அமானுஷ்யன் – 86

தம்பியின் அந்த திடீர் மாற்றம் ஆனந்தை பயமுறுத்தியது. மறுபடியும் நினைவுகள் எல்லாம் போய் விட்டனவோ என்று எண்ணியவனாக அக்ஷயைத் தொட்டு லேசாக உலுக்கியபடி கேட்டான். “அக்ஷய்.. அக்ஷய்… என்ன ஆயிற்று?”

அக்ஷய் கனவில் இருந்து விழித்தவன் போல விழித்தான். அவனுக்கு சுயநினைவுக்கு வர சில வினாடிகள் தேவைப்பட்டன.

ஆனந்த் கவலையுடன் கேட்டான். “அக்ஷய் என்ன ஆயிற்று?”

அக்ஷய் தன் காதில் ஒலித்த அந்த வாசகங்களையும், அதற்குப் பின் கேட்ட கைதட்டல்களையும் பற்றி சொன்னான்.

ஆனந்த ஆர்வத்துடன் கேட்டான். “அப்புறம் என்ன ஆயிற்று?”

அக்ஷய் சொன்னான். “அதற்குள் தான் நீ கூப்பிட்டு விட்டாயே!”

ஆனந்த் குற்ற உணர்வோடு சொன்னான். “நான் உனக்கு மறுபடி நினைவு போய் விட்டதோ என்று நினைத்தேன். இப்படி ஏதோ பழைய நினைவு வந்திருக்கிறது என்று தெரிந்திருந்தால் நான் உன்னைக் கூப்பிட்டு இருக்க மாட்டேன்.”

“பரவாயில்லை விடு. மறுபடியும் எப்போதாவது நான் அப்படி மாறினால் நானாய் பழையபடி மாறுகிற வரை கூப்பிடாதே”

ஆனந்த் தலையசைத்தான். ”உனக்கு ஞாபகம் வந்ததை யோசித்துப் பார்க்கிற போது அந்த ரெட்டி தான் வேறு ஏதாவது மருந்து என்று சொல்லி ஜெயினிற்குக் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.”

“இருக்கலாம்”

“நீ கோமாவுக்கு மாற்றிய ஆட்களைக் குணப்படுத்திய மாதிரி ஜெயினையும் குணப்படுத்த முடியுமா?”

“அவரைப் பார்த்தால் தான் எதுவும் சொல்ல முடியும்”

“அவர்கள் கண்டிப்பாக உன்னை அவர் பக்கத்தில் விட மாட்டார்கள்”

அக்ஷய் புன்னகைத்தான். “போக வேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியும் போய் விடலாம். அது ஒரு பிரச்னை அல்ல. பிரச்னை என்ன என்றால் அந்த மருந்து பற்றிய தகவல்கள் நமக்கு எதுவும் தெரியாதது தான். அந்த மருந்து பற்றிய தகவல் முழுவதும் தெரிந்தால் தான் எதையும் நிச்சயமாய் சொல்ல முடியும்”

ஆனந்த் முகத்தில் சோகம் படர்ந்தது. “ஜெயின் நல்ல மனிதர். அவருக்கு இப்படி ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நமக்கு முடிகிற விதத்தில் எல்லாம் பக்கபலமாக இருந்திருப்பார்.”

**************

ராஜாராம் ரெட்டி ஜெயினை கோமாவுக்கு வெற்றிகரமாகக் கொண்டு போனதை மந்திரிக்குப் போன் செய்து தெரிவித்த போது மந்திரி மிக மகிழ்ச்சி அடைந்தார்.

“நல்ல செய்தி. இதே மாதிரி அந்த சைத்தான் செத்து விட்டான் என்ற செய்தியும் என் காதில் விழுந்தால் எல்லா பிரச்னையும் தீர்ந்து விடும்…. சரி அந்த ஜெயின் எதற்காக உங்களைக் கூப்பிட்டார்?”

”எல்லாம் அந்த சைத்தான் விவகாரம் பற்றி சொல்லத்தான்”

”என்ன?”

தன்னை ஜெயின் அழைத்து ஆனந்த் வந்து சொன்னதை எல்லாம் சொன்ன விவரத்தை அப்படியே ரெட்டி மந்திரிக்கு ஒப்பித்தார்.

“உங்களைத் தவிர ஜெயின் வேறு யாரிடமும் இதைச் சொல்லி இருக்க மாட்டாரே”

“சொல்லவில்லை. பயப்படாதீர்கள். இன்னொரு விஷயம். நான் ஆனந்திடம் பேசினேன்….” என்ற ரெட்டி ஆனந்த்இடம் போனில் பேசியதையும் தெரிவித்தார்.

“பிரமாதம். அந்த ஆனந்திற்கு உங்களைப் பற்றி தெரியாதது நல்லதாய் போயிற்று. நீங்கள் கூப்பிட்டபடி அவன் தன் தம்பியை அழைத்து வருவானா?”

“தெரியவில்லை. அவன் தம்பியிடம் கலந்தாலோசித்து சொல்கிறேன் என்று மட்டும் சொன்னான்”

”நாம் அதையே நம்பி இருக்க முடியாது. நம் முதல் திட்டப்படியே அந்த சைத்தானை நம்மிடம் வரவழைப்பது தான் நல்லது. முதலில் அவன் கேட்டுக் கொண்டபடி அந்த கிழவியிடம் அவனை பேச விடுங்கள்”

“அதற்கு ஏற்பாடு செய்து விட்டேன்”

”அந்த சைத்தான் அந்த இடங்களை சரியாகச் சொன்னதை நான் அவர்களிடம் இன்னும் சொல்லவில்லை. இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு, அவர்கள் முழு வேலையை செய்து தயாராகி விட்ட பிறகு, அந்த இடங்கள் பற்றிய விவரம் அவனுக்கு நினைவில் இருக்கிறது என்று தெரிந்தால் அவர்கள் என்னை ஒரு நிமிடமும் என் வேலையைச் செய்ய விட மாட்டார்கள். முதலிலேயே அவர்களுக்கு அவன் என்றால் ஒரு தனி பயம் இருக்கிறது…”

“நீங்கள் பயப்படாதீர்கள். இப்போது அவனுடைய அம்மா நம்மிடம் இருக்கிற வரைக்கும் நமக்கு எதிராக அவன் எதுவும் செய்து விட முடியாது…. அப்புறம் இன்னொரு விஷயம்- ஜெயின் கோமாவில் போய் விட்டதால் சிபிஐயில் தலைமைப் பதவிக்கு ஆள் இல்லை. அவர் சீக்கிரம் குணமாக வாய்ப்பில்லை என்பதால் யாரையாவது தற்காலிகமாவது அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும். இப்போது இருப்பவர்களில் நான் தான் மூத்த அதிகாரி….”

”அப்படியானால் உடனடியாக உங்களை அந்த பதவிக்கு நியமிக்க ஏற்பாடு செய்கிறேன். அந்த ஆனந்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது நல்லது…”

பேசி முடித்த பின் ராஜாராம் ரெட்டி புன்னகைத்தார். ’எல்லாம் நினைத்தபடியே போய்க் கொண்டிருக்கிறது.’

************

ஆனந்தின் செல்போன் பாடி அழைத்தது.

“ஹலோ”

“ஆனந்த், நான் எக்ஸ் பேசுகிறேன்”

“சொல்லுங்கள்”

“உங்கள் தம்பியிடம் போனைத் தருகிறீர்களா?”

ஆனந்த் அக்ஷயிடம் போனைக் கொடுத்தான்.

அக்ஷய் பேசினான். “ஹலோ”

“அக்ஷய், உங்கள் அம்மாவிடம் போனைத் தருகிறேன். பேசுங்கள்…”

அடுத்ததாக அம்மா பரபரப்புடன் பேசினாள். “அக்ஷய், எப்படி இருக்கிறாய்?”

“நான் சௌக்கியமாய் இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

“எனக்கு இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா வசதிகளும் இருக்கிறது. பேச்சுத் துணைக்கு வருண் இருக்கிறான். சமையல் அறையில் எல்லாமே வைத்திருக்கிறார்கள். கடத்தல்காரர்களானாலும் மற்ற விதத்தில் நல்ல ஆள்கள். எந்தத் தொந்திரவும் செய்வதில்லை. பெரும்பாலும் ஆள்கள் கண்ணிலேயே பட மாட்டேன்கிறார்கள்…”

‘கடத்தல்காரர்கள் ஆனாலும் நல்லவர்கள்’ என்று அம்மா சொன்னது அக்ஷயைப் புன்னகைக்க வைத்தது.

“வருண் எப்படி இருக்கிறான்?”

“அவனும் சௌக்கியம். எப்பவுமே உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறான். டாக்டர் என்ன சொன்னார்?”

அக்ஷயிற்கு ஒரு கணம் புரியவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “கண்டிப்பாய் முழுவதுமாய் குணமாய் விடும் என்று சொல்லி விட்டார். இப்போது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நினைவு வர ஆரம்பித்து விட்டது…”

“அது போதும் எனக்கு…..” அம்மா சொல்லச் சொல்ல எக்ஸ் ‘அம்மா பேசியது போதும் போனைக் கொடுங்கள்’ என்று இடைமறிப்பது கேட்டது. அம்மா ‘ஒரு நிமிஷம். என் மூத்த மகனிடமும் ஒரு நிமிஷம் பேசி விடுகிறேன்’ என்று சொல்லி அக்ஷயிடம் சொன்னாள். “கொஞ்சம் ஆனந்த் கிட்டே போனைக் கொடு அக்ஷய்”

அக்ஷய் போனை ஆனந்திடம் கொடுத்தான். சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே. நான் எல்லாவற்றையும் வாழ்ந்து முடித்தவள். அவனும் நீயும் நல்லபடியாக இருந்தால் எனக்கு இனி இந்த உயிர் உட்பட எதுவும் வேண்டாம். இந்தப் பையன் வருணை மட்டும் காப்பாற்றி விடுங்கள். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்……..”

அவள் சொன்னதைக் கேட்டு அவளுடைய பிள்ளைகள் இருவர் கண்களும் கலங்கின. எக்ஸ் பேச்சு அபாயகரமாகத் திரும்புகிறது என்பதை உணர்ந்து சாரதா கையில் இருந்த செல் போனைப் பிடுங்கினார். “ஆனந்த் இப்போது உங்கள் தாயும், அந்தப் பையனும் சௌக்கியமாய் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் புரிந்திருக்கும். இனியும் அவர்கள் சௌக்கியமாக இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. இனி அக்ஷய் எங்கே எப்படி எப்போது வர வேண்டும் என்பதைச் சொல்லட்டுமா?”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top