அமானுஷ்யன் – 83

ராஜாராம் ரெட்டிக்கு மந்திரி போன் செய்தார். “நீங்கள் கேட்டதை நான் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா?”

“கிடைத்தது”

“ஜெயினைப் பார்க்க எப்போது கிளம்புகிறீர்கள்”

“இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்புவேன். நான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரைப் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே போன் செய்தார், என்னிடம் பேச வேண்டும் என்று. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று….”

“அவர் என்ன பேச வேண்டும் என்று கூப்பிட்டார்?”

“தெரியவில்லை. போய்தான் பார்க்க வேண்டும்…..”

“ஜாக்கிரதையாய் இருங்கள். யாரையாவது கூட அனுப்பட்டுமா?”

“வேண்டாம். கூட யாராவது இருந்தால் சந்தேகம் வரும். நானே போகிறேன்”

“அவர் வீட்டில் இருப்பவர்களை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?”

“அவர் மகன் இந்நேரம் ஆபிசிற்கு கிளம்பி இருப்பான். அவர் மனைவி ஒருத்திதான் இருப்பாள். அது பிரச்னையில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன்”

“நீங்கள் காரியம் முடிந்தவுடன் போன் செய்யுங்கள்” மந்திரி குரலில் பதட்டம் இருந்தது.

“சரி.”

போனில் பேசி முடித்த ராஜாராம் ரெட்டி அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மஹாவீர் ஜெயின் மீது அவருக்கு எந்தப் பகையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிபிஐயில் ஆரம்ப காலத்திலிருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் ஆச்சார்யாவும், ஜெயினும்தான். ஆரம்ப காலத்தில் அவர்களை அவருக்கு மிகவும் பிடித்திருந்த காரணம் அவர்களிடம் இருந்த அப்பழுக்கற்ற நேர்மைதான். அந்த நேர்மை இந்த சுயநலமும், பேராசையும் பிடித்த உலகில் மிக அபூர்வமானது.
ராஜாராம் சிறு வயதிலிருந்தே தனி மனித நேர்மையை மிக முக்கியமானதாக நினைத்தார். அந்த நேர்மை இல்லாமல் இந்த தேசத்திற்கு யாரும் பெரியதாக நன்மை எதுவும் செய்து விட முடியாது என்று நம்பினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் ஒரு சிறு துரும்பைக் கூட நேர்மை அல்லாத வழியில் சம்பாதித்தவர் அல்ல. நியாயமில்லாத வழிகளில் ஏராளமாக சம்பாதிக்க எத்தனையோ வழிகள் அவரைப் போன்ற உயர் அதிகாரிக்கு இருந்தாலும் அவர் அந்த வழிகளைப் பயன்படுத்தியவர் அல்ல. நம் நாட்டை மேம்படுத்த வேண்டுமானால் திறமையும் நேர்மையும் உறுதியாக இருக்கக் கூடிய தன்னைப் போன்ற மனிதர்களால்தான் முடியும் என்று நம்பினார். தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ பணத் தட்டுப்பாடு இருந்த போதும் எந்த சபலமும் தன்னை திசை மாற்றி விடாதபடி வாழ்ந்தும் வந்தார். எத்தனையோ பேருக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன் அவர் எடுத்துக் கொண்டிருந்த ஒரு கிரிமினல் வழக்கில் மிகப் பெரிய குற்றவாளியாக ஆளுங்கட்சி மந்திரியே இருப்பதைக் கண்டு பிடிக்க நேர்ந்தது. அவர் கண்டு பிடித்து விட்டார் என்று தெரிந்த மந்திரி அவருக்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் கொடுத்து அவரை விலைக்கு வாங்கப் பார்த்தார். ராஜாராம் ரெட்டி விலை போகத் தயாராக இருக்கவில்லை. இது போன்ற அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஆட்களுக்குக் கிடைக்கும் தண்டனை எல்லோருக்கும் பயத்தையும் படிப்பினையையும் தர வேண்டும் என்று எண்ணினார். மந்திரி என்பதால் பிரதமர் அனுமதி அவசியமாக இருந்தது. ஆதாரங்களுடன் பிரதமரை சந்தித்தார்.

பிரதமரும் வன்முறை, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சகாக்களை விரும்பாதவராக இருந்தார். அரசியலில் ஏராளமான சொத்துகளை அவரும் சேர்த்து இருந்தாலும் அதெல்லாம் வழக்கமான வசூல்களால் சேர்த்ததே ஒழிய வன்முறைக்கும், கிரிமினல் நடவடிக்கைகளும் துணை போய் சம்பாதித்தவை அல்ல. மேலும் ராஜாராம் ரெட்டி குற்றம் சாட்டிய மந்திரி உட்கட்சியில் எதிரணியில் இருந்த நபர். எனவே அவர் ஒரே கேள்விதான் ரெட்டியைக் கேட்டார். “அசைக்க முடியாத ஆதாரங்களை வைத்திருக்கிறீர்களா?”

ரெட்டி “ஆமாம்” என்றார். பிரதமர் தன் அணி சகாக்களுடன் கலந்து பேசிய் போது அவர்களும் எதிரணிக்குப் பாடம் கற்பிக்க இது நல்ல வாய்ப்பு என்று சொல்ல அந்த மந்திரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி விட்டார். அந்த குற்றவாளி மந்திரி மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த சமயத்தில் நாடு முழுவதும் ராஜாராம் ரெட்டி பேசப்பட்டார். இது போல நேர்மையான அதிகாரி சிலர் இருந்தால் இந்த தேசத்திற்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம்தான் என்று பத்திரிக்கைகளில் எழுதினார்கள். டெலிவிஷன்களில் பேசினார்கள். மந்திரி தன் சம்பாத்தியத்தை எல்லாம் தண்ணீராகச் செலவழித்து கவனிக்க வேண்டியவர்களை நல்ல முறையில் கவனித்து ஆதாரங்களைப் பலவீனமாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தார். திறமையான வக்கீல்களை வைத்து வழக்கை வாதாடினார். சாட்சிகள் எல்லாம் மாறினார்கள். சிபிஐயில் ராஜாராமின் உதவியாளர் ஒருவரையும் மந்திரி விலைக்கு வாங்கினார். கடைசியாக போதிய ஆதாரமில்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதி மன்ற வளாகத்தில் மந்திரியின் ஆட்கள் ராஜாராம் ரெட்டியைப் படு கேவலமாக ஏளனம் செய்தார்கள். குத்தாட்டம் ஆடினார்கள். ராஜாராம் ரெட்டிக்கு நடப்பதை எல்லாம் நம்ப முடியவில்லை. அவர் மனம் கொதித்தது. அவரைப் போலவே அவரை இது வரை பாராட்டியவர்களும் ஆத்திரம் அடைவார்கள் என்று அவர் உளமார எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்ப்பு பொய்த்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல நடிகைக்கும், பிரபல சாமியாருக்கும் இடையே இருந்த ரகசிய தொடர்பு வெளியாகவே மீடியாக்கள் கவனமும், மக்கள் கவனமும் பிரதானமாக அதில் இருந்தது. இந்த செய்தி பத்தோடு பதினொன்றாக இருந்தது.

அப்படி ஏதோ சிறிது கவனம் செலுத்தியவர்களில் ஒருசிலர் கடைசியில் அவரே அந்த மந்திரியிடம் விலை போய்தான் வழக்கை பலவீனப்படுத்தி விட்டார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அது பத்திரிக்கைகளிலும், டிவிகளிலும் வந்தது. பணத்திடமும், அதிகாரத்திடமும்தான் தோற்று விட்டதை ராஜாராம் கடைசியாக உணர்ந்தார். அது அவருக்குப் பேரிடியாக இருந்தது.

அப்போது அவருக்கு வீட்டுக் கடனும், கார் கடனும் இருந்தது. அவசரத் தேவைக்காக அவர் சேமித்து வைத்திருந்தது ரூபாய் பதினெட்டாயிரத்து எழுநூறு மட்டுமே. சிக்கனமாக வாழ்க்கை நடத்தியும் அவர் இரண்டு மகள்களின் கல்யாணம் முடிந்து அவரிடம் மிஞ்சியது அவ்வளவு மட்டுமே. இதை எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கையில் வாழ்க்கையில் மிகவும் முட்டாள் தனமாக இருந்து விட்டோம் என்று அவருக்குத் தோன்றியது. நடிகையின் அந்தரங்க வாழ்க்கைக்குக் காட்டும் அக்கறையில் ஐந்து சதவீத அக்கறை கூட நாட்டையே செல்லரித்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் காட்டாத இந்த சமூகத்திடமும், குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வலுவில்லாத சட்ட திட்டங்களிலும் அவருக்கு ஒரு பெரும் வெறுப்பு தோன்றியது. அந்த அளவு வெறுப்பு அந்த மந்திரியிடம் கூட அவருக்குத் தோன்றவில்லை. சில நாட்கள் வேலைக்குக் கூடப் போகாமல் பித்து பிடித்தது போல அவர் வீட்டில் இருந்தார். ஜெயினும், ஆச்சார்யாவும் வந்து அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். ஜெயின் அவரை வற்புறுத்தி அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்து வந்தார்.

ஆனால் அலுவலகத்திற்குத் திரும்பி வந்த ராஜாராம் ரெட்டியிடம் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. உருவம் மட்டுமே பழையதாக இருந்தது. உள்ளம் புதிய அவதாரம் எடுத்திருந்தது. அவருடைய அசைக்க முடியாத பழைய நேர்மை இப்போது வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தது. மீதமிருக்கும் மூன்று வருட வேலையில் இத்தனை வருடங்களிற்கும் சேர்த்து சம்பாதிப்பது எனவும், தனிப்பட்ட நலனை முழுவதுமாக வளர்த்துக் கொள்வது எனவும் அவர் முடிவு செய்தார்.

அவர் தலைமையில் நடை பெற்ற எல்லா குற்றப் புலனாய்வுகளிலும் அதிகமாய் சம்பாதிக்க முடிந்தவை, சம்பாதிக்க முடியாதவை என்று இரு பிரிவுகளாய் பிரிப்பார். பெரியதாய் சம்பாதிக்க முடியாத வழக்குகளை முறைப்படி முடித்து வைக்கும் அவர், சம்பாதிக்க முடிந்த வழக்குகளில் பேரம் பேச ஆரம்பித்தார். ஆனால் அது போன்ற பேரங்களை ஜெயின், ஆச்சார்யா போன்ற பழைய நண்பர்களுக்குத் தெரியாத அளவு மிக ரகசியமாய் செய்தார். எதில் எல்லாம் பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படுகிறார்களோ அதில் எல்லாம் பேரம் பேசி கோடிக்கணக்கில் சம்பாதித்து அவர்களுக்கு வேண்டப்பட்டது போல் வழக்குகளை முடித்து வைத்தார். சில வழக்குகள் முடிந்த விதத்தை ஜெயினும் ஆச்சார்யாவும் கவனித்தாலும் கூட அவர்கள் ராஜாராம் ரெட்டியை சந்தேகிக்கவில்லை. பழைய உறுதி தளர்ந்து போய் நடக்கிற படி நடக்கட்டும் என்று அவர் உதவியாளர்கள் வழக்கை முடிக்கிற விதத்தை ஏற்றுக் கொள்கிறார் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

இன்று அவர் வைத்திருக்கும் பணம் பல கோடிகள். இப்போதெல்லாம் எத்தனை பெரிய அநியாயங்கள் நடந்தாலும் அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதில் எத்தனை சம்பாதிக்கலாம் என்றே கணக்கு போட்டார். அந்த அநியாயங்களை செய்வதிலும் அவருக்கு வருத்தமில்லை. தனக்கு நடந்ததற்கு பழி வாங்குவதாகவே அதை எல்லாம் நினைத்தார்.

ராஜாராம் ரெட்டி கடிகாரத்தைப் பார்த்தார். ஜெயினை சந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

*******

மஹாவீர் ஜெயின் ராஜாராம் ரெட்டியை வரவேற்று தனதறைக்கு அழைத்துப் போனார். ஜெயினின் மனைவி ரெட்டியிடம் அவர் குடும்பத்தை விசாரித்து இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு போன பிறகு ஜெயின் அறைக் கதவை சாத்தி விட்டு வந்தார்.

“சார், ஆச்சார்யா கொலை வழக்கில் ஆனந்தை வரவழைத்தது இப்போது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது….”

ராஜாராம் ரெட்டி மிகுந்த ஆச்சரியத்தை வெளியே காட்டிக் கொண்டார். “என்ன ஆயிற்று சார்”

இது வரை ஆனந்த் தன்னிடம் சொன்னதை எல்லாம் ஜெயின் ரெட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top