ஆனந்தின் செல்போன் இசைத்தது. ஒரு கணம் தம்பியின் தியானம் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்று ஆனந்த் பயந்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. அக்ஷயை அந்த சத்தம் சிறிதும் பாதிக்கவில்லை. அவன் அப்படியே அசைவற்ற நிலையிலேயே இருந்தான். ஆனந்த் அவசரமாக செல்போனை எடுத்துப் பேசினான். ”ஹலோ”
ராஜாராம் ரெட்டியின் குரல் கேட்டது. “ஹலோ ஆனந்த், நான் ராஜாராம் பேசுகிறேன்”
“சொல்லுங்கள் சார்”
”நீயும் உன் தம்பியும் எப்போது வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?”
ஆனந்த் சொன்னான். “இப்போது வர முடியாத சூழ்நிலை சார். அம்மாவைக் கடத்தியவர்கள் போன் செய்திருக்கிறார்கள். அங்கே தம்பியைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்…”
ராஜாராம் ரெட்டி பரபரப்புடன் கேட்டார். “எப்போது? எங்கே?”
”சார் அதைச் சொல்ல வேண்டாம் என்று நான் பார்க்கிறேன். அம்மாவின் உயிரைக் காப்பாற்ற இப்போது ரகசியம் தேவைப்படுகிறது”
”ஆனந்த், இப்போது தற்காலிகமாக என்னை சிபிஐ டைரக்டராக நியமனம் செய்திருக்கிறார்கள். இப்போது என்னால் உனக்கும் உன் தம்பிக்கும் கண்டிப்பாக உதவ முடியும். அந்த கடத்தல்காரர்கள் என்ன சொன்னார்கள், சொல்”
ராஜாராம் ரெட்டி தன்னை ஆழம் பார்க்கிறார் என்று புரிந்த ஆனந்த் அது தெரியாதது போல் யதார்த்தமாகச் சொன்னான். “சார் என் தம்பியும், நானும் அம்மாவிற்கு எந்த ஆபத்தும் வர வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனால் நீங்கள் இவ்வளவு தூரம் எங்களுக்காக அக்கறை எடுத்துக் கொள்வதற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை”
அவன் சொன்னதைக் கேட்டு வருத்தப்படுவது போல் ரெட்டி நடித்தார். ”முழு சிபிஐயையும் இந்த வழக்கில் ஈடுபடுத்தி உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் ஆனந்த். இது உன் தாயிற்காக மட்டுமல்ல ஆச்சார்யாவிற்காகவும் தான்”
“புரிகிறது சார். ஆனால் இப்போதைக்கு அக்ஷய் அவர்கள் சொன்னது போலவே அங்கு போகப் போவதாகச் சொல்லி இருக்கிறான். அதனால் பிறகு எதாவது உதவி தேவைப்பட்டால் சொல்கிறேன் சார்”
ராஜாராம் அரை மனதோடு சொல்வது போல் சொன்னார். “சரி.. உன் தாயின் உயிரோடு விளையாட நான் விரும்பவில்லை…..” பின் திடீரென்று நினைவுக்கு வந்தது போலக் கேட்டார் ” உன் தம்பிக்கு ஏதாவது பழைய ஞாபகம் வந்ததா?”
ஆனந்த் கவனமாகச் சொன்னான். ”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ‘உனக்கு எவ்வளவு குறைவாய் தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஆபத்து குறைவு’ என்று சொல்கிறான். பிடிவாதக்காரன் சார். அதற்கு மேல் சொல்ல மாட்டேன்கிறான்”
”அப்படியானால் இப்போதைக்கு நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் சொல். அந்த மகேந்திரன் மேல் உனக்கு சந்தேகம் என்று ஜெயின் சொன்னார். எனக்கும் அவன் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது. அவனை வேண்டுமானால் நான் கண்காணிக்கட்டுமா?”
“செய்யுங்கள் சார். ஆனால் அதில் பெரிய பலனிருக்கும் என்று தோன்றவில்லை. அவன் புத்திசாலி. வெளிப்படையாக மாட்டிக் கொள்ளும்படி எதுவும் செய்ய மாட்டான்.”
“உன் தம்பி மகேந்திரனைப் போய்ப் பார்த்தானா?”
”இவன் அவனைப் பார்க்கப் போனான் சார். ஆனால் அவன் நண்பன் ஒருவன் கல்யாணத்திற்காக வெளியூர் போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். அதனால் அவனுக்கு மகேந்திரனிடம் பேச முடியவில்லை. உண்மையில் அவன் நண்பனைப் பார்க்கப் போனானோ, இல்லை எங்கள் அம்மாவைக் கடத்தி வைத்திருக்கிற இடத்திற்குப் போனானோ என்றும் தெரியவில்லை”
மகேந்திரனின் மேல் திரும்பிய இந்த சந்தேகம் ரெட்டியை சந்தோஷப்பட வைத்தது. வாழ்க மகேந்திரன்! “ஜெயின் அந்த கேசவதாஸை உன் தம்பி பார்க்கப் போனதாகச் சொன்னார். கேசவதாஸ் என்ன சொன்னார்?”
“அவர் ஏதோ ஒரு பெரிய அதிகாரி பெயரைச் சொன்னாராம். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அந்த அதிகாரி இப்போது வெளிநாட்டுப் பயணம் போய் இருக்கிறார்”
ராஜாராம் ரெட்டி தனக்குள் பேசிக் கொள்வது போலச் சொன்னார். “எல்லாமே கடைசியில் எந்த துப்பும் தராமலேயே போகிறதே!”
“அதே தான் சார் பிரச்சனை”
”இப்போது உன் தம்பி என்ன செய்கிறான்?”
ஆனந்த் தம்பியைப் பார்த்தான். சிலை போல் அமர்ந்திருந்த அக்ஷயின் முகத்தில் பேரமைதி தெரிந்தது. இப்போது பேசிக் கொண்டிருக்கும் எதுவும் அவன் காதுகளை எட்டவில்லை. ஒரு பெருமூச்சு விட்டு விட்டு ஆனந்த் சொன்னான். “தியானம் செய்தபடி இருக்கிறான். இப்போது நாம் பேசுவது கூட அவன் காதுகளில் விழவில்லை.”
”இப்படி தியானம் செய்யும் போது தான் அவனுக்குப் பழைய நினைவுகள் வருகிறதா?”
“அப்படிச் சொல்ல முடியாது சார். திடீர் திடீர் என்று மற்ற நேரங்களிலும் வருகிற மாதிரி தான் தெரிகிறது. அந்த மாதிரி நேரங்களில் அவன் ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல் தெரிகிறது…”
“ஜெயின் சார் அவனுக்கு அமானுஷ்யன் என்று ஒரு பட்டப்பெயர் இருப்பதாகச் சொன்னார். அது பொருத்தமாகத் தான் தெரிகிறது. உன் தம்பியிடம் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன்….சரி ஆனந்த், உனக்கு என்ன உதவி எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் கேள். நான் கண்டிப்பாகச் செய்கிறேன்.”
ராஜாராம் ரெட்டி போனை வைத்து விட்டார். அவர் உள்மனதில் ஒரு நெருடல் இருந்தது. ஆனந்த் கடத்தல்காரர்கள் சொன்ன விவரங்கள் எதையும் சொல்ல மறுத்தது, எந்த உதவியும் பெற மறுத்தது எல்லாம் அவருக்கு திருப்தியைத் தந்தாலும் அமானுஷ்யனிற்கு பழைய நினைவுகள் வர ஆரம்பித்து விட்டன என்று ஆனந்தும் உறுதி செய்தது அபாய மணியை அடித்தது. முன்பு போனில் மிஸ்டர் எக்ஸிடம் மட்டும் அல்லாமல் தன் தாயிடமும் அக்ஷய் நினைவுகள் திரும்பி விட்டதாகச் சொன்னதையும், டெல்லியின் ‘அந்த குறிப்பிட்ட’ இடங்களை மிகச் சரியாகச் சொன்னதையும் ஆனந்த் சொன்னதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சொல்வது உண்மை என்றே தோன்றியது.
அவனை ரகசிய இடத்திற்கு வரவழைத்தவுடன் முதல் வேலையாக அவனை சுட்டுத் தள்ளுவது என்ற ஆரம்ப திட்டம் இப்போது உசிதம் அல்ல என்று தோன்றியது. அவனுக்கு எத்தனை தெரியும், எவ்வளவு தெரியும், அதை எங்கேயாவது எழுதியோ சொல்லியோ வைத்திருக்கிறானா என்றெல்லாம் தெரிந்து கொள்ளாமல் கொல்வது பிற்காலத்தில் பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம். இப்போது சுப்ரீம் கோர்ட் வேறு கண்டதில் எல்லாம் தலை இடுகிறது. அரசாங்கத்தைப் பொருத்த வரை இனி அவர்கள் ராஜ்ஜியம் தான் என்றாலும் விலை போகாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தலைவலியாக இருப்பார்கள்….எனவே அவனைப் பார்த்துப் பேசுவது மிக முக்கியம்…..
அவருடைய சிந்தனைகளை செல்போன் இசை கலைத்தது.
மந்திரி தான் பேசினார். “ஆனந்திடம் பேசினீர்களா? அவன் என்ன சொன்னான்?”
பேசியதை எல்லாம் அப்படியே ரெட்டி தெரிவித்தார்.
மந்திரிக்கு திருப்தி ஏற்பட்டது. “பரவாயில்லை. ஆனந்தும் அந்த சைத்தானும் வாயைத் திறந்து கடத்தலைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பயம் இருக்கிறது என்று அர்த்தம். முட்டாள்தனமாக எதுவும் செய்ய மாட்டார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
ரெட்டி ஆழ்ந்த யோசனையுடன் சொன்னார். “முட்டாள்தனமாக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது சரி தான். ஆனால் புத்திசாலித்தனமாக எதுவும் செய்து விட்டால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதை நாம் மறக்கக் கூடாது”
”நீங்களும் அந்த தாடிக்காரன் மாதிரி ஏன் பீதியைக் கிளப்புகிறீர்கள்? அவர்கள் என்ன செய்ய முடியும்?”
“நான் அவர்கள் இடத்தில் இருந்தால் என்ன எல்லாம் செய்வேன் என்று ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு நாம் திரும்ப என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவனைப் பொருத்த வரை நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பது முக்கியம் இல்லையா?”
”நீங்கள் சொல்வது சரிதான். அந்த சைத்தான் சாகிற வரை நாம் அஜாக்கிரதையாய் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் முன்னால் சொன்ன அத்தனை ஏற்பாடும் செய்தாகி விட்டது. இனியும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குப் புதிதாக எதாவது தோன்றினால் அதையும் அப்படியே செய்யலாம்….”
மந்திரி போனை வைத்த பிறகு ரெட்டி நிறைய நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர்களுடைய இப்போதைய திட்டம் எந்தக் குறையும் இல்லாதது என்ற போதும் அமானுஷ்யன் சம்பந்தப்பட்டதால் ஏதோ ஒரு நெருடல் இப்போதும் தொடர்ந்தது. பயம் இல்லாதவனைப் போல வலிமையான எதிரி இல்லை. அமானுஷ்யனோ எப்போதும் பயத்தை வெளிப்படுத்தாதவன் என்று அவனுடைய பழைய நிகழ்வுகள் சொல்கின்றன. அவனுடைய பலவீனம் என்று அவர் கண்டுபிடித்திருப்பது அவன் குடும்பம் தான். மும்பையில் தன் தந்தையைப் பறி கொடுத்த அவன் இன்று பெற்ற தாயையும் பறி கொடுப்பதை சகிக்க மாட்டான் என்று அவர் சரியாகக் கணித்திருந்தார். அவன் ஆபத்தானவன் என்றாலும் அவன் தாய் அவர்கள் பிடியில் உள்ள வரை அவன் அடங்கி இருப்பான் என்பதால் அவன் தாயை அவன் கதையை முடிக்கிற வரைக்கும் தங்களிடமே வைத்திருப்பது தான் தங்களுக்கு அவனிடமிருந்து பாதுகாப்பு என்பதையும் அவர் அறிவார். எனவே தான் அவனது தாயை ஒப்படைத்து அவனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அரை மணி நேரத்தில் மீண்டும் அவளைத் தங்களிடம் கடத்திக் கொண்டு வர அவர் ஏற்பாடு செய்து விட்டார். அவன் தாயை மீண்டும் பணயமாக வைத்துத் தான் அவனிடமிருந்து உண்மையைக் கக்க வைக்க வேண்டும். அவன் தாயிற்கு ஆபத்து என்றால் தான் அவன் சொல்கிறபடி கேட்பான். அவள் இல்லாவிட்டால் அவனைக் கட்டுப்படுத்துவது சூறாவளியைக் கட்டுப்படுத்துவது போல முடியாத காரியம் தான்.
’பயமே இல்லாத அமானுஷ்யன் தன் தாயை அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்று பயந்து நடுங்க வேண்டும். முதல் முறையாக அவன் முகத்தில் பயத்தைப் பார்க்க வேண்டும். அவர்களிடம் எல்லாம் சொல்லி விட்டு அவன் அவர்கள் தரும் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்…..’ நினைக்க நினைக்க மனதில் இருந்த நெருடல் போய் முகத்தில் புன்னகை அரும்பியது. இரண்டு வருடங்களுக்கு முன் நிர்க்கதியாய் நின்ற சிபிஐ அதிகாரியான அவர் இன்று பலரை அப்படி நிற்க வைக்க முடியும் அளவு சக்தி வாய்ந்த மனிதராக உருமாறி இருக்கும் இந்த அபார வளர்ச்சி அவருக்குப் பெரும் திருப்தியைத் தந்தது.
டெல்லியின் மையப்பகுதியில் இருந்த ஒரு பழைய லாட்ஜ் ஒன்றினுள் குறுந்தாடிக்காரன் நுழைந்தான். சுத்தம் என்ற சொல்லிற்கும் அந்த லாட்ஜிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் அந்த லாட்ஜ் இருந்தது. சுண்ணாம்பை அந்த சுவர்களுக்குக் காண்பித்து பல காலம் ஆகியிருக்கும் என்று அவன் கணித்தான். ”இந்த ஆளிற்கு இதை விட ஒரு பழைய லாட்ஜ் கிடைக்கவில்லை போல் இருக்கிறது” என்று மனதினுள் சொல்லிக் கொண்டான்.
சில நாட்களுக்கு முன் ஒரு பாழடைந்த சிறிய வீட்டில் அவன் சந்தித்த அந்த மனிதன் மறுபடி சந்திக்க இங்கு அழைத்ததில் இருந்து அவன் மனதில் ஒருவித பயம் சூழ்ந்திருந்தது. அந்த மனிதன் அபாயகரமானவன் என்று நண்பன் ஒருவன் ரகசியமாக அவனிடம் சொல்லி இருந்தான். அவன் சொன்ன செய்தி இன்னும் அவன் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டு இருந்தது.
“….. ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வர என்னிடம் சொன்னார் என்று நான் கூட்டிக் கொண்டு போனேன். அவனிடம் ஒப்படைத்த வேலையை அவன் ஏன் செய்யவில்லை என்று கேட்டார். அந்த ஆள் சொன்ன காரணங்களை எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் சுட்டு விட்டார். அவன் அந்த இடத்திலேயே செத்து விட்டான். அவர் ஒன்றுமே நடக்காதது போல எழுந்து போய் விட்டார். அவருடைய ஆட்கள் ஓடி வந்து பிணத்தை குண்டு கட்டாய் கட்டி எடுத்துக் கொண்டு போனார்கள். நான் ஆடிப்போய் விட்டேன். எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது….”
அந்த அபாயகரமான மனிதன் அந்தப் பாழடைந்த வீட்டில் ஒரு வேலையை அவனிடம் ஒப்படைத்துச் சொல்லியிருந்தான். ”அவனை(அமானுஷ்யனை)க் கொல்லும் வேலையில் போலீசை முழுவதும் நம்புவது முட்டாள்தனம். இனி உனக்கு ஒரே வேலை அவன் எங்கிருக்கிறான் என்று தகவல் சொல்வது தான். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”
அந்த வேலையைச் செய்து முடிக்காமல் இந்த ஆளைப் பார்க்கப் போகிறோமே, பேச்சைக் கேட்டு விட்டு சுடுவானா, இல்லை கேட்காமலேயே சுடுவானா என்ற பயம் அடிவயிற்றைக் கலக்க லாட்ஜின் முதல் மாடியில் அந்த ஆள் தங்கி இருந்த அறைக் கதவை குறுந்தாடி தட்டினான்.
(தொடரும்)