது.
அவனுக்கு அவள் மௌனம் கோபமாகத் தோன்றியது. அந்தக் கோபமும் நியாயமாகத் தோன்றியது. வருத்தத்துடன் சொன்னான். “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது….”
அவளுக்கு உண்மையாகவே கோபம் வந்தது. அவனுக்கு குண்டடி பட்டு விழுந்த போது அவன் இழந்து போனது பழைய நினைவுகளை மட்டுமல்ல. அடுத்தவர்கள் மனதைப் புரிந்து கொள்கிற சக்தியையும் கூட இழந்து விட்டது போலத் தோன்றியது. ஆனால் அவன் தற்போது இருக்கிற ஆபத்தான நிலையில்- இனியொரு முறை அவன் பேசக் கிடைப்பானோ இல்லையோ என்ற சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலையில்- தன் கோபத்தைக் காட்ட விரும்பாமல் சொன்னாள். “எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. இது எதுவுமே உங்களால் நடந்ததல்ல. முன்பின் தெரியாத போதே அவன் உயிரை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள். அதனால் இப்போதும் அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…..”
அவளுடைய நம்பிக்கை அவன் மனதை நெகிழ வைத்தது. “நன்றி சஹானா..”
அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. பேச எதுவுமே இல்லாத போது மட்டும் தான் மௌனம் நிலவும் என்பதில்லை. பேச ஏராளமாக இருக்கும் போதும் சில சமயங்களில் சிலரால் பேச முடிவதில்லை. ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் அவள் சொன்னாள். “மது சிறிது நேரத்திற்கு முன் போன் செய்தான். என்ன உதவி வேண்டுமானாலும் அவனிடம் கேட்க வேண்டுமாம். நீங்கள் போன் செய்தால் சொல்லச் சொன்னான்.”
“மது சொன்னதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நன்றி சொன்னேன் என்று அவனிடம் சொல்லி விடுங்கள்”
“அக்ஷய்! அது அவன் வெறும் வார்த்தைக்காக சொன்னதல்ல. நிஜமாகவே ஆத்மார்த்தமாக சொன்னது. நீங்கள் ஏதாவது வேலை சொன்னால் அவன் சந்தோஷப்படுவான். உங்களுக்கு இந்த நேரத்தில் ஏதாவது விதத்தில் அவன் உபயோகமாகலாம்”
“சரி சஹானா. தேவைப்பட்டால் கண்டிப்பாகச் சொல்கிறேன்”
“அத்தை உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். பேசுங்கள்”
செல்போன் கைமாறி மரகதத்தின் குரல் கேட்டது. “அக்ஷய்! எப்படி இருக்கிறாய்?”
“நன்றாக இருக்கிறேன் பெரியம்மா” என்று புன்னகையுடன் சொன்னான் அக்ஷய்.
“உனக்கு உன் குடும்பம் பற்றி எல்லாமே தெரிந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். உனக்கு கல்யாணம் ஆகி விட்டிருந்ததா?”
இந்தக் கேள்வியை இந்த அவசரத்தில் மாமியார் கேட்டது தேவையில்லாதது என்று சஹானாவிற்குத் தோன்றினாலும் அந்தக் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்பதை அறிவதற்குள் இதயம் வேகமாய் படபடத்தது.
“இல்லை பெரியம்மா”
மரகதம் ஒரு பெரும் நிம்மதியை உணர்ந்தாள். மருமகளைப் பார்த்து ‘ஆகவில்லையாம்’ என்று வாயசைத்து சைகையுடன் சொன்னாள்.
அக்ஷய் மரகதத்திடமும் சொன்னான். “பெரியம்மா வருண் நாளைக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவான். என்னால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நீங்கள் மன்னிக்க வேண்டும்”
மரகதம் குரல் தழுதழுக்க சொன்னாள். “நீ சொன்ன பிறகு அவன் வந்து விடுவான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. நீயும் திரும்பி வர வேண்டும் அக்ஷய். நாங்கள் எல்லாருமாய் சேர்ந்து உனக்காகவும் காத்துக் கொண்டிருப்போம்”
அக்ஷய் எதுவும் சொல்ல முடியாமல் போனை வைத்து விட்டான்.
மரகதம் செல்போனை மருமகளிடம் கொடுத்து விட்டு தளர்ச்சியுடன் சமையல் அறைக்குள் தஞ்சமடைந்தாள். சிறிது நேரத்தில் அவள் வேலை செய்தபடியே கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது சஹானா காதில் விழுந்தது. இந்த கந்தர் சஷ்டி கவசம் அவனுக்காக என்று அவளுக்குப் புரிந்த போது கண்கள் ஈரமாயின.
சொன்னபடி மகேந்திரன் முக்கால் மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்தான். அவனை யாரும் பின் தொடரவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்ட அக்ஷய் அவனை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் அக்ஷய் அவனிடம் அதிகம் பேசவில்லை. மகேந்திரன் கேட்ட ஓரிரு கேள்விகளுக்கும் அவன் தந்தி வாசகங்களாக பதில் சொன்னான்.
ஓட்டல் அறையில் ஆனந்தைப் பார்த்த போது மகேந்திரன் திகைத்துப் போனான். அவனை உட்கார வைத்து ஆனந்த் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்ன போது மகேந்திரனுக்கு ஏதோ விறுவிறுப்பான ஆங்கிலத் திரைப்படக் கதை கேட்பது போல இருந்தது. தாயின் கடத்தல் பற்றியும், அக்ஷயை ஒப்படைக்க வேண்டி இருப்பதையும் சொன்ன போது ஆனந்தின் குரல் உடைந்தது. ஆனால் அக்ஷய் யாருடைய கதையையோ யாரோ சொல்கிறர்கள் என்பது போல அமைதியாக இருந்தான்.
கடைசியில் ஆனந்த் சொன்னான். “…. இப்போதைக்கு நம்மிடம் இருப்பதெல்லாம் அனுமானங்கள் தான். ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் டெல்லி இடங்கள் வெடிகுண்டு வெடிக்கப் போகும் இடங்களாக இருக்கலாம். ஆனால் அது எப்போது நடக்கப் போகிறது என்றும், யார், ஏன் செய்யப்போகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. எதிரிகளின் வேகத்தைப் பார்த்தால் அது சீக்கிரமாகவே நடக்கலாம் என்று தெரிகிறது….”
மகேந்திரன் சொன்னான். “எதற்கும் அந்த இடங்களில் வெடிகுண்டு வெடிக்கலாம் என்று முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்வது நல்லதல்லவா?”
“ஆரம்பத்தில் ஜெயின் சொல்லி, பொத்தாம் பொதுவாக இடங்களைச் சொல்லாமல் டெல்லியில் முக்கிய இடங்களில் குண்டு வைக்கப்பட இருக்கிறது என்று யாரோ தெரிவிப்பது போல தெரிவித்தோம். அது திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போல ஆகிவிட்டது. இப்போது சிறிது நேரத்திற்கு முன் இந்த இடங்களைச் சொல்லியே பெயர் தெரிவிக்காமல் தகவல்களைப் போனில் சொன்னேன். ஆனால் ….”
“ஆனால்….?”
ஆனந்த் ஏதோ சொல்ல வாயைத் திறந்தவன் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்து ஒலியை அதிகப்படுத்தினான். “…கடந்த 24 மணி நேரமாக டெல்லி, மும்பை, சென்னை, கல்கத்தா போன்ற நகரங்களில் வெடிகுண்டு வைக்கப்பட இருக்கிறது என்று கூறி சரமாரியாக போன்கால்களும், மொட்டைக் கடிதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தகவலும் மற்ற தகவலுக்கு முரணாக இருக்கின்றன. போலீசார் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று தகவல் பொய் என்று அறிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது போன்ற பொறுப்பற்ற பொய்யான தகவல்களை தர ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளது போல் தெரிகிறது. அந்த நபர்களைக் கண்டு பிடித்து சட்டப்படி தண்டிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது….”
ஆனந்த் ஒலியைக் குறைத்து விட்டு சொன்னான். “அக்ஷய் ஒருவேளை சொல்லி விடக்கூடும் என்று சந்தேகப்பட்டு அவர்கள் முந்திக் கொண்டு ஏகப்பட்ட பொய்யான செய்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள். அத்தனை செய்திகளுக்குள் நடுவில் இந்த உண்மையான செய்தியும் பொய்யானதாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் இப்போது நேரம் அதிகம் இல்லை. அக்ஷயிற்கு வந்திருக்கும் நினைவுகளும் அரைகுறையாகத் தான் இருக்கின்றன. நம் எதிரிகளோ புத்திசாலிகளாகவும், அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்….”
மகேந்திரன் அழுத்தமாகச் சொன்னான். “இந்தக் குறுக்கு புத்தி கண்டிப்பாக ரெட்டியினுடையது தான். அதில் சந்தேகமில்லை”
ஆனந்த் சொன்னான். “இருக்கலாம். இப்போது இந்த சிக்கலான சூழ்நிலையில் நாம் இனி என்ன செய்வது என்பது தான் கேள்வி”
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “முதலில் அம்மாவையும் வருணையும் காப்பாற்ற வேண்டும். அடுத்ததைப் பிறகு யோசிப்போம்”
மகேந்திரன் சொன்னான். “அதில் என்ன பிரச்னை இருக்கிறது? உன்னை ஒப்படைத்தால் ஆனந்திடம் உங்கம்மாவையும், வருணையும் ஒப்படைப்பதாய் அவர்கள் சொல்லி இருக்கிறார்களே. உண்மையான பிரச்னை என்ன தெரியுமா? உன்னை அவர்கள் மூன்று நாட்கள் வைத்திருந்து அனுப்பி விடுவதாகச் சொன்னதை நம்ப முடியவில்லை. உன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது தான் முக்கியமாய் நாம் கவனம் செலுத்த வேண்டியது”
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “என்னைப் பற்றி யாரும் கவலைப்படாதீர்கள். நான் சமாளித்துக் கொள்வேன். குறுக்கு புத்தியும், அறிவுக்கூர்மையும் இருக்கிற நம் எதிரிகள் அம்மாவையும், வருணையும் ஒப்படைப்பதில் தான் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்களைக் காப்பாற்றுவதில் தான்….”
(தொடரும்)