அமானுஷ்யன் – 84

அக்ஷய் மகேந்திரனை இன்னமும் சந்தேகத்துடனேயே பார்த்தான். “பொய் சொன்னால் என்னிடம் தண்டனை என்ன தெரியுமா?”

மகேந்திரனுக்கு இவனிடம் இருக்கும் தண்டனைகளை பரீட்சித்துப் பார்ப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. அவசர அவசரமாக சொன்னான். “சத்தியமாய் சொல்கிறேன் என்னை நம்பு. நான் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் என்னை நம்பியவர்களுக்கும், எனக்குப் பிடித்தவர்களுக்கும் நான் இது வரையில் துரோகம் செய்ததில்லை. ஆச்சார்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். வயதானவராக இருந்தாலும் அவருடன் பழகும் போது அவரை என் நண்பராகத் தான் நினைத்தேன். அவர் எனக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்தினார்…..”

“நீ ரெட்டியைப் பற்றி சொல்வதெல்லாம் உண்மை தானா?”

“உண்மை தான். அந்த ஆள் இப்போது பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஒரு காலத்தில் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளாக இருந்த உதவியாளர்கள் எல்லாம் தான் இப்போது அவருக்கு பணத்தை சம்பாதித்துத் தருகிற ஏஜெண்டுகள். சில மாதங்களுக்கு முன் கூட ஒரு வழக்கை ஒரு பெரிய பணக்காரனுக்கு எதிராக ஒன்றுமில்லாமல் முடித்து விட்டார்கள். நான் ஆச்சார்யாவிடம் கூட சுட்டிக் காட்டினேன். ஆனால் அவர் சொன்னார். “அவர் அப்படிப்பட்டவர் அல்ல மகேந்திரன். அவரை பல வருஷங்களாய் எனக்குத் தெரியும். அவர் இப்போது பழைய உறுதியோடு இல்லை. ரிடையர் ஆகும் வரை மேல் போக்காக இருந்து விட வேண்டும் என்று தான் நினைக்கிறார். இன்னொரு முறை அந்த கசப்பான அனுபவம் பெற அவர் தயாராக இல்லை. இதெல்லாம் அவருக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் செய்திருப்பார்கள்”. ஆனால் என்னால் ஏனோ அதை நம்ப முடியவில்லை”

அவன் பேசும் போது அவனை மிகவும் கூர்ந்து கவனித்து வந்த அக்ஷயிற்கு அவன் உண்மை சொல்வதாகவே தோன்றியது.

“உங்கள் டைரக்டர் ஜெயின் எப்படி?”

“நல்ல மனிதர். நாணயமானவர்”

“சரி ஆச்சார்யா கொலை பற்றி வேறு யாருக்கு விவரங்கள் தெரிந்திருக்கலாம்?”

“ஆனந்த் என்று ஒரு அதிகாரியை சென்னையில் இருந்து ஜெயின் வரவழைத்து அவனிடம் ஆச்சார்யா கொலை வழக்கை ஒப்படைத்து இருக்கிறார். அந்த ஆள் ஏதோ சில தகவல்களை கண்டு பிடித்திருக்கிற மாதிரி தெரிகிறது. நீ அந்த ஆளைப் பார்.”

தனக்கும் ஆனந்திற்கும் இடையே உள்ள உறவு இவனுக்குத் தெரியவில்லை என்கிற போதே இவனுக்கும் ஆச்சார்யா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பது அக்ஷயிற்கு உறுதியாகியது. ஏனென்றால் ஆச்சார்யாவைக் கொலை செய்தவர்களுக்கு ஆனந்தின் தம்பி தான் அக்ஷய் என்பது தெரியும். அவனிடம் அந்த உண்மையைச் சொல்லப் போகாமல் அக்ஷய் சொன்னான். “நான் ஆனந்தைப் பார்த்தாகி விட்டது”

அவனாக இன்னமும் சேர்த்து சொல்வான் என்று மகேந்திரன் எதிர்பார்த்து அக்ஷயையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அக்ஷய் ஆனந்திடம் போய் பேசும் வரை இவனுக்கு அதிக தகவல்கள் தர வேண்டாம் என்று நினைத்துப் பேசாமல் இருந்தான்.

மகேந்திரன் சொன்னான். “என்னிடம் என்ன உதவி வேண்டுமானாலும் நீ தயங்காமல் கேட்கலாம். நான் கண்டிப்பாக ஆச்சார்யாவுக்காக செய்வேன். என் விசிட்டிங் கார்டை வைத்துக் கொள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம்…”

மகேந்திரனிடம் இருந்து விசிட்டிங் கார்டை வாங்கியபடியே அக்ஷய் நன்றி தெரிவித்தான்.

“பதிலுக்கு உன்னிடம் ஒரு உதவியை நான் கேட்கலாமா?” அக்ஷயிடம் மகேந்திரன் கேட்டான்.

“என்ன?”

“லேசாகத் தட்டி விட்டே இப்படி அசைய முடியாமல் செய்து, மறுபடி தட்டி விட்டு பழையபடி ஆக்கி விடுகிறாயே. இந்த வர்மக்கலை வித்தையை எனக்கு நீ சொல்லித் தருவாயா?”

அக்ஷய் புன்ன்கை செய்தான். “இந்த வித்தையைக் கற்றுக் கொள்ள எனக்கு மூன்றரை வருடம் ஆயிற்று. அந்த மூன்றரை வருடமும் நான் அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை”

*************

மகேந்திரன் ரெட்டியைப் பற்றி சொன்னதை எல்லாம் அக்ஷய் தெரிவித்த போது ஆனந்தால் அதை நம்ப முடியவில்லை.

“அக்ஷய், மகேந்திரன் உன்னிடம் இருந்து தப்பிப்பதற்காக சும்மா அவரைப் பற்றி கதையளந்திருக்கிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது”

அக்ஷய் மறுத்தான். “எனக்கும் ஆரம்பத்தில் எனக்கும் அவன் மேல் சந்தேகம் வந்தது. ஆனால் அவனை நான் கூர்ந்து கவனித்தேன். அவன் பொய் சொல்கிற மாதிரி தோன்றவில்லை”

அக்ஷயை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் மகேந்திரன் அவனிடம் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனந்திற்கு உறைத்தது. அவன் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்….. நினைக்கவே ஆனந்திற்குத் தலை சுற்றியது.

அக்ஷய் சொன்னான். “நீ எதற்கும் இந்த விஷயத்தை ஜெயின் காதில் போட்டு வைப்பது நல்லது ஆனந்த்”

ஆனந்த் சொன்னான். “என்னாலேயே நம்ப முடியவில்லையே அக்ஷய். அவர் கண்டிப்பாய் நம்ப மாட்டார்”

“ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லித் தானே ஆக வேண்டும்.”

************

ஜெயின் நேற்றிரவு வந்து ஆனந்த் தன்னிடம் சொன்னதை எல்லாம் ரெட்டியிடம் சொன்ன போது அவர் எல்லாவற்றையும் திகைப்புடன் கேட்பது போலக் கேட்டுக் கொண்டார். கடைசியில் கேட்டார். “சார். அந்த அரசியல்வாதி யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“தெரியவில்லை”

“யாரோ நம் ஆட்களும் இந்த சதியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதில் இப்போது எனக்கு சந்தேகமே இல்லை சார். அந்த சதிகாரன் யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆனந்திற்கு மகேந்திரன் மீது சந்தேகம் இருக்கிறது”

சிறிது யோசிப்பது போல் நடித்த ரெட்டி, “எனக்கும் அவன் மேல் சந்தேகமாய்தான் இருக்கிறது சார்” என்று சொன்னார்.

“சார். நாம் ஆனந்திற்கு உதவ ஏதாவது செய்தாக வேண்டும். இதற்கெல்லாம் நானும் ஒரு விதத்தில் காரணம் என்று என் மனசாட்சி உறுத்துகிறது”

“கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் சார். அப்படி உதவா விட்டால் நாம் மனிதர்களே அல்ல”

ஜெயினுக்கு அவரும் தன்னைப் போலவே நினைத்ததில் திருப்தியாக இருந்தது.

ராஜாராம் ரெட்டி மெல்ல கேட்டார். “ஆனந்த் இந்த வழக்கில் வேறு ஏதாவது கண்டு பிடித்திருக்கிறானா?”

அமானுஷ்யனைப் பற்றிய தகவல்களை எல்லாம் விரிவாகச் சொன்ன ஜெயினிற்கு ஆச்சார்யா வீட்டில் ஆனந்த் கண்டுபிடித்த டில்லி வரைபடம் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அவர் சொன்னார். “வேறு எதுவும் கண்டு பிடிக்கவில்லை சார்”

ரெட்டி திருப்தி அடைந்தார். மெல்ல கேட்டார். “அந்த அக்ஷயிற்கு பழையது எல்லாம் நினைவு வந்து விட்டால் பிரச்னையில்லை. சமீபத்தில் ஏதாவது அவனுக்கு நினைவு வந்ததா என்று விசாரித்தீர்களா?”

“எதுவும் ஆனந்த் சொல்லவில்லை”

“அக்ஷய் கேசவதாஸை பார்த்து பேசி விட்டு வந்த பிறகு ஆனந்த் உங்களுக்குப் போன் செய்யவில்லையா?”

“இல்லை. இன்றைக்கு போன் செய்யலாம்”

ராஜாராம் ரெட்டி ஆழமாக யோசித்தார். அக்ஷய் பழையது எல்லாம் நினைவு வந்ததாய் சொன்னது கேசவதாஸை சந்தித்து வந்த பிறகு பேசிய போது. கேசவதாஸை அவன் சந்தித்த பிறகு என்ன நடந்திருக்கிறது என்று ஜெயினிற்குத் தெரியாது. அவர்கள் போன் செய்து அக்ஷய், ஆனந்திடம் பேசிய விவரம் கூட இன்னும் ஜெயினுக்குத் தெரிவிக்கப்படவில்லை…. அப்படியானால் புதிய நிலவரம் ஜெயினுக்குத் தெரியாது. ஆனால் இதுவரை தெரிந்ததே அபாயம் தான். இந்த ஆள் ஆனந்திற்கு உதவத் தயாராவது அதை விடப் பெரிய அபாயம்…..

ராஜாராம் ரெட்டி பெருமூச்சு விட்டார். “ஜெயின் சார். எனக்கு இந்த சிபிஐ வேலை, அரசியல்வாதிகள் சதி, அதற்கு நம் ஆட்கள் செய்கிற ஒத்துழைப்பு எல்லாம் பார்த்து சலித்துப் போய் விட்டது. நான் நேற்று பக்கத்து கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த காளி கோயிலில் போய் இந்த நாட்டுக்காகவும், நாட்டில் மீதி இருக்கிற ஒரு சில நல்ல மனிதர்களுக்காகவும் ஒரு விசேஷ பூஜை செய்து விட்டு வந்தேன். நல்லது ஏதாவது நடக்க வேண்டும் என்றால் அந்த கடவுள் பக்கபலமாய் இருந்தால் தான் நடக்கும். உங்களுக்காக பிரசாதம் கொண்டு வந்திருக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள். எல்லாம் நல்ல விதமாய் முடியும் பாருங்கள்”

தான் கொண்டு வந்திருந்த ‘அந்த’ மருந்தை ராஜாராம் ரெட்டி வெளியே எடுத்தார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top