“தெரியவில்லை. ஆனால் அந்தப் பெயரில் பேச எழுந்தது நான் தான்”
“என்ன பேசினாய் என்பது நினைவுக்கு வரவில்லையா?”
அக்ஷய் இல்லை என்று தலையசைத்தான். திரும்பவும் அந்த அறிவிப்பை எண்ணிப் பார்த்தான். “நம் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், சிறந்த பேச்சாளருமான அப்துல் அஜீஸ் அவர்களை பேச அழைக்கிறேன்”. அது என்ன இயக்கம்? யாரந்த அப்துல் அஜீஸ்? வேறொரு ஆளின் இடத்தில் அவன் ஏன் பேசப் போனான்? ஏன் அவன் அப்துல் அஜீஸ் அல்ல என்பதை மற்றவர்கள் கண்டு பிடிக்கவில்லை? கேள்விகள் சரமாரியாக அவனுக்குள்ளே எழுந்தன. ஆனால் பதில் தான் எதற்கும் கிடைக்கவில்லை.
ஆனந்த் அடுத்த கேள்வியைக் கேட்டான். “அந்த ‘பென் டிரைவ்’ முக்கியம் என்று நீ உணர்கிறாய் என்றால் அதில் ஏதோ முக்கியமான விஷயங்கள் இருந்திருக்க வேண்டும். நீ அந்த ப்ரவுசிங் செண்டரில் இருந்து வெளியே வரும் போது அது உன்னிடம் இருக்கிறது. அதில் உள்ள தகவல்களை அங்கே நீ யாருக்காவது அனுப்பி விட்டு வந்தாயா, இல்லை அந்த ப்ரவுசிங் செண்டரில் தகவல்களை சேகரித்து வந்தாயா? ஏதாவது நினைவுக்கு வருகிறதா யோசித்துப் பார்”
அக்ஷய் யோசித்துப் பார்த்தான். பின் சொன்னான். “தெரியவில்லை. ஆச்சார்யாவிடம் நான் பேசியதும் முன்பா பின்பா என்று கூடத் தெரியவில்லை. தனித்தனியாக நினைவுக்கு வந்ததால் இதில் எது முன்பு நடந்தது, எது பின்பு நடந்தது என்று தெரியவில்லை ஆனந்த். ஆனால் பிறகு ஆச்சார்யாவின் கம்ப்யூட்டரை அவர்கள் எரித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது அந்த ‘பென் டிரைவி’ல் உள்ள தகவல்களை நான் கண்டிப்பாக ஆச்சார்யாவிற்கு அனுப்பி இருந்திருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.”
“ஒருவேளை ஆச்சார்யா டில்லியில் சில இடங்களைக் குறித்து வைத்திருந்தாரே அது கூட அந்தத் தகவல்களில் இருந்து எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது” ஆனந்த் சொன்னான்.
“இருக்கலாம்”
“அந்த ‘பென் டிரைவ்’ என்ன ஆயிற்று? நீ அந்த புத்த விஹாரத்தில் விழுந்த போது உன்னிடம் அது இருந்திருக்கலாமோ?”
“அந்த சமயத்தில் உடுத்தியிருந்த உடையைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இருக்கவில்லை ஆனந்த். ஒரு வேளை நான் கீழே விழும் சமயத்தில் என்னிடம் இருந்திருந்தால் அது இமயமலைச்சாரலில் எங்காவது கீழே விழுந்திருக்கலாம்.”
ஆனந்த் தம்பியையே சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு கேட்டான். “உன் உள்மனம் என்ன சொல்கிறது?”
“அந்த ப்ரவுசிங் செண்டரில் இருந்து வெளியே வந்த போது என்னைப் பின் தொடர்ந்து யாரோ வந்தார்கள் என்று எனக்குத் தோன்றியதல்லவா? அதன் பிறகு உடனடியாக அவர்கள் என்னைத் தாக்கி இருந்தால் மட்டுமே நான் அந்த பென் டிரைவைப் பத்திரப்படுத்தாமல் இருந்திருப்பேன். எனக்கு சிறிது நேரம் கிடைத்து இருந்தால் கண்டிப்பாக அதை எங்கேயாவது நான் கண்டிப்பாக ஒளித்து வைத்திருப்பேன்…”
“நீ இமயமலைச்சாரலில் சுடப்பட்டு விழுந்தது நடு இரவில். அந்த மலைச்சாரலில் அந்த பகுதியில் ப்ரவுசிங் செண்டர் இருக்கிற அளவுக்கு நகரம் எதுவும் இருக்கிற மாதிரியும் தெரியவில்லை. அதனால் நீ சுடப்படுவதற்கும் ப்ரவுசிங் செண்டருக்கு போன அந்த நிகழ்வுக்கும் இடையே கால இடைவெளி கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால் அந்த ‘பென் டிரைவை’ பத்திரப்படுத்தி வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது அக்ஷய்”
அக்ஷய் ‘இருக்கலாம்’ என்று தலையசைத்தான்.
“அப்படி நீ எங்கேயாவது ஒளித்து வைத்திருந்தால் எந்த மாதிரியான இடங்களில் ஒளித்து வைத்திருக்கலாம் என்று யோசித்துப் பாரேன்”
அக்ஷயிற்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.
ஆனந்த் கேட்டான். “ஒருவேளை நீ தங்கியிருந்த ஓட்டலில் எங்காவது வைத்திருக்கலாமோ?”
“எல்லோருக்கும் வெளிப்படையாக சந்தேகம் வருகிற எந்த இடத்திலும் நான் வைத்திருக்க மாட்டேன். நான் அந்த ஓட்டலில் வைத்திருந்தால் கூட அங்கிருந்து வரும் போது அதையும் எடுத்துக் கொண்டு தான் வந்திருப்பேன்.”
“அந்த ஓட்டல் பெயர் அல்லது ஓட்டல் இருக்கும் ஊர் எதாவது நினைவுக்கு வருகிறதா?”
“இல்லை”
ஆனந்த் ஏமாற்றம் அடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னான். “பரவாயில்லை விடு. இந்த அளவாவது நினைவு வந்ததே. இதை வைத்துக் கொண்டு ஏதாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். சரி இனி என்ன செய்யலாம் என்று யோசிப்போம்”
அக்ஷய் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பகல் 2.12 என்று காண்பித்தது. ஆனந்திடம் சொன்னான். “ஆனந்த் நாளை காலையில் அந்த இடத்திற்கு நான்கு மணிக்குப் போய் சேர வேண்டுமானால் இங்கே இருந்து நான் காலை மூன்று மணிக்கே கிளம்ப வேண்டும். அது வரை நமக்கு கிடைக்கிற நேரத்தை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
“நானும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இனி என்ன செய்யலாம் சொல்”
“நம்பிக்கைக்குரிய மூன்றாம் நபர் யாராவது நமக்கு உதவிக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது”
“என் நெருங்கிய நண்பர்கள் எல்லாம் சென்னையில் தான் இருக்கிறார்கள். வேண்டுமானால் அவர்களைக் கூப்பிடலாம்”
“அங்கே இருந்து வரவழைப்பதை விட இங்கேயே யாரையாவது அழைத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் மகேந்திரனை உதவிக்குக் கூப்பிட்டுக் கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது ஆனந்த். இந்த மாதிரி நேரத்தில் அவனை மாதிரி ஆட்கள் நமக்கு நிறையவே உதவியாக இருக்க முடியும்”
ஆனந்திற்கு மகேந்திரன் மேல் இன்னமும் முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் தம்பியின் ஆலோசனைக்குத் தலை அசைத்தான். “கண்டிப்பாக நாம் நம்முடன் அவனைக் கூட்டிக் கொண்டு போக முடியாது. அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். அது அம்மாவுக்கும் வருணுக்கும் தான் ஆபத்து. ஆனால் வேறு ஏதாவது விஷயத்தில் அவன் உதவி செய்ய முடியும். நான் இன்னொரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. நீ தியானத்தில் இருக்கும் போது ரெட்டி போன் செய்தார்…..”
ஆனந்த் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட அக்ஷயிற்கு ஒரு சந்தேகம் வந்தது. “ரெட்டி மகேந்திரனை வேவு பார்க்க ஆள் ஏற்பாடு செய்வார் என்று உனக்குத் தோன்றுகிறதா?”
“அவர் என் திருப்திக்காகத் தான் மகேந்திரனைக் கண்காணிக்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். அவர் தேவை இல்லாமல் அவனை வேவு பார்க்க ஆளை ஏற்பாடு செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன்”
“சரி நான் போய் அவனிடம் பேசி விட்டு வருகிறேன்” என்ற அக்ஷய் எழுந்தான். ஆனந்தின் செல்போன் ஓட்டுக் கேட்கப்படுகிறது என்ற சந்தேகம் இருப்பதால் வழக்கம் போல் தெருவில் உள்ள பொதுத் தொலைபேசியில் மகேந்திரனை அழைத்துப் பேசப் போனான்.
.மகேந்திரன் அவன் அழைத்த நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் தான் இருந்தான். அக்ஷய் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பே குரலை வைத்தே கண்டுபிடித்த மகேந்திரன் ஆர்வத்துடன் சொன்னான். “சொல் நண்பா.”
அக்ஷயிற்கு அவன் நண்பா என்று அழைத்தது மனம் நெகிழ வைத்தது. “நீ இப்போது எங்கிருக்கிறாய்?”
“ஆபிசில் தான் இருக்கிறேன் நண்பா. சொல்”
“அன்று நீ என்ன உதவி வேண்டுமானாலும் உன்னிடம் கேட்கலாம் என்று சொன்னாய். இப்போது எனக்கு உன் உதவி தேவைப்படுகிறது. செய்வாயா?”
“சொல். என்ன செய்ய வேண்டும்?” ஆர்வத்துடன் அவன் கேட்டான்.
“நேரில் வர முடியுமா? பேச நிறைய இருக்கிறது”
“கண்டிப்பாய் வருகிறேன். எங்கே வர வேண்டும் சொல். இப்போதே வருகிறேன்”. அவனுக்கு உண்மையாகவே அக்ஷயை மீண்டும் ஒரு முறை சந்திப்பதில் உற்சாகம் இருந்தது. அந்த அபூர்வ மனிதனுக்கு உதவி செய்வதிலும், நண்பனாக ஆக்கிக் கொள்வதிலும் அவனுக்கு நிறையவே ஆர்வம் இருந்தது.
அக்ஷய் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு வரச் சொல்லாமல் இரண்டு வீதிகள் தள்ளி ஒரு இடத்திற்கு வரச் சொன்னான். “முக்கால் மணி நேரத்திற்குள் வருகிறேன்” என்று உறுதியளித்த மகேந்திரன் குரலை தாழ்த்திக் கொண்டு சொன்னான். “ராஜாராம் ரெட்டியை எங்கள் டைரக்டராக தற்காலிகமாக நியமித்திருக்கிறார்கள்”
“தெரியும்”
“எங்களுக்கே இரண்டு நிமிடம் முன்னால் தான் தகவல் வந்தது. அதற்குள் எப்படி உனக்கு”
“நேரில் வா பேசலாம். அப்புறம் …மகேந்திரன்”
“சொல்”
“வர சம்மதித்ததற்கு நன்றி” அக்ஷய் போனை வைத்து விட்டான்.
மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவன் தானாக உதவிக்கு வர சம்மதித்தது ஒருவிதத்தில் அக்ஷயிற்கு ஆறுதலாக இருந்தது. ஆபத்து மரணத்தில் கூட முடியலாம். அதில் அவனுக்கு வருத்தமில்லை. அவனுக்கு நெருங்கியவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று இப்போதும் நினைத்தான். மரணத்தையும் நெருங்கியவர்களையும் சேர்த்து நினைத்த போது சஹானா நினைவு வந்தது. போன் செய்து அவளிடம் பேசி விட்டுச் சென்றால் என்ன என்று தோன்றியது. இனி எப்போதுமே பேச முடியாமல் போனாலும் போகலாம்…..
*******
மந்திரி குரலில் என்றுமில்லாத ஒரு பயம் தொனித்தது. ராஜாராம் ரெட்டியிடம் சுருக்கமாகத் தான் சொன்னார். “நேரில் வாருங்கள். பேச வேண்டும்”
ராஜாராம் ரெட்டி போன போது மந்திரி பதட்டத்தோடு இருந்தார்.
ரெட்டி கேட்டார். “என்ன விஷயம்?”
“நாளைக்கு இரவிற்குள் அமானுஷ்யனைப் பிணமாகத் தரச் சொல்லி கேட்கிறார்கள்…. தாடிக்காரன் இப்போது தான் சொல்லி விட்டுப் போனான்.”
“அவர்கள் ஆரம்பத்தில் இருந்து அதைத் தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு ஏன் இப்படி பதறுகிறீர்கள்?”
“…அப்படித் தரா விட்டால் நான் பார்க்க விரும்பாத பிணங்களையும் பார்க்க வேண்டி வரும் என்று சொல்கிறார்கள்”
ராஜாராம் ரெட்டி திகைத்தார். மந்திரிக்கே அவர்கள் நேரடியாக இப்படி மிரட்டல் விடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. “போலீஸ், அரசாங்கம் எல்லாம் உங்கள் கையில் இருக்கும் போது அவர்களால் என்ன செய்து விட முடியும்?”
மந்திரி பதட்டம் சிறிதும் குறையாமல் சொன்னார். “புரியாமல் பேசாதீர்கள். நான் எத்தனை பேருக்கு எத்தனை நாள் அந்த அளவு பாதுகாப்பு தந்து காப்பாற்ற முடியும்? அவர்களிடம் ஏகப்பட்ட ஆட்கள் தற்கொலைப் படையில் இருக்கிறார்கள். கையைக் காண்பித்தால் போதும். யாரையும் காலி செய்து விடுவார்கள்…. அது அவர்களுக்கு கஷ்டமான வேலை அல்ல”
அவர் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தாலும் ரெட்டி அவரை சமாதானப்படுத்தினார். “கவலைப் படாதீர்கள். அவன் பிணத்தை கண்டிப்பாக அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால் நாளை இரவே முடியுமா என்பது தான் சந்தேகம். ஏனென்றால் அவன் வாயைத் திறக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வான் என்று நமக்குத் தெரியாது.”
“நீங்கள் அவன் அம்மாவை ஒப்படைக்கிற மாதிரி ஒப்படைத்து திரும்பவும் நம்மிடமே வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னீர்கள் அல்லவா? அந்தம்மாவை சித்திரவதைப் படுத்தினால் அவன் உடனடியாக வாயைத் திறக்காமலா போய் விடுவான்?” மந்திரி ஆர்வத்துடன் கேட்டார்.
“அவன் குணத்தை நான் அலசிய அளவிற்குப் பார்த்தால் அந்தம்மா மீது சிறு நகக் கீறல் கூட விழ அவன் அனுமதிக்க மாட்டான். அந்த நிலைமையில் அவனுக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் அவன் சொல்லி விடுவான்….”
“அப்புறம் என்ன தான் பிரச்சனை?” பொறுமையிழந்து மந்திரி கேட்டார்.
ராஜாராம் ரெட்டி சொன்னார். “எப்போதுமே எதிரியைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அதனால் தான் யோசிக்கிறேன்….”
“எவ்வளவு யோசிக்க வேண்டுமோ அவ்வளவுமே இன்றே யோசித்து விடுங்கள். நம் திட்டத்தில் ஒரு குறையும் இருக்கக் கூடாது. நாளை காலை அவன் நம் கையில் சிக்கினால் இரவு வரைக்கும் அவனை சாகடிக்க நமக்கு நேரம் இருக்கிறது. அதற்குள் அவனிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு விட வேண்டும். இல்லா விட்டால்…” மந்திரி தயங்கினார்.
ரெட்டி கேட்டார். “இல்லா விட்டால்….?”
“அவன் சொன்ன நாம் பார்க்க விரும்பாத பிணம் உங்களுடையதாகக் கூட இருக்கலாம்”
(தொடரும்)